காய்கறிகளின் அறுவடைப் பருவத்தை எப்படி அறிவது?

Vegetables and harvest time

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020

காய்கறி அறுவடை என்பது பல வழிகளில் முக்கியம் வாய்ந்தது. காய்கறிகளைச் சரியான நேரத்தில் அறுவடை செய்யா விட்டால் அவற்றை உண்ண முடியாது. மேலும், பயிரிடலின் நோக்கமான வருமானத்தையும் இழக்க வேண்டும். எனவே, தகுந்த காலத்தில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக் காலம் என்பது, காய்கறிகளை எவ்விதம் பயன்படுத்தப் போகிறோம் என்பதைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, தக்காளியைச் சந்தைக்கு அனுப்ப நினைத்தால், செடியில் காய்கள் பழுக்கும் முன்பே பறித்திட வேண்டும். எனவே, காய்கறி அறுவடை பலவிதங்களில் கவனத்துக்கு உரியதாகும்.

தக்காளி

நட்டு 70-90 நாட்களில் பழங்கள் கிடைக்கும். பயன்பாடு அடிப்படையில் பல்வேறு முதிர்வு நிலைகளில் தக்காளி பறிக்கப்படுகிறது.

பச்சைக்காய்: இதில் தக்காளி முழுமையாக உருவாகியிருக்கும். ஆனால், பச்சையாக இருக்கும். இந்நிலையில் பறிப்பது தொலைவிலுள்ள சந்தைகளுக்குக் கொண்டு செல்லவும், சேமிக்கவும் ஏற்றது.

செங்காய்: தக்காளியில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறம் தெரியத் தொடங்கும். இப்போது பறிப்பது உள்ளூர்ச் சந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.

பழுத்தநிலை: தக்காளியின் பெரும்பகுதி சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். மேலும், மென்மையாகத் தொடங்கும். இப்போது பறிப்பது வீட்டுப் பயனுக்கும் உண்ணவும் உகந்தது.

நன்கு பழுத்த நிலை: பழம் மென்மையாக இருக்கும். இது பதப்படுத்துவதற்கு ஏற்றது.

கத்தரிக்காய்

நட்டு 55-60 நாட்களில் பறிக்கத் தொடங்கலாம். இது முற்றும் முன்பும், சந்தைக்கு ஏற்ப விளைந்ததும் 4-5 செ.மீ. காம்புடன் பறிக்கப்படுகிறது. காய்கள் கெட்டியாகவும், பளபளப்பாகவும் இருத்தல் அவசியம். நன்கு முற்றி விட்டால் நார்த்தன்மை மற்றும் விதைகளில் கடினநிலை உருவாகி விடும். எனவே, 4-5 நாட்கள் இடைவெளியில் காய்களைப் பறிக்க வேண்டும்.

வெண்டை

விதைத்து 45 நாட்களில் முதல் அறுவடையைத் தொடங்கலாம். தொடர்ந்து 2-3 நாட்கள் இடைவெளியில் பறிக்கலாம். பூக்கள் பூத்து 6-7 நாட்களில் அறுவடைக்கு ஏற்ற காய்கள் கிடைக்கும். அறுவடை தாமதமானால், காய்களில் நார்த்தன்மை மிகுந்து சந்தை மதிப்பைக் குறைத்து விடும்.

மிளகாய்

நட்டு 75 நாட்களில் அறுவடையைத் தொடங்கலாம். காய்கள் பச்சையாகவே பறிக்க வேண்டும். இது, அடுத்தடுத்துப் பூக்கள் உருவாவதைத் தூண்டி விளைச்சலை அதிகரிக்கச் செய்யும். ஒருவார இடைவெளியில் காய்களைப் பறிக்க வேண்டும். பச்சையாகப் பறிப்பது உள்ளூர்ச் சந்தை மற்றும் வீட்டுப் பயனுக்கு ஏற்றது. பழுத்த நிலையில் பறிப்பது உலர் வற்றல் தயாரிப்புக்கு ஏற்றது. பச்சையாகப் பறித்து 21.5-25 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைத்துப் பழுக்கச் செய்தலும் நடைமுறையில் உண்டு.

சின்ன வெங்காயம்

நட்டு 3-4 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும். வெங்காயத் தாள்கள் 60-75% உலர்ந்திருப்பது அறுவடைக்கு ஏற்றது. தாள்களுடன் பறிக்கப்படும் வெங்காயத்தை, தாள்களை நீக்கி விட்டு உலர்த்த வேண்டும்.

புடலை

விதைத்து 75-80 நாட்களில் காய்களைப் பறிக்கலாம். தொடர்ந்து 5-7 நாடகள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். நன்கு முற்றும் முன்பே காய்களைப் பறிக்க வேண்டும். தோல் கடினமாக இருப்பது, காய் முற்றியதைக் குறிக்கும். முற்றிய காயில் நார்த்தன்மை ஏற்பட்டு விடுவதால் யாரும் விரும்ப மாட்டார். புடலையை 3-4 செ.மீ. காம்புடன் பறித்தால், உலர்வதையும் சேதமாவதையும் தவிர்க்கலாம்.

பாகல்

விதைத்து 60-65 நாட்களில் காய்களைப் பறிக்கலாம். பிஞ்சுக் காய்களை மட்டும் பறிக்க வேண்டும். அடுத்து ஒருவார இடைவெளியில் பறித்துக் கொண்டே இருக்கலாம். அறுவடை தாமதமானால் விதைகள் கெட்டியாவதுடன் காய்களும் பழுக்கத் தொடங்கி விடும். இது விற்பனைக்கு ஆகாது.

பீர்க்கன்

விதைத்து 55-60 நாட்களில் காய்களைப் பறிக்கலாம். காய்கள் பிஞ்சாக இருக்கும் போதே பறித்துவிட வேண்டும். கரும்பச்சையாகக் காய் மாறுவது முற்றிய நிலையைக் குறிக்கும். முற்றிய காயில் நார்த்தன்மையும் கெட்டியான விதைகளும் இருக்கும். எனவே, 5-7 நாட்கள் இடைவெளியில் 3-4 செ.மீ. காம்புடன் காய்களைப் பறிக்க வேண்டும். 

சாம்பல் பூசணி

விதைத்து 90 நாட்களில் காய்களைப் பறிக்கலாம். இக்காயின் தோலிலுள்ள சாம்பல் உதிர்வது, அறுவடைக்குத் தயாராகி விட்டதைக் குறிக்கும். எனவே, 3-4 செ.மீ. நீளமுள்ள காம்புடன் பறிக்க வேண்டும். வெய்யிலில் காயாமல் இருக்க வாழைச்சருகு, காய்ந்த வேப்பிலையால் மூடலாம். மேலும், ஈரத்தினால் காய்கள் அழுகாமலிருக்க, அவற்றின் அடியில் காய்ந்த வைக்கோல் அல்லது வாழைச்சருகை இடலாம்.

பரங்கிப் பூசணி

விதைத்து 85-90 நாட்களில் காய்களைப் பறிக்கலாம். நன்கு முற்றிய காய்களை மட்டும் பறிக்க வேண்டும். பச்சையாக இருக்கும் காய்கள் மஞ்சளாக மாறுவதும், காம்பு உலர்ந்து செடியிலிருந்து தானாகப் பிரிவதும் முற்றிய நிலையைக் குறிக்கும். வெய்யிலில் காயாமல் இருக்க, வாழைச்சருகு, காய்ந்த வேப்பிலையால் மூட வேண்டும். மேலும், மண்ணில் ஒட்டியுள்ள பாகம் ஈரத்தினால் அழுகாமலிருக்க, காய்களுக்கு அடியில் காய்ந்த வைக்கோல் அல்லது வாழை சருகை இடலாம்.

சுரைக்காய்

விதைத்து 70-75 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும். முற்றுவதற்கு முன்பே காய்களைப் பறிக்க வேண்டும். விரலால் அழுத்திப் பார்த்தே காயின் நிலையை அறிய முடியும். காய்கள் 2 அடி நீளம் வரும் வரை முற்றுவது இல்லை.  எனவே, இந்த நிலையில் காய்களை அறுவடை செய்யலாம். 4-5 செ.மீ. நீளக் காம்புடன் பறிக்க வேண்டும்.

கோவைக்காய்

நட்டு ஐந்து மாதத்தில் காய்களைப் பறிக்கலாம். கரும்பச்சை நிறத்திலுள்ள காய்கள் அறுவடைக்கு ஏற்றவை. 15 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்.

தர்ப்பூசணி

பூக்கள் பூத்து 30-40 நாட்களில் அறுவடைக்கு ஏற்ற பழங்கள் தயாராகி விடும். நன்கு முற்றிப் பழுத்த பழத்தை விரலால் தட்டிப் பார்த்தால் ஒருவித மந்த ஒலி உண்டாகும். மண்ணில் இருக்கும் பகுதி வெளிர் மஞ்சளாக மாறும். கொடியில் பழத்தின் அருகிலுள்ள பற்றிப் படரும் சுருள் காய்ந்து விடும். இந்நிலையில் உள்ள பழங்களை மட்டும் பறிக்க வேண்டும். பறித்த பழங்களில் 2% சாப்பாட்டு உப்புக் கரைசலைத் தெளித்தால், பழத்தின் எடை குறையாது.

கீரை வகைகள்

அரைக்கீரை: விதைத்து 25 நாட்களில் தரையிலிருந்து 5 செ.மீ. விட்டுக் கிள்ளி எடுக்க வேண்டும். அடுத்து ஒருவார இடைவெளியில் பத்து முறை பறிக்கலாம்.

முளைக்கீரை: விதைத்து 21-25 நாட்களில் வேருடன் பறிக்க வேண்டும். சிறிய செடிகளைப் பத்து நாட்கள் கழித்துப் பறிக்கலாம்.

தண்டுக்கீரை: விதைத்து 35-40 நாட்களில் வேருடன் அல்லது கிளைகளை மட்டும் அறுவடை செய்யலாம்.

தானியக்கீரை: விதைத்து 25 நாட்களில் கீரைக்காகவும், 90-100 நாட்களில் விதைக்காகவும் அறுவடை செய்யலாம்.

முள்ளங்கி: விதைத்து 45 நாட்களில் கிழங்குகளைப் பறிக்கலாம். கிழங்கு 3.5-5 செ.மீ. குறுக்களவில் இருப்பது நல்ல வளர்ச்சியைக் குறிக்கும்.

அவரை

விதைத்து 40-45 நாட்களில் காய்கள் வந்துவிடும். நன்றாக வளர்ந்தும், விதைகள் இளம் பிஞ்சாகவும் இருக்கும் போது, காய்களைப் பறிக்க வேண்டும். பறிப்பில் தாமதமானால், காயின் தோலில் நார்த்தன்மை ஏற்பட்டு விடும். எனவே, 3-4 நாட்கள் இடைவெளியில் காய்களைப் பறிக்கலாம்.

காராமணி

நட்டு 40-50 நாட்களில் முதல் அறுவடைக்கு வரும். பிஞ்சாகவும் விதைகள் முற்றாமலும் இருக்கும் போதே பறித்துவிட வேண்டும். அடுத்து, 5-7 நாட்கள் இடைவெளியில் பறிக்கலாம். வளைத்தால் ஒடியும் காய் பிஞ்சுக் காயாகும்.


PB_K ARUN KUMAR

கா.அருண்குமார்,

ஆராய்ச்சி மாணவர், முனைவர் த.சுமதி, உதவிப் பேராசிரியர், தோட்டக்கலைக் கல்லூரி,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!