தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் வகைகள்!

நெல் vikatan 2020 12 4d476433 5dd5 4eb3 8af5 7d9ccb01692e IMG 20201201 WA0003

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020

றுப்புக்கவுனி

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனுமந்தகுடியில் விளைகிறது. மகசூல் காலம் 150-170 நாட்கள். செப்டம்பர்-ஜனவரியில் பயிரிடலாம். நேரடி விதைப்பு ஏற்றது. இந்நெல் 1 செ.மீ. நீளத்தில் கறுப்பாக இருக்கும். பசுந்தாள் உரம், தொழுவுரம் மட்டும் இட்டால் போதும். சாயாமல் விளையும். அதிகளவில் தூர் கட்டும். தேங்காய்ப் பாலுடன் கலந்து இனிப்புப் பண்டங்கள் செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது; சாப்பாடு செய்வதற்கு ஏற்றதல்ல. அதிகளவில் தூர் கட்டுவதால், மற்ற நெல் வகைகளை விட இதில் வைக்கோல் 150% அதிகமாகக் கிடைக்கும்.

சண்டிகார்

சிவகங்கை அனுமந்தகுடியில் நன்கு விளைகிறது. செப்டம்பர்-ஜனவரி ஏற்ற பருவமாகும். ஏக்கருக்கு 800 கிலோ நெல்லும், 1,800 கிலோ வைக்கோலும் கிடைக்கும். கரிசல் மண், செம்மண் மற்றும் உப்பு மண்ணில் நன்கு விளையும். நேரடியாகவும், நாற்று விட்டும் பயிரிடலாம்.

வரப்புக் குடஞ்சான்

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடிப் பகுதியில் விளைகிறது. மானாவாரிக்கு ஏற்றது. வறட்சியைத் தாங்கி உயரமாக வளரும். நெல் கறுப்பாகவும், அரிசி சிவப்பாகவும் இருக்கும். சோறும் கஞ்சியும் சுவையாக இருக்கும். சோறு 2-3 நாட்கள் கெடாமல் இருக்கும். இந்தச் சோறு வேலை செய்யும் ஆற்றலைத் தருவதாக விவசாயிகள் நம்புகின்றனர். வைக்கோலும் அதிகமாகக் கிடைக்கும். மூன்று மாதங்களில் விளையும். புரட்டாசி மத்தியில் (செப்டம்பர்) விதைக்கப்படும் இந்நெல், தை மாதம் (ஜனவரி) அறுவடைக்கு வரும்.

குழிப்பறிச்சான்

இராமநாதபுரம் மாவட்டம் பள்ளப்பச்சேரிப் பகுதியில் விளைகிறது. கடற்கரை மணல் கலந்த மண் மிகவும் ஏற்றது. வறட்சியைத் தாங்கி உயரமாக வளரும். இந்த நெல் சற்றுக் கறுப்பாக இருக்கும். அரிசி சற்றுத் தடித்து உருளை வடிவத்தில் இருக்கும். சோறு விரைவில் கெட்டுப் போகாது. இது மூன்று மாதங்களில் விளையும். புரட்டாசி மத்தியில் (செப்டம்பர்) விதைக்கப்படும் இந்நெல், தை மாதத்தில் (ஜனவரி) அறுவடைக்கு வரும்.

சித்திரைக்கார்

இராமநாதபுரம் மாவட்டத்தின் திருப்புல்லாணிப் பகுதியில் விளைகிறது. இவ்வகைப் பொது இரகங்களை மட்டை அல்லது நொறுங்கன் என விவசாயிகள் அழைக்கின்றனர். கரையோர மணல் கலந்த மண் இதற்கு ஏற்றது. வறட்சியைத் தாங்கி உயரமாக வளரும். ஏக்கருக்கு 1,000 கிலோ நெல் கிடைக்கும். மற்ற சன்ன வகைகளை விட இந்தச் சிவப்பரிசியை மக்கள் விரும்புவதால், இது அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

சிவப்புச் சித்திரைக்கார்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிப் பகுதியில் விளைகிறது. நெல் சற்றுக் கறுப்பாகவும் அரிசி சிவப்பாகவும் இருக்கும். வறட்சியைத் தாங்கி வளரும் உயரமான இரகமாகும். மகசூல் காலம் 110 நாட்கள். ஆவணியில் விதைத்து, தையில் அறுவடை செய்யப்படும். பருவமழை சரியாக இருந்தால் 1500-1800 கிலோ மகசூல் கிடைக்கும். பருவமழை சரியில்லாத போது, ஏக்கருக்கு 600-900 கிலோ மகசூல் கிடைக்கும். இதை விவசாயிகள் மிகவும் விரும்பிப் பயிரிடுகின்றனர்.

முருங்கைக்கார்

இராமநாதபுரப் பகுதியில் விளைகிறது. மழை மிகவும் குறைவாக இருந்தாலும் நன்கு விளையும். மானாவாரியில் ஏக்கருக்கு 1,000-1,300 கிலோ மகசூல் கிடைக்கும். ஆவணியில் (ஆகஸ்ட்) விதைக்கப்படும் இப்பயிர், மார்கழியில் (ஜனவரி) அறுவடைக்கு வரும். இந்தப் பயிருக்கு ஆட்டுச்சாணம் மற்றும் யூரியா மட்டுமே இடப்படுகிறது.

நூற்றிப்பத்து

இராமநாதபுரம் மாவட்டத்தில் விளைகிறது. நெல் வெள்ளையாகவும், அரிசி சிவப்பாகவும் இருக்கும். வறட்சியைத் தாங்கி உயரமாக வளரும். இந்த அரிசிக்கஞ்சி மிகவும் சுவையாக இருக்கும். ஆவணியில் விதைத்து, தையில் அறுவடை செய்வர். ஏக்கருக்கு 1,500-1,800 கிலோ நெல்லும், ஒரு டன் வைக்கோலும் கிடைக்கும்.

அரியான்

இராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம் பகுதியிலுள்ள மணல் கலந்த மண்ணில் விளைகிறது. இதில், வெள்ளை அரியான், கறுப்பு அரியான், சிவப்பு அரியான், வாழை அரியான் என நான்கு வகைகள் உள்ளன. அனைத்து வகைகளிலும் உமிச் சிலாம்புகள் இருக்கும். இவை 5.5-6.5 அடி உயரம் வளரும். விளைச்சல் காலம் 120 நாட்கள். கரையோர மணல் கலந்த மண் மிகவும் ஏற்றது. வறட்சியைத் தாங்கி வளரும். இந்த அரிசிக்கஞ்சி மிகவும் சுவையாக இருக்கும். பசியைத் தாங்கும். அதிக மகசூல் கிடைக்க, பயிர்க் காலமான மூன்று மாதங்களில் ஒருமுறையாவது மழை பெய்ய வேண்டும்.

சடைக்கார்

இராமநாதபுரம் மாவட்டம், ஆகாடாவலசைப் பகுதியில் மட்டும் விளைகிறது. மருத்துவக் குணம் மிக்கது. இந்தக் கஞ்சியைத் தடவினால் உடலிலுள்ள காயங்கள் குணமாகும். உள்ளூர் மாட்டு வைத்தியர்கள் இந்த அரிசியை, கால்நடைச் சிகிச்சைக்குப் பயன்படுத்துகின்றனர். இனிப்புத் தன்மையுள்ள இவ்வரிசி, இடியாப்பம், புட்டு, பணியாரம் போன்ற உணவுகளைத் தயாரிக்க ஏற்றது. ஏக்கருக்கு 1200 கிலோ நெல், 3 டன் வைக்கோல் கிடைக்கும். இந்தப் பயிர் நன்கு விளைய, மாதம் மும்மாரி தேவை. இலைச்சுருட்டுப் புழுவைத் தவிர வேறு எந்தப் பூச்சியும் நோயும் தாக்குவதில்லை. மணல் கலந்த மண் மிகவும் ஏற்றது.

பூங்கார்

இராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரத்தில் விளைகிறது. புரட்டாசியில் (செப்டம்பர்) இயலாதபோது, பூங்காரின் மற்ற பாரம்பரிய குறுகிய காலச் சிவப்பு நெல் இரகம், கார்த்திகையில் (அக்டோபர்) விதைக்கப்பட்டு, தை மாதத்தில் அறுவடை செய்யப்படும். குறைவான மகசூலே கிடைக்கும். கரையோர மணல் கலந்த மண் மிகவும் ஏற்றது. குழிப்பறிச்சான், வரப்புக் குடஞ்சானை விட இந்த இரகம் வறட்சியைத் தாங்கி உயரமாக வளரும்.

குறுவைக் களஞ்சியம்

பெரும்பாலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் விளைகிறது. 110 நாட்களில் விளையும். ஆவணியில் விதைத்து, தையில் அறுவடை செய்யப்படுகிறது. நேரடி விதைப்புக்கு ஏக்கருக்கு 40-50 கிலோ விதை தேவை. ஏக்கருக்கு 1,500-2,000 கிலோ நெல்லும், ஒரு டன் வைக்கோலும் கிடைக்கும். சிவப்புச் சித்திரைக்கார் கஞ்சியை விட, குறுவைக் களஞ்சியத்தின் கஞ்சி வேறுபடும். சமைத்து இரண்டு நாட்களுக்குப் பிறகும் கூட இந்தச் சோறு சுவையுடன் இருக்கும்.

நொறுங்கன்

இராமநாதபுரம் மாவட்டத்தில் விளைகிறது. 110 நாட்களில் அறுவடை செய்யலாம். ஐப்பசியில் (அக்டோபர்) மணல் கலந்த நிலத்தில் மானாவாரிப் பயிராக விதைத்து, தையில் (ஜனவரி) அறுவடை செய்கிறார்கள். ஏக்கருக்கு 2,100 கிலோ நெல் கிடைக்கும்.

கல்லுருண்டைக்கார்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் விளைகிறது. வறட்சியைத் தாங்கி உயரமாக வளரும். ஏக்கருக்கு 1,500-1,800 கிலோ மகசூல் கிடைக்கும். இத்துடன் குதிரைவாலியைப் பயிரிடுவதும் உண்டு. இதில் ஏக்கருக்கு 600 கிலோ குதிரைவாலி கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு: 97888 20301.


நெல் MUTHU RAMU e1629361657342

முனைவர் செ.முத்துராமு,

முனைவர் தி.இராகவன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், 

பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!