மருத்துவத்தில் மஞ்சளின் பங்கு!

மருத்துவத்தில் page33 img1 Copy

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019

கிழ்வைத் தரும் அனைத்து நிகழ்வுகளிலும் இடம் பெறுவது மஞ்சள். உணவுப் பொருளாக, அழகுப் பொருளாக, மருந்துப் பொருளாக, மங்கலப் பொருளாக விளங்கும் மஞ்சள் விளைய 9-10 மாதங்கள் ஆகும். இந்த மஞ்சளை அறுவடை செய்து பக்குவப்படுத்துவது தனிக் கலையாகும். நிலத்திலிருந்து மஞ்சளை எடுப்பதற்குப் பத்து நாட்களுக்கு முன், மஞ்சள் செடிகளைத் தரை மட்டத்துக்கு மேலே 10 செ.மீ. விட்டுவிட்டு அறுத்துவிட வேண்டும். இது, மஞ்சள் கிழங்கு ஈரப்பதம் குறைந்து முதிர்வதற்கு ஏதுவாகும்.

இந்தப் பச்சை மஞ்சளைப் பறித்துச் சுத்தமான நீரில் வேக வைக்க வேண்டும். இது வெந்து விட்டது என்பதை, அதன் வாசத்திலிருந்து அறியலாம். விரலால் அழுத்திப் பார்த்தும் அறியலாம். அதிகமாக வேக வைத்தால் நிறம் மங்கிவிடும். சரியாக வேகவில்லை என்றால், காய வைக்கும் போது, சிறு சிறு துண்டுகளாக உடைந்து விடும். பக்குவமாக வேக வைத்த மஞ்சளை 15 நாட்கள் வரை வெய்யிலில் உலர்த்த வேண்டும். காய்ந்த மஞ்சளில் இருக்கும் வேர்கள், செதில்களைச் சுத்தப்படுத்த வேண்டும்.

பிறகு மஞ்சளை மெருகேற்ற வேண்டும். நூறு கிலோ மஞ்சளை மெருகேற்ற, 40 கிராம் படிகாரம், 2 கிலோ மஞ்சள் தூள், 150 கிராம் ஆமணக்கு எண்ணெய், 30 கிராம் சோடியம் பை கார்பனேட், 30 மில்லி ஹைட்ரோ குளோரிக் அமிலம் தேவைப்படும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் மஞ்சள் அதிகளவில் பயன்படுகிறது. மஞ்சள் வாசம் அமைதியைத் தரும். மஞ்சள் நிறம் திடத்தைத் தரும். மஞ்சள் நமக்கு நோயெதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். நோயைத் தடுக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடலுக்கு நிறத்தைத் தரும், மஞ்சளைச் சுட்டுப் புகையை நுகர்ந்தால், மூக்கடைப்பும் சளியும் நீங்கும்.

மஞ்சளையும் வேப்பிலையையும் சமமாக எடுத்து அரைத்துத் தடவினால், கட்டி, கொப்புளம், அம்மை, சேற்றுப்புண் ஆகியன குணமாகும். பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சளைக் கலந்து காலை, மாலையில் சாப்பிட்டால் வறட்டு இருமல் நீங்கும். வீட்டில் எறும்பு, பூச்சி, கரையான் போன்றவை வராமல் தடுக்கவும் மஞ்சள் பயன்படுகிறது.

நமது சமையலில் மஞ்சள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. உணவில் சுவையுடன் நிறத்தையும் தருகிறது. இறைச்சி வகைகள் நெடுநேரம் கெடாமல் இருக்க உதவுகிறது. வடித்த சுடு சாதத்தில், உப்பு, நல்லெண்ணெய், மஞ்சளைச் சேர்த்துப் பத்திய உணவைத் தயாரிக்கலாம்.

இந்திய மகளிர் தங்களின் உடலழகைப் பேண மஞ்சளை முகத்திலும் உடலிலும் பூசுகின்றனர். இது, முகப்பரு, அழுக்குப் போன்றவற்றை அகற்றிப் பொலிவைக் கொடுக்கும். இயற்கை உரோம நீக்கியாக மஞ்சள் உள்ளது. இயற்கை சூரியவொளித் தடுப்பானாக மஞ்சள் செயல்படுகிறது. வெய்யில் காலத்தில் கிருமித்தொற்றைத் தடுக்க, முகத்தில் மற்றும் வியர்வை சுரக்கும் அக்குள் போன்ற இடங்களில் மஞ்சளைப் பூசலாம். மேலும் விவரங்களுக்கு: 99942 83960.


மருத்துவத்தில் VIMALA RANI

முனைவர் மா.விமலாராணி,

முனைவர் காயத்ரி சுப்பையா, முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், 

காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!