கோடையில் கால்நடைகளைப் பராமரிப்பது எப்படி?

கால்நடை Livestocks

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019

டும் கோடை வெய்யிலால் கால்நடைகள் மற்றும் கோழிகள் வெப்ப அயர்ச்சிக்கு உள்ளாகும். கால்நடைகள் தங்கள் உடலை வெப்ப நிலைக்கு ஏற்பச் சீராக வைத்துக் கொள்ளும் என்றாலும், வெப்பம் மிகுந்தால் வெப்ப அயர்ச்சி ஏற்படும். பொதுவாகக் கால்நடைகளின் உடல் வெப்பம், வியர்வை மற்றும் சுவாசம் மூலம் வெளியேறும். அவற்றின் உடல் வெப்பநிலை சீராக இருக்க, பண்ணையின் உட்புற, வெளிப்புற வெப்பநிலை கட்டுக்குள் இருக்க வேண்டும். அதிக உடல் வெப்பமானது, உடலில் ஏற்படும் வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம் போன்ற வேதி மாற்றங்களால் வெளியேற்றப்படும்.

இக்காலத்தில் கால்நடைகளில் சுவாசம் அதிகரித்து, மூச்சு வாங்குதல் இருக்கும். நீரை நிறையக் குடிக்கும். நிழலை நோக்கித் தள்ளாடி நடக்கும். வெப்ப அயர்ச்சியால் கால்நடைகளின் நோயெதிர்ப்புத் திறன் குறையும். தேவையான அளவில் தீவனத்தை உண்ணவில்லை எனில், சத்துக்குறையால் நோய்கள் தாக்கலாம். கால்நடைகளின் உற்பத்தித் திறன் குறைவதுடன், சில சமயம் இறப்பும் நேரிடும். கோடையில் கால்நடைகளைச் சூரியனின் நேரடித் தாக்குதலில் இருந்து பாதுகாக்க, வெய்யிலில் மேய்ச்சலைத் தவிர்த்து, நல்ல காற்றோட்டமான கொட்டகையில் அல்லது மரநிழலில் இருக்க வைக்க வேண்டும்.

கொட்டகைப் பராமரிப்பு 

கொட்டகையின் நீளவாட்டம் கிழக்கு மேற்காக இருந்தால், சூரியவொளி நேரடியாக உள்ளே வராது. வெப்பம் ஊடுருவாத வகையில் கூரையை அமைக்க வேண்டும். கூரையின் மேல் வேளாண் கழிவுகள், தென்னை ஓலைகளைப் பரப்பி நீரைத் தெளித்தால், கொட்டகைக்குள் வெப்பம் மிகாது. வெப்பத்தைக் குறைக்க, நல்ல நிழலைத் தரும் மரத்துக்குக் கீழே கொட்டகையை அமைப்பது நல்லது. ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் மேல் வெள்ளையடிக்க வேண்டும். உட்புறச் சுவரில் கறுப்பு வண்ணத்தைப் பூச வேண்டும். இப்படிச் செய்தால் வெப்பம் கூரையில் உடுருவாது.

அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் கலந்த சூழலில் கால்நடைகள் மிகுந்த அயர்ச்சிக்கு உள்ளாகும். எனவே, கொட்டகையில் காற்றோட்டம் இருக்க வேண்டும். கொட்டகையைச் சுற்றிச் சூபாபுல், வேலிமசால் போன்ற தீவனப்புல் மரங்கள், வேம்பு, புங்கன் போன்ற நிழல் மரங்கள் இருப்பது நல்லது. இதனால் கொட்டகைக்குள் வெப்பம் கட்டுக்குள் இருக்கும். கால்நடைகளின் உடலில் நீரைத் தெளித்து, அவற்றின் உடல் வெப்பத்தைச் சீராக்கலாம்.

வெப்பக்காற்று அதிகமாக இருந்தால் தொழுவத்தின் பக்கவாட்டில் நூல் சாக்குகளை நீரில் நனைத்துத் தொங்க விடலாம். ஒரு மாட்டுக்கு 4 சதுர மீட்டர் இடம் கிடைக்க வேண்டும். கொட்டகைக் கூரையுச்சி 12-14 அடி இருந்தால் நல்ல காற்றோட்டம் ஏற்படும். கொட்டகையில் மின்விசிறிகளை இயக்கி வெப்பத்தைக் குறைக்கலாம். குளியல் தொட்டிகளில் கால்நடைகளை விட்டு, அவற்றின் உடல் வெப்பத்தைக் கட்டுக்குள் வைக்கலாம். சாணம் மற்றும் கழிவுகளை முறையாகச் சுத்தம் செய்தால் தொற்றுநோய்த் தாக்குதல் இருக்காது. ஒரு நாளைக்கு 5 முறை பூவாளி மூலம் மாடுகளின் உடலில் நீரைத் தெளிக்கலாம். இது, கால்நடைகளின் உற்பத்தித் திறனைப் பராமரிக்க உதவும்.

குடிநீரின் அவசியம்

கால்நடைகளுக்குத் துாய்மையான மற்றும் குளிர்ந்த நீர் எந்நேரமும் கிடைக்க வேண்டும். கோடையில் குடிநீரின் தேவை இரு மடங்காக உயர்வதால், மேய்ச்சல் நிலங்களிலும் குடிநீர் வசதி நிழலான இடத்தில் இருக்க வேண்டும். உடல் வெப்பத்தைச் சீராக்க, உள்ளுறுப்புகள் வளர, கழிவுகளை வெளியேற்ற, குடிநீர் அவசியம். கறவையிலுள்ள மாடுகளுக்குக் கூடுதல் நீர் கொடுக்கப்பட வேண்டும். குடிநீர்த்தொட்டி வெள்ளையாக இருந்தால் குடிநீர் குளிர்ச்சியாக இருக்கும். கலப்புத் தீவனத்தைக் கொடுத்த பிறகு நீரை வைத்தால் அதிகமாகக் குடிக்கும். நீரில் சிறிது உப்பைக் கலந்து அளித்தாலும் நீரை நிறையக் குடிக்கும்.

ஒரு கறவை மாட்டுக்கு ஒரு நாளைக்கு 70-80 லிட்டர் குடிநீர் தேவைப்படும். உடல் வெப்பத்தால் கால்நடைகள் குறைவாகவே உண்ணும். இதனால் சத்துக்குறை உண்டாகி உற்பத்தித் திறனும், சினைப் பிடிக்கும் தன்மையும் குறையும். எனவே, அடர் தீவனத்தில் 2 சத தாதுப்புக் கலவையைச் சேர்க்க வேண்டும். அல்லது ஒரு பசுவுக்கு ஒரு நாளைக்கு 30-40 கிராம் தாதுப்புக் கலவையை நீரில் கலந்து கொடுக்கலாம். சரிவிகிதத் தீவனம் மிக அவசியம். கோடையில் மேய்ச்சல் நேரம் குறைவதால், மாலை மற்றும் இரவில் கோ3, கோ4, சோளம், மக்காச்சோளம், தீவனச்சோளம், அசோலா போன்றவற்றைக் கொடுக்கலாம்.

அசோலாவை ஆடு. மாடு. எருமை. பன்றி, முயல், கோழிக்குத் தீவனமாகக் கொடுக்கலாம். எருது மற்றும் பசுவுக்கு ஒரு நாளைக்கு 1.5-2 கிலோ, ஆட்டுக்கு 300-500 கிராம், வெண்பன்றிக்கு 1.5-2 கிலோ, முயலுக்கு 100 கிராம், முட்டை மற்றும் கறிக்கோழிக்கு 20-30 கிராம் அசோலாவை அளிக்கலாம். அசோலா தொட்டியில் சூரியவொளி நேரடியாக விழுந்தால் அதிகளவில் நீர் ஆவியாகி அசோலாவை உற்பத்திப் பாதிக்கும். எனவே, நிழலான பகுதியில் அசோலா தொட்டியை அமைக்க வேண்டும்.

பசுந்தீவனக் குறையைச் சமாளிக்க, தானியங்களை முளைகட்டி வளர்க்கும் ஹைட்ரோபோனிக் தீவனத்தைக் கால்நடைகளுக்கு அளிக்கலாம். இதை உற்பத்தி செய்ய குறைந்த நீரும், குறைந்த இடவசதியும் போதும். அதிக நீர்ச்சத்தும் குறைவான நார்ச்சத்தும் இதன் மூலம் கால்நடைகளுக்குக் கிடைக்கும். மக்காச்சோளம், சோளம், கம்பு போன்றவற்றை நீரில் ஊற வைத்து முளைகட்டி 4-8 நாட்கள் வளர்த்து கால்நடைகளுக்கு அளிக்கலாம்.


PB_Dr.Usha Kattuppakkam

முனைவர் சு.உஷா,

முனைவர் ந.குமாரவேலு, முனைவர் ச.த.செல்வன்,

கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம்,

காட்டுப்பாக்கம்-603203, காஞ்சிபுரம் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!