மலர்களில் மகசூலைப் பெருக்கும் உத்திகள்!

மலர் DSC00093

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019

வாத்து

ரோஜா: ஓராண்டு வளர்ந்த செடிகளில் மெலிந்த, பூச்சி மற்றும் நோயுற்ற குச்சிகள், குறுக்கு நெடுக்காக வளர்ந்த குச்சிகள் மற்றும் நீர் வாதுகளை அடியோடு வெட்டியகற்ற வேண்டும். ஒரு செடியில் 4-6 வளமிக்க கிளைகள் நான்கு பக்கமும் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

புதிதாகத் தோன்றும் கிளைகளில் தான் மொட்டுகள் தோன்றும். எனவே, பூத்து முடிந்த பழைய தண்டுளை நிலமட்டத்திலிருந்து 45 செ.மீ. உயரத்தில் அக்டோபர் நவம்பரில் கவாத்து செய்ய வேண்டும். கிளையிலுள்ள கணுவுக்கு மேல், கூரான கத்திரியால் சாய்வாக வெட்டி, அதில் போர்டோ பசையைத் தடவ வேண்டும்.

குண்டுமல்லி: நவம்பர் இறுதி வாரத்தில் தரையிலிருந்து 45 செ.மீ. உயரத்தில் கவாத்து செய்ய வேண்டும். வெட்டுப் பகுதிகளில் போர்டோ பசை அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு பசையைத் தடவ வேண்டும். குறுக்குக் கிளைகள், உலர்ந்த குச்சிகள், மெலிந்த கிளைகளை வெட்டி, செடிகளில் சூரியவொளி நன்கு படுமாறு செய்ய வேண்டும்.

முல்லை: புதிய கிளைகள் தோன்றிப் பூக்கள் அதிகரிக்க, முல்லையை நட்ட இரண்டாம் ஆண்டிலிருந்து, ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில், 45 செ.மீ. உயரத்தில் கவாத்து செய்ய வேண்டும்.

பிச்சி: செடிகளை நட்டு ஓராண்டுக் கழிந்ததும் தவறாமல் ஆண்டுதோறும் கவாத்து செய்ய வேண்டும். இதனால் புதிய தளிர்களில் மொட்டுகள் தோன்றி மகசூல் அதிகரிக்கும். டிசம்பர் கடைசி வாரத்தில் 45 செ.மீ. உயரத்தில் கவாத்து செய்து அடிக்குச்சி இலைகளை உருவி விட வேண்டும். காய்ந்த கிளைகள், குறுக்குக் கிளைகள், மெலிந்த கிளைகளை அகற்ற வேண்டும். வெட்டுப் பகுதியில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு பசையைத் தடவ வேண்டும்.

டிசம்பர் மாதத்துக்குப் பதிலாக மார்ச்சில் கவாத்து செய்து சாட் என்னும் வளர்ச்சிக் குறைப்பானை 1000 பிபிஎம் அளவில் கலந்து தெளித்தால், பூக்கள் கிடைக்காத இடைப்பருவமாகிய நவம்பர், டிசம்பரிலும் மகசூல் கிடைக்கும்.

வளர்ச்சியூக்கி

ரோஜா: இதில் ஜிப்ரலிக் அமிலம் என்னும் வளர்ச்சி ஊக்கியை 250 பிபிஎம் அளவில் மாதமொருமுறை என 4 முறை, பூப்பதற்கு முன் தெளித்தால் மலர்களின் எண்ணிக்கை, மலர்க்காம்பு நீளம், மலர்களின் எடை கூடும்.

மல்லிகை: குண்டுமல்லியில் எத்ரல் 0.125, 0.250 மில்லி அளவிலும் என்.ஏ.ஏ லிட்டருக்கு 25 மி.கி. அளவிலும் தெளித்தால், பூக்கள் உருவாகும் கிளைகள் அதிகமாகி, மகசூல் 75% கூடும்.

முல்லை: இதில் எத்ரல் அல்லது சி.சி.சி என்னும் வளர்ச்சிக் குறைப்பானை 1000 பிபிஎம் அளவில் தெளித்தால், பக்கக் கிளைகள் அதிகமாகி மகசூல் கூடும்.

பிச்சி: இதில் சி.சி.சி என்னும் வளர்ச்சிக் குறைப்பானை 500 பிபிஎம் அளவில் தெளித்தால், பூப்பிடிப்பு, பெரிய மலர்கள், அதிக மகசூல், அதிக வாசனை எண்ணெய், நீண்ட நாட்களுக்குப் பூக்கும் தன்மை ஆகிய குணங்கள் மேம்படும்.

செவ்வந்தி: இதில் எத்ரல் என்னும் வளர்ச்சிக் குறைப்பானை 250 பிபிஎம் என்னுமளவில் தெளித்தால், செடிகளின் உயரம் குறைந்து மலர்கள் பூக்கும் கிளைகள் அதிகமாகும். நட்ட 30 நாள் கழித்து அஸ்கார்பிக் அமிலத்தை 1000 பிபிஎம் என்னுமளவில் தெளித்தால், பூக்கள் அதிகளவில் பூக்கும்.

டிசம்பர் பூ: அளவுக்கு மீறிய தழை வளர்ச்சி உயர் மகசூலுக்கு உதவாது. எனவே, சி.சி.சி (5000 பிபிஎம்) பி.9 (4000 பிபிஎம்) ஆழ (100 அல்லது 1000 பிபிஎம்) ஆகிய வளர்ச்சிக் குறைப்பான்களைத் தெளித்தால், செடிகள் குத்தாக வளர்ந்து நல்ல மகசூலைக் கொடுக்கும்.


முனைவர் இரா.தனசேகரப் பாண்டியன்,

எஸ்.ஆர்.எஸ்.வேளாண்மைக் கல்லூரி, வேடசந்தூர்,

முனைவர் பி.எம்.சுரேஷ், வேளாண்மைக் கல்லூரி, மதுரை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!