கொரோனாவை நெருங்க விடாமல் தள்ளியே வைக்க முடியும்!

கொரோனா

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். உலகெங்கும் பரவி மக்களை அச்சுறுத்திக் கொண்டுள்ள நச்சுக்கிருமி கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேல் நீடித்து வந்த ஊரடங்கு, பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே, வேலைக்கும் செல்ல முடியாமல், வாழ்க்கைச் செலவுகளையும் தாங்க முடியாமல், இருதலைக்கொள்ளி எறும்புகளாகத் தவித்த மக்கள், வாழ்வாதாரத்தைத் தேடிப் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள்.

கொரோனாத் தாக்கம் முடிவுக்கு வராத நிலையிலும், இது இரண்டாம் கட்டமாக மீண்டும் பரவும் என்னும் ஆபத்து உள்ள நிலையிலும், வீடுகளை விட்டு வெளியில் வந்துள்ள மக்கள், மிகுந்த எச்சரிக்கை மற்றும் பாதுகாப்புடன் நடமாட வேண்டிய நிலையே உள்ளது. சிறு கவனக் குறைவும் கொரோனாத் தாக்கத்துக்கு வழிவகுக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பும் போது, பேருந்துகள், தொடர் வண்டிகள் உள்ளிட்ட போக்குவரத்தில், தெருக்களில், சாலைகளில் நெரிசலைத் தவிர்த்தல் என்பது நடைமுறைக்கு ஏற்றதல்ல. ஆனாலும், நமது உடல் நலத்தைக் காத்துக் கொள்ளும் கடமை நம்மையே சாரும் என்பதை மறந்து விடாமல் விழிப்புடன் இயங்க வேண்டும்.

சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது, வெளியே சென்று விட்டு வந்து வீட்டுக்குள் நுழைவதற்கு முன், கிருமிநாசினி மூலம் கை கால்களை நன்றாக அலம்புவது, முகத்தை நன்றாகக் கழுவுவது, அணிந்த உடைகளைச் சோப்பால் அலசிக் காயவிட்டு மாற்று உடைகளை அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம், உடல் நலத்தைக் காத்துக் கொள்ள முடியும்.

சூடான உணவுகள், இஞ்சி, மிளகு, சீரகம், மஞ்சள் போன்ற நோயெதிர்ப்புப் பொருள்கள் கலந்த உணவுகள், வாரம் இருமுறை கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர் போன்றவற்றை எடுத்துக் கொண்டால், கொரோனாவை நம்மை நெருங்க விடாமல் செய்ய முடியும். சுற்றுப்புறச் சுத்தம் மிகவும் அவசியம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அலுவலகங்கள் மற்றும் தொழிலகங்களில் நுழைவதற்கு முன், பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள், தங்களைச் சுத்தம் செய்துகொள்ள ஏதுவாக, கிருமிநாசினியை நுழைவாயிலில் வைக்கலாம். மேலும், கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீரை வாரம் இருமுறை வழங்கி, அவர்களின் உடல் நலப் பாதுகாப்பு நடவடிக்கைக்கு உதவலாம்.

கொரோனாத் தாக்கம் இன்னும் நீர்த்துப் போகவில்லை. அது இன்னும் எத்தனை காலத்துக்கு இருக்கும் என்பதை யாரும் உறுதி செய்யவில்லை. ஆனால், எச்சரிக்கை மற்றும் கவனம் இருந்தால், கொரோனாவை நம்மை நெருங்க விடாமல் தள்ளியே வைக்க முடியும். இதன் மூலம், சீராக இயங்கி, வாழ்வாதாரத்தைச் சிறப்பாகப் பெருக்கி, நலமாக வாழ முடியும்.


ஆசிரியர்

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!