மண்வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரிகளின் பங்கு!

role of microorganisms in improving the soil

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021

ண் என்பது கரிமப் பொருள்கள், தாதுகள், வாயுக்கள், திரவங்கள் மற்றும் உயிரினங்களின் கலவையாகும். இது, தாவர வளர்ச்சிக்கான ஓர் ஊடகமாகும். நீரைச் சேமிப்பதிலும், சுத்திகரித்து வழங்குவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. மண் அறிவியலில், எடபாலஜி, பீடாலாஜி என்னும் இரண்டு அடிப்படைக் கிளைகள் உள்ளன. 

எடபாலாஜி உயிரினங்களின் மீது மண்ணின் தாக்கத்தை ஆய்வு செய்கிறது. பீடாலாஜி மண்ணின் உருவாக்கம், விளக்கம், வகைப்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்கிறது. மண்ணில், 45% தாது, 5% கரிமப் பொருள்கள் என 50% திடப் பொருள்களும், 50% வெற்றிடங்கள் அல்லது துளைகளும் உள்ளன. 

இந்தத் துளைகளில் பாதியளவில் நீரும், மீதமுள்ள பாதியளவில் வாயுவும் நிறைந்துள்ளன. மண்ணை உருவாக்கும் மணல், சில்ட், களிமண் ஆகியவற்றின் தனிப்பட்ட துகள்களின் ஒப்பீட்டு விகிதங்களால் மண்ணின் அமைப்புத் தீர்மானிக்கப்படும். மண்ணில் உள்ள துளைகள், காற்று, நீர் ஊடுருவல் ஆகியன, நுண்ணுயிரிகள் மண்ணில் வாழ்வதற்குத் தேவையான ஆதாரங்கள் ஆகும்.

மண்வளத்தின் அவசியம்

மண்வளம் என்பது, விவசாயம் மற்றும் தாவர வளர்ச்சியைத் தக்க வைக்கும் மண்ணின் திறனைக் குறிக்கும். இந்த மண்வளம், உயர் தரமான மற்றும் நிலையான விளைச்சலைத் தரும் பண்புகளைக் கொண்டுள்ளது. மண்ணின் நீர் தக்க வைப்புத் திறன், வேர் வளர்ச்சிக்கு உரிய ஆழம், வடிகால் வசதி, வேர் வளர்ச்சிக்குத் தேவையான காற்று, ஈரப்பதம், மண் கரிமப்பொருள், தேவையான சத்துகள், அமில காரத்தன்மை, நுண்ணுயிரிகள் ஆகியன, மண்வளத்தை மேம்படுத்தும் காரணிகள் ஆகும்.

மண் நுண்ணுயிரியல்

மண் நுண்ணுயிரியல் என்பது, மண்ணில் உள்ள உயிரினங்கள், அவற்றின் செயல்கள் மற்றும் அவற்றால் மண்ணின் பண்புகள் பாதிக்கப்படுதல் பற்றிய ஆய்வாகும். மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளை, பாக்டீரியா, ஆக்டினோமைசீட்ஸ், பூஞ்சை, பச்சைப்பாசி, புரோட்டோசோவா, வைரஸ்கள் என வகைப்படுத்தலாம். இவை, ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்ந்து, மண்வளத்தை மேம்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

பாக்டீரியா: இது, நுண்ணிய உயிரினமாகும். ஒரு கைப்பிடி ஈரமான, வளமான மண்ணில் நூறு மில்லியன் முதல் ஒரு பில்லியன் பாக்டீரியாக்கள் வரை உயிர் வாழும். இவை, இறந்த தாவரப் பொருள்கள் மற்றும் கரிமக் கழிவுகளை உண்டு, சத்துகளை வெளியிட்டு மண்வளம் மேம்பட உதவுகின்றன.

ஆக்டினோமைசீட்ஸ்: இது, பாக்டீரியா, பூஞ்சை போன்றவற்றின் கலவையாகும். இது, மண்ணுக்கு உரிய மணத்தைக் கொடுக்கும் தன்மை உடையதாகும்.

பூஞ்சை: இது, மண்ணில் வாழும் முக்கிய நுண்ணுயிரி ஆகும். இது,  மைசீலியம் என்னும் ஹைஃபே குழுக்களால் உருவானதாகும். இந்த ஹைஃபே குழுக்கள் பல மீட்டர் வரை வளரும். ஆனால், அவற்றின் அகலம் 0.8 மில்லி மீட்டருக்கும் குறைவாகவே இருக்கும்.

பூஞ்சைகள் மண்ணில் உள்ள சத்துகளை உடைத்துத் தாவரங்களுக்கு வழங்கும். மேலும், தாவர வேர்களுடன் இணைந்து, மைக்கோரைசல் என்னும் நல்வினையை ஏற்படுத்தும். இதன் மூலம் தாவரங்களுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கும். மேலும், பூஞ்சைகள் தாவரங்களில் இருந்து கார்போஹைட்ரேட் உணவைப் பெறும்.

பாசிகள்: ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளி கிடைக்கும் பெரும்பாலான மண்ணில் பாசிகள் உள்ளன. ஒரு கிராம் மண்ணில் 100 முதல் 10,000 வரை இருக்கும். வெப்ப மண்டல மண்வளத்தைப் பராமரிப்பதில் பாசிகளுக்கு முக்கியப் பங்குண்டு. கரிமப் பொருள்களை மண்ணில் சேர்த்து, அவற்றின் கரியளவு அதிகமாக உதவும். மண் துகள்களைப் பிணைத்து, மண்ணரிப்புக் குறைய உதவும். ஒளிச்சேர்க்கை மூலம் மண்ணின் ஆக்ஸிஜன் அளவையும், ஈரப்பதத்தையும் உயர்த்த உதவும்.

நுண்ணுயிரிகளின் செயல்கள்

கரிமப் பொருள்களில் உள்ள சத்துகளை வெளியிடுதல்: கரிமப் பொருள்களில் இருந்து வெளியேறும் பெரும்பாலான சத்துகளுக்கு மண் நுண்ணுயிரிகளே காரணமாகும். இவை கரிமப் பொருளைச் சிதைக்கும் போது, அதிலுள்ள கரி மற்றும் சத்துகளைத் தமது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளும். மேலும், அதிகளவு சத்துகளை மண்ணில் விடுவித்து, தாவர வளர்ச்சியை மேம்படுத்தும்.

வளிமண்டல நைட்ரஜனை உள்வாங்குதல்: ரைசோபியா அல்லது பிராடிரைசோபியா போன்ற பாக்டீரியாக்கள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் வாயுவை உள்வாங்கி, தாவர வேர்களுக்கு வழங்கும்.  அசட்டோபாக்டர், பேசிலஸ், க்ளோஸ்ட்ரிடியம், நாஸ்டாக், அனபீனா, பேசிலஸ் போன்ற நுண்ணுயிரிகள், நைட்ரஜன் வாயுவைக் கிரகித்து மண்வளத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

பாஸ்பரஸ் அளவை அதிகரித்தல்: பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள், பாஸ்பேட் கலவைகளை உடைத்து, மண்ணில் பாஸ்பரஸ் செறிவை உயர்த்தும். பெரும்பாலான மைக்கோரைசல் பூஞ்சைகள், தாவர வேர்களுக்கு பாஸ்பரஸ் சத்தை வழங்கும்.

பூச்சிக் கொல்லிகள் சிதைதல்: மண்ணில் வாழும் சில நுண்ணுயிரிகள் விவசாயப் பூச்சிக் கொல்லிகள் அல்லது மண்ணில் சேர்க்கப்படும் பிற நச்சுப் பொருள்களை உடைக்கும் நொதிகளை உருவாக்கும். இதன் மூலம், பூச்சிக் கொல்லிகளின் அளவு குறைந்து மண்வளம் மேம்படும்.

நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்துதல்: மண்ணில் வாழும் புரோட்டோசோவா நுண்ணுயிரிகள், தாவரங்களில் நோய்களை ஏற்படுத்தும் தீய பூஞ்சைகளை உண்ணும். இதன் மூலம், தாவர நோய்த் தாக்கம் குறைந்து மண்வளம் மேம்படும்.

மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துதல்: நுண்ணுயிரிகள் தமது உயிரியல் செயல்முறைகள் மூலம் மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தும். சில பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள், கரிமப் பொருள்கள் சிதையும் போது வேதியியல் சார்ந்து மண் துகள்களை நுண் திரட்டுகளாகப் பிணைக்கும். இதன் மூலம், மண்ணரிப்புத் தடுக்கப்படும்.

உயிர் வேதியியல் சுழற்சியில் நுண்ணுயிரிகளின் பங்கு: மண்ணில் வாழும் டிரைக்கோடெர்மா, அஸ்பெர்ஜிலஸ், பெனிசிலியம் ஆகிய நுண்ணுயிர்கள், செல்லுலோஸை உடைத்துக் கரிமப் பொருள்களைக் கொடுக்கும். இவற்றைப் போல, பலவகையான பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள், லிக்னின் வேதிப்பொருளைச் சிதைத்து மண்ணில் உள்ள கரிம அளவைப் பெருக்கும்.  

அசட்டோபாக்டர், நாஸ்டாக், அனாபீனா, க்ளாஸ்ட்ரிடியம் ஆகிய நுண்ணுயிரிகள், மண்ணில் உள்ள நைட்ரஜன் அளவை உயிர் வேதியியல் சுழற்சி மூலம் பெருக்கும். தியோபாசிலஸ், தியோத்திர்க்ஸ், மைக்ரோஸ்போரம் போன்ற நுண்ணுயிர்கள், மண்ணில் சல்பர் அளவைக் கூட்டும். இப்படி, மண்ணில் வாழும் பல்வகை நுண்ணுயிரிகள் மண்வளத்தை மேம்படுத்த உதவும்.

நுண்ணுயிரிகளின் நன்மைகள்: மண்ணின் சத்துச் சுழற்சியில் நுண்ணுயிர்களுக்கு முக்கியப் பங்குண்டு. மண்ணில் உள்ள கரிமப் பொருள்கள் சிதைவடைய உதவும். தாவரங்களின் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டி, அவற்றின் வளர்ச்சியை மேம்படுத்தும். தீங்கு விளைவிக்கும் பூச்சிக் கொல்லிகளை அழிக்க உதவும். மண்ணின் தன்மையை முடிவு செய்யும். மண்ணரிப்பைத் தடுத்து மண்ணின் கட்டமைப்பையும்; மண்ணின் ஈரப்பதத்தைச் சரி செய்து, மண்வளத்தையும் மேம்படுத்தும்.


pb_DR P PADMAVATHY

முனைவர் பா.பத்மாவதி,

முனைவர் சு.சுபஸ்ரீ தேவசேனா, நீர்வளச் சூழலியல் மேலாண்மைத் துறை,

மீன்வளக் கல்லூரி, தூத்துக்குடி-628008.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!