தாவர வளர்ச்சி ஊக்கிகள்!

தாவர வளர்ச்சி ஊக்கிகள்! Plant growth stimulants e1631269276571

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020

ரு தாவரத்தின் வளர்ச்சி என்பது, செல்லின் செயல் மற்றும் சாதகமற்ற சூழ்நிலைக் காரணிகளால் அமைகிறது. தாவரங்களால் உருவாக்கப்படும் சில பொருள்களே, அந்தத் தாவரங்களின் வளர்ச்சி, வாழ்வியல் மற்றும் உயிர்வேதிச் செயல்களை ஒழுங்கமைக்கின்றன. இவை, தாவர வளர்ச்சிப் பொருள்கள் எனப்படும்.

வளர்ச்சி ஒழுங்குப்படுத்திகள்

இவை ஹார்மோன் போன்ற செயற்கையான கரிமச் சேர்மங்களாகும். சிறிய அளவில் வளர்ச்சியை ஊக்குவித்து அல்லது நிறுத்தி, தாவரத்தின் வளர்ச்சியை மாற்றியமைக்கும். எ.கா: இன்டோல் 3 அசிட்டிக் அமிலம், நாப்தலின் அசிட்டிக் அமிலம்.

தாவர ஹார்மோன்கள்

இவை தாவரத்தினாலேயே உருவாக்கப்படும் கரிமச் சேர்மங்களாகும். இவற்றின் செயல் திறன் நுண்ணிய அளவில் இருக்கும். இவை தாவரத்தின் ஏதாவது ஒரு பகுதியில் உருவாக்கப்பட்டு, வேறொரு இடத்துக்குக் கடத்தப்படும். அங்கே, குறிப்பிட்ட வாழ்வியல், உயிர்வேதி மற்றும் புற அமைப்பு மாற்றங்களை ஊக்குவிக்கும். தாவர ஹார்மோன்கள், வளர்ச்சி ஊக்கிகள், வளர்ச்சி அடக்கிகள் என்னும் பெரும் பிரிவுகளாகவும், இவற்றில், வளர்ச்சி ஊக்கிகளாக, ஆக்சின், ஜிப்ரலின், சைட்டோகைனின் ஆகியவையும், வளர்ச்சி அடக்கிகளாக எத்திலின், அப்சிசிக் அமிலமும் பிரிக்கப்படுகின்றன.

ஆக்சின்

இது, முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட தாவர ஹார்மோன். தொடக்கத்தில் மனித சிறுநீரிலிருந்து ஆக்சின் பிரித்தெடுக்கப்பட்டது. பொதுவாக இன்டோல் அசிடிக் அமிலத்துக்கும், ஆக்சினைப் போன்ற அமைப்புள்ள, வளர்ச்சியை ஒழுங்கமைக்கும் இயற்கை மற்றும் செயற்கையான பொருள்களுக்கும் ஆக்சின் என்னும் பெயர் கொடுக்கப்பட்டது. பொதுவாக, தாவரங்களின் தண்டு, வேர் மற்றும் வளர் நுனிகளில் உற்பத்தியாகி, தாவரத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லும். பினைல் அசிடிக் அமிலம் இயற்கை ஆக்சின் எனப்படும். செயற்கை ஆக்சின்கள் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்படும். இவை தாவர வளர்ச்சி ஒழுங்குப்படுத்திகள் எனப்படும். எ.கா: நாப்தலின் அசிட்டிக் டைகுளோரோ பினாக்சி அசிடிக் அமிலம்.

ஆக்சினின் வாழ்வியல் விளைவுகள்

தண்டும் முளைக்குருத்தும் நீண்டு வளர ஆக்சின்கள் உதவும். தண்டிலுள்ள செல்களை, குறிப்பாக நுனியாக்குத் திசுவுக்குக் கீழுள்ள செல்களை நீளச் செய்யும். உயரமான தாவரத்தில் நுனிமொட்டு இருக்கும்போது, பக்க மொட்டுகளின் வளர்ச்சியைத் தடுக்கும். இது, நுனி ஆதிக்கம் அல்லது முனை ஆதிக்கம் எனப்படும். நுனி வளர்ச்சியைத் தூண்டும் ஆக்சின், கீழே இறங்கும் போது கீழ்ப்பகுதி மொட்டின் வளர்ச்சியைத் தடுக்கும்.

கேம்பியத்தில் செல்பகுப்பைத் தொடக்கி ஊக்குவிப்பது ஆக்சினாகும். இப்பண்பால், திசு வளர்ப்பிலும், காலஸ் திசு உருவாக்கத்திலும் ஆக்சின் பயன்படுகிறது. மிகவும் குறைவான ஆக்சின், மிக மிக நுண்ணிய செறிவில் வேரின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். செறிவு அதிகமாக இருந்தால் வேரின் வளர்ச்சியைத் தடுக்கும்.

இலைகளும், கனிகளும் முற்றி விட்டால் தாவரத்திலிருந்து உதிர்ந்து விடும். பிரிதல் எனப்படும் இதை ஆக்சின் தடுக்கும். தக்காளி, ஆப்பிள் பூக்களில் ஆக்சினைத் தெளித்து விதையில்லாக் கனிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஜிப்ரலின்

ஜப்பானைச் சார்ந்த குருசோவா என்பவர் ஜிப்ரலினைக் கண்டுபிடித்தார். அவரின் வயலில் சில நெல் நாற்றுகள் மட்டும் உயரமாக வளர்ந்திருந்தன. இதை ஆய்வு செய்த அவர், அப்பயிர்களின் கணுவிடைப் பகுதிகள் இயல்பை விட நீண்டிருப்பதைக் கண்டார். இந்தக் கணுவிடை நீட்சி, பக்கானே அல்லது நெல்லின் கோமாளித்தன நோய் எனப்படுகிறது. ஜிப்ரலின் அனைத்துத் தாவரங்களிலும் உள்ளது.

ஜிப்ரலினின் வாழ்வியல் விளைவுகள்

இயல்புக்கு மாறான தண்டு வளர்ச்சியை ஏற்படுத்தும். இது, மரபிலேயே குட்டையான தாவரங்களின் குள்ளத் தன்மையை நீக்கும். எடுத்துக்காட்டாக, சர்க்கரைவள்ளிக் கொடியில் கணுவிடைப்பகுதி குட்டையாக இருப்பதால் இலைகள் நெருக்கமாக இருக்கும். ஜிப்ரலிக் அமிலத்தைப் பயன்படுத்தினால், கணுவிடைப் பகுதி குறிப்பிடத்தக்க வகையில் நீளும்.

நெருங்கிய இலையடுக்கைக் கொண்ட தாவரங்களில் கணுவிடைப் பகுதிகள் அதிக வளர்ச்சியை அடையும். இவ்வகையில் திடீரெனத் தண்டு நீள்வதும், அதைத் தொடர்ந்து பூப்பதும் போல்டிங் எனப்படும். வளர்ச்சிக் குறைவான பயிரில் ஜிப்ரலிக் அமிலத்தைத் தெளித்தால், தாவர வளர்ச்சியும் மலரும் தன்மையும் மிகும்.

பெரும்பாலான ஈராண்டுத் தாவரங்கள், இரண்டாம் ஆண்டில் தான் பூக்கும். இவற்றில் பூக்கள் உருவாகக் குளிர்ந்த சூழல் வேண்டும். ஆனால், ஜிப்ரலினைத் தெளித்தால், இந்தச் சூழல் இல்லாத நிலையிலும் முதல் ஆண்டிலேயே பூக்கும். கருவுறுதல் நிகழாத நிலையில் ஜிப்ரலினைப் பயன்படுத்தி விதையில்லாக் கனிகளைப் பெறலாம். எ.கா: தக்காளி, ஆப்பிள், வெள்ளரி. ஒயினால் பாதிக்கும் விதைகளை, ஜிப்ரலின் மூலம் முழு இருளில் முளைக்கச் செய்யலாம். எ.கா: பார்லி, உருளைக்கிழங்கில் வளர்வடக்கத்தை ஜிப்ரலின் நீக்குகிறது.

சைட்டோகைனின்

இது தாவர வளர்ச்சிப் பொருளாகும். செல் பிரிதலைத் தூண்டும். மில்லர், ஸ்கூஜ் என்போர் 1954 இல் ஹெர்ரிங் என்னும் மீனிலிருந்து இதைப் பிரித்தெடுத்து கைடின் எனப் பெயரிட்டனர். இதைத் தொடர்ந்து செல் பிரிதலைத் தூண்டும் பல பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக இவை சைட்டோகைனின்கள் எனப்படுகின்றன. மக்காச்சோளத்தில் உள்ள சைட்டோகைனின் சியாடின் எனப்படும். இளநீரிலும் இது உள்ளது.

விதைத் தாவரங்கள் பலவற்றில் சைட்டோகைனின் உள்ளது. குறிப்பாக, கரு, இளம் வேர்கள் ஆகியவற்றில் உள்ளது. ஆக்சினும் சைட்டோகைனும் வெவ்வேறு அளவுகளில் சேர்ந்து தாவர வளர்ச்சி மற்றும் வேறுபாட்டை ஊக்குவிக்கின்றன. சைட்டோகைனின் மிக முக்கியச் செயல் செல் பிரிதலை ஊக்குவிப்பதாகும். இது, இன்டோல் அசிட்டிக் அமிலத்துடன் சேர்ந்து, காலஸ் திசுவிலிருந்து மொட்டு மற்றும் வேர் உருவாவதைத் தூண்டுகிறது.

நுனிமொட்டு இருக்கும் போது. சைட்டோகைனைப் பயன்படுத்தி, பக்கவாட்டு மொட்டுகளின் வளர்ச்சியைத் தூண்டலாம். இது விதையுறக்கத்தை நீக்கி முளைக்க வைக்கும். தாவரங்களின் முதுமையைத் தாமதப்படுத்தும். இதை ரிச்மான்ட் லாங்க் விளைவு என்பார்கள்.

எத்திலின்

இது, எளிய வாயு ஹார்மோனாகும். மிகவும் நுண்ணிய அளவிலேயே இருக்கும். முதுமையை அடையும் திசுக்களால் அதிகளவில் எத்திலின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தண்டு மற்றும் வேரின் நீள்வாட்ட வளர்ச்சியைத் தடுக்கும். அதேநேரம் திசுவானது குறுக்காக விரிவதால், தாவரங்களைத் தடிக்கச் செய்யும் செயல்களைத் தூண்டும். வேர்கள் தரையை நோக்கி வளைந்து வளர்வதை ஊக்கப்படுத்தும். பட்டாணி நாற்றுகளில் பக்க மொட்டுகளின் வளர்ச்சியைத் தடுக்கும்.

காய்களைப் பழுக்க வைக்கும். இலைகள், மலர்கள் மற்றும் கனிகளில் பிரிவு உருவாவதை ஊக்கப்படுத்தும். இதனால் இவை முதிர்ச்சியுறும் முன்னரே உதிர்ந்து விடும். பைனாப்பிள் மற்றும் மாவில் பூத்தலைத் தூண்டும். தாவரத் துண்டுப் பதியன்களில் வேர், பக்க வேர் உண்டாதல் மற்றும் வேர்த் தூவிகளின் வளர்ச்சியைத் தூண்டும். மொட்டுகள் மற்றும் விதைகளின் உறக்கக் காலத்தை நீக்கும்.


தாவர வளர்ச்சி ஊக்கிகள்! SIVASABARI.K e1631269138774

.சிவசபரி,

உதவிப் பேராசிரியர், ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மைக் கல்லூரி,

தூக்கநாயக்கன்பாளயம், ஈரோடு-638506.

ரா.அஜய்குமார், உதவிப் பேராசிரியர், வானவராயர் வேளாண்மை நிறுவனம்,

பொள்ளாச்சி, கோவை-642001.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!