இலைப்பேன் விரட்டி!

இலைப்பேன் நொச்சி இலை

“ஏண்ணே.. நம்ம கத்திரிச் செடிகள்ல பேன் தாக்குதல் நெறையா இருக்குண்ணே.. என்ன செய்யலாம்?..’’

“தம்பி.. இதை இலைப்பேனுன்னு சொல்லுவாக.. செம்பழுப்பு நெறத்துல இருக்கும்.. இந்த இலைப்பேன்களும் குஞ்சுகளும் இலைக்கு அடியில தங்கிச் சாறை உறிஞ்சி வாழும். இதனால, இலை ஓரங்கள் சுருண்டு வாடியிருக்கும். இதைக் கட்டுப்படுத்துறதுக்கு இயற்கை முறையில கரைசலைத் தயாரிச்சு அடிக்கலாம்..’’

அப்பிடியாண்ணே?.. இந்த இயற்கைக் கரைசலைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’

“அதாவது, வேம்பு, நொச்சி, உன்னியிலை, புகையிலை, வசம்பு, சிறியா நங்கை, பீச்சங்கு, சீதாயிலை, வில்வயிலை, சோற்றுக் கற்றாழை, பிரண்டை.. இதுகள்ல அஞ்சு பொருள்கள வகைக்கு 2 கிலோ எடுத்துக்கிறணும்.. அதோட மஞ்சள் தூள் 100 கிராம் சேர்த்துக்கிறணும்..’’

“சரிண்ணே.. தயாரிப்பு முறையைச் சொல்லுண்ணே..’’

“அஞ்சு வகைத் தழைகளைத் துண்டுகளாக நறுக்கி, அதோட மஞ்சள் பொடியையும் சேர்த்து, தழைகள் மூழ்குற அளவுக்குத் தண்ணிய ஊத்தி, ஏழு நாளைக்கு ஊற வைச்சா.. இலைப்பேன் விரட்டித் தயாராகிரும்ப்பா.. இன்னொரு முறையும் இருக்கு.. அதாவது.. இந்தப் பொருள்களை நல்லா வேக வச்சு.. 12 மணி நேரம் பொறுத்திருந்தாலும் இந்தக் கரைசல் தயாராகிரும்.. இதை வடிகட்டிப் பயிருல தெளிச்சா இலைப்பேனுக இருக்குற எடம் தெரியாம போயிரும் தம்பி..’’

“எவ்வளவு தண்ணிக்கு எவ்வளவு கரைசல கலக்கணும்ண்ணே?..’’

“பத்து லிட்டர் தண்ணிக்கு ஒரு லிட்டர் கணக்குல கலக்கணும்.. இதை.. கைத்தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் மூலமா தெளிக்கணும்.. இலைப்பேன் தாக்குதலைப் பொறுத்து.. ஒரு வாரம் அல்லது பத்துநாள் இடைவெளியில.. ரெண்டு மூணு முறை தெளிக்கணும் தம்பி..’’

“சரிண்ணே.. அப்பிடியே செஞ்சுறலாம்..’’

“இப்பிடிச் செஞ்சா.. இலைப்பேன்களும்… சாறை உறிஞ்சும் மற்ற பூச்சிகளும் கட்டுப்படும்.. இது செலவில்லாத இடுபொருள்.. இதனால நஞ்சற்ற உணவுப் பொருள் கிடைக்கும்.. சுற்றுச்சூழலையும் காக்கும்..’’

“நல்லதுண்ணே.. நான் அப்புறமா வர்றேண்ணே..’’


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!