அங்கக வாழையைத் தாக்கும் நூற்புழுக்கள்!

நூற்புழு 932826104banana tree

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021

வாழை முக்கியமான பழப்பயிர்களில் ஒன்றாகும். இது முதலில் உணவுக்காகவும், அடுத்து, ஜவுளித் தொழிலில் பயன்படும் நார் உற்பத்தி மற்றும் அலங்காரம் செய்யவும் பயிரிடப்படுகிறது. வாழையைப் பாதிக்கும் உயிரியல் காரணிகளில் நூற்புழுகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு. இவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியாது. மைக்ரோஸ்கோப் என்னும் உருப்பெருக்கியின் உதவியால் மட்டுமே காண முடியும். இவற்றில் பல வகைகள் உள்ளன.

துளைப்பான் மற்றும் வேரழுகல் நூற்புழுக்கள்

தாக்குதல் அறிகுறிகள்: மரத்தின் வளர்ச்சிக் குறைதல். இலைகளின் அளவும் எண்ணிக்கையும் குறைதல். தார்களின் எடை குறைதல். வேர்ப்பகுதி கருஞ்சிவப்பு நிறமாகவும், கிழங்கு அழுகியும் இருத்தல். குறைவாகக் காற்றடித்தாலும் சாய்ந்து விடுதல்.

கட்டுப்படுத்துதல்: நூற்புழுத் தாக்குதல் இல்லாத நிலத்திலுள்ள கிழங்குகளை எடுத்து நடவு செய்தல். நூற்புழுக்களால் பாதிப்படைந்த மரத்தின் கிழங்குகளை உடனடியாக அகற்றுதல். செண்டுமல்லிப் பூச்செடிகளை ஊடுபயிராக மரங்களைச் சுற்றிலும் வளர்த்து, நூற்புழுக்களால் ஏற்படும்  25% மகசூல் இழப்பைத் தவிர்த்தல். நிலம் களைகள் இல்லாமல் இருத்தல். மண்ணாய்வைச் செய்து, அதன் பரிந்துரைப்படி உரமிடுதல்.

நூற்புழுக்கள் தாக்கிய வாழைக் கிழங்குகளில் கறுப்பு அல்லது கருஞ்சிவப்பு நிற அழுகல் இருக்கும். இந்த அழுகல் 2-3 செ.மீ. ஆழம் வரையில் பரவியிருக்கும். இதில் பல்லாயிரம் நூற்புழுக்கள் இருக்கும். எனவே, அழுகிய பகுதியை, வெள்ளை நிறம் தெரியும் வரையில் பகுதியைச் சீவினால், பெரும்பாலான நூற்புழுக்களை நீக்கலாம்.

வாழையைத் தொடர்ந்து பயிரிடாமல், நெல், பயறுவகை, கரும்பு, பருத்தி போன்ற பயிர்களைச் சுழற்சி முறையில் பயிரிட வேண்டும். வாழைக் கன்றுகளை நட்டு 45 நாட்கள் கழித்து, பசுந்தாள் உரமான சணப்பையை ஊடுபயிராக இட்டு, பூப்பதற்கு முன்பு பிடுங்கி, வாழை மரங்களுக்கு நடுவில் புதைத்தால் நூற்புழுக்கள் வெகுவாகக் குறையும்.

நூற்புழுத் தாக்குதலை மிதமாகத் தாங்கி வளரும் கற்பூரவள்ளி, மொந்தன், பிடிமொந்தன், நாட்டுப்பூவன், குன்னன், பேய்க்குன்னன், உதயம், மட்டி போன்ற வாழைகளை நடுதல். மரத்துக்கு 250 கிராம் வீதம் வேப்பம் புண்ணாக்கு அல்லது கரும்பாலைக்கழிவை நடவின் போதும், ஒரு கிலோ வீதம் நான்கு மாதம் கழித்தும் இட வேண்டும்.

தோல் சீவிய விதைக் கிழங்குகளை, ஒரு லிட்டர் நீருக்கு 15 மில்லி நிம்பிசிடின் அல்லது நிவின் வீதம் கலந்த கரைசலில் அரைமணி நேரம் மூழ்க வைத்து நடலாம். அடுத்து, மூன்று மற்றும் ஆறு மாதங்களில் மரத்துக்கு 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் 30 கிராம் பர்புரியோசிலியம் லீலாஸினம் எதிர் நுண்ணுயிரி வீதம் இட்டு நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.


நூற்புழு SHANMUGAPRIYA e1629479629281

முனைவர் மோ.சண்முகப்பிரியா,

முனைவர் மு.செந்தில் குமார், முனைவர் ம.இராஜசேகர், முனைவர் அ.வேலாயுதம், 

வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!