மூடாக்குனால ஏகப்பட்ட நன்மைகள் இருக்குங்ண்ணா!

rasipuram farmer kavi

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், குட்லாடம்பட்டியைச் சேர்ந்த செ.கவியரசன் 29 வயது இளைஞர். பத்தாவது வரையில் படித்து விட்டு, திருப்பூருக்குச் சென்று பல இடங்களில் வேலை செய்துள்ளார். ஆனால், அந்த வேலைகளெல்லாம் இவருக்குப் பிடிக்காமல் போகவே, மீண்டும் பிறந்த ஊருக்கே வந்தவர், கடந்த ஆறேழு ஆண்டுகளாக, தனது ரெண்டரை ஏக்கர் சொந்த நிலத்தில் காலத்துக்கு ஏற்ற வகையில் நவீன விவசாயத்தை மன நிறைவுடன் செய்து வருகிறார்.

மேலும், கையிலும் பையிலும் எப்போதும் பணம் புரளும் வகையில், அதிக மகசூலைத் தரக்கூடிய தக்காளி, கத்தரி, மிளகாய், பாகல், பீர்க்கு, தர்ப்பூசணி, முலாம் பழம் போன்றவற்றைப் பயிரிட்டு வருகிறார். பயிர்களுக்குச் சொட்டுநீர் முறையில் பாசனம் செய்வதாகவும், மூடாக்கைப் பயன்படுத்துவதாகவும் கூறிய அவரிடம், மூடாக்கு அவசியம் தானா என்று கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:

“அண்ணா மூடாக்குனால ஏகப்பட்ட நன்மைகள் இருக்குங்ண்ணா. நெலத்துல முளைக்கிற களைகள் இந்த மூடாக்கை விட்டு வெளியே வர முடியாம, மூடாக்குனால ஏற்படுற சூட்டுல, கதகதப்புல அப்பிடியே அவிஞ்சு அழிஞ்சு போயிருங்ண்ணா. அதனால களையெடுக்க ஆள் கிடைக்கலையேங்கிற கவலையே இல்லைங்ண்ணா. மேலும், செடிகளுக்குச் சொட்டுநீர்ப் பாசனம் செய்யிறதுனால, நெலத்துல பெரியளவுல களைகள் முளைக்க வாய்ப்பே இல்லைங்ண்ணா.

சில்வர் நெறத்து பிளாஸ்டிக் பேப்பர மூடாக்கா விரிச்சு விடுறதுனால, இதுல படுற வெய்யில் எதிரொளிச்சு மேலே போகுதுங்ண்ணா. அதனால பயிர்கள தாக்குற வெப்பம் குறையுது, பூச்சிக தாக்குதலும் குறையுதுங்ண்ணா. பூச்சிக வரத்துக் குறையிறதுனால நோய்களும் அவ்வளவா வர்றதில்லங்ண்ணா.

moodaakku

மண்ணு பொலபொலப்பா இருக்குறதுனால வேர்கள் வளர்ச்சியும் நல்லா இருக்கும்ங்ண்ணா. மூடாக்கு இல்லாத நெலத்துல இருக்குற பயிரோட வேர்க ரெண்டு சென்டி மீட்டர் இருந்தா, மூடாக்கு நெலத்துல இருக்குற பயிரோட வேர்க ரெண்டரை சென்டி மீட்டர் இருக்கும்ங்ண்ணா. இதனால பயிர்க நல்லா வளர்ந்து அதிகமான மகசூலைக் குடுக்கும்ங்ண்ணா.

பயிருக்கு விடக்கூடிய தண்ணி ஆவியாகுறது குறையும்ங்ண்ணா. மூடாக்கு இல்லாத நெலத்துல வாரத்துக்கு ரெண்டு தடவை பாசனம் குடுத்தா, மூடாக்குப் போட்ட நெலத்துல வாரம் ஒருமுறை தண்ணி குடுத்தா போதும்ங்ண்ணா. தண்ணிப் பற்றாக்குறை அதிகமா இருக்குற இந்தக் காலத்துல, இந்த மூடாக்கு நமக்குத் தண்ணிய மிச்சப்படுத்திக் குடுக்குதுங்ண்ணா.

இன்னிக்கு நெறய மகசூலைத் தரக்கூடிய ஒட்டு விதைகளைத் தான் விவசாயிக சாகுபடி செய்யிறாங்ண்ணா. உதாரணமா சொல்லணும்ன்னா கலப்பினத் தக்காளிச் செடிக அதிகமா வளரும்ங்ண்ணா. இதுல காய்க்கிற தக்காளிப் பழங்களை நாம சேதமில்லாம எடுக்கணும்ன்னா, கயிறுனால செடிகளைத் தூக்கிக் கட்டி விடணும்ங்ண்ணா. செடிகளைத் தரையில படுக்க விட்டா, பழங்கள் எல்லாமே மண்ணுல பட்டு வெம்பி அழுகி வீணா போயிரும்ங்ண்ணா.

அதே நேரத்துல மூடாக்கு விரிச்ச நெலத்துல இந்தக் கயிற வச்சு செடிகளை மேலே தூக்கிக் கட்டத் தேவையில்லைங்ண்ணா. ஏன்னா, பாயைப் போல விரிச்சு வச்சிருக்குற மூடாக்குல சாயக்கூடிய செடிகளும், அதுல காய்க்கக் கூடிய பழங்களும், மண்ணுல படாம, தாய் மடியில படுத்திருக்குற குழந்தையைப் போல, எந்தச் சேதமும் இல்லாம இருக்கும்ங்ண்ணா.

moodaakku

மொத்தத்துல மூடாக்கு விரிக்காத நெலத்துல கிடைக்கக் கூடிய மகசூலை விட, மூடாக்கு விரிச்ச நெலத்துல மகசூல் அதிகமா கிடைக்கும்ங்ண்ணா. தண்ணி பிரச்னை, வேலையாள் பிரச்னை, அவங்களுக்குக் குடுக்குற அதிகமான கூலி, பூச்சி, நோய்ப் பராமரிப்புச் செலவு, கிடைக்கக் கூடிய அதிக மகசூல், இதையெல்லாம் கணக்குப் பார்த்தா, இந்த மூடாக்குச் செலவு பெரிய செலவுன்னு சொல்ல முடியாதுங்ண்ணா.

அதனால, பயிருக்குத் தேவைப்படுற தண்ணியைப் போல, உரத்தைப் போல, பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள போல, மூடாக்கும் தவிர்க்க முடியாத விவசாய இடுபொருளா இருக்குங்ண்ணா’’ என்றார்.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!