பணம் காய்க்கும் மரம்!

மரம் Bassia latifoliaLatinMahua Tree Copy e1611695752807

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019

றுத்துக் கிடக்கும் கார்முகில்த் திண்டுகளை இணைத்து, மழையாகப் பொழிய வைக்கும் மரம் இலுப்பை மரம். இந்த மரத்தின் தாயகம் தமிழகம். நேபாளம், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளிலும் இலுப்பை மரங்கள் உண்டு.

இந்தியாவில், ஜார்கண்ட், குஜராத், மத்திய பிரதேசம், பீகார், ஒடிஸா, கேரள மாநிலங்களில் இம்மரங்கள் உள்ளன.

தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டு வாக்கில் 30,000 மரங்களுக்கும் அதிகமாக இருந்தன. ஆனால், 2015 ஆம் ஆண்டு கணக்கின்படி 10,000 மரங்களுக்கும் குறைவாகவே உள்ளன.

வெப்ப மண்டலத் தாவரம் என்பதால் இலுப்பை மரம் வறண்ட பகுதிகளிலும் நன்கு வளரும். இந்த மரம் எத்தனை ஆண்டுகள் இருக்கும் தெரியுமா? நானூறு ஆண்டுகளுக்கும் மேல்.

அறுபது அடிக்கு மேல் வளரும் பண்புள்ள இலுப்பை மரத்தில் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. இதன் இலை, பூ, விதை, பட்டை, எண்ணெய், புண்ணாக்கு ஆகிய அனைத்தும் மருத்துவத் தன்மை மிக்கவை தான்.

பண்டைக் காலம் முதல் இன்று வரையிலும் இவற்றின் பயன்கள் தொடர்கின்றன. முளைத்த நாளிலிருந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பலன் தரும்.

“ஆலையில்லா ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை” என்பது பழமொழி. நன்கு வளர்ந்த மரம் ஓராண்டில் முந்நூறு கிலோ பூவையும், 20-200 கிலோ விதைகளையும் கொடுக்கும். ஒரு கிலோ இலுப்பை விதைகளில் இருந்து முந்நூறு மில்லி லிட்டர் எண்ணெய் கிடைக்கும்.

ஆயிரம் கிலோ இலுப்பைப் பூக்களில் இருந்து எழுநூறு கிலோ சர்க்கரையும், நானூறு கிலோ இலுப்பை ஆல்கஹாலும் கிடைக்கும். இந்தச் சாராயத்தை மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தலாம். இலுப்பை எண்ணெய் வலிமருந்து மட்டுமல்ல, உணவு எண்ணெய்யாகவும் பயன்படுகிறது.

பாம்புக்கடி, வாதநோய், சர்க்கரை நோய், சளி, இருமல், மூலம், வயிற்றுப்புண், சுவாசக்கோளாறு, உடல் காயம் ஆகியவற்றுக்கும் மருந்தாக விளங்குகிறது. இலுப்பைப்பூ ஊறுகாய் காச நோய்க்கு அருமருந்தாகும்.

இலுப்பை மரம், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச் சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுகிறது. உப்புநீரைத் தாங்குவதால் இம்மரம் படகுகளைச் செய்யவும் உதவுகிறது.

முறையாகச் சாகுபடி செய்ய விரும்பினால் ஒரு ஏக்கரில் இருநூறு இலுப்பை மரங்களை வளர்க்கலாம். இந்த மரங்கள் தரும் விதைகள் மூலம் ஆண்டுக்கு ஆயிரத்து ஐநூறு லிட்டர் எண்ணெய் கிடைக்கும்.

இந்த எண்ணெய் மூலம் கிடைக்கும் வருமானம் மூன்று இலட்சம் ரூபாய். இதைத் தவிர, பூ, பட்டை, சர்க்கரை, புண்ணாக்கு, சாராயம், சிகைக்காய் ஆகிய அனைத்துமே பணம் தான்.

இன்றைய நிலையில் ஒரு கன அடி இலுப்பை மரத்தின் விலை ஆயிரம் ரூபாய். அறுபது ஆண்டுகள் நிறைந்த ஒரு மரத்தின் பணமதிப்பு, ஐந்து இலட்சம் ரூபாய்க்கு மேல். அதனால், இலுப்பை மரத்தைப் பணம் காய்க்கும் மரம் என்று அடித்துச் சொல்லலாம்.

வௌவால்கள் விரும்பிச் சாப்பிடும் பழம் இலுப்பைப் பழம். இலுப்பை மரங்களின் அழிவு வௌவால்களின் அழிவு. வௌவால்களின் அழிவு கொசுவின் வளர்ச்சி. கொசுக்களின் வளர்ச்சி நோய்களின் நோய்களின் வளர்ச்சி.

எனவே, பணப்பயன், மருத்துவப் பயன், சூழல் பயன் ஆகியவற்றைக் குறையின்றி வழங்கும் இலுப்பை மரங்களைப் பெரியளவில் வளர்த்து மண்ணைக் காப்போம்; மனித நலத்தைக் காப்போம்.


வெ.ஜெயக்குமார்,

முதன்மைக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!