அரசின் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்!

விவசாயிகள் DSC 5992 scaled e1614428406167

முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேண்டுகோள்

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019

ளிச்செனத் தெரியும் கொங்கு மண்டல அரசியல்வாதிகளில் ஒருவர் எம்.எஸ்.எம்.ஆனந்தன். அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், கட்சியின் வளர்ச்சிக்காகக் கடுமையாக உழைத்து, படிப்படியாக முன்னேறி, தமிழகத்தின் இந்து சமய அறநிலையத் துறைக்கும், வனத்துறைக்கும் அமைச்சராக இருந்தவர். அதாவது, 1980 இல் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த போது அக்கட்சியில் இணைந்து, அந்தப் பகுதியின் கிளைச் செயலாளராக ஐந்து முறை இருந்தார். திருப்பூர் இணைந்திருந்த கோவை மாவட்டத்தின் அம்மா பேரவை இணைச் செயலாளராக இருந்தார். பின்னர் திருப்பூர் பனியன் தொழிற்சாலைச் சங்கச் செயலாளராக இருந்த ஆனந்தன், திருப்பூர் நகர அ.தி.மு.க. செயலாளராக ஒன்பது ஆண்டுகள் பதவி வகித்தார்.

அதிக வாக்குகள் தந்த பதவி

அதைத் தொடர்ந்து 2011 இல் திருப்பூர் வடக்கு மாவட்டச் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு, தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (73,296) வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினரானார். அடுத்த இரண்டு மாதங்களிலேயே திருப்பூர் வடக்கு மாநகர மாவட்டச் செயலாளர் பதவி ஆனந்தனைத் தேடி வந்தது. இது நடந்து ஒரு மாதத்தில் இவரை இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சராக்கினார், அப்போதைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா. அடுத்து ஒன்றரை ஆண்டுகளில் வனத்துறைக்கு அமைச்சரானார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருந்தாலும் திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் இருந்து நான்கு பேரை, சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற வைத்தார். அதன் பயனாக மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இன்று வரை திருப்பூர் மாநகர மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.

அவரை இம்மாத இதழின் விஐபி விவசாயம் பகுதிக்காகச் சந்தித்தோம்.  உடனே மகிழ்ச்சியுடன் நம்மை வரவேற்று அவரது பூர்வீகமான ஊரான பொங்கலூருக்குப் பக்கத்தில் காட்டூரிலுள்ள தோட்டத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார். அதிலிருந்தே அவருக்கு விவசாயம், மாடுகள், இயற்கை முதலியவற்றின் மீதான ஆர்வம் புரிந்தது. காரில் செல்லும் போதே அவர் வனத்துறை அமைச்சராக இருந்த போது செய்தவை, விவசாயம், அவர் வளர்க்கும் மாடுகள் கன்றுகள் முதலியவற்றைப் பற்றி ஆர்வமுடன் பேசிக் கொண்டே வந்தார். தோட்டத்தில் நுழைந்த போது, காற்றாலை மின்சாரக் காற்றாடி பிரம்மாண்டமாகச் சுற்றிக் கொண்டிருந்தது.

விவசாய வாழ்க்கை

தோட்டத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் சூழலில், கேரள முறையில் வீடு அமைந்திருந்தது. வீட்டைச் சுற்றிலும் புல்வெளிகள். மிக மிக அமைதியான சூழல். அங்குச் சற்று நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஆனந்தன், தோட்டத்துக்குள் நம்மை அழைத்துச் சென்றார். அப்படியே நம்மிடம் அவரது விவசாய வாழ்க்கையையும் விவரிக்கத் தொடங்கினார்.

விவசாயிகள் DSC 6021

“எனது தாத்தா பாட்டி காலத்தில் விவசாயம் தான் குலத்தொழிலாக இருந்தது. அதன் பின்னர் அப்பா காலத்தில் திருப்பூருக்கு வந்து விட்டோம். அப்பா தொழில் செய்து வந்தார். அப்பாவின் பெயர் எம்.எஸ்.முத்து, அம்மாவின் பெயர் பழனியம்மாள். இது எங்கள் பூர்வீக நிலம். பத்து ஏக்கர் இருக்கும். இதில் தென்னை, வாழை, தக்காளி, கத்தரி, மிளகாய் எனப் பயிர் செய்து வருகிறோம். இங்குக் காய்கறி விளைச்சல் அதிகம். சில மாதங்களுக்கு முன்னர் நேந்திரம் வாழையைப் பயிர் செய்திருந்தோம். நான் முழுநேர அரசியலுக்கு வந்த பின்னர் ஆட்களை வைத்து விவசாயத்தை கவனித்துக் கொள்கிறேன்’’ என்று பேசிக்கொண்டே வந்தவர்,

அங்குக் குவிக்கப்பட்டிருந்த தேங்காய்களைக் காட்டி, “இங்கு 600 தென்னை மரங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து ஐம்பது நாளைக்கு ஒருமுறை தேங்காய்கள் வெட்டி இறக்கி, கொப்பரைக்கு எடுத்துச் செல்வார்கள்’’ என்றார். மேலும் அங்கிருந்த தோட்டக்காரரிடம், வெட்டப்பட்ட காய்கள், விற்பனைக்குப் போன காய்கள் குறித்த விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார். அப்படியே தென்னை மரங்களுக்குள் நடந்து கொண்டே அந்த மரங்களின் பாசனத்துக்காக அமைக்கப்பட்டிருந்த சொட்டுநீர்ப் பாசனத்தை நம்மிடம் விவரிக்கத் தொடங்கினார்.

பாசன முறை

“இங்கு ஒரு கிணறு உள்ளது. மூன்று ஆழ்துளைக் கிணறுகளையும் அமைத்துள்ளோம். அந்தக் கிணறுகளில் இருந்து எடுக்கும் நீரைச் சேமிக்க, மிகப் பெரியளவில் இரண்டு தொட்டிகளைக் கட்டியுள்ளோம். திறந்தவெளிக் கிணற்றிலிருந்து எடுக்கும் நீரைச் சேமிக்க மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அமைத்துள்ளோம். அவற்றில் சேமித்து வைக்கும் நீரை, தென்னை மரங்களுக்குச் சொட்டுநீர்ப் பாசனமாகப் பயன்படுத்துகிறோம்’’ என்றவர், அங்குக் கட்டப்பட்டிருந்த அந்தத் தொட்டிகளை நம்மிடம் காட்டினார்.

நாட்டு மாடுகள்

தொடர்ந்து அங்கிருந்த மாடுகளிடம் சென்றார். எல்லாம் நாட்டு மாடுகள். அந்த மாடுகளுக்கு வாஞ்சையுடன் அங்கிருந்த சீமைப்புல்லை எடுத்துப் போட்டார். பின்னர் அங்கிருந்த வாழை மரங்களுக்குள் சென்று குலை தள்ளியிருந்த வாழைகளைப் பார்த்து விட்டு, வாழை மரங்களுக்குத் தண்ணீர் விடச் சொன்னார். அப்படியே அங்கு வளர்ந்திருந்த தேக்கு மரங்களைப் பார்வையிட்ட ஆனந்தன், “நான் வனத்துறை அமைச்சராக இருந்த போது வாங்கி நட்ட கன்றுகள் இன்று மரங்களாக வளர்ந்து வருகின்றன’’ என்றார்.

அதன் பின்னர் அங்கிருந்த மலை வேம்பு மரங்கள், மலர்கள் என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே, “பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு இங்கு வந்து விடுவோம். அவ்வப்போது நான் இங்கு வந்து விவசாய வேலைகளைப் பார்வையிட்டு ஆலோசனைகளைச் சொல்வேன்’’ என்றவர், அப்படியே அங்கிருந்த கிணற்றில் எவ்வளவு நீர் இருக்கிறது என்று பார்த்து விட்டு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி நிரம்பி வழிவதைப் பார்த்து, அங்கிருந்த தோட்டக்காரரிடம் மோட்டாரை அணைக்கச் சொல்லி, “நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்’’ என்றார்.

மகனின் யோசனை

அப்படியே வீட்டைச் சுற்றியிருந்த புல்வெளியில் நடந்து கொண்டே அங்கு வைக்கப்பட்டிருந்த பலவகையான மலர்களைப் பற்றி நம்மிடம் விளக்கினார். புல்வெளிகள், மலர்கள், இயற்கை நீரூற்றுகள் என இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மிகவும் இரசனையுடன் அமைக்கப்பட்டிருந்ததை வியந்து பார்த்தோம். அப்போது, “இதெல்லாம் கட்டடக் கலையைப் படித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் என் மகனின் யோசனையில், மேற்பார்வையில் நடந்தது’’ என்றார்.

விவசாயிகள் DSC 5944

நீர்வளம் தரும் திட்டம்

அதைத் தொடர்ந்து தோட்டத்துக்குப் பின்னால் சென்று கொண்டிருந்த மிகப்பெரிய கால்வாயை நம்மிடம் காட்டி, “இது பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் மூலமாகத் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் வரும் கால்வாய். இந்தக் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படும் போது எங்கள் கிணற்றில் நீர் நிரம்பி வழிந்து ஓடும். நிலத்தடி நீர் வெகுவாக உயர்ந்து விடும். இதன் மூலம் சுமார் நான்கரை இலட்சம் ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், ஒன்றரை இலட்சம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பயனடைகின்றன. பொங்கலூரைப் பொறுத்தவரை முற்றிலும் செழிப்பான விவசாய பூமி. இங்குத் தக்காளி, கத்தரி, மிளகாய் எனக் காய்கறிகள் தான் பயிர் செய்யப்படுகின்றன’’ என்றவர், இன்றைய விவசாயம் குறித்துப் பேசத் தொடங்கினார்.

விவசாயிகளுக்கு வேண்டுகோள்

“இன்று இந்தியாவிலேயே அதிகளவில் விளைபொருட்களை உற்பத்தி செய்ததற்காக, மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதைப் பெற்றுள்ளோம். மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான அம்மாவின் அரசு நிறையத் திட்டங்களை விவசாயிகளுக்காகச் செயல்படுத்தி வருகிறது. அவற்றை முக்கியமாகச் சிறு குறு விவசாயிகள் அனைவரும் தெரிந்து பயன்படுத்த வேண்டும். அப்போது தான் இன்னும் விவசாயம் பெருகும். வேளாண்மைத் துறையும் அதற்காக, உழவன் செயலி போன்றவற்றின் மூலம் தகவல் தொழில்நுட்ப வசதிகளை, இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப விவசாயிகளுக்காகச் செயல்படுத்தி வருகிறது. 

மேலும், இன்றைக்கு விவசாயிகளை விட இடைத்தரகர்களே பெரியளவில் பயனடைந்து வருகின்றனர். விவசாயிகளிடமிருந்து விளைபொருள்களைக் குறைந்த விலைக்கு மொத்தமாக வாங்கி வைத்து, நல்ல விலை வரும் போது விற்று விடுகின்றனர். ஏற்கெனவே கூட்டுறவுத்துறை மூலம் பல இடங்களில் கொள்முதல் நிலையங்களை அமைத்து, அவற்றில் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை வைத்துக் கொள்ளும் வசதியை அரசு செய்து வருகிறது. அவற்றையெல்லாம் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். அரசின் திட்டங்களை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் விவசாயிகள் வாழ்வு மேம்படும். ஒரு நாடு என்ன தான் தொழில் வளர்ச்சியில் முன்னேறினாலும் அந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான்’’ என்றவர், விவசாயத்தில் நிலவும் தண்ணீர்ப் பிரச்னை குறித்துப் பேச ஆரம்பித்தார்.

நதிகள் இணைப்பு

“தற்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் மிக முக்கியப் பிரச்னை தண்ணீர். மத்திய அரசு கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்புக்காகத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது. அதைப்போல நாட்டிலுள்ள நதிகளெல்லாம் இணைக்கப்பட வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்புநீர்ப் பாசனம் போன்ற நீர் மேலாண்மை விஷயங்களை விவசாயிகள் கையிலெடுக்க வேண்டும். அவற்றின் மூலம் தேவையில்லாமல் நிலத்தில் பாய்ந்து வீணாவது, வெய்யிலில் வீணாவது முற்றிலும் தடுக்கப்பட்டு, பயிர்கள், செடிகளுக்கு மட்டும் நீர் கிடைக்கும். இதனால் நீரைச் சேமிக்க முடியும்’’ என்றவரிடம், சுற்றுச்சூழல் பிரச்னை குறித்துக் கேட்டோம்.

மரங்கள் வளர்ப்பு

அப்போது, “இன்று பூமியின் வெப்பம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், மரங்களை நிறைய வளர்க்க வேண்டும். அப்போது தான் சுற்றுச்சூழல் சரியாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டுதான் மாண்புமிகு அம்மாவின் 64 ஆவது பிறந்த நாளில் இருந்து, ஒவ்வொரு வருடமும் அவரது வயதை வைத்துத் தமிழகம் முழுவதும் 64 இலட்சம், 65 இலட்சம் என்று இதுவரை கோடிக்கணக்கான மரங்களை நட்டுள்ளோம். அதுபோல நாம் ஒவ்வொருவரும் நிறைய மரங்களை நட்டு வளர்க்க வேண்டும்’’ என்றவரிடம், அந்தப் பகுதியின் முக்கியப் பிரச்னையான திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்னையைப் பற்றிக் கேட்டோம்.

விவசாயிகள் DSC 5985

200 கோடியில் திட்டம்

அதற்கு, “திருப்பூர் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. நான் அமைச்சராக இருந்த போது, நொய்யலாற்றில் சாயப்பட்டறைக் கழிவு நீர் கலக்கும் பிரச்னைக்குத் தீர்வாக, இங்கிருக்கும் தொழிற்சாலைகள், கழிவு நீரை அவர்களே சுத்திகரித்துக் கொள்ள ஏதுவாக, சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க 200 கோடி ரூபாய் செலவில் திட்டம் கொண்டு வந்தோம். இன்று தொழிற்சாலைகளில் அவர்களே நீரைச் சுத்திகரித்து பயன்படுத்தி வருவதால்,  அதன் பின்னர் நொய்யலாற்றில் சாயப்பட்டறைக் கழிவு கலக்கிறதா என்பதை கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தி, சென்னையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது’’ என்றார்.

வனங்கள் பாதுகாப்பு

அதைத் தொடர்ந்து, “வனத்துறை அமைச்சராக நீங்கள் இருந்தபோது, வனங்களைப் பாதுகாக்க, மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன?’’ என்று கேட்டோம். அதற்கு அவர், “வனத்துறையின் முக்கியப் பணி வனங்களை அழியாமல் பாதுகாப்பது மட்டுமே. எனவே, வனங்களைப் பாதுகாக்க நிறையப் பணிகளையும் திட்டங்களையும் மேற்கொண்டோம். வனப்பகுதிகளில் வசித்து வரும் மக்கள் வனத்தை விட்டு வெளியே வந்து வசிக்கவும், அதன் மூலம் வனங்களைப் பாதுகாக்கவும் திட்டங்களைக் கொண்டு வந்தோம். வன விலங்குகளைப் பாதுகாக்க, அவை ஊருக்குள் வராமல் இருக்க, வனங்களில் அவற்றுக்கு நீர்த் தொட்டிகளை அமைத்தோம். தைல மரங்கள் மூலம் தான் பேப்பர் தயாரிக்கப்படுகிறது என்பதால் அவற்றை நிறையளவில் வளர்க்க நடவடிக்கை எடுத்தோம்’’ என்றார்.

பச்சை பூமி இதழுக்காக ஆர்வமுடன் தோட்டத்துக்கு வந்து தன்னுடைய விவசாயம் மற்றும் சமூக முன்னேற்றக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அவருக்கு நன்றி சொல்லி விடைபெற்றோம்.


மு.உமாபதி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!