கால்நடைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் முறைகள்!

கால்நடை hr cow drinking 01 e1694057648871

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020

டலின் அனைத்து இயக்கங்களுக்கும் நீர் மிகவும் அவசியம். ஒரு விலங்கு தன் உடலிலுள்ள கொழுப்புச் சத்தை முழுவதையும், புரதத்தில் பாதியையும் இழந்து விட்டும் உயிர் வாழ இயலும்.

ஆனால், உடலிலுள்ள நீரில் 10% -ஐ இழந்து விட்டால் செரிமானச் சிக்கலும், 20% -ஐ இழந்து விட்டால் இறப்பும் நேரிடும்.

கால்நடைகளுக்கு நேரடியாகக் குடிநீராகவும், தீவனம் மற்றும் பச்சைப்புல் மூலமும் நீர் கிடைக்கிறது. அடுத்து, அவற்றின் உடலியக்கம் மூலம் உற்பத்தியாகும் நீர். ஒட்டகம் போன்ற விலங்குகளில் உடலியக்க நீர் அதிகளவில் உற்பத்தியாவதால், அவற்றால் பல நாட்கள் நீர் அருந்தாமல் வாழ முடிகிறது.

செம்மறி ஆடுகளிலும் இத்தகைய நீர் உற்பத்தி ஓரளவு உள்ளது. மேலும், இவற்றின் உடலில் உரோமம் அடர்ந்து இருப்பதால், குறைந்த அளவிலேயே தோல் மூலம் நீர் ஆவியாகும்.

கால்நடைகளின் குடிநீரில் நச்சுப் பொருள்கள் கலந்து விடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். விருப்பத்தகாத நிறம், வாசைன, ருசி போன்றவை இருக்கக் கூடாது. பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவா, வயிற்றுப் புழுக்கள் போன்றவை, நீர் மூலம் கால்நடைகளுக்கு நோய்களைப் பரப்பலாம். 

சுத்தமற்ற நீரைக் கால்நடைகளுக்குக் கொடுப்பது மற்றும் குடிநீர் உள்ள இடம் சுத்தமில்லாமல் இருப்பதால் இக்கிருமிகள் பரவும்.

குதிரைகளுக்கு, ஸ்டாங்கிள்ஸ், கிளாண்டர்ஸ் என்னும் நோய்கள், குடிநீர் மூலம் பரவுகின்றன. இவற்றை உருவாக்கும் பாக்டீரியாக்கள், குதிரைகள் குடிக்கும் பொது நீர்த் தொட்டிகளில் இருந்தன.

கால்நடைகளில் அதிக இழப்பை ஏற்படுத்தும் புருஸெல்லோசிஸ் என்னும் கருச்சிதைவு நோய், ஆந்தராக்ஸ், தொண்டை அடைப்பான், காசநோய், ஜோன்ஸ் நோய்  போன்றவையும் குடிநீர் மூலம் வரலாம். குடிநீர் மூலம்  காசநோய் பரவுவது நாம் அறிந்ததே.

சாக்கடை கலந்த நீரில் காசநோய்க் கிருமிகள் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது. இக்கிருமிகள் கலந்த ஆற்றுநீரைக் குடித்ததால், மாடுகளுக்கு இந்நோய் வந்ததாக ஓர் அறிக்கை கூறுகிறது.

தோல் பதன ஆலைக் கழிவுநீர் கலந்ததால் குடிநீரில் ஆந்தராக்ஸ் நோய்க் கிருமிகள் இருந்தன. ஜோன்ஸ் நோய்க் கிருமிகள் ஒன்பது மாதங்கள் வரை நீரில் உயிருடன் இருந்தன. 

பன்றிகளைத் தாக்கிக் கொல்லும் ஹாக்காலாரா வைரஸ், பன்றிகளைக் குளிப்பாட்டுவதற்காகக் கட்டப்பட்ட தொட்டி நீரில் பல மாதங்கள் உயிருடன் இருந்தன. பன்றி எரிசெபலஸ், காணை, வெக்கை நோய் போன்றவற்றை உருவாக்கும்.

வைரஸ் நீர் மூலம் பரவும். காக்ஸ்டியோஸில் குடிநீர் மூலம் பரவும். நாடாப்புழு, உருண்டைப்புழு நீர் மூலம் பரவலாம்.

ஆலைக்கழிவு மூலம் வெளியேறிய சைனைடு கலந்த நீரைக் குடித்து, உயிரினங்கள் பல இறந்துள்ளன. ஆறு, குளங்களில் கலக்கும் சாக்கடை நீர், மூச்சுக்காற்று முழுவதையும் எடுத்துக் கொள்வதால், மீன்கள் மூச்சுத் திணறி இறக்கின்றன.

கால்நடைகள் குடிக்க, அவற்றைக் குளிப்பாட்ட, கொட்டிலைக் கழுவ, பால், இறைச்சி போன்றவற்றைப் பதப்படுத்த நீர் அவசியம்.

குடிநீர் வழங்கும் நேரம்

கால்நடைகளுக்குக் குடிநீர் வழங்கும் நேரமானது, அவற்றுக்குத் தீவனம் கொடுப்பது மற்றும் வேலை செய்வதைப் பொறுத்து அமையும். இதில், தீவனத்தைக் கொடுப்பதற்கு முன் குடிநீரைக் கொடுப்பது, குடிநீரைக் கொடுத்து விட்டுத் தீவனத்தைக் கொடுப்பது என, இருவிதக் கருத்துகள் உள்ளன.

முதலில் குடிநீரைக் கொடுத்தால், வயிறும் குடலும் நீரால் நன்கு கழுவப்படும். அதனால், இந்த உறுப்புகள் தீவனத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும்  நிலையில் இருக்கும் என்றும்; முதலில் தாகத்தைத் தணித்து விடுவதால், கால்நடைகள் தீவனத்தை விரும்பி உண்ணும் நிலையில் இருக்கும் என்றும் சிலர் நினைக்கின்றனர்.

முதலில் நீரைக் குடித்தால், அந்த நீரானது வயிறு, குடலில் நிரம்பி விடும். எனவே, கால்நடைகளால் அதிகளவில் தீவனத்தை உண்ண முடிவதில்லை என்று சிலர் நினைக்கின்றனர்.

முதலில் தீவனத்தைக் கொடுத்து விட்டு, அடுத்து நீரைக் கொடுத்தால், உண்ட தீவனம் நீருடன் நன்றாகக் கலந்து எளிதில் செரிக்கும்; சத்துகள் எளிதாக உறிஞ்சப்படும். நீர் உணவு செரிக்க மிகவும் உதவியாக இருக்கிறது. 

தீவனத்தைத் தருவதற்குச் சற்று முன்பு அல்லது தீவனத்தை உண்டதும் குடிநீரைக் கொடுக்கக் கூடாது. இரண்டுக்கும் இடையில் குறைந்தது 1-2 மணிநேர இடைவெளி இருக்க வேண்டும். தீவனம் மற்றும் குடிநீரை வழங்குவதை அடிக்கடி மாற்றக் கூடாது. தீவனத்தை உண்ட பின்தான் கால்நடைகள் நன்றாக நீரைக் குடிக்கின்றன.

வேலை செய்யும் கால்நடைகளுக்கு, வேலை தொடங்குவதற்குச் சற்று முன்பு அல்லது வேலை முடிந்ததும் நீரைக் குடிக்க விடக்கூடாது. சிறிது நேரம் கழித்தே நீரைக் குடிக்க விட வேண்டும். களைத்துப் போயிருக்கும் கால்நடைகளுக்கு வயிறு முட்ட நீரைத் தரக்கூடாது.

கொஞ்சம் வெந்நீரைக் கொடுத்துத் தாகத்தைத் தணித்து, வியர்வை அடங்கிய பின்பு குடிநீரைக் கொடுக்கலாம். ஏனெனில், வேலைப் பளுவால் உடல் சூடாக இருக்கும் போது, குளிர்ந்த நீர் குடிக்கக் கொடுத்தால், சுவாச நோய்கள் வரலாம்.

ஒரு நாளைக்கு இருமுறையாவது குடிநீரைக் கொடுக்க வேண்டும். கோடையில் 1-2 முறை கூடுதலாகத் தரலாம். உணவில் புரதம் மிகுந்து இருந்தாலும், உலர்ந்த தீவனமாக இருந்தாலும் பலமுறை நீரைத் தர வேண்டும். நிறையப் பாலைத் தரும் கறவை மாடுகளுக்கு அடிக்கடி குடிநீரை வழங்க வேண்டும்.

இதனால், இருமுறை குடிநீரைக் குடித்த மாடுகளின் உற்பத்தியை விட, இந்த மாடுகளில் பாலுற்பத்தி 3%, கொழுப்பு 2% கூடுவதாக ஆய்வொன்று கூறுகிறது. பன்றிகளும், கோழிகளும் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக நீரைக் குடிப்பதையே விரும்புகின்றன. இவற்றுக்குத் தானியங்கிக் குடிநீர்க் குழாய்கள் மூலம் எப்போதும் நீர்க் கிடைக்கும்படி செய்வது நல்லது.

குடிநீர் வழங்கும் முறைகள்

இவை, பொதுத்தொட்டியில் வழங்குவது மற்றும் தனித்தனித் தொட்டிகளில் வழங்குவது என இருவகைப்படும். முதல் முறையில் செலவு குறைவு.  வேலையாட்கள் அதிகம் தேவையில்லை.

ஆனால், சுத்தமாக வைத்திருப்பது சிரமம். தொற்றுநோய்க் காலங்களில் பயன்படுத்த முடியாது. இம்முறையில், ஏரி, குளம், நீரோடையில் நீரைக் குடிக்க விடுவது, கிராமங்களில் அதிகம். இதில் அதிகக் கவனம் தேவை.

கால்நடைகள் நீருக்காக ஓடையிலோ, குளத்திலோ இறங்கும் இடங்களில் சிமெண்ட் மேடையை அமைக்க வேண்டும். இதன் முடிவில் ஒரு வடிகாலை அமைத்து, சிறுநீர், சாணம் மற்றும் அசுத்த நீரைச் சேகரித்து, குடிநீரில் கலக்க விடாமல் அகற்ற வேண்டும்.

நீருக்குள் சிறிது தூரம் விட்டு ஒரு தடுப்பை அமைத்தால், கால்நடைகளால் நீர் அசுத்தமாவதைத் தவிர்க்கலாம்.

குளம் அல்லது ஆற்றங் கரையில் சிமெண்ட் தொட்டியைக் கட்டி, அதற்குள் நீர் விழுந்து செல்லுமாறு அமைத்து, அந்த நீரைக் கால்நடைகள் குடித்தால் நல்லது. இதற்கு வாய்ப்பற்ற இடங்களில் கொட்டகைகளின் திறந்த வெளியில் உள்ள சுத்தமான இடத்தில் பொது நீர்த் தொட்டிகளை அமைக்கலாம். இவற்றை சிமெண்ட்டால் தேவையான அளவில் கட்டிக் கொள்ளலாம்.

தொட்டியைச் சுற்றி ஆறு அங்குல அகலத்தில் சரிவாக சிமெண்ட் மேடையும், அதையொட்டி வடிகாலும் இருக்க வேண்டும். தொட்டியின் உயரம் 2 அடி இருக்க வேண்டும். தொட்டியில் கூர்மையான முனைகள் இருக்கக் கூடாது. இங்கே வேளைக்கு 15-20 கால்நடைகள் வீதம் நீரைக் குடிக்க விடலாம்.

தொட்டியின் உள்தரை வளைவாக இருக்க வேண்டும். தினமும் சுத்தம் செய்ய வேண்டும். அவ்வப்போது வெள்ளையடிக்க வேண்டும்.  தொட்டிகளில் கால்நடைகள் இறங்கி விடாமல் இருக்க, கம்பி வலையால் மூட வேண்டும்.  தொட்டிகளுக்குக் குழாய் மூலம் நீர் வரும்படி அமைத்தல் நல்லது. இக்குழாய் தானியங்கியாக இருப்பது நல்லது.

தனி நீர்த்தொட்டி

இதை அமைக்கத் தொடக்கச் செலவு அதிகமாகும். ஆனால், சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். நோய்ப்பரவல் தவிர்க்கப்படும். தனித்தனியாக வாளிகளிலும் குடிநீரைத் தரலாம்.  இதற்கு ஆட்கள் அதிகம் தேவைப்படும்.  பெரிய பண்ணைகளில் இது இயலாத செயலாகும்.

இரண்டு வகைத் தானியங்கி நீர்த் தொட்டிகள் இப்போது பயனில் உள்ளன. முதல் வகையில், மேல்நிலையில் நீரைத் தேக்கி வைத்து, ஒவ்வொரு பசு வீதம் பொருத்தியுள்ள நீர்க் குவளைக்கு நீர் செல்லும். பசுக்கள் தங்கள் வாயால் இந்தக் குழாய்களை அழுத்தும் போது நீர் குவளைக்குள் கொட்டும். 

இந்தக் குவளைகள் 9 அங்குல விட்டம், 6 அங்குல ஆழத்தில் இருக்கும்.  இந்த அமைப்பில் நீர் வீணாவதில்லை. தேங்கி அசுத்தமடைவதில்லை.  வெப்பமாவதோ, குளிர்வதோ இல்லை.  இரண்டாம் அமைப்பு, நீரின் மட்டத்தை நிலை நிறுத்தும் தன்மையில் அமைகிறது.

அதாவது, கொட்டகைக்கு வெளியே அளவான மட்டத்தில் மூடியுடன் கூடிய பெரிய நீர்த்தொட்டியை அமைத்து, குழாய் மூலம் நீர் அனுப்பப்படும். நீரில் மிதக்கும் பந்து மூலம் தொட்டியின் நீர் மட்டம் நிலைநிறுத்தப்படும்.

இந்தத் தொட்டியின் குழாய்களை, கொட்டிலிலுள்ள தனித் தொட்டிகளில் இணைப்பதால் நீர்மட்டம் ஒரே அளவில் நிற்கும். இம்முறையில் நீர் அசுத்தமாக வாய்ப்புள்ளது.

எந்த முறையைப் பயன்படுத்தினாலும், முடிந்த வரையில் குடிநீர்ச் சுத்தமாக இருக்க வேண்டும். தொட்டிகளைச் சுற்றி ஈரம் இருக்கக் கூடாது. குடிநீரின் மேல் நிரந்தரமாக சூரியவொளி படக்கூடாது. ஏனெனில் வெய்யிலில் சூடான நீரைக் குடித்தால் வயிற்றோட்டம் ஏற்படும்.

கோழிப் பண்ணைகளில் குடிநீரை அளிக்கும் முறைகள்

உபகரணங்கள்: நீர் மென்மையாக்கி மற்றும் வடிப்பான்: நீரில் திடப்பொருள்கள் அதிகமாகக் கலந்திருந்தால், ஈரப்பதப் கட்டுபாட்டுக் கருவிகள், தெளிப்பான் துளைகள், ஜெட்டுகள் மற்றும் வால்வுகளில் படிவுகள் ஏற்பட்டு அவற்றின் செயல்களைக் குறைக்கும்.

நீர்ச் சூடாக்கிகள்: குஞ்சுப் பொரிப்பகத் தட்டுகளைச் சுத்தம் செய்ய வெந்நீர்த் தேவைப்படுகிறது. பெரியளவு பாய்லர் மூலம் நீர்ச் சூடாக்கப்படுகிறது.

நீர்த் தொட்டிகள்: கோழிகளுக்கு நீரை வழங்க, தொட்டிகள் மற்றும் நீர்க் குடிப்பான்கள் உதவுகின்றன. இவை வெவ்வேறு அளவுகள் மற்றும் அமைப்புகளில் கிடைக்கின்றன. அதாவது, குடுவை போன்ற அமைப்பில், வட்டமான தட்டுகளில் நீரை நிரப்பிக் கோழிகளுக்கு அளிக்கலாம்.

அடுத்து, நீளமான மற்றும் கால்வாய் நீர்த்தொட்டிகளைக் கூண்டுகளில் பொருத்தி, எப்போதும் கிடைக்கும் வகையில் நீரைத் தரலாம். இதில், ஒரு முனை மூலம் நீரை நிரப்பவும், மற்றொரு முனை மூலம் நீரை வெளியேற்றவும் செய்யலாம்.

அடுத்து, தட்டுகள் மூலம் நீரைத் தரலாம். 10, 12, 14, 16 அங்குல விட்டமுள்ள தட்டுகள் உள்ளன. இவற்றில் தடுப்புகள் இருப்பதால் கோழிகள் நீருக்குள் செல்ல முடியாது.

அடுத்து, தானியங்கி அமைப்பு மூலம் நீரைத் தரலாம். இதற்கான குழாய்களில் எப்போதும் நீர் இருக்க வேண்டும். இதனால், தேவைப்படும் போது கோழிகள் நீரைப் பருக முடியும்.

இந்த நீர் அளிப்பான்களின் உயரத்தையும் நீர் செல்லும் அளவையும் மாற்றும் வசதிகள் உள்ளன.  இவை, சிவப்பு மற்றும் நீல நிறத்தில் பளபளப்பாக இருப்பதால், கோழிகள் மற்றும் குஞ்சுகள் இவற்றால் கவரப்படுகின்றன.

பெல் வகை தண்ணீர் அளிப்பான்களின் எண்ணிக்கை 1.3”(சுற்றளவு தண்ணீர் குடிக்கும் இடஅளவு)

நிப்பிள் நீரளிப்பான்: இது ஆழ்கூள முறை மற்றும் கூண்டுமுறை வளர்ப்பில் பயன்படுகிறது. ஆழ்கூள முறையில் நிப்பிள்களுக்குக் கீழே கிண்ணம் அமைத்து, ஆழ்கூளம் ஈரமாவது தடுக்கப்படும். நிப்பிளை அழுத்தம் போது அதிலிருந்து நீர் வெளியே வரும். கூண்டுக்கு ஒரு நிப்பிள் மூலம் மூன்று முட்டைக் கோழிகளுக்கு நீரைத் தரலாம்.

கையால் நிரப்பப்படும் நீரளிப்பான்: இளங் குஞ்சுகளுக்கு முதல் வாரத்தில் இது அதிகளவில் பயன்படும். இதில், துளையிலிருந்து ஊற்றைப் போல நீர் வருவதால், ஊற்று நீரளிப்பான் என்றும் சொல்லலாம். இம்முறையில், மருந்துகள் மற்றும் டானிக்கை எளிதாகக் குஞ்சுகளுக்குத் தரலாம். சிவப்பு மற்றும் நீல நிறத்தில் கிடைக்கும். நீர்த்தொட்டிக்கும் தீவனத் தொட்டிக்கும் இடையே 0.5 மீ. இடைவெளி இருக்க வேண்டும்.


PB_Dr.Usha Kattuppakkam

முனைவர் சு.உஷா,

உதவிப் பேராசிரியர், கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை,

கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை-07.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!