சத்துகள் நிறைந்த கோ.5 தீவனப் புல் சாகுபடி!

தீவனப் புல் Photo0336

கட்டுரை வெளியான இதழ்: மே 2019

ந்தியா விவசாயம் சார்ந்த நாடாகும். ஏறக்குறைய 70% மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பாகும். இந்தியாவில் 582 மில்லியனுக்கும் மேல் கால்நடைகள் இருந்த போதும் பாலுற்பத்தித் திறன் பிற நாடுகளை விடக் குறைவாகவே உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பற்றாக்குறையாகும். அதாவது, தீவனப் பயிர்கள் 4.4% பரப்பில் தான் சாகுபடி செய்யப்படுகின்றன. மேய்ச்சல் நிலங்களும் மிகக் குறைந்த பரப்பில் தான் உள்ளன. எனவே, கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனங்களைச் சாகுபடி செய்தால் பாலுற்பத்தித் திறனைக் கூட்டலாம்.

பசுந்தீவனப் பயிர்களில் கூடுதல் மகசூல் மற்றும் சத்துகள் நிறைந்ததும் கோ. (பி.என்.5) கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் ஆகும். இந்தப் புல் இரகம் கம்பு மற்றும் நேப்பியர் புல்லை ஒட்டுச் சேர்த்து உருவாக்கப்பட்டது. இத்தீவனப் புல்லை ஓராண்டில் ஏழு முறை அறுவடை செய்யலாம். இவ்வகையில் எக்டருக்கு 360 டன் பசுந்தீவனம் கிடைக்கும். இதில் புரதச்சத்து 12%, உலர் பொருள்கள் 22% உள்ளன. இதைத் தென்னந்தோப்பில் ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் பின்னர் எக்டருக்கு 25 டன் தொழுவுரத்தை இட வேண்டும். பிறகு, பார்களை அமைக்கும் கருவியைப் பயன்படுத்தி 60 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும்.

உரமிடுதல்

மண் பரிசோதனை முடிவுப்படி, தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை இட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில், எக்டருக்கு 150:50:40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து உரங்கள இட வேண்டும். மணி மற்றும் சாம்பல் சத்து முழுவதையும் அடியுரமாக இட வேண்டும். தழைச்சத்தில் பாதியை அடியுரமாகவும் மீதியை நடவு முடிந்த 30ஆம் நாளில் மேலுரமாகவும் இட வேண்டும். ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் 75 கிலோ தழைச்சத்தை இட்டால் நிலையான மகசூலை எடுக்கலாம்.

எக்டருக்கு 10 பொட்டலம் அசோஸ்பயிரில்லம், 10 பொட்டலம் பாஸ்போபாக்டீரியா அல்லது 20 பொட்டலம் அசோபாசை இட்டால், இட வேண்டிய தழை மற்றும் மணிச்சத்தின் அளவில் 75% உரத்தை இட்டால் போதும். 25 சத உரங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

நடவு

நன்கு நீரைப் பாய்ச்சி 50 செ.மீ. இடைவெளியில் தண்டுக் கரணைகளை நட வேண்டும். இப்படி நடுவதற்கு எக்டருக்கு 33,333 கரணைகள் தேவைப்படும். மூன்று வரிசை கோ.5 ஒட்டுப்புல், ஒரு வரிசை வேலிமசால் என, கலப்புப் பயிராகச் சாகுபடி செய்தால் சத்து மிகுந்த தீவனங்களைப் பெறலாம்.

பாசனம்

நடவு முடிந்து மூன்றாம் நாளில் உயிர்ப்புப் பாசனம் செய்ய வேண்டும். பின்பு 10 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் அளிப்பது சிறந்தது. கழிவு நீரையும் பாசனத்துக்குப் பயன்படுத்தலாம். களைகள்  அதிகமாக இருந்தால் கைக்களை எடுக்க வேண்டும்.

அறுவடை

நடவுக்குப் பின்னர், 75-80 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். பிறகு 45 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். இவ்வாறு ஓராண்டில் ஆறு ஏழு முறை அறுவடை செய்யலாம். இதன் மூலம் எக்டருக்கு 360 டன் பசுந்தீவனம் கிடைக்கும்.


இரா.லதா,

கு.கவிதா, சு.சாந்தீபன், மா.சரவணக்குமார்,

வேளாண்மை அறிவியல் நிலையம், திருப்பதிசாரம்-629901, கன்னியாகுமரி மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!