கடக்நாத் என்னும் கருங்கோழி!

கடக்நாத் 3rd image

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019

டக்நாத் என்னும் கருங்கோழி மத்தியப் பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்டது. அங்குள்ள ஜாபுவா, தார் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் பில் மற்றும் பிலாலா இனத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், இந்தக் கோழிகளைக் காலங்காலமாக வளர்த்து வருகின்றனர். கடக்நாத் கோழிகள் இயற்கையாகவே நோயெதிர்ப்புச் சக்தி மிக்கவை. எத்தகைய சூழ்நிலையிலும் வளரக் கூடியவை என்பதால், தனியாகக் கோழி வீடு அமைக்கத் தேவையில்லை என்பதுடன், கூடுதல் கவனமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இந்தக் கோழிகளை ஜாபுவா மாவட்டத்தின் கறுப்புத் தங்கம் எனவும் அழைக்கின்றனர். இவை மத்தியப் பிரதேசத்தை ஒட்டியுள்ள இராஐஸ்தான், குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த மக்களாலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. இந்த இனத்தில்  ஜெட் பிளாக், கோல்டன், பென்சில்டு என மூன்று பிரிவுகள் உள்ளன.

கடக்நாத் கோழிகள் 180 நாட்களில் பருவத்துக்கு வந்து விடும். ஆண்டுக்கு 85-90 முட்டைகளை இடும். முட்டையின் எடையானது 40ஆவது வாரத்தில் 41-45 கிராம் இருக்கும். சேவல் 1.5-2 கிலோ எடையும், கோழியானது 1-1.5 கிலோ எடையும் இருக்கும். இந்தக் கோழிகளின் கருத்தரிப்பு 58 சதமாகவும், குஞ்சு பொரிப்புத் திறன் 54 சதமாகவும் இருக்கும். 67% முட்டைகள் பழுப்பு நிறத்திலும் 33%  முட்டைகள் இளம் பழுப்பு நிறத்திலும் இருக்கும். பழுப்பு நிற முட்டையின் ஓடு கெட்டியாகவும், இளம் பழுப்பு நிற முட்டையின் ஓடு லேசாகவும் இருக்கும். இந்தப் பழுப்பு நிறத்துக்குக் காரணம், பேசில்லஸ் சப்டிலீஷ் ஸ்போர்ஸ் எனப்படும் பாக்டிரியாக்களே ஆகும்.

ஒருநாள் கோழிக்குஞ்சு நீலமும், கறுப்பும் கலந்ததாகவும், பின்பகுதியில் ஒழுங்கற்ற கறுப்புக் கோடுகளுடனும் இருக்கும். பருவமடைந்த கோழிகளின் இறகுகள், வெள்ளியும், தங்கமும் கலந்ததைப் போலக் கருநீல நிறத்தில் இருக்கும். தோல், கால்கள், நகங்கள் கறுப்பாக இருக்கும். பெட்டைக் கோழிகள் அடர் சாம்பல் நிறத்தில் இருக்கும்.

கடக்நாத் கோழியின் இறைச்சியில் மெலனின் நிறமி கூடுதலாக இருப்பதால், இறைச்சியானது கறுப்பாக இருக்கும். இந்த இறைச்சி சுவையும், மணமும் மருத்துவக் குணமும் நிறைந்ததாகும். அதனால் இது கறுப்பு இறைச்சி அல்லது காலமாசி எனவும் அழைக்கப்படுகிறது. இதில் மற்ற கோழி இறைச்சியில் இருப்பதை விட கொலஸ்ட்ரால் மிகவும் குறைவு. ஆனால், முக்கியமான அமினோ அமிலங்கள், தேவையான ஹார்மோன் சத்துகள் நிறைய உள்ளன.

மத்திய பிரதேச  மலைவாழ் மக்கள் தீபாவளியின் போது இந்தக் கோழிகளைக் கோயில்களில் பலியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்கள் இக்கோழி இறைச்சியை, நாள்பட்ட நோய்கள், மூட்டு வலி, நரம்புத் தளர்ச்சிக்கு மருந்தாக, ஹோமியோபதி மருத்துவ முறையில் பயன்படுத்துகின்றனர்.


கடக்நாத் JEYAKUMAR

மரு..ஜெயகுமார்,

மரு.மு.மலர்மதி, முனைவர் இரா.சரவணன், 

கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்-637002.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!