உங்க தோட்டங்களிலும் பூச்சித் தொல்லை இருக்கிறதா?

பூச்சி erukku11 e1612677274485

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019

யிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது பயிர் வளர்ப்பு முறைகளில் முக்கியமானது. பூச்சிகள் அதிகளவில் பெருகிய பிறகு கட்டுப்படுத்துவதை விட, அவற்றின் நடமாட்டம் தெரிந்ததுமே பயிர்களைப் பாதுகாக்கும் உத்திகளை மேற்கொள்வது நல்லது.

பூச்சிகளை விரைவாகக் கட்டுப்படுத்த, பூச்சிக்கொல்லிகள் உதவினாலும், இவற்றினால் விளையும் தீங்குகள் அதிகம். நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தில் ஒரு சதம் மட்டுமே பூச்சிகளை அழிப்பதற்குப் பயன்படுகிறது. மீதமுள்ள 99% இந்த மண்ணையும் காற்றையும் அடைந்து சூழலைக் கெடுக்கிறது.

மேலும், பூச்சிக்கொல்லிகள் நன்மை செய்யும் பூச்சிகளையும் அழிப்பதால், தீமை செய்யும் பூச்சிகள் பல மடங்காகப் பெருகிப் பயிர்களில் சேதத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தான், பூச்சிகளை அங்கக முறையில் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

பயிர்ச் சுழற்சி

இதற்கு, உழவியல் முறைகள், இயந்திரவியல் நுட்பங்கள், தாவரப் பூச்சிக்கொல்லிகள் போன்றவை துணை செய்கின்றன. இவற்றில் ஒன்று, சுழற்சி முறையில் பயிர்களைச் சாகுபடி செய்தல்.

ஒரு நிலத்தில் ஒருவகைப் பயிரை மட்டுமே தொடர்ந்து சாகுபடி செய்யும்போது, அதற்குத் தேவையான சத்து மட்டுமே உறிஞ்சப்படுவதால் அந்தச் சத்து, பயிர்களுக்குப் போதுமான அளவில் கிடைப்பதில்லை. எனவே, பயிர்கள் எளிதில் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

மேலும், ஊடுபயிர் இருக்கும் நிலத்தில், பூச்சிகளின் விருப்பு வெறுப்புக்கான பயிர்கள் இருப்பதால், பூச்சிகள் கட்டுக்குள் இருக்கும்.

புகலிடத்தை மாற்றுதல்

இந்தப் பூச்சிகளில் சில, பயிர் அறுவடை முடிந்ததும் அப்பகுதியில் தமது வாழ்க்கைக்கு ஏற்ற மற்ற பயிர்களை அடைந்து, சாதகமான நிலை வந்ததும் மீண்டும் பயிர்களைத் தாக்கி வாழத் தொடங்கும்.

எனவே, நிலத்தைச் சுற்றியுள்ள இடத்தைச் சுத்தமாக வைத்தல், வரப்புகள், மூலை முடுக்குகளில் பூச்சிகளைக் கவரும் மற்றும் விரட்டும் தாவரங்களை வைத்தல் மூலம் பூச்சிகளின் பெருக்கம் மற்றும் பயிர்ச் சேதத்தைக் குறைக்கலாம்.

கவர்ச்சிப் பயிர்கள்

ஒரு பூச்சி விரும்பி உண்ணும் பயிர் கவர்ச்சிப் பயிர் எனப்படும். இத்தகைய கவர்ச்சிப் பயிர்களை முக்கியப் பயிர்களின் ஊடே பயிரிட வேண்டும். இந்தப் பயிர்களைப் பூச்சிகள் தாக்கும் போதே பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்தால், அவற்றை எளிதில் கட்டுப்படுத்தலாம்.

தாவரப் பூச்சி விரட்டிகள்

வேம்பு, நொச்சி, எருக்கு, ஆடாதோடா, அரளி, தும்பை, சோற்றுக் கற்றாழை, புங்கன், இலுப்பை, சீத்தா போன்றவை சிறந்த பூச்சி விரட்டிகளாக உள்ளன. அசுவினி, இலைப்பேன், மாவுப்பூச்சி, தத்துப்பூச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்த, ஐந்து கிலோ வேப்ப விதைகளை நன்கு இடித்து 100 லிட்டர் நீரில் மூன்று நாட்கள் ஊற வைத்து வடிகட்டித் தெளிக்கலாம்.

இது நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்தி, தேனீ போன்றவற்றில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. வேம்பு, புங்கன், இலுப்பை எண்ணெய் வகைகளை, நீர், ஒட்டும் திரவம் சேர்த்துத் தெளித்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.


பூச்சி SUGANTHI e1629915824578

முனைவர் மு.சுகந்தி,

முனைவர் அ.இளங்கோ, முனைவர் ச.த.செல்வன், கால்நடை முதுகலை

ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!