கடல் உணவிலுள்ள நெகிழித் துகள்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்!,

கடல் உணவி image 20160222 25855 5rh1yl e1614636344761

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021

ருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து அதிகரித்து வரும் நெகிழிப் பயன்பாட்டால் பல எதிர் விளைவுகளை இந்த உலகம் சந்தித்து வருகிறது. அதிலும் முக்கியமாக, கடலில் ஆண்டுக்கு எட்டு மில்லியன் மெட்ரிக் டன் நெகிழி சேர்கிறது. மேலும், கடற்பரப்பில் இப்போது 5.25 டிரில்லியன் நெகிழித் துகள்கள் வலம் வருவதாகக் கணக்கிடப்பட்டு உள்ளது.

கடலில் காணப்படும் நெகிழியில் 80% நிலம் சார்ந்த பயன்களின் மூலம் சேர்ந்தவை. நெகிழியின் நிலைத்தன்மை மற்றும் சிதைவுறும் காலமானது; அதன் வகைகள், வடிவம், நிறை, சூழ்நிலைக் காரணிகள், பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். சூரியவொளி, கடல் அலை, அழுத்தம் போன்ற இயற்கைக் காரணிகளால் சிதையும் நெகிழிப் பொருள்கள் நுண் துகள்களாக மாறுகின்றன.

நாள்பட்ட இந்த நெகிழித் துகள்கள்; கடற்சூழல் அமைப்பு, உணவுச் சங்கிலி மற்றும் கடல் உணவுகளை மாசடையச் செய்கின்றன. மேலும், நெகிழித் துகள்கள், பல உயிரினங்களின் உடல் உறுப்புகளில் இருப்பதை உறுதி செய்யும் ஆய்வுகள், அவற்றால் உடல் நலம் கெடுவதையும் ஆவணப் படுத்துகின்றன.

நுண் நெகிழிகள்

நெகிழியில் 5 மி.மீ. அளவுக்குக் குறைந்தவை நுண் நெகிழிகள் எனப்படும். இவை, ஒப்பனை, துணித் தயாரிப்பு ஆலைகளில் இருந்து வெளியில் வந்து சேர்கின்றன. சுற்றுச்சூழலுக்குக் கேடு தரும் இந்த நுண்நெகிழிகள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

முதன்மை நுண் நெகிழிகள்

இவை 5 மி.மீ.க்குக் குறைவான அளவில் இருக்கும். எ.கா: மைக்ரோபீட்ஸ் என்னும் ஒப்பனைப் பொருள்கள். 2015 ஆம் ஆண்டின் ஆய்வுப்படி, அமெரிக்காவில் மட்டும் எட்டு மில்லியன் மைக்ரோபீட்ஸ் நீர் நிலைகளில் கலக்கின்றன. மேலும், இந்த முதன்மை நுண் நெகிழிகள் பல நெகிழி ஆலைகளில் இருந்தும் வெளியில் வந்து சேர்கின்றன.

இரண்டாம் நிலை நுண் நெகிழிகள்

இவை, தொழிற் சாலைகள், வாகனச் சக்கரங்கள் மற்றும் நெகிழிச் சிதைவுகளில் இருந்து வெளியே வருகின்றன. மேலும், மனிதர்களால் மண்ணில் வீசப்படும் நெகிழிக் குப்பைகளே இவ்வகை நுண் நெகிழிகளின் ஆதாரமாகும்.

கடல், கடல்சாற் சூழலில் நுண் நெகிழிகள்

கடல் சூழலில் நுண் நெகிழிகள் சிறு சிறு துகள்களாக, இழைகளாக, துண்டுகளாகக் கிடக்கின்றன. இவை பலதரப்பட்ட பாலிமர்களுடன் உள்ளன. சில நுண் நெகிழிகள் கடல்நீரை விட அதிக அடர்த்தியை அடைந்து, கடல் தரையில் பரவிக் கிடக்கின்றன. அவையாவன: பாலிஅமைடு, பாலி எஸ்டர், பிவிசி அக்ரிலிக். இவையல்லாத நுண் நெகிழிகள் கடல் நீரில் மிதக்கின்றன. எ.கா: பாலி எத்திலின், பாலிப்ரொப்பலீன், பாலிஸ்டீரைன். 

கடல் மாசும் நெகிழிப் பொருள்களும்

தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கடலில் குவிக்கப்படும் நெகிழிப் பொருள்கள், மிகக் குறைந்த வேகத்தில் சிதைந்து நுண் நெகிழிகளாக மாறுகின்றன. எளிதில் சிதையாத இந்தப் பொருள்கள் கடல் மாசின் முக்கியக் காரணியாக உள்ளன. ஒருமுறை மட்டும் பயன்படும் 300 மில்லியன் டன் நெகிழிப் பொருள்கள் ஆண்டுதோறும் வெளியில் கொட்டப்படுகின்றன. இவற்றில் பெரும் பகுதிப் பொருள்கள் கடலுக்குள் சேர்க்கப்படுகின்றன.

இப்படிச் சேரும் நெகிழிகள், நுண் நெகிழிகள் கடல்வாழ் உயிரிகளின் வாழ்வாதாரத்தைக் குலைப்பதுடன், கடல் உணவை உண்ணும் மக்களின் நலத்தையும் கேள்விக்குறியாக மாற்றியுள்ளன. இந்த நுண் நெகிழிகள் கடற்சூழல் மற்றும் உணவுச் சங்கலியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மூன்றில் ஒரு பங்கு கடல்வாழ் உயிரிகளின் வாழ்வியல் இவ்வகை நெகிழிகளால் சிதைகிறது. மேலும், 90% கடற் பறவைகளின் வயிற்றில் நெகிழிகள் காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

நுண் நெகிழிகளும் மாசுபடுத்தும் காரணிகளும்

பல மோனோமர்களைக் கலந்து நெகிழிகள் உருவாக்கப்படும். இந்த நெகிழிகளில் நெகிழி உண்டாக்கிகள், நிறமிகள், நுண்ணுயிர்க் கொல்லிகள், புற ஊதா நிலைப்படுத்திகள், வெப்ப மற்றும் நீர் ஒடுக்கிகள் போன்ற வேதிப்பொருள்கள் சேர்க்கப்படும். முழுமையாக உருவாக்கப்பட்ட நெகிழிகளில் இந்தப் பொருள்கள் பிரிந்து தனித் தன்மையை வெளிப்படுத்தும். சிதைவுக்கு உள்ளாகும் நெகிழிகளே நுண் நெகிழிகளின் முதல் மூலமாகும்.

இந்த நுண் நெகிழிகள், சுற்றுச்சூழலில் உள்ள உயிரிகளால் கிரகிக்கப்பட்டு அவற்றின் உடலில் தங்கிப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கடலில் உள்ள நுண் நெகிழிகள் தொடர்ந்து மாசுபடுத்தும் கரிய வேதிப்பொருள்களைக் கிரகித்துத் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளன. இவை, நீரைக் காட்டிலும் நெகிழிகளால் ஈர்க்கப்பட்டு, அவற்றால் தேக்கி வைக்கப் படுகின்றன. இத்தகைய நெகிழிகளின் அளவு சுற்றுப்புற நீரிலுள்ள நெகிழிகளின் அளவைவிட அதிகமாகும்.

கடல்வாழ் உயிரினங்களில் நுண் நெகிழிகளின் தாக்கம்

மக்கள் மிகவும் விரும்பி உண்ணும் கடல் மீன்கள், ஓட்டு மீன்கள், இறால்கள் போன்றவற்றின் குடல் உள்ளிட்ட உடற் பாகங்களில் நுண் நெகிழிகள் செறிந்துள்ளன. கருவாடுகளிலும் இதன் அளவு சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இந்த நுண் நெகிழிகள், கடல் உணவுகள் மூலம் மக்களின் உடலுக்குள் சென்று உடற் பாகங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பூச்சிக் கொல்லிகள் மற்றும் பிஸ்பீனால் போன்ற ஆபத்துள்ள வேதிப்பொருள்களை வெளியேற்றி நோயெதிர்ப்புத் திறனைக் குறைக்கிறது.

நுண் நெகிழிகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

ஆக்ஸிஜனேற்ற அழுத்தம்: இது, ஆக்ஸிஜனேற்றிகளுக்கும் தனித்தியங்கும் கூறுகளுக்கும் இடையிலான எதிர்மறை நிலைப்புத் தன்மையாகும். இவ்வித அழுத்தம் மனித உடலில் புற்றுநோய் மற்றும் இதயநோய்ப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தைராய்டு குறைபாடு: நுண் நெகிழிகள் அதிகளவில் உடலுக்குள் செல்லும் போது, தைராய்டு ஹார்மோனில் சேதத்தை ஏற்படுத்துகிறது. தைராய்டு ஹார்மோன் கருவுறுதலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நரம்பியல் பாதிப்பு: நுண் நெகிழிகளால் மனித மூளை மற்றும் நரம்புகளின் நியூட்ரான்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். மேலும், டெரும்ஷியா எனப்படும் நோய் அறிகுறியையும் ஏற்படுத்தும்.

நாளமில்லாச் சுரப்பிகள் சீர்குலைதல்: நெகிழிகள், சுரப்பிகளில் பெரும் சீர்குலைவை ஏற்படுத்தும். எனவே, நுண் நெகிழிகளும் அதே திறனில் செயல்படும். இவ்வகைப் பாதிப்பு மனிதர்களின் கருவுறுதல், குணங்கள் மற்றும் மொத்த உடல் நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

புற்றுநோய்: நுண் நெகிழிகளின் நெடுநாட்கள் இருப்பதால் நாளுக்கு நாள் புற்றுநோயின் தாக்கம் மனிதர்களில் செறிந்து காணப்படுகிறது.

இன்றைய சூழ்நிலையில் கடல் உணவனாது, தவிர்க்க இயலாத உணவாக உள்ளது. நெகிழிகளின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் மட்டுமே, கடல் உணவில் நுண் நெகிழிகளின் பாதிப்பைத் தவிர்க்க இயலும். நெகிழிகளால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்த வளரும் நாடுகள், நெகிழிகளின் பயன்பாட்டைக் குறைக்க தொடங்கியதுடன், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமல் அதை அகற்றும் வழிமுறைகளையும் ஆராயத் தொடங்கியுள்ளன.


கடல் உணவி B.SIVARAMAN

முனைவர் பா.சிவராமன்,

த.சூர்யா, வெ.அலமேலு, இரா.ஷாலினி, உ.அரிசேகர்,

ச.சுந்தர், இரா.ஜெயஷகிலா, ஜீ.ஜெயசேகரன், 

மீன்தர உறுதிப்பாடு&மேலாண்மைத் துறை, மீன்வளக் கல்லூரி, தூத்துக்குடி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!