கறவை மாடுகளைத் தாக்கும் இலம்பி நோய்!

Pachai boomi_Ilambi.jpg

கால்நடைகள் வளர்ப்பிலும், உற்பத்தியிலும் மற்ற மாநிலங்களை விட, தமிழகம் முன்னிலையில் உள்ளது. கறவை மாடுகள் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும் நமக்கு வருவாயையும் தருகின்றன. தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம், கறவை மாடுகளைப் பல்வேறு நோய்கள் தாக்கக் காரணமாக இருக்கிறது. இவற்றில் ஒன்று, இலம்பித் தோல் நோய்.

இந்த நோயை ஏற்படுத்தும் நச்சுயிரி, வெள்ளாடு, செம்மறி ஆடுகளில் அம்மை நோயை உருவாக்கும் நச்சுயிரிக் குடும்பத்தைச் சேர்ந்தது. பூச்சிக்கடி மூலம் பரவும் இந்நோய், பசு மற்றும் எருமைகளைத் தாக்குகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாடுகளில் இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், தோலில் ஏற்படும் கொப்புளங்கள், உடல் இளைத்தல் ஆகியவற்றால், பால் உற்பத்திக் குறைந்து பொருளாதார இழப்பு உண்டாகும்.

இலம்பித் தோல் நோய், நாட்டு மாடுகளைக் காட்டிலும் கலப்பின மாடுகளைத் தான் அதிகமாகத் தாக்கும். இது, முதலில் ஆப்பிரிக்க நாடுகளில் தோன்றியது. அடுத்து, ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் பரவியது. இப்போது இந்தியாவில் கேரளம், ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டில் பரவியுள்ளது.

பரவும் முறை

கொசு, ஈ, உண்ணிகளால் பாதிக்கப்பட்ட மாடுகள் மூலம் பரவும். நோயுற்ற மாடுகளின் இரத்தம், எச்சம், விந்தணுக்கள் மூலம் பரவும். இந்நோயால் தாக்குண்ட பசுவின் பாலைக் குடிக்கும் கன்றுக்கும், சினை மாடாக இருந்தால் கருவிலுள்ள கன்றுக்கும் பரவும். இந்நோயால் ஏற்படும் கொப்புளங்கள் மற்றும் காயங்களில், இந்த நச்சுக் கிருமிகள் 16-35 நாட்களுக்கு வீரியமாக இருக்கும். கோடையின் தொடக்கத்தில் பரவும் இந்நோய் மக்களைத் தாக்காது.

நோய் அறிகுறிகள்

கண்ணில் நீரும் மூக்கில் சளியும் வடியும். காய்ச்சல் கடுமையாக இருக்கும். பசியின்மை, சோர்வு, நலக்குறைவு இருக்கும். உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கும். நிணநீர்ச் சுரப்பிகள் பெரிதாக இருக்கும். நோய் அறிகுறி தெரிந்த 48 மணி நேரத்தில், தலை, கழுத்து, கால், மடி, இனப்பெருக்க உறுப்பு ஆகியவற்றில், 2.5 செ.மீ. அளவில் கொப்புளங்கள் உருவாகும்.

தோலில் 0.5-5 செ.மீ. அளவில் கட்டிகள் ஏற்படும். இந்தக் கட்டிகள் உடைந்து சீழ்ப் பிடித்து, புண்ணாவதால் உண்டாகும் தழும்புகள் மறையாமல் இருக்கும். சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படும். மலட்டுத் தன்மையும் நிகழலாம். கால்கள், உடம்பின் அடிப்பாகம், இனப்பெருக்க உறுப்பு ஆகியன வீங்குவதால், மாடுகள் நடக்கச் சிரமப்படும்.

தடுப்பு முறைகள்

கால்நடைகள் மற்றும் சுற்றுப்புறம் சுத்தமாக இருந்தால், இந்நோய் வராது; மற்ற கால்நடைகளுக்கும் பரவாது. நோயுற்ற மாடுகளைத் தனியாக வைக்க வேண்டும்; அல்லது பண்ணையில் இருந்து நீக்க வேண்டும். கொட்டிலைக் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இந்த நச்சுயுரியால் ஏற்படும் இரண்டாம் நிலைத் தாக்கத்தைக் கட்டுப்படுத்த, முறையான தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

மூலிகை மருத்துவம்

வாய்வழி மருந்து முறை 1: பேராசிரியர் புண்ணியமூர்த்தி அவர்கள் மாடுகளைத் தாக்கும் தோல் நோய்க்கான மூலிகை மருத்துவம் குறித்துக் கூறியுள்ளார். அதாவது, 10 வெற்றிலை, 10 கிராம் மிளகு, 10 கிராம் கல்லுப்பு, தேவையான அளவு வெல்லம் ஆகியவற்றை நன்றாக அரைத்து, கொஞ்சம் கொஞ்சமாக மாட்டின் நாக்கில் தடவிக் கொடுக்க வேண்டும். இது ஒரு தடவை கொடுப்பதற்கான அளவு.

இப்படி, முதல் நாளில் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுக்க வேண்டும். இரண்டாம் நாளிலிருந்து ஒரு நாளைக்கு மூன்று தடவை வீதம் 2-3 வாரங்களுக்குக் கொடுக்க வேண்டும்.

முறை 2: பூண்டுப் பல் 2, கொத்தமல்லி 10 கிராம், சீரகம் 1 கிராம், துளசி 1 கைப்பிடி, காய்ந்த இலவங்க இலை 1 கிராம், மிளகு 10 கிராம், வெற்றிலை 5, சின்ன வெங்காயம் 2, மஞ்சள் தூள் 10 கிராம், நிலவேம்பு இலைத்தூள் 30 கிராம், திருநீற்றுப் பச்சிலை 1 கைப்பிடி, வேப்பிலை 1 கைப்பிடி, வில்வ இலை 1 கைப்பிடி, வெல்ல 100 கிராம் எடுத்து, நன்றாக அரைக்க வேண்டும். இது ஒரு தடவைக்கான அளவு.

இதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாட்டின் நாக்கில் தடவிக் கொடுக்க வேண்டும். முதல் நாளில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறையும், இரண்டாம் நாளிலிருந்து காலை, மாலையென, நோய் சரியாகும் வரையும் கொடுக்க வேண்டும்.

வெளிப்பூச்சு மருந்து: குப்பைமேனி இலை 1 கைப்பிடி, பூண்டு 10 பல், வேப்பிலை 1 கைப்பிடி, மருதாணி இலை 1 கைப்பிடி, மஞ்சள் தூள் 20 கிராம் எடுத்து நன்றாக அரைத்து, 100 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யில் கலந்து, காய்ச்சி ஆறவிட்டு, காயங்களைச் சுத்தப்படுத்தித் தடவ வேண்டும்.

காயத்தில் புழுக்கள் இருந்தால், சீத்தாப்பழ இலையை அரைத்துக் காயத்தில் தடவ வேண்டும். பச்சைக் கற்பூரத்தைத் தேங்காய் எண்ணெய்யில் கலந்து காயத்தில் விட்டுப் புழுக்களை நீக்கிய பிறகு தடவலாம். இந்த மருந்தை ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


PB_DEVAKI

முனைவர் .தேவகி,

முனைவர் ப.இரா.நிஷா, வேளாண்மை அறிவியல் நிலையம்,

காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!