நிலக்கடலை சாகுபடியில் கருவிகள்!

நிலக்கடலை Tractor operated Inclined Plate Planter

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015

ற்போதைய சூழ்நிலையில் நிலக்கடலை சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள தேவையான ஆட்கள் சரிவரக் கிடைப்பதில்லை. அதனால், நிலக்கடலை சாகுபடியில் வேளாண் பெருமக்கள் கருவிகளைப் பயன்படுத்தினால் செலவைக் குறைத்து அதிக மகசூலை எடுத்துப் பயன்பெறலாம்.

கொத்துக் கலப்பையுடன் விதைக்கும் கருவி

இக்கருவி மாடுகளின் உதவியுடன் விதைப்பதற்குப் பயன்படுகிறது. இக்கருவி, மூன்று கலப்பைகள், விதைப்பெட்டி, விதைகள் உடையாமல் ஒவ்வொன்றாக எடுத்துச் சாலில் போடுவதற்கேற்ற குவளை அமைப்பு கொண்ட சாதனம், இவற்றை இயக்கும் சக்கர அமைப்பு, சால்களில் விதை விழுந்தவுடன் அதை மண் மூடுவதற்கேற்ற அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கலப்பை உழும் ஆழத்தைத் தேவைக்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். தேவையில்லாதபோது விதை விழுவதை நிறுத்துவதற்கேற்ற அமைப்பு ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியை இயக்கும் பொழுது விதைப் பெட்டியின் மேல்பாகம் சமநிலையில் உள்ளவாறு பார்த்துக் கொள்வது அவசியம். இல்லையெனில் குவளைகள் எடுத்து வரும் விதை புனலில் விழாமல் வெளியில் விழுவதற்கு எதுவாகும்.

தானாகவே ஒவ்வொரு விதையாக எடுத்துத் தகுந்த இடைவெளியில் குறிப்பிட்ட ஆழத்தில் விதைகளை சால் இடுவது இக்கருவியின் சிறப்பாகும். ஆகவே விதை இடுவதற்கான வேலையாட்கள் தேவையில்லை. இக்கருவியைப் பயன்படுத்தினால் ஒரு எக்டருக்கு 12 மணி நேரம் மீதமாகிறது. இக்கருவியில் உள்ள விதைக் குவளையை மாற்றுவதன் மூலம், நிலக்கடலை, கொண்டைக்கடலை மக்காச்சோளம், சோளம் மற்றும் பயறு வகைகளையும் விதைக்கலாம். இதன் மூலம் நாளன்றுக்கு ஒரு எக்டர் நிலத்தில் விதைக்கலாம் இதன் விலை ரூ.8,000.

பவர் டில்லருடன் விதைக்கும் கருவி

இக்கருவி நிலக்கடலையை வரிசையில் விதைக்கப் பயன்படுகிறது. இக்கருவியில், விதைப்பெட்டி, விதைகளை உடையாமல் ஒவ்வொன்றாக எடுத்துச் சாலில் போடும் குவளை போன்ற அமைப்பு, இரும்புச்சட்டம். கிளட்ச் மற்றும் உட்காருவதற்கேற்ற இருக்கை அமைப்பு போன்றவை உள்ளன. இந்த அமைப்புகள் அனைத்தும் இரு சக்கரங்களுடன் கூடிய சட்டத்தின் மேல் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவியைப் பவர்டில்லருடன் இணைத்த பின் மிகக்குறைந்த ஆரத்தில் (1.10 மீட்டர்) எளிதாகத் திருப்பலாம். ஆதலால் விதைக்கப்படும் நிலத்தின் ஓரங்களில் கருவியைத் திருப்புவதற்கான இடம் குறைவாகவே தேவைப்படும். 

கையினால் இயங்கும் லீவர் அமைப்பின் மூலம் கொத்துக் கலப்பைகளைக் கொண்ட இரும்புச் சட்டத்தை மேலேயும் கீழேயும் எளிதாக இயக்கலாம். கலப்பைகளுக்கு இடைப்பட்ட இடைவெளியையும் விதைக்கும் ஆழத்தையும் தேவையான அளவிற்கு எளிதாக மாற்றிக்கொள்ளலாம். இரும்புச் சட்டத்தை லீவர் கம்பியினால் இயக்கி மேலே நகர்த்தும்போது விதைகளை எடுத்துப் போடும் அமைப்பிற்குச் செல்லும் இயக்கம் நிறுத்தப்படுகிறது. பவர்டில்லரை இயக்குபவர். அதற்குரிய இருக்கையின் மேல் அமர்ந்தவாரே எளிதாக இயக்கலாம். வரிசைகளின் இடைவெளியை 25 செ.மீ. முதல் 60 செ.மீ. வரை மாற்றிக் கொள்ளலாம். நாளன்றுக்கு 1.6 எக்டர் நிலத்தில் விதைக்கலாம். இதன் விலை ரூ.20,000 ஆகும்

கலப்பையுடன் விதைக்கும் கருவி

விதைப்பதற்கு இக்கருவியானது பயன்படுகிறது. இதில், விதைப்பெட்டி, விதைகள் உடையாமல் ஒவ்வொன்றாக எடுத்துச் சாலில் போடுவதற்கேற்ற குவளை அமைப்பு கொண்ட சாதனம், இவற்றை இயக்கும் சக்கர அமைப்பு, சால்களில் வேண்டிய ஆழத்தில் விதை விழுந்தவுடன் அதை மண்ணால் மூடுவதற்கேற்ற அமைப்பு ஆகியவை உள்ளன. இக்கருவியானது டிராக்டர் கொத்துக் கலப்பையின் மேல் பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது. தேவையில்லாத இடங்களில் விதைகள் விழாமல் தடுக்க கிளட்ச் அமைப்பு ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. வரிசைகளின் இடைவெளியையும், விதைக்கு விதை உள்ள இடைவெளியையும் வேண்டியவாறு மாற்றிக் கொள்ளலாம்.

இக்கருவியால் 87.5 சதவீதம் நேரம் மீதமாகிறது. இக்கருவியைக் கொண்டு நிலக்கடலை, கொண்டைக் கடலை, மக்காச்சோளம், சோளம் மற்றும் பயறு வகைகளையும் விதைக்கலாம். நாளன்றுக்கு 4 எக்டர் நிலத்தில் விதைக்கலாம். இக்கருவியின் விலை ரூ.20,000 ஆகும்.

குழிப்படுகை அமைத்து விதைத்தல்

ஒரே சமயத்தில் குழிப்படுகைகளை அமைத்து விதைக்கலாம். இக்கருவி உழுவதோடு குழிப்படுகையையும் அமைத்து விதைகளை விதைக்கிறது. குழிப்படுகை அமைக்கும் பகுதியை டிராக்டர் கொத்துக் கலப்பையின் பின்னால் இணைத்துக் கொள்ளலாம். இதில் 30 செ.மீ. அகலமுள்ள மூன்று குழி அமைக்கும் பகுதிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கலப்பையில் அமைந்துள்ள கொழுக்கள் தேய்ந்து போனால் சுலபமாக மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு குழி அமைக்கும் பகுதியும் குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே தூக்குமாறு ஒரு முட்டை வடிவம் கொண்ட கேம் பொருத்தப்பட்டுள்ளது. இவை தரையில் சக்கரங்களால் இயக்கப்படுகின்றன. டிராக்டரால் இயக்கப்படும்போது கொத்துக் கலப்பை உழுதபின் இக்கருவி சுமார் 125 செ.மீ. நீளமும் 30 செ.மீ. அகலமும் 20 செ.மீ. ஆழமும் உள்ள குழிப்படுகைகளை அமைக்கிறது. இப்படுகைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் மண்ணின் ஈரம் நீண்ட நாட்களுக்கு நிலை நிறுத்தப்படுகிறது.

கொத்துக் கலப்பையின் மேல் விதைக்கும் கருவியைப் பொருத்திக் கொள்ளலாம். விதைக்கும் கருவியான விதைப்பெட்டி, விதைகள் உடையாமல் ஒவ்வொன்றாக எடுத்துச் சாலில் போடுவதற்கேற்ற குவளை அமைப்பு, ஆழத்தில் விதை விழுந்தவுடன் அதை மண் மூடுவதற்கேற்ற அமைப்பு ஆகியவை உள்ளன. இக்கருவியை 9 அல்லது 11 வரிசை கொத்துக் கலப்பையின் மேல் சுலபமாகப் பொருத்திக் கொள்ளலாம். 45 செ.மீ. இடைவெளியில் 4 வரிசைகளில் விதைகளை விதைக்கலாம். வறண்ட பகுதிகளில் மழைக் காலங்களில் சிறந்த முறையில் நீரைச் சேமிப்பதோடு மண்ணரிப்பையும் தடுக்கலாம். நிலத்தின் மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. நாளன்றுக்கு 3.5 எக்டர் நிலத்தில் விதைக்கலாம். இக்கருவின் விலை ரூ.50,000 ஆகும்.

அகலப்பாத்தி அமைத்து விதைக்கும் கருவி

ஒரே சமயத்தில் அகலப்பாத்தி அமைத்து விதைக்கலாம். இக்கருவியானது, விதைப்பெட்டி, விதைகள் உடையாமல் ஒவ்வொன்றாக எடுத்து சாலில் போடுவதற்கேற்ற குவளை அமைப்பு கொண்ட சாதனம், இவற்றை இயக்கும் சக்கர அமைப்பு, சால்களில் வேண்டிய ஆழத்தில் விதை விழுந்தவுடன் அதை மண்ணால் மூடுவதற்கேற்ற அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 180 செ.மீ. இடைவெளியில் 30 செ.மீ. அகலமுள்ள இரு வாய்க்கால்களை அமைக்கும் பகுதியை, கொத்துக் கலப்பையின் இரு பக்கங்களிலும் இணைத்துக் கொள்வதன் மூலம் அகலப்பாத்தி அமைத்து விதைகளை விதைக்கலாம். வறண்ட பகுதிகளில் மழைக் காலங்களில் சிறந்த முறையில் நீரைச் சேமிப்பதோடு மண்ணரிப்பையும் தடுக்கலாம். நிலத்தின் மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. 180 செ.மீ. இடைவெளியில் 30 செ.மீ. அகலமுள்ள வாய்க்கால்களை அமைத்து மழைநீரைச் சேமிக்கலாம். நாளன்றுக்கு 3.2 எக்டர் நிலத்தில் விதைக்கலாம். இக்கருவியின் விலை ரூ.45,000 ஆகும்.

நீண்ட கைப்பிடியுடன் களையெடுக்கும் கருவி

வரிசைப் பயிர்களில் களை எடுக்கலாம். இக்கருவியில் ஆட்கள் நின்ற நிலையிலேயே களையெடுப்பதற்கு வசதியாக நீண்ட கைப்பிடி பொருத்தப்பட்டுள்ளது. களையெடுக்கும் கத்தி மற்றும் எளிதில் தள்ளிச் செல்வதற்கேற்ற உருளையும் கைப்பிடியின் அடிப்பாகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மண்ணின் தன்மைக்கேற்ப நட்சத்திர வடிவ அல்லது முள்வடிவ உருளைகளைப் பொருத்தி இயக்குதல் அவசியம். கைப்பிடியை முன்னும் பின்னும் இயக்கும் போது கத்தி மண்ணிற்குள் சென்று களைச்செடிகளை வெட்டுகிறது. இக்கருவி மூலம் அதிகச் சோர்வு அடையாமல் முதுகை வளைக்காமல் நின்ற நிலையில் நடந்தவாறு களையெடுக்கலாம். ஒரு நாளில் சாதாரண முறையை விட இரண்டு பங்குப் பரப்பளவில் களையெடுக்கலாம். நாளன்றுக்கு 0.05 எக்டர் நிலத்தில் களை எடுக்கலாம். இக்கருவியின் விலை ரூ.600 ஆகும்.

அறுவடைக் கருவி

நிலக்கடலைச் செடிகளை அறுவடை செய்ய இக்கருவி பயன்படுகிறது. இக்கருவியில், மண்ணைத் தோண்டி நிலக்கடலைச் செடிகளை அறுவடை செய்யும் அமைப்பும், செடிகளை மண்ணை விட்டு மேலே எடுத்துச் செல்லும் முட்கள் போன்ற அமைப்பும், செடிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஈரமண்ணை அகற்றுவதற்குத் தகுந்த அமைப்பும், பின்பு செடிகளை வரிசையாகப் போடும் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளன. 35 குதிரைத்திறன் கொண்ட டிராக்டரால் இயங்கவல்லது. இக்கருவியை இயக்க டிராக்டர் ஓட்டுநரும் உதவியாளர் ஒருவரும் போதுமானது. இக்கருவியை, மனித ஆற்றலினால் அறுவடை செய்யும் முறையுடன் ஒப்பிடும் போது 32 விழுக்காடு செலவும் 96 விழுக்காடு நேரமும் மீதமாகின்றது. நாளன்றுக்கு 2 எக்டர் நிலத்தில் அறுவடை செய்ய முடிகிறது. இக்கருவியின் விலை ரூ.25,000 ஆகும்.

காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்

நிலக்கடலைச் செடியிலிருந்து காய்களைப் பிரித்தெடுக்கலாம். இந்த இயந்திரத்தில் பல முனைகளைக் கொண்ட சுழலும் உருளைக்குழிவுச் சல்லடை, துருத்தி, முன் பின் ஆடும் வெவ்வேறு அளவு சல்லடைகள் ஆகிய பாகங்கள் உள்ளன. இதை இயக்க 5 குதிரைத்திறன் கொண்ட மின்சார மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. அறுவடை செய்த செடிகளை இந்த இயந்திரத்திலுள்ள இடுபெட்டியில் செலுத்தும்போது சுழலும் உருளையில் உள்ள முனைகள் மற்றும் சுற்றிலும் உள்ள குறுக்குக் கம்பிகளின் உதவியால் செடியிலிருந்து காய்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. பிரித்தெடுக்கப்பட்ட காய் மற்றும் செடிகள் கீழே பொருத்தப்பட்டுள்ள சல்லடையின் மேல் விழுகின்றன. துருத்தியின் உதவியினால் இலைகள் பிரிக்கப்பட்டுக் காய்கள் தனியாக கீழே வந்தடைகின்றன. அறுவடை செய்த உடனேயே உலர்த்தாமல் செடியிலிருந்து காய்களைப் பிரித்தெடுக்கலாம். செடியுடன் பிரித்தெடுக்கப்படாமல் செல்லும் காய்கள் மற்றும் உடையும் காய்கள் சுமார் மூன்று விழுக்காட்டுக்கும் குறைவே. இக்கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் சுமார் 32 விழுக்காடு செலவும், 70 விழுக்காடு நேரமும் மீதமாகிறது. இக்கருவியின் விலை ரூ.35,000 ஆகும்.

விசையால் இயங்கும் தோல் நீக்கும் இயந்திரம்

நிலக்கடலையை உடைத்து ஓடு (தோல்) நீக்கம் செய்ய ஏற்ற இயந்திரம். இந்த இயந்திரத்தில், உட்செலுத்தும் கலன், முன்னும் பின்னும் இயங்கும் அமைப்பு, சல்லடை, மின் மோட்டார் மற்றும் பிரதானச் சட்டம் ஆகியன உள்ளன. நிலக்கடலையானது முன்னும் பின்னும் இயங்கும் அமைப்புகளுக்கும், நிலையாக உள்ள குவிச் சல்லடைக்கும் இடையில் நிலக்கடலை ஓடு மற்றும் பருப்பு பிரிக்கப்படுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட நிலக்கடலை ஓடு மற்றும் பருப்பு ஆகிய இரண்டும் சல்லடையின் வழியே வருகின்றன. இந்த நிலக்கடலை ஓடானது காற்றுத் துருத்தியின் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. நிலக்கடலைப் பருப்பு, வெளிவாய் மூலம் சேகரிக்கப்படுகிறது. நிலக்கடலை ஓடு காற்றோடு கருவியிலிருந்து வெளியேற்றப்படுகிறது. குவி வடிவச் சல்லடை, நிலக்கடலையின் இரகம் மற்றும் பருமனுக்கேற்றவாறு மாற்றிக்கொள்வது இதன் சிறப்பு அம்சமாகும். இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 400 கிலோ நிலக்கடலையை ஓடு நீக்க முடியும். இதன் விலை ரூ.30,000 ஆகும்.

கையால் இயக்கும் தோல் நீக்கும் கருவி

நிலக்கடலையை உடைத்துத் தோல் (ஓடு) நீக்கம் செய்ய ஏற்ற கையால் இயங்கும் கருவியாகும். இக்கருவியில், கையால் இயக்கப்படும் ஓர் ஊசலாடும் அமைப்பு, அரைவட்ட வடிவச் சல்லடை மற்றும் சட்டம் போன்றவை உள்ளன. ஊசலாடும் அமைப்பில் இரும்பு நிலக்கடலையை இக்கருவியினுள் கொட்டும்போது, ஊசலாடும் அமைப்பிற்கும் சல்லடைக்கும் இடையில் வந்து சேர்கிறது. ஊசலாடும் அமைப்பை, ஆட்கள் கையால் இயக்கும் போது, நிலக்கடலை உடைக்கப்பட்டு ஓடு நீக்கப்படுகிறது. நிலக்கடலை ஓடு மற்றும் பருப்பு சல்லடைத் துவாரம் வழியாக வெளியேறுகிறது. சல்லடை மற்றும் ஊசலாடும் அமைப்பிற்கிடையே உள்ள இடைவெளியை மாற்றிக்கொள்ளலாம். பல அளவு துவாரமுள்ள சல்லடைகளைப் பயன்படுத்தி, பல நிலக்கடலை ரகங்களை ஓடு நீக்கம் செய்யலாம். இக்கருவியைக் கொண்டு ஒரு மணி நேரத்தில் 200 கிலோ நிலக்கடலையை ஓடு நீக்க முடியும். இதன் விலை ரூ.6,000 ஆகும்.


PB_Kamaraj

முனைவர் .காமராஜ்,

முனைவர் மு.அழகர், முனைவர் ஜெ.செல்வி, வேளாண்மை அறிவியல் நிலையம்,

சிக்கல், நாகப்பட்டினம் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!