வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க அரசு நிதியுதவி!

பட்டதாரி agri graduates

வேளாண்மை சார்ந்த சுய தொழில்களைத் தொடங்க விரும்பும் தூத்துக்குடி மாவட்ட வேளாண் பட்டதாரிகளுக்கு, அரசு நிதியுதவி வழங்கப்படும் என்றும், விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்; வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் ஆகிய துறைகளில் படித்து விட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களை, தொழில் முனைவோராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இவர்கள், பிரதம மந்திரியின் உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்கள் மூலம், கடனைப் பெற்று சுய தொழில்களைத் தொடங்கலாம். இதற்கு, அரசு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களை அணுகலாம். கடன் தொகையில் 25 சதம் அல்லது அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும். இத்தொகை, பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். வேளாண்மையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினித் திறன் பெற்றிருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியாதவராகவும் இருக்க வேண்டும். குடும்பத்துக்கு ஒரு வேளாண் பட்டதாரிக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள், படிப்புச் சான்றிதழ், 10 மற்றும் 12 ஆம் வகுப்புச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தொடங்க உத்தேசித்துள்ள வேளாண் தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, வங்கிக் கணக்குப் புத்தகம், வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் ஆகியவற்றுடன், வேளாண்மைத் துறையின் அக்ரிஸ் நெட் இணையதளத்தில் 30.9.2022-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், விரிவான திட்ட அறிக்கையை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, வேளாண்மை இணை இயக்குநர், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.


 

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!