நிலத்தை வளப்படுத்த உதவும் ஆட்டெரு!

ஆட்டெரு Goat manure

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமூகத்துக்குப் பெரும் தீங்கை விளைவிக்கின்றன. இரசாயன உரங்களால் நமக்கு ஏற்படும் ஆபத்துகளைப் போக்க, இயற்கை நமக்குத் தந்த வரப்பிரசாதம் தான் ஆட்டெரு. மாட்டெருவில் உள்ளதைப் போல ஆட்டெருவில் 2 மடங்கு தழைச்சத்தும், சாம்பல் சத்தும் உள்ளன. ஓர் ஆடு, ஓராண்டில் 500-750 கிலோ எருவைக் கொடுக்கிறது.

ஒரு ஏக்கர் நிலத்தை எல்லாச் சத்துகளையும் கொண்டு வளப்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதும். ஆட்டெரு மண்வளத்தைப் பெருக்கி, பசுமைப் புரட்சிக்கு வித்திடும். இந்த எருவால் கரிமப் பொருள்களின் அளவும் ஈரப்பதமும் கூடும். ஆட்டெருவில் உள்ள சத்துகளின் அளவு, ஆட்டினம் மற்றும் அளிக்கப்படும் தீவனத்தைப் பொறுத்தே இருக்கும்.

புரதச்சத்து நிறைந்த குதிரை மசால், முயல் மசால், வேலிமசால், சூபாபுல், தட்டைப்பயறு போன்றவற்றை உண்ணும் ஆடுகளின் எருவில் தழைச்சத்து, நுண்சத்துகள், தாதுப்புகள் அதிகமாக இருக்கும். ஆட்டெருவில் 60-70% நீரும், 2% தழைச்சத்தும், 0.4% மணிச்சத்தும் 1.7% சாம்பல் சத்தும் உள்ளன. மேலும், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான, போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் ஆகிய சத்துகளும் அதிகளவில் உள்ளன.

ஆழ்கூளத்தில் ஆட்டெருவைக் கலத்தல்

முதலில் ஆட்டுக் கொட்டகையின் தரையில் நிலக்கடலைத் தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச் சருகுகள், மரத்தூள், தென்னை நார்க்கழிவு போன்றவற்றை, அரையடி உயரத்தில் ஓர் ஆட்டுக்கு 7 கிலோ வீதம் பரப்ப வேண்டும். இதனால், ஆட்டுப் புழுக்கை இந்த ஆழ்கூளத்தில் படிந்து விடும். சிறுநீர் ஆழ்கூளத்தால் உறிஞ்சப்படும். ஆழ்கூளத்தில் உள்ள ஈரத் தன்மையைப் பொறுத்து, 3-4 மாதங்களுக்கு ஒருமுறை ஆழ்கூளத்தை அகற்றி நிலத்தில் உரமாக இடலாம்.

ஆழ்கூளத்தின் நன்மைகள்

ஆழ்கூளத்தால் உறிஞ்சப்படும் சிறுநீரிலுள்ள தழைச்சத்து விரயமாவது குறைகிறது. இம்முறையில் ஊட்டமிக்க பசுந்தீவனம், அடர் தீவனம், போதுமான குடிநீர் ஆடுகளுக்குக் கிடைப்பதால், அவற்றின் மூலம் அதிகப் புழுக்கையும் சிறுநீரும் கிடைக்கும். பத்து ஆடுகள் மூலம் ஆண்டுக்கு இரண்டரை டன் எரு கிடைக்கும். 40 கிலோ பொட்டாஷ் உரத்திலுள்ள சாம்பல் சத்தும், 50 கிலோ யூரியாவிலுள்ள தழைச்சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டிலுள்ள மணிச்சத்தும் இந்த ஆட்டெருவில் உள்ளன.

ஆட்டெருவில் உள்ள தழைச்சத்து மெதுவாக வெளியாவதால், அது, பயிரின் தேவைக்கேற்ப சீராகக் கிடைக்கும். ஆனால் இரசாயன உரம் உடனடியாக வெளியாவதால் நிறையத் தழைச்சத்து ஆவியாகி விடும். ஆழ்கூள ஆட்டெருவை நிலத்திலிட்டால் களைகள் குறையும்.

ஆட்டெருவின் பயன்கள்

ஆழ்கூள முறையில் வளர்க்கப்படும் ஆடுகள் போடும் புழுக்கையில் களை விதைகள் இல்லாமல் இருப்பதால், நிலத்திலும் களைகள் குறைவாகவே இருக்கும். வீடுகளில் மண்தொட்டி, பாலித்தீன் பைகளில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்வோர், இந்த ஆழ்கூள எருவைப் பயன்படுத்தினால், களைகளற்ற நாற்றங்காலை அமைத்து, தரமான கன்றுகளை உற்பத்தி செய்யலாம். ஆழ்கூள உரத்தை, நெல், தக்காளி, மிளகாய், கத்தரி போன்ற நாற்றங்காலில் இட்டு, களைகளைக் கட்டுப்படுத்தி அதிக இலாபம் பெறலாம்.


ஆட்டெரு POORNIAMMAL 2

முனைவர் ரா.பூர்ணியம்மாள்,

த.ஜானகி, சோ.பிரபு, தோட்டக்கலைக் கல்லூரி,

பெரியகுளம், தேனி-625604.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!