வீடுகளில் வளர்ப்பதற்கு ஏற்ற உயரினக் கோழிகள்!

உயரினக் கோழி types of hybrid chicken breeds

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021

லகில் 485 மில்லியன் கால்நடைச் செல்வங்களைக் கொண்ட முதல் நாடாக இந்தியா விளங்குகிறது. இதைப்போல, பாலுற்பத்தியில் முதலிடம், வெள்ளாடு வளர்ப்பில் இரண்டாம் இடம், செம்மறியாடு வளர்ப்பில் மூன்றாம் இடம், கோழி வளர்ப்பில் ஏழாவது இடம் வகிக்கிறது. கோழிமுட்டை உற்பத்தியில் மூன்றாம் இடம், கோழியிறைச்சி உற்பத்தியில் ஐந்தாம் இடம் வகிக்கிறது. இந்தியளவில் கோழி முட்டை மற்றும் கோழியிறைச்சி உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு நான்கு கோடி முட்டைக் கோழிகள் உள்ளன.

அமெரிக்காவில் ஓராண்டில் ஒரு தனி மனிதனின் கோழியிறைச்சி நுகர்வு 50 கிலோ. இது சீனாவில் ஆண்டுக்கு 8 கிலோவாக உள்ளது. ஆனால், இந்தியாவில் வெறும் ஒன்றரை கிலோ மட்டுமே. உலகளவில் ஓராண்டில் ஒரு தனி மனிதன் சாப்பிடும் முட்டைகள் 230. இது இந்தியாவில் வெறும் 35 ஆக மட்டுமே உள்ளது. ஒரு மனிதன் அன்றாடம் அரை முட்டை சாப்பிட வேண்டும்.

இந்த முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியைப் பெருக்கும் வீரிய இனக் கோழிகளைப் போல, புறக்கடையில் வளர்த்து உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்தில், உயரினக் கோழியினங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின், சென்னை நந்தனம் கோழியின ஆராய்ச்சி நிலையம், ஆந்திர மாநிலம் ஹைதராபாத்திலுள்ள கோழி வளர்ப்புத் திட்ட இயக்குநரகம், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் ஆகியன உயரினக் கோழிகளை வெளியிட்டுள்ளன.

நந்தனம் 1

நந்தனம் 1 கோழி, முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகிறது. சிவப்பாக இருக்கும். ஒருநாள் குஞ்சின் எடை 32 கிராம் இருக்கும். 12 வாரத்தில் ஒரு கிலோ எடையை அடைந்து விடும். ஆறு மாதத்தில் முட்டையிடத் தொடங்கும். இதன் முட்டை, நாட்டுக்கோழி முட்டையைப் போலவே பழுப்பு நிறத்தில் இருக்கும். ஓராண்டில் 180-200 முட்டைகளை இடும். ஒரு முட்டை 48 கிராம் இருக்கும். இறைச்சி சுவையாகவும் மணமாகவும் இருக்கும். ஆறு வாரத்துக்குப் பிறகு, மேய்ச்சலுக்கு அனுப்பி விட வேண்டும்.

நந்தனம் 2 இறைச்சிக்கோழி

நந்தனம் இறைச்சிக் கோழிகள், 8 வாரத்தில் 1.400 கிலோ எடையை அடையும். ஆறு மாதத்தில் முட்டையிடத் தொடங்கும். பழுப்பு நிறத்தில் ஆண்டுக்கு 140-160 முட்டைகளை இடும். இறைச்சிக்காக என்றால் 8 வாரத்தில் விற்றுவிட வேண்டும். வளர்ந்த சேவல் 4-5 கிலோவும், கோழி 3-3.5 கிலோவும் இருக்கும். எடை அதிகம் என்பதால், இதன் நடை கம்பீரமாகவும், பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

வனராஜா

வனராஜா கோழிகள், மற்ற நாட்டுக்கோழிகளை விட 20 நாட்கள் முன்பாகவே முட்டையிட ஆரம்பித்து விடும். சேவல் 25 வாரத்திலேயே 3.5-4 கிலோ எடையை அடைந்து விடும். இக்கோழிகளை மேய்ச்சலுக்கு விட்டால், முட்டை உற்பத்தித் திறன் அதிகமாகும். பெட்டைக் கோழிகள் 26வது வாரத்திலேயே 2.5 கிலோ எடையை அடைந்து விடும். 161 நாளில் முட்டையிடத் தொடங்கி, 52-68 வாரங்கள் வரை நீடிக்கும். ஓராண்டில் 150-160 முட்டைகளை இடும்.

கிரிராஜா

கிரிராஜா என்றால் காட்டுக்கு இராஜா என்று பொருள். இந்தக் கோழி பல வண்ணங்களில் கண்களைக் கவர்வதாக இருக்கும். இதற்கு நோயெதிர்ப்புச் சக்தி அதிகம். ஆண்டுக்கு 150-160 முட்டைகளை இடும். வெள்ளைக் கழிச்சல் என்னும் இராணிக்கெட் நோய்த் தடுப்பூசியைப் போட்டால் போதும். மேரக்ஸ் நோயும், கோழிக் காலரா என்னும் கழிச்சல் நோயும் கம்பேரா நோயும் இக்கோழிகளைப்  பாதிப்பதில்லை. மற்ற நாட்டுக் கோழிகளை ஒப்பிடும் போது, கிரிஜாவின் வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம்.

சுவர்ணதாரா

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், கிரிராஜாக் கோழியை உற்பத்தி செய்தது. கிரிராஜாக் கோழிகள் முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் பயன்படுகிறது. 2005 ஆம் ஆண்டில் முட்டை உற்பத்திக்காக மட்டுமே சுவர்ணதாரா என்னும் கோழியினம் உருவாக்கப்பட்டது. கிரிராஜா இனத்தை விட 15-20 முட்டைகளை அதிகமாக இடும்.

சுவர்ணதாராக் கோழி உருவத்தில் சிறியது. அதனால் தனது எதிரிகளான நரி, பூனையிடமிருந்து காத்துக் கொள்ளும். இந்தக் கோழி 22-23 வாரத்தில் பருவத்திற்கு வரும். கோழி 3 கிலோ, சேவல் 4 கிலோ இருக்கும். ஆண்டுக்கு 180-190 முட்டைகளை இடும். முட்டை பழுப்பு நிறத்தில் 55-60 கிராம் இருக்கும். ஒருநாள் குஞ்சின் எடை 35-40 கிராம். குஞ்சுப் பொரிப்புத்திறன் 80-85% ஆகும். கோடையில், முட்டைகளை 8-10 நாட்களும், குளிர்காலத்தில் 15 நாட்களும் பாதுகாத்து வைக்கலாம். ஆனால், இந்தக் கோழி அடை காக்காது.

அதன் முட்டைகளை நாட்டுக்கோழி அல்லது குஞ்சுப் பொரிப்பான் மூலம் பொரிக்க வைக்கலாம். நாட்டுக்கோழி வளர்ப்பில் 10 பெட்டைக்கு ஒரு சேவல் இருக்க வேண்டும். ஆனால், சுவர்ணதாராக்கோழி வளர்ப்பில் 5 பெட்டைக்கு ஒரு சேவல் இருக்க வேண்டும். இந்தக் கோழி சிவப்பாக இருக்கும்.

நாமக்கல் 1

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் உருவாக்கப்பட்டது இந்த இரகம். இக்கோழி, இந்தியாவின் கடக்நாத், கிராப்புக்கோழி, அமெரிக்காவின் வொயிட் லெக்கார்ன், இங்கிலாந்தின் ரோட் ஐலண்ட் ரெட் ஆகிய நான்கு இனங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதை இனவிருத்திக்குப் பயன்படுத்தலாம். ஆனால், அடைகாக்கும் திறன் குறைவு. இந்தக் கோழி ஆண்டுக்கு 240 முட்டைகளை இடும். இவை நாட்டுக்கோழி முட்டைகளைப் போலவே இருக்கும். இந்தக் கோழிக் குஞ்சுகள் தேவைப்படுவோர், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் உள்ள கோழியின அறிவியல் துறையை அணுகலாம்.


உயரினக் கோழி Dr.Jegath Narayanan e1612953778555

மரு..ஆர்.ஜெகத்நாராயணன்,

முன்னாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை,

கன்னங்குறிச்சி, சேலம்-636008.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!