கால்நடைகளுக்கு எமனாக மாறும் தட்டைப் புழுக்கள்!

தட்டைப் புழு Cow Fever

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021

டந்த மழைக் காலத்தில் இலங்கையில் பெய்த கனமழையால், தட்டைப் புழுக்களின் தாக்கத்துக்கு உள்ளான கால்நடைகள் பெருமளவில் இறந்து விட்டது குறித்தும், இதற்கான காரணங்கள் குறித்தும், இலங்கைக் கால்நடை மருத்துவர் அனுப்பியுள்ள கட்டுரை. இதன் மூலம் இங்குள்ள கால்நடை வளர்ப்போரும் விழிப்புணர்வைப் பெற முடியும்.

தட்டைப் புழுக்கள் தாக்குவதால், மதிப்புமிகு கால்நடைகளை இழக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், நோயுற்ற கால்நடைகளைக் காப்பாற்ற பெருமளவில் பணத்தைச் செலவழிக்கவும் நேரிடுகிறது. பரம்பிஸ்டோமியாசிஸ் என்னும் தட்டைப் புழுக்களின் தாக்கமே, கால்நடைகளின் இறப்புக்கு முதன்மைக் காரணமாகும். சில இடங்களில் தட்டைப் புழுக்கள் மட்டுமின்றி, நாடாப் புழுக்கள் மற்றும் வட்டப் புழுக்கள் சேர்ந்து தாக்குவதும் தெரிய வந்துள்ளது.

அண்மையில் பெய்த கடுமழையால் நன்னீர் நத்தைகள் பெருகியது, பரம்பிஸ்டோம் போன்ற தட்டைப்புழு ஒட்டுண்ணிகள் அதிகரிக்க வாய்ப்பாகி விட்டது. பொதுவாக மழைக்குப் பிறகு பெருகும் நத்தைகள்; பலவகைக் குடல், இரப்பை, ஈரல் ஒட்டுண்ணிகளின் வாழ்க்கைப் பருவங்கள் முடிவதற்குக் காரணமாக அமையும். அதைப்போல, இம்முறை ஏற்பட்ட பெருமழை, ஏனைய புழுக்களுடன், பரம்பிஸ்டோமம் என்னும் அசையூண் இரைப்பைப் புழுக்கள் ஏகமாகப் பெருக ஏதுவாக அமைந்து விட்டது.

கடந்தாண்டு இறுதியில் பெய்த கடுமழையைத் தொடந்து, பெரும்போக நெல் சாகுபடி நாடு முழுவதும் அமோகமாக இருந்ததால், வயல்களில் மேயும் கால்நடைகள், மேய்ச்சலுக்காக வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கால்நடைகளுக்கு என மேய்ச்சல் நிலம் இல்லாததால், சாகுபடி தீவிரமாக இருக்கும் காலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்படுகிறது. இத்தகைய சூழலில் குளங்களை ஒட்டியுள்ள பகுதி தான் மேய்ச்சல் வெளியாகப் பயன்படுகிறது.

மேலும், இந்தக் குளங்களின் அருகிலுள்ள புல்வெளியே நத்தைகளின் வாழிடமாகவும் உள்ளது. இந்தப் புல்லை உண்ணும் கால்நடைகள், Metacercaria என்னும் தட்டைப் புழுவின் இளம் பருவமான பரம்பிஸ்டோமம் புழுக்களையும் சேர்த்தே உண்கின்றன. இப்படி, கால்நடைகளின் சிறுகுடலை அடையும் இந்தப் புழுக்கள், சிறுகுடல் சுவரைக் கடித்துக் காயப்படுத்தி, இரத்தத்தையும் அதிகளவில் உறிஞ்சுகின்றன.

இதனால், கால்நடைகளுக்குக் கடும் வயிற்றோட்டம் ஏற்படுகிறது. சிகிச்சை பெறாத கால்நடைகள் சில நாட்களில் இறக்கின்றன. பொதுவாக, கால்நடைகளின் அசையூண் இரைப்பையில் வளர்ந்த நிலையில் வாழும் பரம்பிஸ்டோமம் புழுக்கள் மற்றும் சிறுகுடலில் வாழும் இளம் பரம்பிஸ்டோமம் புழுக்கள் ஆபத்தான நிலையை ஏற்படுத்த வல்லவை. இந்த நிலை, Immature parampistomiasis எனப்படும்.

தொடர்ச்சியாக மெலிதல், உரோமப் பகுதி சுருளுதல் அல்லது சிலிர்த்தல், கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதி வீங்குதல், உணவில் நாட்டம் குறைதல், தொடர் வயிறோட்டம் போன்ற அறிகுறிகளுடன் வலுவிழக்கும் கால்நடைகள் கீழே விழுந்து இறந்து போகின்றன. இவற்றைப் பிரேத பரிசோதனை செய்யும் போது, சிறுகுடல் பகுதி தடித்து, இரத்தக் காயங்களுடன் இருப்பது தெரியும்.

நாள்பட்ட தொற்றுள்ள விலங்குகளின் அசையூண் இரைப்பையில் சிவப்பு நிறத்தில் மாதுளம் பழம் போன்ற புழுக்கள் நூற்றுக்கணக்கில் இருக்கும். பொதுவாக விலங்குகளில் காணப்படும் முதிர்ந்த புழுக்கள் ஆபத்தற்றவை. இதைவிட, வயதான மற்றும் அதே பகுதியில் நீண்ட காலம் வாழும் விலங்குகள் இந்தப் புழுக்களின் தாக்குதலைத் தாங்கும் திறனுடன் இருக்கும். எனினும், சிறிய மற்றும் நடுத்தர விலங்குகளில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும்.

இந்தாண்டைப் போல, விரைவாகவும் கடுமையாகவும் புழுத் தாக்கம் ஏற்படும் போது, எதிர்ப்புச் சக்தியற்ற விலங்குகள் கடும் தொற்றுக்கு உள்ளாகி இறக்கின்றன. அத்துடன் இம்முறை, மழைக்குப் பின் அதிகரித்த கொசுக்கள், கால்நடை வளர்ப்புக்குச் சாதகமற்ற காலநிலை, மேய்ச்சல் பகுதியான வயல்களில் பெருமளவில் நெல்லைப் பயிரிட்டதால் சத்து மிகுந்த தாவர உணவுகள் இல்லாமை போன்றவற்றால், கால்நடைகள் நோயெதிர்ப்புச் சக்திக் குன்றி நலிந்திருந்தன. இந்த பலவீனமான உடல் நிலை காரணமாக, கால்நடைகள் எளிதில் பரம்பிஸ்டோமம் புழுத் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளன.

அதிகளவில் அல்புமின் போன்ற புரத இழப்பால், கழுத்தும் வயிற்றுப் பகுதியும் வீங்கியுள்ளன. தொடர் இரத்த இழப்பால் இரத்தச் சோகையும் ஏற்பட்டுள்ளது. நாட்கள் செல்லச் செல்ல கால்நடைகள் தொடர்ந்து நலிவுற்றன. நாட்டின் பல பகுதிகளில் இந்தக் காலத்தில் கடுமையான கொசுக்கடி நோய்களாலும் கால்நடைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும், இப்பருவம் பெரும்பாலான மாடுகள் ஈனும் பருவம் என்பதால், அவை நோயெதிர்ப்புச் சக்தியின்றி பலவீனமாக இருந்தன.

ஓச்சி குளசனைட் போன்ற குளசண்டோல் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகள் தொடக்கநிலை பூச்சித்தொற்றைக் கட்டுப்படுத்தி இருந்தன. இதைவிட பலமான நோயெதிர்ப்பு சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. நோய் முற்றிய நிலையில், பெரும்பாலான இளம் கால்நடைகள் இறந்து விட்டன.

கால்நடைகளுக்குப் பூச்சி மருந்தைக் கொடுப்பதில், பெரும்பாலான கால்நடை வளர்ப்பாளர்கள், தவறான அணுகு முறைகளைத் தான் கையாள்கின்றனர். கால்நடைகளின் வயதுக்கு ஏற்ப பூச்சி மருந்துகளைக் கொடுக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் பெரும்பாலான கால்நடைகளுக்குச் சரியான விகிதத்தில் கொடுக்காமல் விடுவதை அறிய முடிகிறது.

மாடுகளின் எடையை இறைச்சியின் எடைக்கே பல பண்ணையாளர்கள் முடிவு செய்கின்றனர். இது தவறானது. இறைச்சி எடையானது, எலும்புகள், தோல், இரத்தம் மற்றும் இரைப்பையில் உள்ள உணவுகள் கழிக்கப்பட்டே கணிக்கப்படுகிறது. எனவே, பூச்சி மருந்துகள், பாதியளவை விடக் குறைவான எடைக்கே தரப்படுகின்றன. மேலும், அவற்றைச் சரியான கால இடைவெளியில் தருவதும் கிடையாது.

பல பண்ணையாளர்கள் தங்களின் கால்நடைகளுக்கு, ஆண்டுக்கணக்கில் பூச்சி மருந்தைக் கொடுக்காத நிலையை அறிய முடிகிறது. மேலும், வில்லைகளாக அல்லது உருளைகளாக (tablets or bolous) கொடுக்க வேண்டிய மருந்துகளை அரைத்துத் தூளாக்கிக் கொடுக்கின்றனர். உறையிடப்பட்ட வில்லைகளை அல்லது உருளைகளை அப்படியே கொடுக்கும் போது, அவை மெதுவாக இரைப்பையில் வெளியாகி, சரியான விகிதத்தில் வேலை செய்யும்.

இதற்காகத் தான் கால்நடை மருத்துவர்கள், வாழைப்பழம் போன்றவற்றில் மருந்தை வைத்துக் கொடுக்கச் சொல்வார்கள். அதைத் தூளாக்கிக் கொடுக்கும் போது, அது செயல்படாமலே, கழிவுடன் வெளியேறி விடும்.

மேலும், ஒரே வகையான பூச்சி மருந்துகளைத் தொடர்ந்து கொடுப்பார்கள். இப்படிக் கொடுத்தால், பெரும்பாலான புழுக்கள், அவற்றை எதிர்த்து வளரும் சக்தியைப் பெற்று விடும். எனவே, மருத்துவரின் கூற்றுப்படியே பூச்சி மருந்தைத் தர வேண்டும். ஏனெனில், மருத்துவருக்கு அந்தப் பகுதியின் பூச்சிகளின் தன்மையைப் பற்றித் தெரிந்திருக்கும்.

இப்போது மிகவும் மேம்பட்ட பூச்சி மருந்துகள் வந்துள்ளன. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், தாமாகவே முடிவெடுத்துக் கடைக்குச் சென்று மருந்துகளை வாங்குவதைப் பண்ணையாளர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அந்தக் கடைக்காரருக்கு, நோய் குறித்து முழுமையாகத் தெரியாது.

மேலும், சினைப்பட்ட கால்நடைகளுக்குப் பூச்சி மருந்தைத் தரக்கூடாது என்னும் எண்ணம் பண்ணையாளர்களிடம் உள்ளது. தொடக்க நாட்களில் மட்டும் தான் சில ஆபத்துகள் ஏற்படும். அதுவும் மிக மிகக் குறைவு தான். பின்னைய நாட்களில் பெருமளவில் ஆபத்து நிகழ்வதில்லை. மேலும், சினை மாடுகளுக்கு என்றே சில மருந்துகள் உள்ளன. அவை இளம் சினை மாடுகளுக்கும் கூடப் பாதுகாப்பானவை.

எனவே, ஆபத்துக் காலத்தில் சினை மாடுகளுக்கும் பூச்சி மருந்தை, கால்நடை மருத்துவரின் அறிவுரைக்கு ஏற்ப கொடுக்கலாம். மழைக் காலத்துக்குப் பிறகு கட்டாயம் பூச்சி மருந்தைக் கொடுக்க வேண்டும். மேலும், மற்ற காலத்திலும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை பூச்சி மருந்தை வாடிக்கையாகக் கொடுத்து வந்தால், தேவையற்ற கால்நடை இழப்புகளைத் தவிர்க்கலாம்.

கால்நடை மருத்துவர்களின் சரியான அறிவுரைகளைப் பின்பற்றி இருந்தால் இன்று நிகழ்ந்துள்ள கால்நடை இறப்புகளைத் தவிர்த்திருக்கலாம். கால்நடை வளர்ப்பு நிரந்தர இலாபம் தரும் தொழிலாகும். குறிப்பிட்ட அளவிலான உள்ளீடுகளைத் தேவையான காலத்தில் இட்டால் மட்டுமே சரியான விளைவுகளைப் பெற முடியும். சரியான கால்நடை மருந்துகளும் இந்த வகையான உள்ளீடு தான்.

பத்து மாடுகளைக் காப்பாற்ற, ஒரு மாட்டின் பெறுமதியில் மிக மிகக் குறைந்த பங்கைச் சரியான முறையில், சரியான நேரத்தில் செலவழித்தால், மீதமுள்ள ஒன்பது மாடுகளையும் காப்பாற்றலாம். இதுதான் சிறந்த கால்நடை வளர்ப்புத் தத்துவம். எனவே, எதிர்காலத்தில் நோய் நிலைகளை அறிந்து, சரியான மருந்துகளைக் கொடுத்தல் மற்றும் சரியான மருத்துவ ஆலோசனைகளைப் பெறுதல் மூலம், கால்நடை இழப்புகளைத் தவிர்ப்போம்.


மரு.கிருபானந்தகுமாரன்,

கால்நடை மருத்துவர், செட்டிகுளம், அனுராதபுர மாவட்டம், இலங்கை. 

முனைவர் கோ.கலைச்செல்வி, முனைவர் என்.ஜெயந்தி, 

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., சென்னை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!