படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் எளிய முறைகள்!

படைப்புழு syngenta corn lp banner 2000x900 1

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020

நாம் நலமாக வாழ, சுத்தமாக இருப்பது, சத்தான உணவுகளை உண்பதைப் போல, பயிர்களிலும் பூச்சிகள், நோய்கள் வருவதற்கு முன் சில நடவடிக்கைகளை எடுத்தால், மகசூல் இழப்பிலிருந்து, பெரிய செலவிலிருந்து தப்பிக்கலாம். இதைத்தான் வருமுன் காத்தல் என்கிறோம். இவ்வகையில், மக்காச்சோளத்தில் பெரியளவில் மகசூல் இழப்பை உண்டாக்கும், படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் சில நடவடிக்கைகளை இங்கே பார்க்கலாம்.

கோடையில் நிலத்தை உழுது மண்ணில் இருக்கும் தீமை செய்யும் பூச்சிகளின் கூட்டுப் புழுக்களை மேலே கொண்டு வந்து, வெய்யில் மற்றும் பறவைகள் மூலம் அவற்றை அழிக்க வேண்டும். எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை அடியுரமாக இட வேண்டும்.

ஒரு பகுதியிலுள்ள விவசாயிகள் அனைவரும் ஒரே நேரத்தில் சாகுபடியைத் தொடங்க வேண்டும். நிலத்தைச் சுற்றி, சோளம், கம்பு நேப்பியர் தீவனப்புல்லை 3-4 வரிசைகளில் பொறிப்பயிராக சாகுபடி செய்து, இதில் படைப்புழுக்களின் தாக்குதல் தெரிந்ததும் பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஐந்து சத வேப்பங்கொட்டைச் சாறு அல்லது 1500 பிபிஎம் அளவில் அசாடிராக்டினைத் தெளிக்க வேண்டும்.

மக்காச்சோளத்தில் ஊடுபயிராக, தட்டைப்பயறு, உளுந்து, பாசிப்பயறு, துவரை போன்றவற்றைப் பயிரிடலாம். இதன்மூலம், நன்மை செய்யும் பூச்சிகளான, பொறிவண்டு, தரைவண்டு, நன்மை செய்யும் ஒட்டுண்ணிகள் ஆகியவற்றைப் பெருகச் செய்து படைப்புழுக்களை அழிக்கலாம்.

மக்காச்சோளத்தின் தொடக்க வளர்ச்சி நிலையில், ஏக்கருக்குப் பத்துப் பறவைத் தாங்கிகளை வைத்துப் பறவைகளை வரவழைத்து, படைப்புழுக்களை அவற்றுக்கு இரையாக்கி அழிக்கலாம். ஏக்கருக்கு இருபது இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து, படைப்புழுக்கள் உருவாகக் காரணமாக இருக்கும் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி வீதம் வைத்து, ஆண், பெண் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். மக்காச்சோள இலைகளில் பெண் அந்துப்பூச்சிகள் இட்டிருக்கும் முட்டைக் குவியல்களைச் சேகரித்து அழிக்கலாம்.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!