சந்தையில் நல்ல விலைக்குப் போகும் தேவதை மீன் வளர்ப்பு!

Fairy fish

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020

தேவதை மீன்கள் அமேசான் பகுதியில் அதிகளவில் உள்ளன. இயற்கையில், இம்மீன்கள் மென்மையான, அமிலத் தன்மையுள்ள, வெப்பநீர்ப் பகுதிகளில் வாழும். இவற்றை வீடுகளில் எளிதாக வளர்க்கலாம். கடினநீரை மென்னீராக மாற்றும் உத்தி மூலம் இம்மீன்களை எப்பகுதியிலும் எளிதாக வளர்க்கலாம். அழகாகவும், பல்வேறு நிறங்களிலும் இம்மீன்கள் இருப்பதால் இவற்றுக்குச் சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.

தொட்டி அமைத்தல்

தேவதை மீன்கள் பளபளக்கும் அகலமான உடல் அமைப்பில் உள்ளதால், ஒரு அடிக்கு மேல் ஆழமுள்ள தொட்டி தேவைப்படும். இவை, நைட்ரைட் மற்றும் அம்மோனியாவால் எளிதில் பாதிக்கப்படும் என்பதால், இந்த நச்சுகளை வெளியேற்ற உயிரியல் வடிகட்டியை அமைக்க வேண்டும். இதற்கு விலை மலிவான கடற்பாசி வடிகட்டிகளைப் பயன்படுத்தலாம். மீன் கழிவுகள் கடற்பாசி வடிகட்டிகளில் தங்கி விடுவதால், நீர் தூய்மையாக இருக்கும். வாரத்துக்கு ஒருமுறை இந்த வடிகட்டிகளை குளோரின் இல்லாத நீரில் கழுவ வேண்டும். ஏனெனில், குளோரின் நீரில் கழுவினால் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழிந்து விடும்.

அடிக்கடி நீரை மாற்றினால் நீரில் கரைந்துள்ள கரிமப் பொருள்கள் மற்றும் நச்சுப் பொருள்கள் வெளியேறி விடும். தேவதை மீன்கள் கலங்கல் இல்லாத கண்ணாடி போன்ற நீரில் தான் இருக்கும். தினமும் 40% நீரை மாற்ற வேண்டும். பெரும்பாலான மீன் இணைகள் சாதாரணத் தொட்டிகளில் முட்டைகளை இடும். ஒருசில இணைகள், ஒளிப்புகாமல் இருண்டிருக்கும் தொட்டியின் அடிப்பகுதியில் இடும்.

உணவளித்தல்

தேவதை மீன்கள் அதிகமாக உண்ணும். அதனால், சத்துமிகு உணவுகளை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது வழங்க வேண்டும். உணவை இடும் போது அதிக வேகத்துடன் உண்ணும். நீரில் வெப்பம் அதிகமாக இருந்தால் குதிக்கும். உண்ணாமல் இருந்தால் அவை அழுத்தத்தில் உள்ளன எனத் தெரிந்து கொள்ளலாம். உணவுப் பிடிக்காமல் இருந்தாலும் இவ்வாறு செய்யும். உடல் மெலிந்திருத்தல், குறைவாக உண்ணுதல் போன்றவை, மீன்கள் சுகமற்ற நிலையில் இருப்பதைக் குறிக்கும். முறையான உணவின் மூலம் தான், தேவதை மீன்களைச் சரியான பருவ நிலைக்குக் கொண்டு வர முடியும்.

சினைமீன் தயாரிப்பு

இனவிருத்திக்கான சினை மீன்களைப் பண்ணைகளில் இருந்து வாங்கலாம். அல்லது இளம் குஞ்சுகளாக வாங்கி வளர்த்துப் பயன்படுத்தலாம். ஆனால், இளம் குஞ்சுகள் இனவிருத்திக்குத் தயாராக 6-7 மாதங்களாகும். கறுப்புத் தேவதை மீன் குஞ்சுகள் என்றால் இன்னும் காலம் கூடுதலாகும். தொட்டியில் இரண்டு மீன்கள் 1-2 நாட்களுக்கு இணைந்து திரிவது, அவை இனவிருத்திக்குத் தயாராக உள்ளன என்பதைக் காட்டும். எனவே, அவற்றை உடனடியாக இனப்பெருக்கத் தொட்டிக்கு மாற்ற வேண்டும்.

இப்படி மாற்றிய ஓரிரு நாட்களில் முட்டைகளை இடும். அல்லது சத்தான உணவின் மூலம் ஒரு வாரத்தில் முட்டையிடும். ஒருமுறை சேரும் இணையை, காலம் முழுவதும் பிரியாமல் இனவிருத்திக்குப் பயன்படுத்தலாம்.

இருப்பு வைத்தல்

பத்து லிட்டர் நீரில் 5 ரூபாய் நாணய அளவுள்ள தேவதை மீனை விட வேண்டும். இணைவதற்குத் தயாராக உள்ள தேவதை மீன்களை 20 லிட்டர் நீரில் விட வேண்டும். நன்கு வளர்ந்த இனப்பெருக்க இணைகளை 70 லிட்டர் தொட்டியில் விட வேண்டும்.

முட்டையிடத் தாமதித்தல்

சில சமயங்களில் ஏற்படும் இனப்பெருக்கத் தாமதத்தைத் தவிர்க்க, நீரின் வெப்ப நிலையைச் சிறிதளவு உயர்த்துதல், குளிர்ந்த நீரால் 75% நீரை மாற்றுதல், பல இனப்பெருக்க இணைகளை ஒன்றாக விடுதல், மீனைகளை புதிய தொட்டிக்கு மாற்றுதல், தாவரங்களை நிறைய வளர்த்தல் போன்ற முறைகளைப் பின்பற்றலாம். சத்து மிகுந்த உலர் உணவுகளை அளிக்கலாம். இந்த முறைகள் சரிவரா நிலையில், சவ்வூடு பரவல் மூலம் கடினத் தன்மை குறைக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தலாம்.

இனப்பெருக்கம்

தேவதை மீன்கள் பொதுவாக எல்லா இடத்திலும் எளிதாக முடையிடும். ஒட்டும் தன்மையுள்ள இந்த முட்டைகளை இடுவதற்கு வசதியாகக் கூம்புகள், கண்ணாடித் துண்டுகள், ஓடுகள் போன்றவற்றைத் தொட்டிகளில் வைக்க வேண்டும். முட்டையிட்ட பிறகு, இவற்றைக் காற்றுக்குமிழ்கள் உள்ள தொட்டிக்கு மாற்ற வேண்டும். நீரோட்டம் நன்கு இருந்தால், முட்டைகளின் பொரிப்புத் திறனும், குஞ்சுகளின் பிழைப்புத் திறனும் சிறப்பாக இருக்கும்.

முட்டைப் பொரிப்பு

தேவதை மீன்கள் பலமுறை முட்டைகளை இடுவதன் மூலம் குஞ்சுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இயல்பற்ற சூழலில் இந்த மீன்கள், தங்களின் குஞ்சுகளையே உண்ணும். மீன் குஞ்சுகளைப் பெருக்க, பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. அதாவது, போதுமான அலங்காரத் தொட்டிகள் இருக்க வேண்டும். நீரின் தரக்காரணிகள் சரியாக இருக்க வேண்டும். இணை சேர்ந்த மீன்களை இடையூறு செய்யாமல் நீரை மாற்ற வேண்டும். இதன் மூலம் இளம் குஞ்சுகளின் பிழைப்புத் திறனை அதிகரிக்கலாம்.

செயற்கை முறையில் முட்டைகளைப் பொரிக்க வைக்க, காற்றோட்டமும் சுத்தமான நீரும் தேவை. பெரும்பாலோர் பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் அடர் தொட்டிகளிலும், பெரிய தொட்டிகளிலும் வைக்கின்றனர். மீன்கள் முட்டைகளை இட்டதும், அவற்றை உடனே சேகரித்து, மெத்தலின் புளூ சிகிச்சை அளித்து, சுத்தமான நீரில் போதுமான காற்றோட்டத்தில் வைக்க வேண்டும். நீர் மங்கலாக இருப்பது, அதிகளவில் முட்டைகள் இறந்துள்ளதைக் குறிக்கும். பொதுவாக 60 மணி நேரத்தில் முட்டைகள் பொரிந்து விடும், பிறகு, 5 நாட்களில் இளம் குஞ்சுகள் அடுத்த நிலைக்குச் சென்று விடும். இந்த 5 நாட்களும் உண்ணாமல் நீந்தும் நிலைக்கு வந்தால் மட்டுமே உணவை உண்ணும்.

குஞ்சுகள் வளைந்து இருப்பது, அவை பாக்டீரியாவால் தாக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும். சரியான மருந்துகள் மற்றும் 90% நீர் மாற்றத்தின் மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம். முட்டைப் பொரிப்புக் குறைவாக இருந்தால், இணைகளைப் பிரித்து, வேறு மீன்களுடன் இணை சேர்க்கலாம். நீர் கடினமாக இருந்தால் முட்டைகளின் ஓடுகள் மென்மையாக இருக்கும். இதற்கு, சவ்வூடு பரவல் முறையில் சுத்தம் செய்த நீரைப் பயன்படுத்தலாம். நீரின் கார அமிலத் தன்மை அதிகமாக இருந்தால் அதிக இறப்புகள் ஏற்படும். இதை 95% நீர் மாற்றத்தின் மூலம் சரி செய்யலாம்.

குஞ்சு வளர்ப்பு

நீந்தத் தொடங்கிய குஞ்சுகள், உயிரி வடிகட்டிகள் உள்ள வளர்ப்புத் தொட்டிக்கு மாற்றப்படும். இந்தத் தொட்டி 10-50 லிட்டர் நீருள்ளதாக இருக்கும். பெரிய தொட்டியில் குஞ்சுகளை வைத்தால் அடிப்பகுதியில் கூட்டமாக அடைந்து கிடக்கும். கூட்டமாக இருத்தல், அதிகளவு உணவளித்தல், குறைந்தளவு நீர் மாற்றம் ஆகியன குஞ்சுகளின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

உணவளித்தல்

இந்தக் குஞ்சுகளுக்கு ஆர்டீமியா அல்லது நுண்புழுக்கள் உணவாகத் தரப்படுகின்றன. வளர்ப்புத் தொட்டிக்கு மாற்றிய பிறகே உணவு தரப்படுகிறது. அதிகமாக உணவை அளித்தல், நீரின் தரத்தைக் குறைக்கும். இதற்கு 90% நீரை மாற்ற வேண்டும். 3-4 வாரங்களுக்குப் பிறகு, நொறுக்கிய செயற்கை உணவுகள் சிறிதளவில் தரப்படுகின்றன. வயது கூடக்கூட உலர் உணவுகள் கூடுதலாகத் தரப்படுகின்றன. 4-6 வாரக் குஞ்சுகளுக்கு உலர் உறைந்த உணவு, நொறுக்கு உணவு மற்றும் உருண்டை உணவுகள் தரப்படுகின்றன. முறையாகப் பராமரித்தால் 5-6 வாரங்களில் விற்பனைக்கு ஏற்ற அளவில் வளர்ந்து விடும்.


PB_S. ANAND

சா.ஆனந்த்,

சு.பாரதி, கார்த்திக் ராஜா, வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு நிலையம்,

பவானிசாகர், ஈரோடு மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!