கூண்டு முறையில் வளர்க்கப்படும் கொடுவாய் மீன்களைத் தாக்கும் நோய்கள்!

கூண்டு முறையில் KODUVA FISH

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019

கூண்டுகளில் மீன்களை வளர்ப்பது, குறிப்பாக, கடலில் கூண்டுகள் மூலம் வளர்ப்பது பல்வேறு பயன்களைத் தரும். முக்கிய உணவு மீனான கொடுவாய் மீனை, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நன்னீர், உவர்நீர் மற்றும் கடல்நீரில் வளர்த்து வருகின்றனர். தற்போது இந்த மீனினம் கூண்டு முறையில் மிகுதியாக வளர்க்கப்படுகிறது. இதைத் தாக்கும் வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணி நோய்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்துப் பார்க்கலாம்.

வைரஸ் நோய்கள்

நரம்புச்சிதைவு வைரஸ் நோய்: வெப்பப் பகுதிகளில் வளர்க்கப்படும் கடல்சார் கூண்டு மீன்களில் இந்நோய் காணப்படும். நோயுற்ற மீன்களில், இந்த வைரஸ், விழித்திரை மற்றும் மூளைச் செல்களின் சைட்டோபிளாசத்தில் குவிந்திருக்கும். இதனால் தாக்குண்ட மீன்கள், சுழல் இயக்கம், மந்தநிலை, கறுப்பான தோற்றம், ஒலி மற்றும் ஒளியை உணரும் நிலையை இழந்து விடும். விழித்திரை, மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தில் பெரியளவில் செல் அடுக்குகள் இருக்கும். இந்த வைரசில் ஆர்.என்.ஏ.மரபணு மூலக்கூறுகள் இருப்பதால் இந்நோயை, ஆர்.டி-பி.சி.ஆர். மூலம் அறியலாம். இந்நோய் தாயிலிருந்து சேய்களுக்குப் பரவும். 

லிம்போசிஸ்டிஸ் நோய்: இந்த வைரஸ், லிம்போசிஸ்டிஸ் நோயை ஏற்படுத்தும். அனைத்து வெப்ப நிலைகளிலும் இந்நோய்த் தாக்கம் இருக்கும். இந்தத் தொற்று நோயை, பாதிக்கப்பட்ட மீன்களில் கட்டியைப் போன்ற பெருந்திரள்கள் இருப்பதன் மூலம் அறியலாம். சில நேரங்களில் உள்ளுறுப்புகளும் பாதிக்கப்படும். இந்த நோயை, நுண்திசு நோய் ஆய்வின் மூலமும், இந்த வைரஸ் துகள்கள் இருப்பதை மின்னணு நுண்ணோக்கி மூலமும் அறியலாம்.

இந்நோய் உணவு அல்லது ஏதேனும் பொருள்கள் மூலம் பரவும். மிகவும் அடர்த்தியாக இருப்பு வைத்தல் மற்றும் சாதகமற்ற சுற்றுசூழல் இந்நோயை ஏற்படுத்தும். கழிவு மீன்களை உணவாகக் கொடுத்தாலும் இந்நோய் வரும். குறைவான அடர்த்தியில் மீன்களை இருப்பு வைத்தல் மற்றும் நோயுற்ற மீன்களைப் பிரித்தெடுத்தல் மூலம் இதன் தாக்கத்தைக் குறைக்கலாம்.

பாக்டீரிய நோய்கள்

விப்ரியோசிஸ்: விப்ரியோனேசியே என்னும் குடும்ப பாக்டீரியா, இந்நோயை உண்டாக்கும். இந்த பாக்டீரியா கடலின் அனைத்துச் சூழல்களிலும் இருக்கும். இந்த பாக்டீரியா, சீழ்ப்புண்ணுக்குக் காரணமான, குருதி நஞ்சு நோயை ஏற்படுத்தும். நீரின் உப்புத்தன்மை மாறுதல், கரிமப் பொருள்கள் மிகுதல், மீன்களைப் பிரித்தெடுத்தல், கூண்டு வலைகளை மாற்றுதல் போன்ற செயல்களால் இத்தாக்கம் காணப்படும்.

இந்நோயினால், மீன்களில் உடலில் சிவந்த வீக்கம் இருக்கும். இரத்தப்போக்கு இருக்கும். தோல் மற்றும் அடித்தோலில் சிதைவை ஏற்படுத்தும். தாக்குண்ட திசுப்பகுதி சிவந்து வீங்கியிருக்கும். உடல் முழுதும் கோழைப் பொருளால் மூடப்பட்டிருக்கும். கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் குருதிப்போக்கும் புண்களும் இருக்கும். மலக்குடல் விரிவாகி, பிசுபிசுப்பான திரவத்தால் நிறைந்திருக்கும். சரியான மேலாண்மை மற்றும் தேவையான உணவுகளை அளித்தால், இதன் பாதிப்பைத் தடுக்கலாம். நோய்த்தடுப்பு மருந்துகள் மூலம் இந்நோயை முன்கூட்டியே தடுக்க முடியும்.

பாஸ்டுயுரெல்லோசிஸ்: இது, வளர்ப்புக் கடல் மீன்களில், போட்டோ பாக்டீரியம் டாம்செலே என்னும் பாக்டீரியாவால் ஏற்படும் நோயாகும். மீன்களின் உடலில் கரும்புள்ளிகளைத் தவிர வேறு எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாத, குருதி நஞ்சு நோயாகும். நோயுற்ற மீன்களின் மண்ணீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் பாக்டீரிய குவியம் போன்ற வெண்புள்ளிகள் இருக்கும். மேலும், மீன்கள் விரைவாக வீரியத்தை இழந்து கூண்டின் அடியில் இறந்து கிடக்கும். ஆம்பிசிலின் மற்றும் ஃபுளோரோபினிகாலை உணவுடன் கொடுத்தால் இந்நோயைத் தடுக்கலாம். ஆயினும் இந்த பாக்டீரியாக்கள், தடுப்பு மருந்துகளைத் தாங்கி வளரும் திறன் மிக்கவை.

மீன்வால் அழுகல் நோய்: இது, ஃபிளக்ஸிபாக்டர் என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. குறிப்பாக, கூண்டுகளில் வளரும் ஆசியன் கொடுவாய் மீன்களில் இந்நோயின் தாக்கம் அதிகம். இந்த பாக்டீரியா முதலில் வால் துடுப்பைச் சிதைத்து உள்ளே நுழைவதால் அத்திசுக்கள் அரிக்கப்பட்டு விடும். பிறகு தசைப் பகுதியைச் சிதைக்கும். கொடுவாய் மீன்களைக் கடல் கூண்டுகளில் இருப்பு வைத்த 2-3 வாரங்களில் இந்நோய் தாக்கும். ஆக்ஸி டெட்ராசைக்ளினை உணவு மூலமும், சோடியம் நைடில்ஸ்டைரினேட்டைக் குளியல் முறை மூலமும் கொடுத்தால், இந்நோயைத் தடுக்கலாம். மீன்களைக் குறைவாக இருப்பு வைத்தல் மற்றும் நன்னீர்ச் சிகிச்சை மூலம், நோயுற்ற மீன்களின் இறப்பு அளவைக் குறைக்கலாம்.

ஸ்ட்ரெப்டோகாக்கோசிஸ்: இந்நோய், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் வகை பாக்டீரியாவால் ஏற்படுகிறது. மீன்கள் அதிக அழுத்தத்தில் இருக்கும் போதும், நீரின் வெப்பநிலை உயரும் போதும் இந்நோய் தாக்கும். இந்த பாக்டீரியாக்கள் மீன்களின் குடலில் வேகமாக வளரும் போது இந்நோய் ஆரம்பமாகும். அப்போது இவை, செல்கள் மற்றும் திசுக்களில் நஞ்சை உற்பத்தி செய்யும். இதனால், மீன்களின் உடல் கருத்தல், ஒழுங்கற்று நீந்துதல், குடல், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் குருதிப்போக்கு மற்றும் அடிவயிறு விரிதல் போன்ற அறிகுறிகள் தெரியும். மேலும், இதயம், செவிள், தோல் மற்றும் கண் செல்கள் சிதையும். இந்த பாக்டீரியாவை, எரித்ரோமைசின் மற்றும் ஸ்பைரோமைசின் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம்.

மைக்கோபாக்டீரியோசிஸ்: இந்நோய், மைக்கோபாக்டீரியம் மெரினம் என்னும் பாக்டீரியாவால் ஏற்படும். இது நாள்பட்ட நோயை ஏற்படுத்தும். இதனால், மீன்களில் புண்ணும் விழிப்பிதுங்கலும் ஏற்படும். மண்ணீரல், சிறுநீரகம் தாக்கப்பட்டிருந்தால் அவை பெரிதாகி, கிரானுலோமேட்டஸ் புண்ணை ஏற்படுத்தும். மேலும், கல்லீரல் மற்றும் இதயத்திலும் புண்கள் இருக்கும்.

நொக்கார்டியாசிஸ்: நாள்பட்ட தாக்கத்தை உண்டாக்கும் பாக்டீரிய நோயான இது, நன்னீர் மற்றும் கடல் மீன்களைத் தாக்கும். இந்நோயின் தாக்கம், மைக்கோபாக்டீரியோசிஸ் நோயை ஒத்திருக்கும். தொடக்க நிலையில் மீன்களில், பசியின்மை, சோர்வு, நிறமாற்றம் மற்றும் உடல் மெலிவு இருக்கும். இத்தாக்கம் நாளடைவில் தோல் புண்ணையும், எலும்பு, தசை அல்லது உள்ளுறுப்புகள் வரையில் பாதிப்பையும் ஏற்படுத்தும். உணவு மூலம் பரவும் இந்நோயை, சுற்றுச்சூழலை நன்கு பாதுகாத்தால் தடுக்க முடியும்.

ஒட்டுண்ணி நோய்கள்

புரோட்டோசோவா ஒட்டுண்ணி: இது, கூண்டுகளில் வளரும் மீன்களைத் தாக்கி, பெரியளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். மீன் கூண்டுகள் இருக்கும் இடத்தில் ஏற்படும் இயல்பற்ற சூழலால் இந்த ஒட்டுண்ணிகள் மீன்களைத் தாக்கும். உயிர்வளி மற்றும் தட்பவெப்ப மாற்றம் இந்நோய்க்குக் காரணமாகும். இந்த ஒட்டுண்ணிகள் நீரின் மூலம் ஒரு மீனிலிருந்து மற்றொரு மீனுக்குப் பரவும் என்பதால், மீன்களின் அடர்த்திக்கும் இதில் பங்குண்டு.

இவை மீன்களில் உடல் சார்ந்த விளைவுகள், நஞ்சை உற்பத்தி செய்தல், இரத்தக்குழாயில் இடையூறு செய்தல், மீன்களின் சத்துகளைப் பயன்படுத்திக் கொள்தல், அடுத்த நிலைத் தாக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு விளைவுகளை உண்டாக்கும். மேலும், மீன்கள் நீந்துதலில் மாற்றம், சமநிலையை இழத்தல், பசியின்மை, நிறமாற்றம், திசு அரிப்பு, கோழைப் பொருளை அதிகமாக உற்பத்தி செய்தல், குருதிப்போக்கு, உடல் பொருமல், கண் விரிதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

கிரிப்டோகேரியான்: இதன் தாக்கம், நன்னீர் ஒட்டுண்ணியான இக்தியோப்திரி உண்டாக்கும் விளைவுகளை ஒத்திருக்கும். அதாவது, இது கடல் மீன்களில் வெண்புள்ளிகளை ஏற்படுத்தும். மேலும், இதன் உடலமைப்பு மற்றும் வாழ்க்கை முறை, இக்தியோப்திரியை ஒத்திருக்கும். இந்த ஒட்டுண்ணி, மீன்களின் எபிதிலீயப் படலத்தின் அடிச்செல்களை உண்டு வாழும். இதனால், கடும் எரிச்சலுக்கு உள்ளாகும் மீன்களில், அதிகளவில் கோழையை உருவாக்கச் செய்வதுடன், செவிள் இலைகளில் உள்ள சுவாசத் தட்டுகளையும் அழித்து விடும். மேலும், மீன்களின் உடலில் புண்ணை ஏற்படுத்தி, தோலைப் பெருமளவில் அழித்து விடும். இந்த ஒட்டுண்ணி குறைந்த தட்ப வெப்பத்தில் தாக்குதலை உண்டாக்கும்.

கோபிபோடா: இது, கூண்டு மீன்வளர்ப்பில் பேரழிவை ஏற்படுத்தும். முதிர்ந்த பெண் ஒட்டுண்ணிகள், மீன் மற்றும் அதன் உணவில் ஒட்டிக்கொள்ளும். இந்த ஒட்டுண்ணிகளில் காலிகஸ் என்னும் ஒட்டுண்ணி முக்கியமானது. கொடுவாய் மீன்களில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இது, மீன் செவிள், வாய், தோல் மற்றும் துடுப்புகளில் ஒட்டி வாழும். குஞ்சு மீன்களில் பெருந்திரள் இழப்பை ஏற்படுத்தும். லெர்னான்த்ரோபஸ் என்னும் ஒட்டுண்ணி, கூண்டுக் கொடுவாய் மீன்களின் செவிள்களில் ஒட்டியிருக்கும். இவை மிகுதியாக இருப்பின், மீன்களில் இரத்தச்சோகை ஏற்படும்.

ஜசோபோடா: இது எப்போதும் மீனின் செவிளிலேயே ஒட்டியிருக்கும். இயற்கை நீர்நிலைகளில் நோயுற்ற மீன்களை நேரடியாகக் கூண்டுகளில் இருப்பு வைத்தால் இந்நோய் எளிதில் பரவும். மேலும், பெரும்பாலான ஒட்டுண்ணிகள், இயற்கைச் சூழலில் வாழும் மீன்களிலிருந்து வளர்ப்பு மீன்களுக்குப் பரவும். எனவே, இந்த ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்துவது கடினமாகும்.

இந்தக் காரணங்களைத் தவிர, சூழல் மாசு, மற்றும் சத்துக் குறையாலும் வளர்ப்பு மீன்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும். சத்துக் குறையால் கூண்டுக் கொடுவாய் மீன்கள் நன்கு வளர முடிவதில்லை. நோய்களைக் கட்டுப்படுத்த நுண்ணுயிர்க்கொல்லி மற்றும் வேதிப் பொருள்களைப் பயன்படுத்தினால், மீன் மற்றும் மீன்களை உண்ணும் மக்களுக்குப் பக்க விளைவுகளை ஏற்படும். எனவே, குறிப்பிட்ட நோய்த்தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவது நல்லது. இவை மீன்களுக்கு நோயெதிர்ப்புத் திறனை நீண்ட நாட்களுக்கு வழங்கும்.

நல்ல குஞ்சுகளை இருப்பு வைத்தல், நோய்த்தடுப்பு முறைகளை மேற்கொள்தல், நிலையான உணவுகளை அளித்தல், நோய்க் கண்காணிப்பு, சுகாதாரம், தடுப்பு மருந்தளித்தல் மற்றும் சிறந்த உயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றினால், கூண்டுகளில் வளரும் கொடுவாய் மீன்களைத் தாக்கும் நோய்களை முன்கூட்டியே தடுக்கலாம்.


கூண்டு முறையில் SIVASANKAR

.சிவசங்கர்,

வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், மண்டபம், இராமநாதபுரம்-629519,

தே.கவியரசு, ம.பேச்சிமுத்து, கொ.ரிஜிஜான், மு.ரோசலின்ட் ஜார்ஜ்,

மீன்வளக் கல்லூரி, தூத்துக்குடி-628008.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!