மிளகாய்ப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

மிளகாய் chili plants scaled

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019

காய்கறிப் பயிர்களைப் பயிரிட்டால் வருமானத்தை உயர்த்தலாம். தமிழ்நாட்டில் தக்காளி, மிளகாய், வெள்ளரி போன்றவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில், இறவையிலும் மானாவாரியிலும் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசின் பங்களிப்பும், விவசாயிகளின் பயிற்சியும், விளைபொருள்களை அதிகமாகவும், தரமாகவும் உற்பத்தி செய்ய ஏதுவாக உள்ளன. எனினும், பயிர்களில் தோன்றும் நோய்களை விரைவில் கண்டறிந்து தீர்க்கத் தவறினால், நோயின் தாக்குதலுக்கேற்ப, 20-50% மகசூல் இழப்பு ஏற்படும். ஏனெனில், இந்த நோய்க் காரணிகள், மண், விதை, காற்று மூலம் பரவுவதால், அந்த மண்ணில் மீண்டும் மீண்டும் பயிரிடுதல் மிகவும் கடினமாகும். எனவே, மிளகாய்ப் பயிரில் தோன்றும் நோய்கள், கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

நோய்கள்: நாற்றழுகல் நோய்

அறிகுறிகள்: நாற்றங்காலில் நாற்றுகள் மடிந்து சொட்டைச் சொட்டையாக இருப்பதற்கு இந்த நோயே காரணமாகும். மண்ணிலுள்ள இப்பூசணம் பாத்திகளில் விதைகளை விதைத்ததும் தாக்கி, அவற்றை முளைக்க விடாமல் செய்யும். இதனால், பாத்திகளில் நாற்றுகள் இல்லாமல் திட்டுத் திட்டாகக் கிடக்கும். மண்ணுடன் தொடர்பு கொண்டுள்ள இளம் நாற்றுகளின் தண்டுப் பகுதியைத் தாக்கி மடியச் செய்யும். தண்டு வலுவிழந்து விடுவதால் நாற்றுகள் சாய்ந்து விடும்.

நோயுற்ற நாற்றுகள் பழுப்பு நிறத்தில் அல்லது வெளுத்துக் காணப்படும். தண்டின் அடிப்பகுதி அழுகி விடும். இந்த நோய், வடிகால் இல்லாத, நிழலான பகுதிகளில் உள்ள நாற்றுகள், நெருக்கமாக வளர்ந்துள்ள நாற்றுகளைத் தாக்கும். விதை, மண் மூலம் இது பரவும்.

கட்டுப்படுத்துதல்: வடிகால் வசதியுள்ள, நிழல் இல்லாத பகுதிகளில் மேட்டுப் பாத்தியாக நாற்றங்காலை அமைக்க வேண்டும். தேவையான அளவில் விதைகளை விதைக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப நீரைப் பாய்ச்ச வேண்டும். விதைகளைத் திரம் அல்லது கேப்டான் மருந்துடன் கிலோவிற்கு 4 கிராம் வீதம் கலந்து விதைக்க வேண்டும். இது, மண்ணிலிருந்து தாக்கும் பூசணத்தைச் சிறிது காலத்துக்குத் தடுத்து, விதைகளின் முளைப்புத் திறனைக் கூட்டும். இதனால் நாற்றுகள் நன்கு வளரும். இளம் நாற்றுகளில் நோய் தோன்றினால், ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் வீதம் தாமிரப் பூசணக்கொல்லி மருந்தை நாற்றங்காலில் ஊற்ற வேண்டும்.

பழ அழுகல் மற்றும் நுனிக்கருகல்

அறிகுறிகள்: இந்நோய் தாக்கிய செடியின் நுனிகள் கருகி விடும். பழங்கள் அழுகி விடும். நடவு முடிந்து ஒரு மாதம் கழித்து நுனிக்கருகல் அறிகுறிகள் தோன்றும். நோயுற்ற செடியின் கிளை நுனி, தளிர் இலைகள் கருகிக் காய்ந்து காணப்படும். நோய் தீவிரமானால் நுனியிலிருந்து கீழ்நோக்கி நோய் பரவும். பூக்கள் அதிகளவில் உதிர்ந்து விடும். இந்நோய் பழங்களையும் தாக்கிச் சேதத்தை உண்டாக்கும். மகசூலும் தரமும் குறையும்.

கட்டுப்படுத்துதல்: நோயற்ற பழங்களிலிருந்து விதைகளைச் சேகரிக்க வேண்டும். நட்ட 40 நாளிலிருந்து ஏக்கருக்கு 1 கிலோ மேங்கோசெப் அல்லது  சினெப் அல்லது 1.25 கிலோ தாமிர ஆக்சிகுளோரைடு மருந்தை 20 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.

சாம்பல் நோய்

அறிகுறிகள்: இலைப்பரப்பு உதிர்தல். இலையின் அடியில் வெள்ளை நிறத்தில் பொடியைப் போன்ற வளர்ச்சி இருக்கும். இதைக் கட்டுப்படுத்த, நனையும் கந்தகம் 0.25% அல்லது டைனோகேப் என்னும் காரத்தேன் மருந்தை 0.05% தெளிக்க வேண்டும்.

இலைப்புள்ளி நோய்

அறிகுறிகள்: நோயுற்ற இலைகளின் மீது சிறுசிறு நீர்க் கசிவைப் போன்ற பகுதிகள் கோண வடிவமாக அல்லது வட்ட வடிவமாகத் தோன்றும். இப்புள்ளிகள் நாளடைவில் கறுப்பாக மாறிவிடும். அதிகமாகப் புள்ளிகள் தோன்றினால், இலைகள் பழுத்துப் பெருமளவில் உதிர்ந்து விடும். நோய் தீவிரமானால், பழங்களின் மீதும் சிறுசிறு கறுப்புப் புள்ளிகள் தோன்றும். பாதிக்கப்பட்ட பழங்கள் உதிர்ந்து விடும்.

கட்டுப்படுத்துதல்: நோயில்லாத பழங்களிலிருந்து விதைகளைச் சேகரிக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு திராம் அல்லது கேப்டான் மருந்து 4 கிராம் வீதம் கலந்து விதைக்க வேண்டும். நட்ட பயிரில் நோயைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 500 லிட்டர் நீரில் அக்ரிமைசினை 175 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.

செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய்

அறிகுறி: இலைகளில் செம்பழுப்பு நிறத்தில் புள்ளிகள் காணப்படும். இந்நோயைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 25 கிலோ மேங்கோசெப் மருந்தை 500 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலையில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

ப்யூசேரியம் வாடல் நோய்

அறிகுறிகள்: செடிகள் வாடத் தொடங்கும். இலைகள் மேல்நோக்கி உட்புறமாக வளைந்து காணப்படும். இலைகள் மஞ்சளாக மாறி மடிந்து விடும். அதிகளவிலான இலைகள் சிறிதளவு மஞ்சள் நிறமாக மாறும். மேலேயுள்ள இலைகள் வாட ஆரம்பித்துச் சில நாட்களில் நிரந்தரமான வாடல் நோய் தாக்கி, தரைக்கு மேலேயுள்ள பகுதிகளில் அறிகுறிகள் தெளிவாகத் தெரியும்.

கட்டுப்படுத்துதல்: வாடல் நோய் எதிர்ப்புள்ள இரகங்களைப் பயன்படுத்த வேண்டும். போர்டாக்ஸ் கலவை அல்லது நலத் தாமிரம் அல்லது பைட்டோலான் 0.25% அளவில் எடுத்து மண்ணில் தெளிக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 2 கிராம் கார்பன்டசிம் வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து, நீரைத் தெளித்து, பாலித்தீன் தாளால் மூட வேண்டும். 15 நாட்கள் கழித்து, பூசணம் வளர்ந்ததும், ஒரு ஏக்கர் மிளகாய்ச் செடிகளில் இந்தக் கலவையை இட வேண்டும்.

நச்சுயிரி நோய்கள்: இலைச்சுருட்டு நோய்

அறிகுறிகள்: இலையின் நடுநரம்பு சுருண்டு உருமாறத் தொடங்கும். குட்டை வளர்ச்சி, சிறிய இடைக்கணுக்கள், சிறிய இலைகள் தோன்றும். பூ மொட்டுகள் முழு வளர்ச்சியை அடைவதில்லை. மகரந்தத் தூளும் இருக்காது. இந்நோய் வெள்ளை ஈக்கள் மூலம் பரவும்.

கட்டுப்படுத்துதல்: நோயுற்ற செடிகளை வேருடன் அகற்றிப் புதைக்க அல்லது எரிக்க வேண்டும். ஒரே பயிரைத் திரும்பத் திரும்பப் பயிரிடக் கூடாது. நோயற்ற விதைகளை விதைக்க வேண்டும். நாற்றங்கால் படுக்கையை நைலான் வலை அல்லது வைக்கோலால் மூட வேண்டும். 2-3 வரிசையில் மக்காச்சோளம் அல்லது சோளத்தை வரப்புப் பயிராக வளர்க்க வேண்டும்.

ஏக்கருக்கு 4-5 கிலோ வீதம் கார்போபியூரான் 3 மருந்தை மண்ணில் இட வேண்டும். அல்லது, ஒரு லிட்டர் நீருக்கு மோனோகுரோட்டோபாஸ் 1.5 மில்லி அல்லது டைமெத்தோயேட் 2 மில்லி அல்லது அசிப்பேட் 1 கிராம் வீதம் கரைத்துத் தெளிக்க வேண்டும்.


முனைவர் .துர்காதேவி,

முனைவர் ஸ்ரீவிக்னேஷ், முனைவர் ஐ.ஆறுமுகப்பிரவின்,

உயிரி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை-641003.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!