வேலி மசால் விதை உற்பத்தி நுட்பங்கள்!

Pachai boomi desmanthus veli masal

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018

பொதுவாகத் தீவனப் பயிர்களை, புல்வகைத் தீவனப்பயிர், தானியவகைத் தீவனப்பயிர், பயறுவகைத் தீவனப்பயிர், மரவகைத் தீவனப்பயிர் என, நான்கு வகைப்படுத்தலாம். இத்தீவன வகைகளில், பயறுவகைத் தீவனப்பயிர்கள் மிக முக்கியமானவை. ஏனெனில், இவ்வகைத் தீவனத்தில் 3 முதல் 4 சதம் புரதமும், கால்சியமும் செறிந்துள்ளன. கால்நடைகளுக்குத் தீவனமாகப் புல்வகைத் தீவனங்களைக் கொடுப்பதோடு, பயறுவகைத் தீவனங்களையும் சேர்த்துக் கொடுத்தால்தான் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

ஆடு, மாடுகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு, தானிய, புல்வகைத் தீவனங்கள், ஒருபங்கு பயறுவகைத் தீவனங்கள் வழங்கப்பட வேண்டும். மேலும், பயறுவகைத் தீவனங்களைப் பயிரிடுவதால், வேர்கள் மூலம் மண்ணில் நைட்ரஜன் நிலைப்படுத்தப்படுகிறது. இதனால் நிலத்தில் தழைச்சத்து வளம் கூடுகிறது. குதிரை மசால், வேலி மசால், காராமணி, முயல் மசால், சிரேட்ரோ, சங்கு புஷ்பம், டெஸ்மோடியம் போன்றவை முக்கியமான பயறுவகைத் தீவனப் பயிர்களாகும். இங்கு நாம் வேலி மசாலின் சிறப்பையும் அதில் தரமான விதை உற்பத்திக்கான தொழில் நுட்பங்களையும் பற்றித் தெரிந்து கொள்வோம்.

வேலி மசாலின் சிறப்புகள்

எல்லா மண் வகைகளிலும் எல்லாப் பருவங்களிலும் பயிர் செய்யலாம். பல்லாண்டுத் தாவரமாகப் பயிரிடலாம். ஒரு செடி 15 முதல் 20 கிளைகளை விடும். ஓராண்டில் எக்டருக்கு 80 முதல் 100 டன் பசுந்தீவனம் கிடைக்கும். விதைத்த 80 நாட்களில் முதல் அறுவடையும், பின்பு 40-45 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம். அதாவது, ஆண்டுக்கு ஏழு தடவை அறுவடை செய்யலாம். இதன் இலைகள் மிகவும் சிறியதாகவும் மெல்லியதாகவும் இருப்பதால் கால்நடைகளுக்கு எளிதில் செரிக்கும்.

பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மை உடையது. எனவே, பயிர்ப் பாதுகாப்பு அவசியமில்லை. மழையில்லாத வறட்சிக் காலத்தில் வளர்ச்சி இல்லா விட்டாலும் காய்ந்து போகாது. மீண்டும் சிறு மழை பெய்தாலும் கொழுக்கட்டைப் புல்லைப் போலப் பசுமையாக வளரும். இதில் 19 சதம் புரதமும், 27 சதம் உலர் தீவனத் தன்மையும், 55 சதம் செரிக்கும் தன்மையும் உள்ளதால், ஆடு, மாடுகள் விரும்பிச் சாப்பிடுகின்றன. எளிதில் செரிப்பதால், அனைத்துச் சத்துகளும் விரைவில் உறிஞ்சப்பட்டு பால் மற்றும் மாமிச உற்பத்திப் பெருகும். மேலும், நலமும் சினைப்பிடிப்புத் தன்மையும் மேம்படும்.

விதை உற்பத்தித் தொழில் நுட்பங்கள்

நிலம் தயாரிப்பு: இரும்புக் கலப்பையால் இரண்டு மூன்று  முறை நன்கு உழ வேண்டும். பின்பு, 50 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைத்து அவற்றுக்கு இடையில்  வாய்க்கால்களை இடவேண்டும்.

விதை நேர்த்தி: எக்டருக்கு 20 கிலோ விதைகள் தேவைப்படும். இந்த விதைகளைக் கொதிக்க வைத்த நீரில் (80டி.செ.) போட்டு 5 நிமிடம் கழித்து நீரை வடிகட்டி விட வேண்டும். பிறகு, அந்த விதைகளைக் குளிர்ந்த நீரில் 10 மணிநேரம் ஊறவைத்து எடுத்து, உலர வைத்து, விதைக்க வேண்டும். இப்படிச் செய்தால் விதைகளின் முளைப்புத்திறன் அதிகமாகும்.

உரம் மற்றும் களை நிர்வாகம்

எக்டருக்கு 12.5 டன் தொழுவுரத்தை அடியுரமாக இடவேண்டும். மேலும், தழைச்சத்து 25 கிலோ, மணிச்சத்து 40 கிலோ, சாம்பல்சத்து 20 கிலோ இடவேண்டும். விதைத்த 30 நாட்களுக்குப் பிறகும், அடுத்து, ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னும் கைக்களை எடுக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்ததும் நீரைப் பாய்ச்ச வேண்டும். பின்பு மூன்றாம் நாள் நீரைப் பாய்ச்ச வேண்டும். அடுத்து, 10-15 நாட்களுக்கு ஒருமுறை, மண் மற்றும் தட்பவெப்ப நிலையைப் பொறுத்துப் பாசனம் செய்ய வேண்டும்.

இலைவழி ஊட்டம்   

விதைக்காக வேலி மசாலைப் பயிரிட்டால் 50 சதவீதம் பூக்கும் தருணத்தில், ஏக்கருக்கு 200 பி.பி.எம் சாலிசிலிக் அமிலத்தை 200 லிட்டர் நீருடன் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். இதனால் தரமான விதைகள் கிடைக்கும்.

அறுவடை 

பூக்கள் வந்த 35 நாட்கள் கழித்துக் காய்கள் பழுப்பு நிறமாக மாறிய பின்பு அறுவடை செய்ய வேண்டும். சரியான தருணத்தில் காய்களைப் பறிக்கா விட்டால், காய்கள் வெடித்துச் சிதறி மகசூல் பாதிக்கப்படும். எக்டருக்கு 500 முதல் 625 கிலோ விதைகள் மகசூலாகக் கிடைக்கும்.

விதைச் சுத்திகரிப்பு

விதைகளின் ஈரப்பதத்தை 12 சதத்திற்குக் குறைவாக உலர்த்தி, பி.எஸ்.எஸ் 14 க்கு 14 அளவுள்ள சல்லடையால் சலித்து, தரமான விதைகளைப் பிரித்து எடுக்க வேண்டும்.

விதைச் சேமிப்பு

துணிப்பையில் 8 முதல் 10 மாதங்கள் வரையிலும், உள்ளுறை கொண்ட சாக்குப் பைகளில் 12-15 மாதங்கள் வரையிலும், 700 காஜ் அடர் பாலித்தீன் பைகளில் 15 மாதங்கள் வரையிலும் சேமித்து  வைக்கலாம்.


Pachai boomi Shanmuganathan

முனைவர் மு.சண்முகநாதன்,

முனைவர் இல.சித்ரா, முனைவர் இரா.நாகேஸ்வரி,

கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!