சைனா ஆஸ்டர் மலர் சாகுபடி!

மலர் China Aster

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019

மவெளியில், திறந்த வெளியில், குறைந்த செலவில், நிறைந்த மலர்களைத் தருவது ஆஸ்டர் மலர்ப்பயிர். கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம் மற்றும் மேற்கு வங்கத்தில், அதிகப் பரப்பில், உதிரி மற்றும் கொய்மலருக்காகப்  பயிரிடப்படுகிறது. ஆண்டுப் பயிரான சைனா ஆஸ்டரின் தாவரப் பெயர் கேலிஸ்பீபஸ் சைனன்ஸிஸ். அஸ்டிரேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்த மலர்கள் நீலம், வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்புக் கலந்த ஊதா நிறங்களில் இருக்கும்.

சிறப்புகள்

நகரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரபலமாக உள்ளது. கீரை நிலங்களில் மற்றும் தென்னந் தோப்புகளில் ஊடுபயிராகப் பயிரிடலாம். விலை மலிவானது. கொய்மலர்களுடன் சேர்த்துப் பூச்செண்டுகளைச் செய்யலாம். சிறு விவசாயிகளும் பயிரிட முடியும். விதைகளை எளிதாக உற்பத்தி செய்யலாம். பூங்கா ஓரத்தில் மலர்ப் படுக்கைகளை அமைப்பதற்கு வளர்க்கலாம்.     

இரகங்கள்

பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், சைனா ஆஸ்டரில்,  காமினி, பூர்ணிமா, ஷாஷான்ங், வயலட் குஷன் ஆகிய இரகங்களை வெளியிட்டுள்ளது.

நிலமும் காலநிலையும்

வடிகால் வசதியுள்ள வளமான செம்மண் ஏற்றது. மண்ணின் கார அமில நிலை 6-7 இருக்க வேண்டும். பெரும்பாலும் குளிர் காலத்தில் பயிரிடப்படுகிறது. இரவில் 15-20, பகலில் 20-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, காற்றில் 50-60% ஈரப்பதம் உள்ள சூழல் மிகவும் ஏற்றது. பனி மிகுந்தால் வளர்ச்சிக் குன்றும்; மொட்டுகள் மற்றும் மலர்கள் கருகி விடும். நல்ல சூரியவொளி அவசியம். ஜூன்-செப்டம்பர் காலத்தில், 500-700 மி.மீ. மழை பெய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

பயிர்ப் பெருக்கம்

நாற்றங்கால் முறையில் விதைகள் மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு எக்டருக்குத் தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்ய, 2.5-3 கிலோ விதைகள் தேவை.

விதைகள் சேமிப்பு

சாதாரணப் பைகளில் விதைகளைச் சேமித்து வைத்தால் முளைப்புத் தன்மை விரைவில் குறைந்து விடும். அதனால், காற்றுப் புகாத பாலித்தீன் பைகளில் அடைத்து, 20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சேமித்து வைத்தால், இரண்டு ஆண்டுகள் வரை முளைப்புத் தன்மை பாதிக்காமல் இருக்கும். புதிய விதைகளை விதைப்பது சிறந்தது.

நாற்றங்கால்

நாற்றங்காலில் நுண்ணுயிர்ப் பூசணக் கொல்லியான டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் நுண்ணுயிர் உரமான மைக்கோரைசாவை இட்டு, 120 செ.மீ. நீளம், 60 செ.மீ. அகலம் 10 செ.மீ. உயரமுள்ள மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும். பிறகு 10 செ.மீ. இடைவெளியில் விதைகளை வரிசையாக விதைத்து, பூவாளியால் நீரைத் தெளிக்க வேண்டும். டிரைக்கோடெர்மா விரிடி, அழுகல் நோயைத் தடுக்கும். மைக்கோரைசா, விரைவில் நிறையப் பூக்களைப் பூக்க வைக்கும்.

நிலத் தயாரிப்பும் நடவும்

விதைத்த ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத் தொடங்கும். இந்த நாற்றுகள், 30-45 நாட்களில் 3-4 இலைகளுடன் நடவுக்குத் தயாராகி விடும். அதனால், கடைசி உழவின் போது எக்டருக்கு 25-30 டன் தொழுவுரத்தை இட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். சூரியவொளி குறைவாக இருக்கும் காலை அல்லது மாலையில், வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி 30 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். மூன்றாம் நாள் உயிர்நீர் விட வேண்டும்.

உரமிடல்

தழைச்சத்துக் குறை ஏற்பட்டால் நாற்றுகளின் வளர்ச்சிக் குன்றி, மலர்களின் அளவு சிறுத்து விடும். மணிச்சத்துக் குறை ஏற்பட்டால், பூப்பதில் கால தாமதம் உண்டாகும். எனவே, எக்டருக்கு 70 கிலோ தழைச்சத்து, 175 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும்.  நடவுக்குப் பின் 40 நாட்கள் கழித்து, எக்டருக்கு 70 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும். 

பாசனம்

மண்ணின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, 5-7 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். மழை மற்றும் குளிர் காலத்தில் பாசனத்தைக் குறைத்துக் கொள்ளலாம். 

பின்செய் நேர்த்தி

நடவு செய்து ஒரு மாதம் கழித்துப் பயிரின் நுனியைக் கிள்ளிவிட்டு, பக்கக் கிளைகள் உருவாக விட வேண்டும். செடிகள் வளர்ந்த பின், கருகிய மற்றும் பூத்து முடிந்த மலர்க் காம்புகளை உடனே நீக்க வேண்டும். இதனால், பக்கக் கிளைகள் அதிகமாகி, விரைவில் நிறையப் பூக்கும்.

களை மேலாண்மை

முதலில் களைக்கொத்தி மூலம் களைகளை அகற்ற வேண்டும். இதில் மேல் மண் கிளறப்படுவதால், மண்ணில் காற்றோட்டம் மிகுந்து பயிர்கள் நன்கு வளரும். மேலும், ஒரு மாத இடைவெளியில் இருமுறை மண்ணை அணைத்து விட வேண்டும். இது செடிகளைச் சாய விடாமல் காத்து நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.

தாக்கும் பூச்சிகள்

இலை மற்றும் வேர்த்துளைப்பான்: இவ்வண்டு, இளம் நடவுச் செடிகளின் இலை மற்றும் தண்டைத் தின்னும். புழுக்கள் வேரைத் தின்னும். இதனால் செடிகள் காய்ந்து விடும். எனவே, முன்னெச்சரிக்கையாக நடவுக்கு முன், நிலத்தை ஆழமாக உழுது, புழு, கூட்டுப்புழு மற்றும் முட்டைகளை அழிக்க வேண்டும். செடிகளில் பாதிப்பு ஏற்பட்டால், எக்டருக்கு ஒரு கிலோ வீதம், போரேட் அல்லது கார்போபியூரான் மருந்தை மண்ணில் இட வேண்டும்.

மொட்டுத் துளைப்பான்: இப்புழுக்கள், பூ மொட்டுகளைத் தின்பதுடன் விரிந்த மலர்களையும் சேதப்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த, 0.05% மீத்தைல் பாரத்தையான் பூச்சிக்கொல்லியை நீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.

நோய்கள்

வாடல் நோய்: நிலத்தில் நீர் தேங்கியிருத்தல், அதிகளவு தழைச்சத்து இருத்தல் போன்றவற்றால் வாடல் நோய் வரும். இது தாக்கினால், இலைகள் மஞ்சளாகிப் பழுத்துப் போகும். எனவே, செடிகள் உடனே வாடிவிடும். மேலும், மண்ணை ஒட்டியுள்ள பகுதி அழுகி விடும். இதைக் கட்டுப்படுத்த, பாருக்குச் சற்று மேலே நாற்றுகளை நட வேண்டும். இதுதவிர பென்லேட் அல்லது கார்பென்டசிம் பூசணக்கொல்லியை, ஒரு லிட்டர் நீருக்கு 1.5 கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

வேரழுகல் நோய்: நிலத்தில் நீர் தேங்கி நின்றால் வேரழுகல் வரும். அதனால், நாற்றுகளைப் பாருக்குச் சற்று மேலே நடுவதுடன், நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  

அறுவடை

நன்கு பராமரித்தால் 3.5-4 மாதங்களில் பூக்கள் கிடைக்கும். இவற்றை இரு விதத்தில் அறுவடை செய்யலாம். தனித்தனியாகக் காம்புடன் அறுத்து உதிரி மலராக விற்கலாம். காம்பு நீளமாக இருக்கும் வகையில், மண்ணுக்குச் சற்று மேலே பெரிய கொத்தாக அறுத்துக் கொய்மலராக விற்கலாம். செடியில் 60% பூக்கள் மலர்ந்திருக்கும் நிலையில் அறுவடை செய்தால் நல்ல விலைக்கு விற்கலாம். வெப்பம் குறைந்த அதிகாலை அல்லது மாலையில் அறுவடை செய்தல் உகந்தது. கொய் மலருக்காக அறுத்த பிறகு, காம்பின் கீழ்ப்பகுதியில் உள்ள காய்ந்த மற்றும் கசங்கிய இலைகளை நீக்க வேண்டும். பிறகு காம்பின் நீளத்தைக் கொண்டு, தரம் பிரித்து, அவற்றின் வெட்டுப்பகுதியை 0.2% அலுமினிய சல்பேட் கரைசலில் நனைத்து வைத்தால், பூக்களின் சேமிப்புக் காலத்தை எட்டு நாட்கள் வரை நீட்டிக்கலாம்.

விளைச்சல்

3-5 செடிகளில் கிடைக்கும் கொத்துகளை ஒரே கொத்தாகக் கட்ட வேண்டும். இத்தகைய 25-30 கொத்துகளைச் சேர்த்து, பெரிய பூங்கொத்தாகக் கட்டலாம். இதைப்போல ஒரு எக்டரில் 400-500 பூங்கொத்துகள் கிடைக்கும். அதாவது, ஒரு எக்டரில் இருந்து 0.9-1 இலட்சம் பூத்தண்டுகள் கிடைக்கும்.


முனைவர் அ.சங்கரி,

முனைவர் எம்.கவிதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், கோவை, 

முனைவர் எம்.ஆனந்த், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!