கால்நடைகளுக்கு நார்ச்சத்தின் அவசியம்!

கால்நடை மாட்டை மட்டும் கட் பண்ணி வைக்கவும் HP scaled e1611793976184

கட்டுரை வெளியான இதழ்: மே 2020

நார்ச்சத்து என்று நாம் பொதுவாகக் குறிப்பிடுவது, உணவிலுள்ள செரிக்காத அல்லது மிகவும் குறைவாகச் செரிக்கக் கூடிய நாரைப் போன்றுள்ள செல்லுலோஸ், ஹெமி-செல்லுலோஸ், லிக்னின் போன்ற மூலக்கூறுகளால் ஆனதாகும். இது நமக்கு எவ்விதச் சத்தையும் அளிப்பதில்லை. ஆனாலும், உணவிலுள்ள மற்ற சத்துகள் செரிக்கவும், மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது.

ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் வயிறானது நான்கு அறைகளாக அமைந்திருக்கும். இதில் முதலிலுள்ள பெரிய மற்றும் முக்கிய அறையின் பெயர் அசையூண் அல்லது ரூமன் எனப்படும். இந்தப் பகுதியிலுள்ள பாக்டீரியாக்களும், நன்மை செய்யும் பூஞ்சைகளும் நார்ச்சத்தைச் செரிக்க வைக்கும் நொதிகளை உற்பத்தி செய்கின்றன. எனவே, மனிதனால் செரிக்க இயலாத நார்ச்சத்தையும், செரிக்கச் செய்யும் சக்தி, அசையூணைக் கொண்ட கால்நடைகளுக்கு உண்டு. இப்படி, மனிதனுக்கு உணவாகப் பயன்படாத வைக்கோல், புல் போன்றவற்றை கால்நடைகள் உட்கொண்டு, மனிதர்களுக்குப் பயன்படும் பால் போன்ற பொருள்களை அளிக்கின்றன. 

நார்ச்சத்து மிகுந்த பசுந்தீவனங்களாகிய புல், இலை; உலர் தீவனங்களாகிய வைக்கோல், சோளத்தட்டை போன்றவை கறவை மாடுகளின் தினசரி உணவில் தவிர்க்க முடியாதவை. தினசரி 10 லிட்டர் பாலைத் தரும் கறவை மாட்டின் நார்ச்சத்துத் தேவையைச் சரி செய்ய, 3-5 கிலோ உலர் தீவனம், 7-10 கிலோ பசுந்தீவனத்தைக் கலந்து கொடுக்க வேண்டும். இத்துடன் 5-6 கிலோ அடர் தீவனத்தையும் சேர்த்தளிக்க வேண்டும்.

இலாபகரமான பால்பண்ணைத் தொழிலுக்கு, பால் உற்பத்தியின் அளவு மட்டுமின்றி, பாலிலுள்ள கொழுப்புச்சத்தின் அளவும் முக்கியம். இந்தச் சத்தின் அளவை அதிகமாக்கும் வல்லமை நார்ச்சத்துக்கு உண்டு. எனவே தான், பாலில் கொழுப்புச்சத்துக் குறையும்போது, நார்ச்சத்து மிகுந்த வைக்கோல், சோளத்தட்டை போன்றவற்றைக் கொடுக்குமாறு சொல்லப்படுகிறது.

கோடை மற்றும் வறட்சிக் காலத்தில் உலர் தீவனப் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இத்தகைய சூழலில், அடர் தீவனத்தின் அளவைக் கூட்டி, உலர் தீவனப் பற்றாக்குறையைச் சரி செய்ய வேண்டும். உலர்தீவன விகிதம் குறைந்தால், அசையூண் பகுதியில் அமிலத்தன்மை அதிகரித்து, செரிக்கும் தன்மை பாதிக்கப்படும். இதனால், கறவை மாடுகளின் உண்ணும் திறன் குறைவதால் பாலின் அளவும் குறையும். மேலும், கறவை மாடுகளின் குளம்புகளில் இரத்த ஓட்டத்தைப் பாதிப்பதுடன், ஹிஸ்டமின் போன்ற வேதிப்பொருள்கள் சுரக்கவும் காரணமாகும். இதனால் கால்நடைகள் நடக்கச் சிரமப்படும்.

சிறந்த கால்நடைத் தீவனத்தில் சேர்க்கப்படும் நுண்ணூட்டத் தாதுகள் கறவை மாடுகளின் கருத்தரிப்புத் திறனை மேம்படுத்தும்; நார்ச்சத்தைச் செரிக்கச் செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.

இவ்வகையில், சிறந்த கால்நடைத் தீவனமானது, நேரடியாகவும் மறைமுகமாகவும் அசையூணில் உண்டாகும் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தி, நார்ச்சத்தை நன்கு செரிக்க வைத்து, பால் உற்பத்தியைக் கூட்டுவதுடன், கால்நடைகளின் உடல் நலத்தையும் பாதுகாக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: 04294-223466.


தொழில் நுட்பம் மற்றும் திட்ட அமலாக்கத்துறை,

கிருஷி நியூட்ரிஷன் கம்பெனி பிரைவேட் லிமிடெட்,

பெருந்துறை-638052, ஈரோடு மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!