எரிபொருளை வழங்கும் பாசி! 

பாசி Heading Picture Copy

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019

ந்திய மக்களின் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று எரிபொருள் விலை உயர்வு. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், 2050 இல் எரிபொருள் தேவை, இப்போது உள்ளதைப் போல மூன்று மடங்காக இருக்கும். ஆனால் அவ்வளவு எரிபொருள் கிடைக்குமா என்பது சந்தேகமே. எனவே, இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் விதமாக, பல்வேறு நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே மாற்று எரிபொருளை, தாவர எண்ணெய் மற்றும் விலங்குக் கொழுப்பில் இருந்து எடுப்பதற்கு முடிவு செய்துள்ளனர். அதுவே உயிரி எரிபொருள் எனப்படுகிறது. பசுமைக்கூட வாயுவைக் குறைப்பதில் உயிரி எரிபொருள் முக்கியப் பங்கு வகிக்கிறது.

உயிரி எரிபொருளைத் தயாரிப்பதற்கான இரண்டு முறைகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒன்று, கரும்பு மற்றும் ஸ்டார்ச்சை உற்பத்தி செய்யும் பயிர்களைப் பயிரிட்டு, நொதித்தல் முறையில் எத்தனாலை உற்பத்தி செய்தல். மற்றொன்று, மக்காச்சோளம், நிலக்கடலை, சூரியகாந்தி போன்றவற்றில் இருந்து கிடைக்கும் எண்ணெய் மூலம் எரிபொருளைத் தயாரித்தல். இந்த உயிரி எரிபொருள் உற்பத்தி மூன்று தலைமுறைகளாக வகுக்கப்படுகிறது.

முதல் தலைமுறை உயிரி எரிபொருள்

உயிரி எரிபொருள் நேரடியாக உணவுப் பயிர்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. அமெரிக்காவில் சோயா மொச்சை, மக்காசோளம் மூலமும், பிரேசிலில் கரும்பு மூலமும், ஐரோப்பாவில் சர்க்கரைக்கிழங்கு, கோதுமை மூலமும், சீனாவில் மரவள்ளிக் கிழங்கு, சோளம் மூலமும், தென்கிழக்கு ஆசியாவில் பாமாயில் மூலமும், இந்தியாவில் காட்டாமணக்கு மூலமும் எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.

இரண்டாம் தலைமுறை உயிரி எரிபொருள்

இது மேம்பட்ட உயிரி எரிபொருள். தாவர எண்ணெய்க் கழிவு மற்றும் மனிதர்கள் உணவுக்குப் பயன்படுத்தாத எண்ணெய்யில் இருந்து இந்த எரிபொருளை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் உயிரி எரிபொருள் உற்பத்தியில் கர்நாடகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்காக அங்கே புங்கன், வேம்பு, இலுப்பை, காட்டாமணக்கு, புன்னை, சிமரூபா போன்ற மரங்களும், தமிழ்நாட்டில் காட்டாமணக்குச் செடிகளும் வளர்க்கப்படுகின்றன.

மூன்றாம் தலைமுறை உயிரி எரிபொருள்

இது பாசியிலிருந்து உயிரி எரிபொருளைத் தயாரிப்பதாகும். சிறிய வள உள்ளீட்டில் அதிக மகசூல் கிடைக்கிறது. எனவே, ஆய்வாளர்கள் மற்றும் உயிரி எரிபொருள் தயாரிப்புத் தொழிலதிபர்கள், பாசியின் பக்கம் வருகின்றனர்.

பாசிகள் நீர்வாழ் தாவரமாகும். சூரிய ஒளி மற்றும் கார்பன் டை ஆக்சைடை பயன்படுத்தி உயிர்மத்தை உருவாக்கும் நுண்ணிய பாசி வகைகள், உயிரி எரிபொருள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. ஏனெனில், இந்தப் பாசி வகைகள் விரைவாக வளர்ந்து, எண்ணெய் உற்பத்தித் திறனையும், விரைவாக உயிர்மத்தைப் பெருக்கும் தன்மையையும் கொண்டவை.

இந்தப் பாசியில் கொழுப்பு 40%, செல்லுலோஸ் 25%, புரதம் 20%, ஸ்டார்ச் 10%, குளுக்கோஸ் 5% உள்ளன. பாசியிலிருந்து கிடைக்கும் எண்ணெய், எரிபொருளைத் தயாரிக்கப் பயன்படுகிறது. பாசியிலிருந்து, உயிரி எரிபொருள், பியூற்றனோல், பெட்ரோல், மீத்தேன், எத்தனால், விமான எரிபொருள், தாவர எண்ணெய் ஆகியன கிடைக்கின்றன.

ஒரு ஏக்கர் பாசியிலிருந்து 9,000 கேலன் உயிரி எரிபொருள் கிடைக்கிறது. ஒரு கேலன் என்பது 3.785 லிட்டர் ஆகும். இது, தாவர எண்ணெயிலிருந்து கிடைப்பதை விட 10 மடங்கு அதிகமாகும். பாசியில் நெருங்கி வேலை செய்வோர், ஒரு ஏக்கர் பாசியிலிருந்து 20 ஆயிரம் கேலன் எரிபொருளைப் பெற முடியும் என்கிறார்கள். இது இரண்டாம் தலைமுறையை விட 10 மடங்கு அதிகமென, அமெரிக்க ஆற்றல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். எனவே இது, பச்சைத் தங்கம் எனப்படுகிறது.

ஒரு ஏக்கர் தாவரங்களில் இருந்து கிடைக்கும் எண்ணெய்யின் அளவு இங்கே கேலன்களில் குறிக்கப்பட்டுள்ளது. மக்காச்சோளம் 18, சோயா மொச்சை 48, காட்டாமணக்கு 202, தேங்காய் 287, பாமாயில் 686, நுண்ணிய பாசி  6,283-14,641.

பாசி வளர்ப்பு முறைகள்

திறந்த குளங்கள்: எளிய முறையில் திறந்தவெளிக் காற்று மற்றும் குறைந்த மூலதனத்தில் வளர்க்கப்படுகிறது. இம்முறையில், மற்ற நுண்ணுயிர்களால் மாசடையவும், பாசிகள் இறக்கவும் வாய்ப்புள்ளது.

மூடப்பட்ட சுற்று வளைவு அமைப்பு: இதில் வளிமண்டலக் காற்றைப் பயன்படுத்தாமல் சுற்று வளைவுக் குழாயில் அனுப்பப்படும் கார்பன்டை ஆக்சைடு மற்றும் சூரிய ஒளியைப் பயன்படுத்திப் பாசி வளர்க்கப்படுகிறது.

ஒளி உயிரி உலை: இது மிகவும் மேம்பட்ட முறை. இதைச் செயல்படுத்துவது கடினமாகும். இதற்கு அதிக மூலதனம் தேவை. ஊட்டச்சத்து, வெப்பநிலை, கார்பன்டை ஆக்சைடு மற்றும் நீரைத் துல்லியமாகக் கட்டுப்படுத்திப் பாசி வளர்க்கப்படுகிறது.

நன்மைகள்

பாசியை வளர்ப்பதற்கு விளைநிலம் தேவையில்லை. கழிவு நீரைப் பயன்படுத்தலாம். பல்வேறு மின்னாலைகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரிக்காற்றைப் பாசி வளர்ப்புக்குப் பயன்படுத்துவதால், காற்று மாசு கணிசமாகக் குறையும். ஒளிச்சேர்க்கை மூலம் கரிக்காற்றை உண்ணும் பாசி, நமக்குத் தேவையான உயிர்க்காற்றைக் கொடுக்கிறது.

குறைகள்

பாசி உற்பத்தியைப் பெரியளவில் செயல்படுத்த அதிக மூலதனம் தேவை. பாசியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருளை மற்ற உயிரி எரிபொருளுடன் ஒப்பிடும் போது, அதிக வெப்பநிலையில் எளிதில் ஆவியாகி விடும். இதற்குக் காரணம் பாசியின் நிறைவுறா எண்ணெய். இது அதிக வெப்பத்தில் எளிதில் ஆவியாகி விடும்.

பாசியிலிருந்து எடுக்கப்படும் உயிரி எரிபொருளானது நல்லதொரு மாற்று எரிபொருளாகத் திகழ்கிறது. இந்தியாவில் இதற்கான ஆய்வு ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. பாசி உற்பத்தியைப் பெருக்கினால் எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கலாம்.


பாசி B SARANYA e1614445728536

பா.சரண்யா,

சு.சுகுணா, தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர்-621115.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!