ஜப்பானிய காடை வளர்ப்பு – 1

Japanese quail

ளர்ப்புப் பறவைகள் வகையைச் சார்ந்த ஜப்பானியக் காடைகள் 1974 ஆம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப் பட்டன. தமிழகத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நந்தனம் கோழியின ஆராய்ச்சி நிலையம் மூலம், ஜப்பானிய காடைகள் 1983 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இறைச்சி மற்றும் முட்டைக்காக வளர்க்கப் படுகின்றன.

இன்று ஜப்பானிய காடை வளர்ப்பானது, சுயவேலை வாய்ப்பை வழங்கும் தொழிலாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் காடை வளர்ப்பு அதிகமாகி வருகிறது. இக்காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப் படுகின்றன. தில்லி, சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை, கோவை போன்ற மாநகரங்களிலும், ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புப் பண்ணைகள் பெருமளவில் உள்ளன.

இறைச்சிக் காடை வளர்ப்பின் சிறப்புகள்

மிகக் குறைந்த இடத்தில், அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய காடைகளை வளர்க்கலாம். கோழி வளர்ப்புக்குத் தேவைப்படுவதைப் போல அதிகமான முதலீடும் தேவையில்லை. குறைந்த மூலதனத்தில் யார் வேண்டுமானாலும் இத்தொழிலில் ஈடுபடலாம். இந்தக் காடைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் அதிகம். இதனால், எத்தகைய தட்ப வெப்ப நிலையிலும் நன்கு வளரும்.

கோழிகளுக்குப் போடுவதைப் போலத் தடுப்பூசிகளைப் போடத் தேவையில்லை. ஐந்து முதல் ஆறு வாரங்களில் விற்பனைக்குத் தயாராகி விடும். இதனால், முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே இலாபத்தைப் பெற முடியும். ஆறு வாரத்தில் ஒரு காடையானது 500 கிராம் தீவனத்தை மட்டுமே உண்பதால், தீவனச் செலவு அதிகமின்றி, குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ளலாம்.

ஜப்பானிய காடை இறைச்சி

சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடையானது, உயிருள்ள காடையின் எடையில் 65 முதல் 70 சதம் வரையில் இருக்கும். சுமார் 140 கிராம் எடையுள்ள காடையைச் சுத்தம் செய்தால், 100 கிராம் இறைச்சிக் கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால், விற்பனை வாய்ப்பும், விலையும் அதிகளவில் கிடைக்கும். காடை இறைச்சியில் புரதம் அதிகமாக, அதாவது, 20.5 சதமும், கொழுப்பானது குறைந்தளவில், அதாவது, 5.8 சதமும் உள்ளன. அதனால், இந்த இறைச்சியானது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாக உள்ளது.

ஜப்பானிய காடை விற்பனை

ஒரு காடையை வளர்க்க 19 ரூபாய் செலவாகும். அதாவது, ஒரு காடைக் குஞ்சின் விலை ரூ.5-6, தீவனச் செலவு ரூ.12, பிற செலவு ரூ.1 ஆகும். ஒரு காடையை ரூ.25-30க்கு விற்கலாம். ஆகவே, ஒரு காடை மூலம் ரூ.6-11 இலாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. காடையை இறைச்சிக்காக விற்றால் அதிகமாக இலாபம் கிடைக்கும்.

காடையினங்கள்

நியூசிலாந்து காடை, சைனாக் காடை, மடகாஸ்கர் காடை, கலிஃபோர்னியா காடை, நியூகினியா காடை, ஜப்பானிய காடை எனப் பல வகைகள் உள்ளன. இவற்றில், ஜப்பானிய காடைகளே நம் வளர்ப்புக்கு ஏற்றவையாக உள்ளன.

ஜப்பானிய காடை வளர்ப்பு

இறைச்சிக்காக, ஆழ்கூள முறையில், ஒரு சதுரடி இடத்தில் ஆறு காடைகளை வளர்க்கலாம். பத்தடி நீளம் பத்தடி அகலமுள்ள அறையில், 500-600 காடைகளை வளர்க்கலாம். சற்றுப் பெரியளவில் வளர்ப்பதற்கு, மேடான இடத்தில் கிழக்கு மேற்காகப் பண்ணையை அமைக்க வேண்டும். கொட்டகையின் அகலம் 12 அடி இருந்தால் நல்லது. மைய உயரம் 8 அடியும், பக்கவாட்டு உயரம் 6 அடியும் இருக்க வேண்டும்.

பக்கவாட்டுச் சுவர் மூன்றடியும், அதற்கு மேல் மூன்றடிக்கு வலையும் அமைக்கலாம். தகரம், தார் அட்டை, சிமெண்ட் அட்டை, பனையோலை, தென்னங்கீற்று ஆகியவற்றால் கூரையை அமைக்கலாம். தரையில் உள்ள ஈரத்தை ஆழ்கூளத்துக்குப் பரவ விடாமல், சிமெண்ட் தளத்தை அமைக்கலாம்.

பண்ணையின் சுகாதாரம் மிகவும் முக்கியம். ஒருமுறை வளர்ப்பு முடிந்து அடுத்த வளர்ப்பைத் தொடங்கு முன், பார்மலின், சுண்ணாம்பைக் கொண்டு தொற்று நீக்கம் செய்வது, ஒட்டடையை நீக்குவது முக்கியம். குடிநீர் மற்றும் தீவனத் தட்டுகளைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். காடை இனங்களில் ஜப்பானிய காடைகளை மட்டுமே இறைச்சிக்காக அதிகளவில் வளர்க்கலாம். இந்தக் காடைகளைத் தரையில் ஆழ்கூள முறையிலும், கூண்டிலும் வளர்க்கலாம்.

ஆழ்கூள முறை

நெல் உமி, கருக்காய், மரத்தூள் ஆகியவற்றில் ஒன்றை, இரண்டு அங்குலக் கனத்துக்குப் பரப்பிப் படுக்கையை அமைக்க வேண்டும். ஒரு சதுரடியில் ஆறு காடைகள் வரையில் வளர்க்கலாம். முதல் இரண்டு வாரம் வரையில், ஆழ்கூளத்தில் வளர்த்து விட்டுப் பிறகு கூண்டுகளுக்கு மாற்றி வளர்க்கலாம். ஆழ்கூளத்தில் இரண்டு வாரத்துக்கு மேல் வளர்த்தால், காடைகள் அங்குமிங்கும் அலையும். அதனால், உண்ணும் தீனி வீணாகி எடை குறையும்; உண்ணும் தீனியும் அதிகமாகும். எனவே, முதல் இரண்டு வாரங்கள் ஆழ்கூளத்திலும், அடுத்துக் கூண்டிலும் வளர்ப்பதே சிறந்த வளர்ப்பு முறையாகும்.

கூண்டு முறை

ஜப்பானிய காடைகளைக் கூண்டுகளில் வளர்க்க நினைத்தால், முதல் இரண்டு வாரத்துக்கு 3 அடி நீளம், 2 அடி அகலமுள்ள கூண்டு ஒன்றில் 100 காடைக் குஞ்சுகளை வளர்க்க வேண்டும். பிறகு, விற்கும் வரையில், 4 அடி நீளம், 2 அடி அகலம், 18 அங்குல உயரமுள்ள கூண்டில் 50 காடைகள் வரையில் வளர்க்கலாம். குஞ்சுப்பருவக் கூண்டின் உயரம் 20 செ,மீ. இருக்க வேண்டும்.

ஒரு கூண்டை 4-5 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கலாம். கூண்டின் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டுக் கம்பி வலை 1.5×1.5 செ.மீ. உள்ளதாக இருக்க வேண்டும். காடைகளின் கழிவானது, கீழுள்ள அடுக்கில் விழாமல் இருக்க, வலைக்கடியில் தகடுகளை அமைக்க வேண்டும். தகட்டில் சேரும் கழிவை அன்றாடம் அகற்ற வேண்டும்.

காடைத் தீவனம்

காடைத் தீவனத்திலும் கோழித் தீவனத்துக்குப் பயன்படும் மூலப்பொருள்களே சேர்க்கப்படுகின்றன. காடைக்குஞ்சுத் தீவனமானது, 26-28 சதம் புரதமும், 2,700 கி.கலோரி எரிசக்தியும் கொண்டதாக இருக்க வேண்டும். இவ்வகைத் தீவனத்தை 0-6 வாரம் வரையில் கொடுக்கலாம். ஆனால், இந்த வயதுக்குள் இருவகைத் தீவனத்தைக் கொடுக்கத் திட்டமிட்டால், முதல் மூன்று வாரங்கள் வரையில் 24 சதம் புரதமும், 2,800 கி.கலோரி எரிசக்தியும் கொண்டதாக இருக்க வேண்டும். காடைத் தீவனங்களைச் சில நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

காடைக்கான தீவனம் கிடைக்காத நிலையில், இறைச்சிக் கோழிக்கான ஆரம்பக்காலத் தீவனத்தை (broiler starter mash) வாங்கி, 75 கிலோ தீவனத்துடன் 5 கிலோ வீதம் புண்ணாக்குத் தூளைக் கலந்து கொடுக்கலாம். இந்தத் தீவனத்தில் தானியங்கள் பெரிதாக இருப்பின், மீண்டும் ஒருமுறை அரைத்துத் தூளின் அளவைக் குறைத்துக் கொடுக்கலாம்.

காடைத்தீவனம்

ஐந்து வாரம் வரையில் 500 கிராம் தீவனத்தை உண்ணும் ஆண் காடை 180-190 கிராம் எடையும், பெண் காடை 190-210 கிராம் எடையும் அடையும். இதுவே விற்பனைக்குத் தயாரான நிலையாகும். ஆண் காடையை விடப் பெண் காடை அதிக எடையுடன் இருக்கும். கழுத்து மற்றும் அதன் கீழுள்ள மார்பில் வெளிர் பழுப்பு இறகுகளில், கறுப்புப் புள்ளிகள் காணப்படும். ஆண் காடையின் கழுத்து மற்றும் அதன் கீழுள்ள மார்பில் இருக்கும் இறகுகள் பழுப்பாகக் காணப்படும்.

இனப்பெருக்கம்

காடையானது ஏழு வாரத்தில் முட்டையிடத் தொடங்கி, எட்டாவது வாரத்தில் 50 விழுக்காடு முட்டை உற்பத்தியை அடையும். பொதுவாகக் காடைகள் மாலையில் தான் முட்டைகளை இடும். கோழிக்குஞ்சுப் பொரிப்பகத்தைச் சரியாக மாற்றம் செய்தால், அதில் அதிகமான காடை முட்டைகளை அடை வைக்கலாம். அடை வைத்து 18 நாட்களில் குஞ்சுகள் வெளிவரும். 500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்துக்கு 1,500 காடைக் குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். கோடைக் காலத்தில் அடைக்கான காடை முட்டைகளைக் குளிர்ந்த சூழலில் சேமித்து வைக்க வேண்டும்.

குஞ்சுகள் பராமரிப்பு

ஒன்றரை அடி உயரம், 24 அடி நீளமுள்ள தகட்டை வட்ட வடிவில் வளைத்துத் திறந்தவெளிக் கூண்டாக அமைக்க வேண்டும். அதில், 900 முதல் 1,000 குஞ்சுகள் வரையில் விடலாம். நெல் உமி, கருக்காய் அல்லது மரத்தூளை 2 அங்குலக் கனத்துக்குப் பரப்பி, அதன்மீது தாள்களை விரிக்க வேண்டும். தாயற்ற குஞ்சுகளுக்குக் கதகதப்புத் தேவைப்படுவதால், துளையிட்ட பானையில் அடுப்புக் கரியை இட்டு நெருப்பை உண்டாக்கி, அங்கே வைக்க வேண்டும்.

இப்படிச் செய்தால், அந்தப் பானையைச் சுற்றி நிற்கும். வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட் இருக்க வேண்டும். வெப்பம் அதிகமாக இருந்தால், குஞ்சுகள் பானையை விட்டு விலகியே நிற்கும். இப்படித் தனித்தனியாக விலகி நிற்பதே நல்லது. குஞ்சுகள் நெருக்கிக் கொண்டு நின்றால் நசுங்கிச் சாவதற்கு வாய்ப்புண்டு.

இப்படிப் பானை முறையில் கதகதப்பைக் கொடுப்பதைப் போல, இன்னொரு முறையிலும் வெப்பத்தைக் கொடுக்கலாம். அதாவது, 10 அங்குல உயரமுள்ள தகட்டை மூன்றடி விட்டமுள்ள வட்டமாக அமைத்து, அதற்கு மேல் 8 அங்குல உயரத்தில் 150 வாட் குண்டு பல்பைத் தொங்க விடலாம். இந்த வட்டத்துக்குள் 150 குஞ்சுகளை விடலாம். அதிகளவில் குஞ்சுகளை விட்டால் இறப்பு அதிகமாகி விடும். இந்த முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி, குஞ்சுகள் இறப்பின்றி ஒரு வாரத்தைக் கடந்து விட்டால் வெற்றி தான்.

குடிநீர், தீவனப் பராமரிப்பு

குடிநீரை வழங்குவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குஞ்சு பிறந்ததும் குடிநீரைக் கொடுக்க மாட்டார்கள். வளர்ப்புப் பண்ணைக்கு வந்த பிறகு தான் நீரைக் கொடுக்க வேண்டும். அப்போது, முதலில் சுத்தமான நீரைக் கொடுத்து விட்டு, அடுத்து வேறு நீரைக் கொடுத்தால் காடைகளுக்குச் சளிப் பிடித்து விடும். எனவே, முதலில் எந்த நீரைக் கொடுக்கிறோமோ அதே நீரையே தொடர்ந்து கொடுக்க வேண்டும். குடிநீரில் குளுக்கோஸ் மற்றும் தாதுப்புக் கலவையைச் சேர்த்துக் கொடுத்தால், குஞ்சுகள் களைப்புத் தீர்ந்து சுறுசுறுப்பாகும்.

தீவனத்தை முதலில் தாளில் சிதறிவிட வேண்டும். பிறகு, நீரை அதற்கென உள்ள தட்டுகளில் சிறிய கோலிக் குண்டுகளைப் போட்டு ஊற்றி வைத்தால், காடைக் குஞ்சுகள் நீரில் இறங்கி நனைவது தவிர்க்கப்படும். மூன்று நாட்களுக்குப் பிறகு கோலிக் குண்டுகளை எடுத்து விடலாம்.

காடைக் குஞ்சுகள் பொரிந்ததும் 6-8 கிராம் தான் இருக்கும். முதல் இரண்டு வாரத்துக்குக் கோழிக் குஞ்சுகளை விட 2.0 சென்டிகிரேட் வெப்பம் கூடுதலாகத் தேவைப்படும். குளிர் காலத்தில் குளிர்ந்த காற்று காடைகளைத் தாக்காமல் இருக்க, அறையின் பக்கவாட்டுப் பகுதிகளைக் கித்தானைக் கொண்டு மூடி வைக்க வேண்டும். 24 மணி நேரமும் வெப்பம் கொடுக்க வேண்டும். கூடுதலாகக் கொடுக்கப்படும் வெப்பத்தைச் சமாளிக்க, காடைக் குஞ்சுகள் கூடுதலாக நீரை அருந்தும். எனவே, போதுமான அளவில் குடிநீர் எப்போதும் இருக்க வேண்டும். இல்லையெனில் இறப்பு அதிகமாகி விடும்.

காடைகளுக்கு முதல் இரண்டு வாரத் தீனியில் 26 சதம் புரதமும், பிறகு விற்பனை வரையில் 24 சதம் புரதமும் தேவை. இருவகைத் தீனியிலும் எரிசக்தியானது குறைந்தது 2,800 கி.கலோரி இருக்க வேண்டும். கோழிகளை விட அதிகளவில் தாது, வைட்டமின் சத்துகளை அளிக்க வேண்டும்.

சத்துக் குறையால் வரும் நோய்கள்

காடைக் குஞ்சுகளில் கால் வலுவிழந்த குஞ்சுகளும், நோஞ்சான் குஞ்சுகளும் அதிகமாக இருக்கலாம். குஞ்சுப் பொரிப்பகங்களில் முட்டைக் காடைகளுக்குப் போதுமான தாதுப்புகள் மற்றும் வைட்டமின்கள் அளிக்கப்படாத நிலையில் இத்தகைய குஞ்சுகள் தோன்றலாம்.

நுண்ணுயிரிகளால் வரும் நோய்கள்

தொப்புள் அயர்ச்சி, ஈகோலி நோய், காடைக்கழிச்சல் மற்றும் காளான் நோய்கள், நுரையீரல் அயர்ச்சி, பூசண நச்சு ஆகிய நோய்கள் வரும். மேலும், மேரெக்ஸ் வாத நோய், இராணிக்கெட் கழிச்சல் நோய் போன்ற வைரஸ் நச்சுக் கிருமிகளால் உண்டாகும் நோய்களும், காக்சிடியோசிஸ் எனப்படும் இரத்தக்கழிச்சல் நோயும் காடைகளைப் பாதிக்கலாம். இருப்பினும், கோழிகளை விட, காடைகளுக்கு இந்நோய்களை எதிர்க்கும் ஆற்றல் அதிகம். அதனால், இந்நோய்களுக்கு எதிராகத் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.

எனவே, குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பம், குளிர்க்காற்று தாக்காமல் இளம் பருவத்தில் பாதுகாத்தல், முறையான கிருமி நீக்கம், எப்போதும் தூய்மையான குடிநீர், தரமான கலப்புத் தீவனம் அளித்தல் போன்றவற்றை வகையாகக் கையாண்டால், காடைகளில் ஏற்படும் இறப்பின் அளவைக் குறைத்து நல்ல வருமானத்தை அடையலாம்.


ஜப்பானிய காடை வளர்ப்பு ARUN

மருத்துவர் இரா.அருண்,

உதவிப் பேராசிரியர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!