மறந்து விட்ட வாழ்வியலை மீட்டெடுக்கும் வாஹா!

வாஹா! vaahaa scaled

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023

மேழியை மறந்தோம், நாழியை மறந்தோம், குண்டு கோலியை மறந்தோம், தூளியை மறந்தோம். ஆழியில் கரைந்த காயம் போல, வரகு, சாமை, குதிரைவாலியில் சமைக்கும் சோறு; தேன் தினைமாவு; கம்பு, கேழ்வரகு, சோளத்தில் சமைக்கும் கூழ், களி மற்றும் அவல், பொரி, கடலை மிட்டாய் போன்ற, உடல் நலம் காக்கும் அருமை உணவுகள் அனைத்தும் மறந்தோம்.

ஆண்பிள்ளை முறுக்கைத் தரும் மாப்பிள்ளைச் சம்பா, மருந்துகள் ஒத்த அறுபதாம் குறுவை, ஆனைக் கொம்பன், சீரகச்சம்பா, கைவரச்சம்பா, காட்டுயானம், கருங்குறுவை, கறுப்புக்கவுனி, கிச்சிலிச்சம்பா, குடவாழை, குள்ளக்கார், குழியடிச்சான், இரத்தசாலி, தூயமல்லி, வாளன் சம்பா, வாடன் சம்பா என, எண்ணற்ற நெல் வகை சாகுபடியையும் மறந்தோம்.

விறகடுப்பு, நல்லுணவைச் சமைக்க உதவும் மண் சட்டி, வெய்யிலும் குளிரும் தாங்கும் ஓலைக்குடிசை, அம்மி, உரல், திருகை போன்ற, நல்வாழ்வுப் பண்டங்களை, நவீன வாழ்க்கை மோகத்தில் தொலைத்தோம்.

இந்நிலையில், நோயற்ற வாழ்க்கை என்னும் குறைவற்ற செல்வத்தை வாரி வழங்கும், நமது பழைய வாழ்வியல் மற்றும் அது சார்ந்த ஒவ்வொரு பொருளையும், மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது வாஹா என்று கேள்விப்பட்டோம். வெற்றியை உணர்த்தும் பெயருடன், திண்டுக்கல்லில் இயங்கி வரும் வாஹாவின் முழுமையான செயல்களை அறியும் நோக்கில், இதன் நிர்வாக இயக்குநர் விஜயலட்சுமி சிவக்குமாரிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:

வாஹா! vijayalakshmi
    விஜயலட்சுமி சிவக்குமார்

“இன்னிக்கு நாம நாகரிகமான உலகத்துல வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். விதவிதமா வீடுக, விதவிதமான பொருளுக, வகை வகையா உணவுக, எப்பவுமே உடம்பு வியர்க்காம இருக்குறதுக்குக் குளுகுளு வசதி, இன்னிக்குச் சமைச்சு இருபது நாள் கழிச்சுக் கூடச் சாப்பிட ஏதுவா சேமிச்சு வைக்கும் வசதி, அலுங்காம சமைக்கும் வசதி, அலுப்பே இல்லாம வீட்டு வேலைகள செய்யிறதுக்கான வசதின்னு ஏராளமா வந்துருச்சு. மேலும் மேலும் புதுசு புதுசா வந்துக்கிட்டே இருக்கு.

இன்றைய விவசாயம்

அதே மாதிரி விவசாயத்துல அதிகமா மகசூல தரக்கூடிய கலப்பு விதைக, இரசாயன உரங்க, பூச்சி, நோய்கள்ல இருந்து பயிர்கள காக்குறதுக்கான விஷ மருந்துக வந்துக்கிட்டே இருக்கு. நம்ம விஞ்ஞான விவசாயத்துல உற்பத்தி நெறையா கிடைக்குதுன்னு சொன்னாலும், தாய்ப்பால் கூட நஞ்சா இருக்குற அளவுக்கு, எல்லா உணவுப் பொருள்களும் விஷம் கலந்ததா இருக்கு.

மக்களின் நிலை

இதனால, வயசு பேதமில்லாம, எல்லா நோய்களும் எல்லாருக்கும் வருது. ஐம்பது வயசுல வர வேண்டிய நோயி, அஞ்சு வயசு குழந்தைக்கு வருது. எல்லாரும் எல்லா நோய்களுக்கும் வைத்தியம் செய்ய முடியாத அளவுக்குப் பொருளாதார நெருக்கடிய, உயிர் இழப்ப சந்திக்க வேண்டியிருக்கு.

பூமியின் நிலை

நம்ம வாழ்க்க தான் இப்பிடின்னா, இந்த பூமியோட தன்மையும் தலைகீழா மாறிப்போச்சு. மாசம் மூனு மழை பெய்யும்ன்னு சொல்லுவாக. வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை, நீதி மன்னர் நெறியனுக்கு ஓர் மழை, மாதர் கற்புடை மாந்தர்க்கு ஓர் மழை, மாதம் மூன்று மழை பெய்யெனப் பெய்யுமேன்னு பழைய பாடல் கூடச் சொல்லுது. அப்பிடி, குளிர்ந்து கெடந்த பூமி, இப்போ தினம் தினம் சூடாகிக்கிட்டே இருக்கு.

இதுக்குக் காரணம், நாம பயன்படுத்துற நவீன பொருளுகளும், கருவிகளும் வெளியிடக் கூடிய கரியமில வாயு மாதிரியான மாசுகள் காற்று மண்டலத்துல படியிறதும்; பூமிக்கு வரக்கூடிய சூரியக் கதிர்கள, திரும்பவும் மேலே போக விடாம உள்வாங்கி வச்சுக்கிறதும் தான். இப்பிடி, பூமியோட வெப்பம் கூடிக்கிட்டே வர்றதுனால பருவத்துல மழை பெய்யிறதில்ல. இதுக்கு, மரங்க நெறஞ்ச காடுகள அழிக்கிறதும் முக்கியமான காரணமா இருக்கு.

மக்களின் கடமை

இன்னொன்னு, இந்த பூமி மனுசனுக்கு மட்டுமே சொந்தமானதில்ல. நம்மைப் போல எத்தனையோ இலட்சக்கணக்குல, கோடிக்கணக்குல வாழக்கூடிய எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது. அப்பிடின்னா, நமக்கான எல்லையில மட்டும் நாம இருந்துக்கிட்டு, அந்த உயிர்களயும் அமைதியா வாழ விடணும். இத அவங்கவங்களுக்கு முடிஞ்ச வகையில செய்யலாம், செய்யணும்.

நம்மாழ்வார் வழி

இதுல நம்ம பங்களிப்பு எப்பிடி இருக்கணும்ன்னு யோசிச்சேன். இயற்கை விவசாயி, பசுமைப் போராளி, சூழலியல் ஆர்வலர் நம்மாழ்வார் அய்யா வழியில, இயற்கை விவசாயம் செய்யிறது, இயற்கை விவசாயிகள ஆதரிக்கிறது, இதன் மூலம் பாரம்பரிய முறையில உணவுப் பொருள்கள தயாரிச்சு, எந்தக் கலப்படமும் இல்லாம, உண்மையாவும், நேர்மையாவும் மக்களுக்குக் குடுக்குறது, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் உதவுறதுன்னு முடிவு செஞ்சேன். இதுக்கு, என் கணவரும், மாமானார், மாமியாரும் ஆதரவு குடுத்தாங்க.

இயற்கை விவசாயம்

அதனால, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சாலையில இருக்குற மல்லனம்பட்டியில எங்களுக்கு இருக்கக்கூடிய பதினஞ்சு ஏக்கர் நெலத்தோட நிர்வாகத்த, எட்டு வருஷத்துக்கு முன்னால என் பொறுப்புல கொண்டு வந்தேன். அந்த நேரத்துல எங்க பக்கத்துல கடுமையான வறட்சி. மழையே இல்ல. அதனால, நெறய தென்னை மரங்க பட்டுப் போயிருச்சு. இப்பிடி, பல தென்னந்தோப்புக அழிஞ்சு போயிருச்சு. நம்ம மரங்களும் இப்பிடித் தான் சாகப் போகுதுன்னு நெனச்சப்போ வருத்தமா இருந்துச்சு.

இந்த சூழ்நிலையில, இயற்கை விவசாய முறைய கையில எடுத்தா, நம்ம நெலத்துல இருக்குற அறுநூறு தென்னை மரங்களயும் காப்பாத்த முடியும்ன்னு ஒரு நம்பிக்க வந்துச்சு. அதோட முதல் கட்டமா சொட்டுநீர் முறையில தண்ணிய குடுத்து, எல்லா தென்னை மரங்களயும் பட்டுப் போக விடாம காப்பாத்துனேன்.

சரி மரங்கள காப்பாத்தியாச்சு. இனி, இந்த மரங்கள நல்லா காய்க்க வக்கிறது எப்பிடின்னு யோசிச்சேன். நானு படிச்ச விஷயங்கள, கேள்விப்பட்ட விஷயங்கள வச்சு, நம்பிக்கையோட நெலம் முழுசும் சணப்பு, தக்கைப்பூண்ட வெதச்சு நல்லா வளர்த்து, நாப்பத்தஞ்சு நாள்ல, அப்பிடியே மடக்கி உழுது விட்டேன். தொழுவுரம், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்ன்னு இயற்கை சார்ந்த இடுபொருள்கள குடுத்தேன்.

சொட்டுநீர் முறையில எல்லா மரங்களுக்கும் தண்ணிய குடுத்துக்கிட்டே வந்தேன். அதனால, ஒருசில மாசத்துலயே மரங்களோட வளர்ச்சியில நல்ல மாற்றம் தெரிஞ்சது. இதுல இருந்து, நம்ம குடுத்த இயற்கை உரங்க வேலை செய்யுதுன்னு நல்லா புரிஞ்சது. அதுக்கு ஏத்த மாதிரி, காய்களும் காய்க்க ஆரம்பிச்சது. ஒரு வருஷத்துல எல்லா மரங்களும் நல்ல காய்ப்புக்கு வந்துருச்சு.

மதிப்புக்கூட்டல்

தென்னந்தோப்பு போக மிச்சமிருந்த நெலத்துல கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டைன்னு நாட்டுக் காய்கறிப் பயிர்கள, இயற்கை முறையில சாகுபடி செஞ்சேன். எல்லாமே நல்லா வந்துச்சு. ஆனா, சந்தையில கட்டுபடியான விலை கிடைக்கல. அதுலயும் குறிப்பா, தக்காளியோட விலை ரொம்பவும் குறைவா இருந்துச்சு. அப்பத்தான், தக்காளி ஜாம், ஊறுகாய்ன்னு மதிப்புக்கூட்டி விக்கலாம்ன்னு நெனச்சு, அப்பிடியே செஞ்சு பார்த்தேன். அதுல எதிர்பார்த்த அளவுக்கு இலாபம் கெடச்சது.

நாங்க மதிப்புக் கூட்டலுக்கு மாறுனதுக்கு இன்னொரு முக்கியமான காரணம், சந்தைக்குக் கொண்டு போற எல்லா பொருளுக்கும் ஒரே விலை தான் குடுக்குறாங்க. இயற்கை விவசாயப் பொருளுக்குன்னு தனியா விலை எதுவும் குடுக்குறதில்ல. அதனால, எங்க தோப்புல விளையிற தேங்காய்கள, வியாபாரிகளுக்கு விற்காம, காய வச்சு கொப்பரையாக்கி, வெளியில குடுத்து ஆட்டி எண்ணெய்யா எடுத்து வித்தோம். அதே மாதிரி எங்க நெலத்துல விளையிற எள்ளு, நெலக்கடலையவும் எண்ணெய்யா எடுத்து வித்தோம். இப்பிடி ஒரு ஆறு மாசம் செஞ்சோம்.

சொந்தச் செக்கு

அப்புறம், நாங்களே சொந்தமா கல் செக்க அமச்சுட்டோம். எங்க தேங்கா, எள்ளு, நிலக்கடலைய, எங்க செக்குலயே ஆட்டி, எண்ணெய எடுத்துருறோம். தேங்காய ஆட்ட, எள்ளை ஆட்ட, நிலக்கடலய ஆட்ட, தனித்தனியா செக்கு இருக்கு. ஒரு மாடு செக்க சுத்துறதைப் போல, குறஞ்ச வேகத்துல சுத்துற மோட்டார செக்குல அமச்சிருக்கோம். அதனால, எண்ணெய் சூடாகாம தரமா இருக்கும்.

உடல் நலமே நோக்கம்

விளைபொருள்கள மதிப்புக்கூட்டி விற்கும் போது, இலாபமும், மன நிறைவும் கெடக்கிறதுனால, இப்போ முப்பத்தெட்டு வகை தானியங்கள முளைக்கட்டி, சத்து மாவுகள தயாரிக்கிறோம். மூலிகைகளயும் மதிப்புமிக்க பொருள்களா மாத்துறோம். உடல் நலத்த மையமா வச்சு, ஒவ்வொரு பொருளையும் கவனமா தயாரிக்கிறோம். இந்தப் பொருளுக எல்லாமே, இயற்கை அன்னைய, இயற்கை விவசாயிகள, நுகர்வோர இணைக்கும் பாலமா இருக்கு.

தயாரிப்பு முறை

இந்தப் பொருளுக எல்லாத்தையுமே நம்ம பாரம்பரிய முறைகள்ல தான் தயாரிக்கிறோம். வறுக்குற பொருள்கள விறகு அடுப்புல, இரும்புக் கடாயில தான் வறுக்குறோம். சத்து மாவுக்கான தானியங்களை முளைக்கட்ட, மண் வீட்டைக் கட்டி வச்சிருக்கோம். வெளியே வெப்பம் அதிகமா இருந்தா இந்த வீட்டுக்குள்ள குளிர்ச்சியா இருக்கும். வெளியே குளிர்ச்சியா இருந்தா இந்த வீட்டுக்குள்ள வெதுவெதுப்பா இருக்கும்.

உடம்புக்கு நல்லது செய்யக்கூடிய நம்ம பாரம்பரிய உணவுகளயும், அதுகள உற்பத்தி செய்யும் முறைகளயும், மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கும் முயற்சிய தொடர்ந்து செஞ்சுக்கிட்டு இருக்கோம். இதன் மூலமா, அடுத்த தலைமுறை மக்கள, வலிமையான மக்களா மாத்தணும். அதனால தான், எங்க பண்ணையிலயும், எங்க உணவுப் பொருள்கள்லயும், இரசாயனம் எதையும் சேர்க்குறதே இல்ல.

இயற்கை விவசாயிகள்

எங்க மதிப்புக்கூட்டுப் பொருள்களுக்கு வேண்டிய மூலப் பொருளுக எல்லாத்தையும் எங்க பண்ணையில மட்டுமே உற்பத்தி செஞ்சிற முடியாது. அதனால, இயற்கை விவசாயத்துல ஆர்வமா செயல்படுற நம்பகமான இயற்கை விவசாயிகளோட பொருள்கள, நல்ல விலைக்கு வாங்கிக்கிறோம். இதன் மூலமா இயற்கை விவசாயத்த, இயற்கை விவசாயிகள ஊக்கப்படுத்துறோம், புதுசா இயற்கை விவசாயிகளயும் உருவாக்குறோம்.

இந்த வகையில, நூத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிக எங்க தொடர்புல இருக்காங்க. இன்னும் பல ஆயிரம் ஏக்கர் நெலத்துல இயற்கை விவசாயம் நடக்கணும், இயற்கை விவசாயிகள உருவாக்கி அவங்களோட இணைந்து செயல்படணும். இதன் மூலம், மண்வளத்த காக்கணும், நீர்வளத்த காக்கணும், விவசாயச் சூழல் மாசைக் குறைக்கணும்.

ஒருங்கிணைந்த பண்ணை

இது மட்டுமில்லாம, எங்க நெலத்த, ஒருங்கிணைந்த பண்ணையமா, மாத்தியிருக்கோம். இதுக்காக முதல்ல ஒரு காங்கேயம் மாட்டை வாங்கிட்டு வந்தோம். இப்போ எங்ககிட்ட, காங்கேயம், கிர், காங்க்ரீஜ், சாகிவால், தார்பார்க்கன்னு இருபது நாட்டு மாடுக இருக்கு. இதுக மூலமா கிடைக்கிற பாலை, பாலாவும், தயிராவும், வெண்ணெயாவும், நெய்யாவும் மாத்திக் குடுக்குறோம். இந்த மாடுகளோட சாணம், கோமியத்த வச்சு, பஞ்சகவ்யா, திருநீறு, சாம்பிராணி தயாரிக்கிறோம்.

தேனீ வளர்ப்பு

இயற்கை விவசாயத்துக்கு நாட்டு மாடுக எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு தேனீக்களும் முக்கியம். அதனால, முதல்ல ஒரு நாலு தேனீப் பெட்டிகள மட்டும் பண்ணையில வச்சோம். இப்பிடி வச்ச பிறகு வெளஞ்ச பயிர்கள்ல இருந்து கூடுதலா மகசூல் கெடச்சது. அதனால, தேனீப் பெட்டிகள அதிகமாக்கிட்டோம். இப்போ நாற்பது தேனீப்பெட்டிக இருக்கு.

இந்தப் பெட்டிகள்ல இருந்து, ஒன்னரை மாசத்துக்கு ஒருமுறை தேனை அறுவடை செய்வோம். முருங்கைத் தேன், நாவல் தேன், மலைத்தேனுன்னு மூனு வகையான தேனை உற்பத்தி செய்யிறோம். இந்தத் தேனையும் மதிப்புக்கூட்டல் பொருள்களா, அதாவது, பூண்டுத்தேன், இஞ்சித்தேன், குல்கந்து, வேப்பம்பூ தேனுன்னு தயாரிச்சுக் குடுக்குறோம். இதன் மூலம் இயற்கையான, உடம்புக்கு நல்லது செய்யக்கூடிய உணவுப் பொருள்கள மக்களுக்குக் குடுக்குறோம்ங்கிற மன நிறைவு கிடைக்குது.

கோழிகள், ஆடுகள்

நாட்டுக்கோழி, கினிக்கோழி, வாத்துன்னு ஒரு முந்நூறு கோழிக எங்ககிட்ட இருக்கு. இதுக மூலமா கிடைக்கிற முட்டைகள குஞ்சு பொரிக்க வக்கிறோம், நுகர்வோருக்கும் குடுக்குறோம். எங்ககிட்ட வெள்ளாடுகளும் இருக்கு. இதுக கழிவு நெலத்துக்கு உரமாகுது. இதனால, எங்க பண்ணையில இரசாயன உரத்துக்கு வேலையே இல்ல. இப்பிடி, எங்களோட பண்ணைய, முற்றிலும் இயற்கை விவசாயப் பண்ணையா மாத்தியிருக்கோம்.

ஊரக மகளிர்க்கு வேலை

எங்ககிட்ட முப்பது பணியாளர்கள் இருக்காங்க. இதுல இருபது பேர் பெண்கள். அதுலயும் இவங்க எல்லாமே கிராமங்கள்ல இருந்து வர்றவங்க. அதனால, ஊரகப் பெண்களோட பொருளாதார உயர்வுக்கு நம்மாலான உதவிங்கிற அளவுல மனசுக்கு சந்தோசமா இருக்கு.  

எதிர்காலத் திட்டம்

இயற்கை விவசாயத்த அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போகணும்ங்கிறது என்னோட நோக்கம். அதுக்காக, பள்ளிக்கூடங்களுக்குப் போயி அங்க படிக்கிற பிள்ளைங்ககிட்ட இயற்கை விவசாயத்த பத்தி எடுத்துச் சொல்றேன். டாக்டர்க சொன்னா மக்கள் கேப்பாங்க. அதனால, டாக்டர்க மூலமா, இயற்கை உணவுகளோட நன்மைகள, மக்கள்கிட்ட கொண்டு போறேன்.

எங்க பண்ணைய எல்லாரும் வந்து பார்க்கலாம். குறிப்பா, குழந்தைகள கூட்டிட்டு வந்து பார்க்க விடலாம். ஏன்னா, இன்னிக்கு இருக்குற பிள்ளைகளுக்கு விவசாயம்ன்னா என்னன்னு தெரியல, நம்ம பாரம்பரிய விளையாட்டுகள பத்தியும் தெரியல. ஆனா, இதையெல்லாம் அவங்க தெரிஞ்சுக்கிறணும்.

அதனால, குழந்தைகள் ஆர்வமா வர்றதுக்காக, அவங்களுக்குப் பிடிச்ச வகையில, விளையாட்டுப் பொருளுக இங்க இருக்கு. நல்ல மைதானமும் இருக்கு. இங்க, பாரம்பரிய உணவுக, தின்பண்டங்க கிடைக்கும். இங்க வந்தா ஒருநாள் பொழுது பயனுள்ள வகையில அமையும்.

உலகளவுல மன நிறைவான நுகர்வோர்கள் நிறைந்த அமைப்பை உருவாக்கணும், அதுக்கு, இயற்கையான பொருள்கள மட்டுமே தரணும்ன்னு நெனக்கிறோம். அதனால, உணவு உற்பத்தியிலும் சரி, விநியோகத்திலும் சரி, ரொம்ப கவனமா இருக்கோம்.

விதையே ஆயுதம்ன்னு நம்மாழ்வார் அய்யா அடிக்கடி சொல்லுவாரு. ஆனா, அதிக உற்பத்திங்கிற நோக்கத்துல, புதுப்புது ஒட்டு விதைகள் வந்துக்கிட்டே இருக்குறதுனால, நம்ம நாட்டு விதைக காணாம போயிக்கிட்டே இருக்கு. அதனால, இந்த நாட்டு விதைகள பாதுகாத்து வைக்க வேண்டிய கட்டாயம் உண்டாகி இருக்கு. இத மனசுல வச்சு, விதை வங்கி ஒன்ன அமைக்கப் போறோம். அதே மாதிரி, மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் பயனடையிற வகையில, இயற்கை விவசாயப் பயிற்சி மையத்தையும் அமைக்கப் போறோம்.

மறைந்து வரும் பாரம்பரியம்

அம்மி, திருகை, உரல், விறகடுப்பு, மண் சட்டி, கல் செக்கு, கட்டை வண்டி, மரக்கலப்பை இதெல்லாம் நம்ம வாழ்க்கையோட இணஞ்ச பொருளுக. கிட்டி விளையாட்டு, பரமபத விளையாட்டு, ஆடுபுலி ஆட்டம், பண்ணாங்குழி விளையாட்டு இதெல்லாம் நம்ம கிராமத்து ஆட்டங்க. 

அம்மியில சட்னி, துவையல், மசாலா அரைக்கிறது, திருகையில மாவு திரிக்கிறது, உரலுல நெல்லு, கம்பு, சோளம்ன்னு தானியங்கள குத்துறது, வீட்டுப் பெண்களுக்கான உடற்பயிற்சி. இதெல்லாம் இன்னிக்கு இல்லாம போனதுனால தான், நெறய பெண்கள் உடல் எடையால கஷ்டப்படுறாங்க.

விறகடுப்பு

அதே மாதிரி விறகடுப்பு தற்சார்பு வாழ்க்கையின் அடையாளம். தன்னோட நெலத்துல விளையிற தானியங்க, காய்கறிகள உணவாவும், தன் நெலத்துல கிடைக்கிற பயிர்க்கழிவ, உணவைச் சமைக்க விறகாவும் எரிக்கிறது, விவசாயியோட தற்சார்பு வாழ்க்கை. இன்னிக்கு இந்த தற்சார்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சு போச்சுன்னு தான் சொல்லணும்.

மண்சட்டி

மண்சட்டி, நோயற்ற உணவு சமையலுக்கான பாத்திரம். மண் சட்டியில சமைக்கிற உணவு சீக்கிரமா கெட்டுப் போகாது, ருசியாவும் இருக்கும். ஆனா உலோகப் பாத்திரங்க வரவுனால, ஒரு ஐம்பது வருஷத்துக்கு முன்னால இருந்தே மண்சட்டிச் சமையல் மறைய ஆரம்பிச்சிருச்சு. மண்சட்டிச் சமையல இழிவா பார்த்த காலமும் இருந்துச்சு.

ஆனா, இப்போ அதோட அருமை மக்களுக்குத் தெரியுது. அதனால தான், இங்கே மண்பானைச் சோறு கிடைக்கும்ன்னு சில ஓட்டல்கள்ல போர்டு போட்டு வக்கிறாங்க. இதோட நன்மைக எல்லாருக்கும் தெரியணும்ன்னு தான், நாங்க சமைக்கிற உணவுகள சின்ன மண் சட்டிகள்ல வச்சுக் குடுக்குறோம்.

செக்கு எண்ணெய்

உணவுக்கு ருசியையும், உடம்புக்குச் சத்தையும் எண்ணெய் தருது. இந்த எண்ணெயில இருக்குற சத்துக கெடாத வகையில, எடுக்க உதவுறது கல் செக்கு. கருங்கல் உரலும், வாகை மர உலக்கையும் சேர்ந்தது தான் நம்ம கல் செக்கு. ஒரு மாட்டை வச்சு இந்த உலக்கைய சுத்த விட்டு, எள்ளு, நெலக்கடல, தேங்காய ஆட்டி எண்ணெய எடுப்பாங்க. மாடு மெதுவா சுத்துறதுனால கல்லும் சூடாகாது, எண்ணெயும் சூடாகாது. அதனால, அதுல இருக்குற சத்துக அழியாம இருந்து, நம்ம உடல் வளர்ச்சிக்குப் பயன்படுது.

ஆனா, ஓட்டமும் நடையுமான இந்த நாகரிக உலகத்துல, இந்த எண்ணெய எடுக்க, வேகமா சுத்துற இயந்திரம் பயன்படுது. அதனால, எண்ணெயோட தன்மையே மாறிப் போகுது, உடம்புக்குக் கெடுதலாவும் அமையுது. இதுல இருந்து மாறணும்ன்னு தான், நாங்க கல் செக்கு மூலமா எண்ணெய எடுத்து, நல்ல சத்துள்ள பொருளா மக்களுக்குக் குடுக்குறோம்.

கட்டை வண்டி

கட்டை வண்டி, ஒரு மனுசனோட வாழ்க்கைத் தரத்த, சமூகத் தகுதிய வெளிப்படுத்துற அடையாளம். பொருளாதாரத்த பரவலாக்குற கிராமிய எந்திரம். கட்டை வண்டியில பலவகை இருக்கு. வில் வண்டி, அழகா, சின்னதா இருக்கும். நல்ல வசதி அல்லது சமூகத்துல மதிப்புள்ள வீட்டுல மட்டும் இருக்கும். அவங்களோட போக்குவரத்துக்கு இந்த வண்டி பயன்படும்.

கட்ட வண்டி பெருசா இருக்கும். இது, பெரிய விவசாயிக்கான அடையாளம். ஒரு ஊருக்குள்ள அஞ்சாறு கட்ட வண்டிக இருந்தாலே பெரிய விஷயந்தான். தொழுவுரம், கண்மாய் வண்டல அள்ளிட்டுப் போயி நெலத்துல போடுறதுக்கு, நெலத்துல விளையிற பொருளுகள வீட்டுக்குக் கொண்டு வருறதுக்கு, கட்டை வண்டி பயன்படும். பக்கத்து ஊர்கள்ல நடக்குற முக்கியமான திருவிழா, பொங்கலுக்கும் கூட கட்டை வண்டியில குடும்பத்தோட போவாங்க.

பெண் வீட்ட பார்க்குறதுக்கு அஞ்சு கட்டை வண்டிகள்ல மாப்பிள்ள வீட்டுக்காரங்க போனா, மாப்பிள்ள வீட்ட பார்க்குறதுக்கு ஆறேழு கட்டை வண்டிகள்ல பெண் வீட்டுக்காரங்க போவாக. இப்பிடி, குடும்ப கௌரவம், மரியாதைய தரக்கூடியதா கட்டை வண்டி இருந்துச்சு.

கூட்டு வண்டியில, மழை, வெய்யிலு படாத வகையில ஒரு கூடு இருக்கும். மக்கள் போக வரவும் பயன்படும். ஆனா பொருள் போக்குவரத்துல தான் அதிகமா பயன்படும். உணவு உற்பத்திய வச்சு தான் ஒரு நாட்டோட வளர்ச்சி இருக்கும். இந்த உணவு உற்பத்தி நடக்குற எடம் விவசாயக் குடும்பங்க நெறஞ்ச ஊருக. ஒரு ஊருல நுறு வீடு இருக்கலாம், இருநூறு வீடு இருக்கலாம், ஐம்பது வீடுக கூட இருக்கலாம்.

இப்பிடி, பத்துப் பதினஞ்சு ஊருகளுக்குப் பக்கத்துல, ஆயிரம் ரெண்டாயிரம் வீடுகளோட பெரிய கிராமம் இருக்கும். இத சின்ன நகரம்ன்னு கூடச் சொல்லலாம். இங்க விவசாயத்த தவிர மற்ற தொழில்கள செய்யக்கூடிய மக்கள் இருப்பாங்க. முக்கியமா தவசக்கடை, விதைக்கடை, பலசரக்குக் கடை, தவிடு புண்ணாக்குக் கடை, ஜவுளிக்கடைன்னு சின்ன வணிக நகரமா இருக்கும். ஊருகள்ல விளையிற விவசாயப் பொருள்கள வாங்கக்கூடிய வியாபாரிக இங்க தான் இருப்பாங்க.

இந்தச் சின்ன நகரங்கள்ல இருந்து பத்து பதினஞ்சு மைல் தூரத்துல, பெரிய நகரம் இருக்கும். இங்க தான் இந்தச் சின்ன நகரங்களுக்குத் தேவையான பொருளுக நெறஞ்ச பெரிய கிட்டங்கிக, கடைக இருக்கும். இங்க இருந்து தான் இந்தச் சின்ன நகரங்களுக்கு வேண்டிய பொருளுக போகும். அங்க இருந்து வரக்கூடிய விளைபொருளுக இங்க விற்பனையாகும்.

இப்பிடி, ஊருகள்ல விளையிற பொருளுகள, சின்ன நகரங்களுக்கும், பெரிய நகரத்துக்கும் பரவலாக்குற வேலை; அந்த நகரங்கள்ல இருந்து ஊருகளுக்கு வேண்டிய, உரம், விதை, தீவனம், பலசரக்கு மாதிரியான பொருள்கள கொண்டு போற வேலை; இந்த ரெண்டும் கூட்டு வண்டிக மூலம் தான் நடக்கும்.

வாரத்துல ரெண்டு முறை இந்தக் கூட்டு வண்டிக, பொருளுகள ஏத்திக்கிட்டுப் போகும். அதே மாதிரி அங்க இருக்குற பொருள்கள ஊருகளுக்கு எடுத்துட்டு வரும். இந்த வண்டிக போறதும் திரும்ப வர்றதும் இராத்திரி நேரத்துல தான் நடக்கும்.

ஒரு முப்பது வருஷத்துக்கு முன்ன வரை, ஊருகளுக்கும், பெரிய நகரங்களுக்குமான பொருள் பரவலாக்கல், பொருளாதாரப் பரவலாக்கல் வேலை, இந்தக் கூட்டு வண்டிக மூலம் தான் நடந்துச்சு. ஆனா, நவீன எந்திரமயம், நம்ம வாழ்க்கையில பின்னியிருந்த கட்டை வண்டிங்கிற சங்கிலிய அழிச்சிருச்சு.

தற்சார்பு வாழ்க்கையில முக்கிய அங்கமா இருந்த கட்டை வண்டிய கண்ணுல பார்க்குறது ரொம்ப அரிதா இருக்கு. இன்னிக்கு இருபது வயசு பிள்ளைகளுக்கு, கட்ட வண்டிய பத்தியும் தெரியாது, அதோட அருமை பெருமையும் தெரியாது. அதை இந்தப் பிள்ளைக தெரிஞ்சுக்கிறதுக்காக, பலாயிரம் ரூபா மதிப்புள்ள ஒரு கட்டை வண்டிய வாங்கி நிறுத்தி வச்சிருக்கோம்.

மரக்கலப்பை

மரக்கலப்பையும் விவசாய மக்களோட தற்சார்பு வாழ்க்கையில ரொம்பவும் முக்கியமானது. உழவு மாடுகளும் மரக்கலப்பையும் இருந்த வரைக்கும், எந்த நெலமும் புல்லு மொளச்ச தரிசா கெடக்காது. ஒரு பகுதியில பயிர் இருந்தா, இன்னொரு பகுதி சாகுபடிகு ஏத்த உழவுப் புழுதியா இருக்கும். ஒவ்வொரு உழவும் ஒவ்வொரு உரம் போட்டது மாதிரின்னு உழுதுக்கிட்டே இருப்பாக.

ஒரு நெலத்துல கோரை மொளச்சுட்டா அதை அழிக்கவே முடியாது. எத்தனை தடவ களையெடுத்தாலும், கோரைக்கிழங்குல இருந்து புல்லு மொளச்சுக்கிட்டே தான் இருக்கும். ஆனா, வேப்பமரக் கலப்பையால உழுதா, அதுல இருக்குற கசப்புத் தன்மை பட்டு, கோரைக் கிழங்குக செத்துப் போகும்ன்னு, கோரை பத்துன நெலத்துல வேப்பங் கலப்பையால உழுவாக.

எல்லையே இல்லாம விரிஞ்சு கெடக்குற இந்த வெட்ட வெளியில இருக்குற சக்திக, மாட்டுக் கொம்புக வழியா வந்து, குளம்புத் தடங்கள் வழியா மண்ணுக்குள்ள இறங்கும்ன்னு சொல்லுவாக. அப்பிடிப்பட்ட மாடுகள பூட்டி உழுத மரக்கலப்பையும், மரக்கலப்பை உழவும் காணாம போயி ரொம்ப வருஷமாச்சு.

விளையாட்டுகள்

நம்ம விளையாட்டுக எல்லாம் அறிவு சார்ந்த விளையாட்டுக. நல்ல படிப்பினைகள தரக்கூடிய விளையாட்டுக. மனுச வாழ்க்கையில யோசிச்சுச் செய்யிற வேலையும் உண்டு. யோசிக்க நேரமில்லாம உடனடியா செய்யிற வேலையும் உண்டு. இதை சமயோசித புத்தின்னு சொல்லுவாக. உடனடி முடிவெடுக்கும் இந்த அறிவு சார்ந்தது பல்லாங்குழி விளையாட்டு. ஆடுபுலி ஆட்டமும் அப்பிடித் தான். கிட்டி விளையாட்டு, துல்லியமான குறியை அடையிற பயிற்சிய குடுக்குற விளையாட்டு.

பரமபதம், மனுச வாழ்க்கை ஏற்றமும் இறக்கமும் நெறஞ்சதுங்கிறத உணர்த்துற விளையாட்டு. இதெல்லாம் தெரியாததுனால தான், சின்ன சிக்கல கூட, இன்னிக்கு இருக்குற பிள்ளைகளால தாங்க முடியிறதில்ல. இனிமே நம்மால வாழ முடியாதுங்கிற அளவுக்குப் போயி ஆபத்தான முடிவுகள எடுத்துருறாங்க.

வாஹாவின் முயற்சி

ஆனா, இந்த எல்லாமே புழக்கத்துல இருந்து மறஞ்சுருச்சு. இந்த நிலையில, எங்க உணவுப் பொருளுக தயாரிப்புல அம்மிய பயன்படுத்துறோம், திருகைய பயன்படுத்துறோம், ஆட்டுரல் பயன்படுது, விறகடுப்பு பயன்படுது, கல் செக்கு பயன்படுது. நம்ம விளையாட்டுகள ஆடுறதுக்கான எல்லா வசதிகளும் இங்க இருக்கு. இப்பிடி, முடிந்த வகையில எல்லாம், நம்ம முன்னோர் வாழ்வியல் முறைகள காக்குறதுக்கு வாஹா முயற்சி செய்யுது.

வாஹா தயாரிப்புகள்

கல் செக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், மலைத்தேன், முருங்கைத் தேன், நாவல் தேன், தேன் வேப்பம்பூ ஊறல், தேன் பூண்டு ஊறல், தேன் இஞ்சி ஊறல், தேன் கலந்த குல்கந்து, சத்து மாவு, வைட்டமின்கள் நிறந்த மாவு, நவரத்னா ஆட்டா, வரகு, பனி வரகு, தினை, சாமை, குதிரைவாலி அரிசி வகைகள், நாட்டுக்கம்பு, வெள்ளைச் சோளம், சிவப்புச் சோளம், இராகி, மக்காச்சோளம் ஆகிய தானியங்கள்,

வெள்ளை அவல், சிவப்பு அவல், வரகு அவல், சாமை அவல், இராகி அவல், குதிரைவாலி அவல், கம்பு அவல், கோதுமை அவல், கறுப்புக்கவுனி அவல், மாப்பிள்ளைச் சம்பா அவல், சோளம் அவல், கோதுமை மாவு, இராகி மாவு, கம்பு மாவு, கோதுமை ரவை, இடியாப்ப மாவு, உளுந்தங்களி மாவு, இந்து கல்லுப்பு, இந்து தூள் உப்பு, நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, பனைக் கருப்பட்டி,

பூங்கார், காட்டுயானம், மாப்பிள்ளைச் சம்பா, கறுப்புக்கவுனி, சிவப்புக்கவுனி, சிவன் சம்பா, சீரகச்சம்பா, நவரா, குழியடிச்சான், குடவாழை, மட்டை, வாலன் சம்பா, கல்லுண்டை சம்பா, தூயமல்லி, மைசூர் மல்லி, கிச்சிலி சம்பா, கருங்குறுவை ஆகிய பாரம்பரிய நெல்லரிசி வகைகள், மூங்கில் அரிசி, ஆர்கானிக் பொன்னி அரிசி, ஆர்கானிக் இட்லி அரிசி, சிவப்பரிசி, கைக்குத்தல் அரிசி, நாட்டுக்கோழி முட்டை,

சாம்பார் பொடி, குழம்புப் பொடி, பிரியாணி பொடி, கறிமசால் பொடி, இரசப்பொடி, மிளகாய்த் தூள், மல்லித்தூள், கறிவேப்பிலைப் பொடி, இட்லி பொடி, கொள்ளுப்பொடி, பருப்புப்பொடி, பூண்டுப்பொடி, சீரகப்பொடி, மிளகுப்பொடி, மஞ்சள் தூள் ஆகிய நஞ்சற்ற உணவுப் பொருள்க வாஹாவுல கிடைக்கும். அதே மாதிரி நம்ம உடம்புக்கு வேண்டிய அழகுப் பொருள்களும் எங்ககிட்ட இருக்கு.

வாஹாவின் செயல்கள்

வாஹாவின் ஒவ்வொரு செயலும் பூமியின் நன்மைக்கானது, மக்களின் நன்மைக்கானது, இந்த பூமியில் வாழும் எண்ணற்ற உயிர்களின் நன்மைக்கானது’’ என்று சொல்லி முடித்தார்.

அப்போது, இவரை மனதில் வைத்துத் தான், இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல், என்னும் குறளை, திருவள்ளுவர் எழுதியிருக்கிறார். அதனால், வாஹாவின் நற்பணி தொடரட்டும் என்று வாழ்த்தி விடை பெற்றோம். இவருடன் பேச: 98652 84000.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!