வறட்சியில் வளம் தரும் பாமரோசா புல்!

பாமரோசா புல் DSC01376 51eb2a143f7781c3ada3f46ea77df89f scaled

செய்தி வெளியான இதழ்: 2014 மே.

ருமபுரி மாவட்டம், வெங்கட்டம்பட்டியை அடுத்த பாளையத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கன், பாமரோசா என்ற தைலப்புல்லை சாகுபடி செய்து வருகிறார். செலவில்லாத விவசாயம் இந்த பாமரோசா என்றும் வறட்சியான காலத்தில் கூட ஓராண்டில் ஏக்கருக்கு ஒரு இலட்ச ரூபாய் வரை வருமானம் பெறலாம் என்றும் கூறும் தங்கன், தனது பாமரோசா சாகுபடி குறித்து நம்மிடம் விரிவாகக் கூறினார்.

“நான் கடந்த பத்து வருசமா இந்தத் தைலப் புல்லை சாகுபடி செஞ்சிட்டு வர்றேன். செலவில்லாத, சிக்கனமான விவசாயம் தான் இந்த பாமரோசா சாகுபடி. இதற்குத் தண்ணீர் அதிகம் பாய்ச்சத் தேவையில்ல. வறட்சியைத் தாங்கி வளரும். களை எடுக்கணும், மருந்து அடிக்கணுங்கிற பிரச்சனைகள் இல்லை. அதனால தான் நான் பாமரோசா விவசாயத்துக்கு மாறிட்டேன்.

தற்போது ஒன்றரை ஏக்கர் நிலத்துல இந்தப் புல்ல சாகுபடி செய்து அறுவடை செஞ்சிட்டு வர்றேன். இப்போ இருக்குற புல் மூணாவது அறுவடைக்குத் தயாரா இருக்கு” எனக் கூறிய அவர், பாமரோசா புல் சாகுபடி மற்றும் விற்பனை அனுபவங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“பாமரோசா சாகுபடிக்கு ஏக்கருக்கு 30 கிலோ விதை தேவைப்படும். இந்த விதை கிலோ 200 ரூபாய்க்கு கிடைக்குது. நாம சொந்தமாவும் உற்பத்தி செஞ்சுக்கலாம். விதைக்குற நிலத்தைப் புட்டை இல்லாம, மூன்று முறையாவது உழவு செஞ்சு பக்குவப்படுத்தணும். அடியுரமா, எரு அல்லது டிஏபி ஒரு மூட்டையை போட்டுத் தயார்படுத்தணும்.

விதைச்ச மூன்று மாதம் அல்லது 70 நாள்ல பாமரோசா புல்லு அறுவடைக்குத் தயாராகிடும். தீவனப் புல் அறுக்குறதுபோல தூரோடவே அறுத்து விற்கலாம். தண்ணி இருந்தா வருசத்துக்கு நான்கு தடவையும், இல்லைன்னா மூன்று தடவையும் அறுவடை செய்ய முடியும். ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை பொட்டாஷ், ஒரு மூட்டை காம்ப்ளக்ஸ் போட்டா, புல்லுல எண்ணெய் அதிகமா கிடைக்கும். அதனால, புல்லு நல்ல விலைக்குப் போகும். ஒரு தடவை பயிரிட்டா ஐந்து வருசத்துக்கு அறுவடை செய்யலாம்.

ஒரு ஏக்கருல இருந்து மூனு பாய்லருக்கான புல்லு கிடைக்கும். புல்லுல இருக்குற எண்ணெய்ச் சத்தைப் பொறுத்து ஒரு ஏக்கர் புல்ல, ரூ.15 ஆயிரத்துல இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்க முடியும். அது மூலமா, வருசத்துக்கு ரூ.50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். நல்ல பக்குவமா பார்த்துக்கிட்டா ஒரு இலட்சம் ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்.

நானே சொந்தமா இந்த பாமரோசா புல் எண்ணெய் ஆலையும் வச்சுருக்கேன். தருமபுரி மாவட்டத்துல சுமார் முப்பது ஆலைகள் இருக்கு. இந்த புல்ல, ஏக்கர் கணக்குல விலைபேசி அறுவடை செய்வோம். ஒரு ஏக்கரில் மூன்று பாய்லருக்கான புல் கிடைக்கும். அது மூலமா, 12 கிலோ வரை பாமரோசா எண்ணெய் கிடைக்கும்.

ஒரு லிட்டர் பாமரோசா எண்ணெய் ரூ.1,750 வரைக்கும் சந்தைல விற்பனையாகுது. வியாபாரிகள், ஆலைகளுக்கே நேரடியாக வந்து எண்ணெய்யை வாங்கிட்டுப் போறாங்க. இந்த எண்ணெய், சோப்பு தயாரிக்கவும், சென்ட் உள்ளிட்ட அழகு சார்ந்த பொருள்கள் தயாரிக்கவும் தான் அதிகளவில் பயன்படுது. கொதிகலன்ல போட்டு வேகவெச்சு எடுத்த புல்லை, மாடுகளுக்கு தீவனமாவும் போடலாம்” என்று கூறினார்.


பொம்மிடி முருகேசன்

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!