பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!

பூச்சி விரட்டிகள் HP 9

ன்றைய நவீன வேளாண்மையில், இரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன. மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நோய்களுக்கு இவையே காரணங்களாக உள்ளன. பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லிகளின் எஞ்சிய நஞ்சுகள், காற்று, மண், நீர் ஆகியவற்றில் தங்கி விடுகின்றன. இவை, உணவுப் பொருள்கள் வழியாக உடம்புக்குள் சென்று விஷமாக மாறிப் பல்வேறு தொல்லைகளைக் கொடுக்கின்றன.

இந்த நிலையில், நாம் அன்றாடம் காணும் சில செடிகள் மற்றும் மரங்களின் பொருள்கள் நன்மைகளைத் தருகின்றன. அவற்றில், வேம்பு, நொச்சி, எருக்கு ஆகியவற்றை முக்கியமாகச் சொல்லலாம். வேப்பங் குச்சியால் பல் துலக்கல், அரிசிப் பானைகளில் நொச்சியிலைகளைப் போட்டு வைத்தல் போன்றவற்றின் மூலம், இவற்றுக்குள்ள பூச்சியெதிர்ப்புத் திறனை அறிய முடியும். எனவே, இவற்றைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை விரட்டப் பயன்படுத்தினால், இரசாயனப் பூச்சிக் கொல்லிகளுக்கான செலவு மீதமாகும்; சுற்றுச்சூழல் காக்கப்படும்; நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்ய முடியும்.

வேளாண்மையில் வேம்பு

வேம்பின் அனைத்துப் பாகங்களும் விவசாயிகளுக்குப் பயன்படுகின்றன. இதிலிருக்கும் அசாரெக்டின், மெலியன்டிரியான், கொலானின், நிம்பிசிடின் போன்ற பொருள்கள் பூச்சிகளையும், நோய்களையும் தடுக்கின்றன. வேப்பிலை, வேப்பெண்ணெய், வேப்பம் பருப்புத்தூள் ஆகியன பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு வெகுவாக உதவுகின்றன.

நெல், சோளம், கம்பு, கோதுமை, மக்காச்சோளம், பட்டாணி, உளுந்து, பச்சைப்பயறு போன்றவற்றைத் தாக்கும் அந்துப் பூச்சிகள், அரிசி வண்டுகள், மாவு வண்டுகள் போன்றவற்றை, வேப்பம் பொருள்களைப் பயன்படுத்தி 180 முதல் 300 நாட்கள் வரையில் நன்கு பாதுகாக்கலாம். கசப்புத் தன்மையால், பூச்சிகளை உண்ண விடாமல் செய்யும் வேப்பம் பொருள்கள், நன்மைகளைத் தரும் பூச்சிகளுக்குத் தீங்கைச் செய்வதில்லை.

வேப்பிலை

வேப்பந் தழைகளை இட்ட வயலில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுத் தாக்குதல் வெகுவாகக் குறைந்து விடும். வேப்பிலையில், தழை, மணி, சாம்பல் சத்துகள், 2.5, 0.6, 2.0 சதவீதம் உள்ளதால், நன்செய் நிலங்களுக்கு உரமாக இடலாம். நெல், சோளம் போன்ற தானியங்களில், உலர்ந்த வேப்பிலைகளை 2-10 சதம் சேர்த்துச் சேமித்து வைத்தால், வண்டுகளின் தாக்குதல் இருக்காது.

வேப்பிலைச்சாறு கரைசல்

ஒரு கிலோ வேப்பிலைகளை அரைத்து 20 லிட்டர் நீரில் கலந்து வடிகட்டிப் பயன்படுத்தலாம். இந்தச் சாறுடன் இரு மடங்கு நீரைக் கலந்து தெளித்து, காய்கறிப் பயிர்களைத் தாக்கும் புழுக்கள், வண்டுகள், லோகஸ்ட் என்னும் வெட்டுக்கிளிகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம். ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி வேப்பிலைச்சாறு வீதம் கலந்து தெளித்தால், பூச்சிகளின் உண்ணும் தன்மையைத் தடுத்துப் பயிர்களைப் பாதுகாக்கலாம்.

வேப்பங்கொட்டைக் கரைசல்

ஒரு ஏக்கர் நிலத்தில், பத்து கிலோ வேப்ப விதைகளை நன்கு தூளாக்கி 20 லிட்டர் நீரைச் சேர்த்து, ஒரு நாளைக்கு வைத்திருந்து வடிகட்டி, 200 லிட்டர் நீரைச் சேர்த்துக் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இதைத் தெளித்தால், பயிர்களைத் தாக்கும் கம்பளிப் புழுக்கள், அசுவினிகள், தத்துப் பூச்சிகள், வெட்டுக்கிளிகள், புகையான், இலைச்சுருட்டுப் புழுக்கள், ஆனைக்கொம்பன், கதிர்நாவாய்ப் பூச்சிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

வேப்பெண்ணெய் 3% கரைசல்

மூன்று லிட்டர் வேப்பெண்ணெய், 200 மில்லி ஒட்டும் திரவம் அல்லது காதி சோப், 200 லிட்டர் நீர் ஆகியவற்றைக் கலந்து பயன்படுத்தலாம். பயிர்களைத் தாக்கும் சாம்பல் நோய், மஞ்சள் வைரஸ் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இந்தக் கரைசல் உதவும். நிலக்கடலையைத் தாக்கும் துருநோய், இலைப்புள்ளி நோய் ஆகியவற்றைச் சிறந்த முறையில் கட்டுப்படுத்தும்.

வேப்பம் புண்ணாக்கு

வேப்பம் புண்ணாக்கில், தழைச்சத்து 5.2 சதம், மணிச்சத்து 1.1 சதம், சாம்பல் சத்து 1.5 சதம் உள்ளன. இந்தக் கரைசலைத் தெளித்தால், கத்தரியைத் தாக்கும் சல்லடை வண்டு எனப்படும் கத்தரி இலைகளைச் சுரண்டும் வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம். வேப்பம் பொருள்களைத் தெளித்துப் பூசண நோய்கள், பயறு வகைகளைத் தாக்கும் தண்டுப் புழுக்கள், காய்ப் புழுக்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

நொச்சி, வேப்பிலைக் கரைசல்

நொச்சித்தழை 5 கிலோ, வேப்பிலை 5 கிலோ ஆகியவற்றை ஒரு பானை நீரிலிட்டுக் கொதிக்க விட்டுக் கூழாக்கி, ஒருநாள் இரவு முழுவதும் வைக்க வேண்டும். பிறகு, இதை வடிகட்டி 100 லிட்டர் நீரில் கலந்து ஒரு ஏக்கரில் உள்ள நெற்பயிரில் தெளித்தால், இலைச்சுருட்டுப் புழுக்கள், குருத்துப் புழுக்கள், கதிர்நாவாய்ப் பூச்சிகள் கட்டுப்படும். இந்தத் தழைகளை அரைக்கும் வசதியிருந்தால், கொதிக்க வைக்கத் தேவையில்லை. இந்த இரண்டு வகை இலைகளையும் தனித்தனியாக அரைத்துப் பூச்சி விரட்டியாகப் பயன்படுத்தலாம்.

கடல்பாளை என்னும் எருக்கு

இருபது கிலோ எருக்கு இலைகளை அரைத்துச் சாற்றை எடுத்து 100 லிட்டர் நீரில் கலந்து ஒரு ஏக்கர் நெற்பயிரில் கைத்தெளிப்பான் மூலம் தெளித்தால், இலைப்புள்ளி நோய் மற்றும் குலை நோயைக் கட்டுப்படுத்தலாம். குலைநோய் அறிகுறி தோன்றியதும் இதைப் பயன்படுத்த வேண்டும். நோய் முற்றிய நிலையில், இந்தக் கரைசல் பயனைத் தராது.

பிற தாவரப் பூச்சி விரட்டிகள்

அரைத்த இரண்டு கிலோ எருக்கு இலைகள், 2 லிட்டர் கோமியம், 5 கிலோ வேப்பம் புண்ணாக்குத்தூள் ஆகியவற்றை 15 லிட்டர் நீரில் கலந்து ஒருவாரம் ஊறவைக்க வேண்டும். பிறகு, இதை வடிகட்டி நீரில் கலந்து தெளிக்கலாம். இது பூசணியைத் தாக்கும் சிவப்பு வண்டைக் கட்டுப்படுத்தும். 250 கிராம் உன்னியிலை, 250 கிராம் நொச்சியிலை, 250 கிராம் வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அரைக்க வேண்டும். இதை 5 லிட்டர் நீரில் கலந்து 5 நாட்கள் வைத்திருந்து வடிகட்டி நீரைக் கலந்து தெளித்தால், துவரையைத் தாக்கும் காய்ப்புழுக்கள் கட்டுப்படும்.

புங்கன் இலைகள் ஒரு கிலோ, உன்னியிலை ஒரு கிலோ எடுத்து 5 லிட்டர் கோமியத்தில் கலந்து இரண்டு நாட்கள் வைக்க வேண்டும். பிறகு, 200 லிட்டர் நீருடன் கலந்து 3 நாட்கள் வைத்திருந்து காதி சோப்பைக் கலந்து நெற்பயிரில் தெளித்தால், இலைச்சுருட்டுப் புழுக்கள், குருத்துப் பூச்சிகள் ஆகியன கட்டுப்படும்.

நூறு கிராம் பச்சை மிளகாய், 100 கிராம் பூண்டு ஆகியவற்றைப் பசையைப் போல அரைத்து 20 லிட்டர் நீரில் கலந்து வைத்துக் கொண்டு, தேவையான நீரைச் சேர்த்துத் தெளித்தால், கத்தரி, மிளகாய், தக்காளிச் செடிகளைத் தாக்கும் அசுவினி, இலைப்பேன்களைக் கட்டுப்படுத்தலாம்.

250 கிராம் பூண்டு, 250 கிராம் புகையிலையைக் கலந்து 2 லிட்டர் கோமியத்தில், இரண்டு நாட்கள் ஊறவைத்து வடிகட்டி நீருடன் கலந்து தெளிக்கலாம். இந்தக் கரைசல், சப்போட்டா, மா, கொய்யா, கத்தரி ஆகியவற்றைத் தாக்கும் மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஒரு கிலோ பூண்டு, 10 கிலோ வேப்பிலை, 500 கிராம் வேப்ப விதைகள் ஆகியவற்றைச் சேர்த்து அரைக்க வேண்டும். இதை 12 லிட்டர் நீரில் கலந்து மண்பானையில் கொஞ்சமாகக் கொதிக்க வைத்து வடிகட்டி, 60 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். இந்தக் கரைசல், பருத்திக்காய்ப் புழுக்கள், சிவப்புக் கம்பளிப் புழுக்கள், இலைப்பேன்கள், அசுவினிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

500 கிராம் பூண்டு, 250 கிராம் பச்சை மிளகாய், 250 கிராம் இஞ்சி ஆகியவற்றைப் பசையைப் போல அரைத்து, 500 மில்லி வேப்பெண்ணெய், 500 மில்லி புகையிலைக் கசாயம் ஆகியவற்றைக் கலக்க வேண்டும். பிறகு, 6 லிட்டர் கோமியத்தைக் கலந்து 3 நாட்கள் வைக்க வேண்டும். பிறகு, 60 லிட்டர் நீருடன் தேவையான அளவுக்கு காதி சோப்பையும் கலந்து தெளிக்கலாம். இந்தக் கரைசல், காய்கறிகளில் குருத்துப் புழுக்கள், இலைப்பேன்கள், வெள்ளை ஈக்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஐந்து சோற்றுக் கற்றாழை மடல்களை எடுத்துப் புறத்தோலை நீக்கி விட்டுப் பசையைப் போல அரைத்து 2 லிட்டர் நீரில் கலக்க வேண்டும். பிறகு, ஊற வைத்த 5 கிலோ நொச்சி இலைகளை அரைமணி நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி, இத்துடன் சோற்றுக் கற்றாழைக் கரைசலைச் சேர்க்க வேண்டும். இந்தக் கரைசலுடன், தேவையான அளவு நீர் மற்றும் காதி சோப்பைச் சேர்த்துத் தெளித்தால், காய்ப்புழுக்கள், குருத்துப் புழுக்கள், அசுவினிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

மூன்று கிலோ புகையிலையை அரைமணி நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி, இத்துடன் அரை லிட்டர் எருக்கு இலைச்சாறு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கலந்து தேவையான அளவு நீரைச் சேர்த்துத் தெளித்தால், இலைப்பேன், அசுவினி, வெள்ளை ஈ ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

ஏழு கிலோ நொச்சி இலைகளைத் தூளாக்கிச் சிறிதளவு புங்கன் அல்லது எருக்கிலையை அரைத்து, 4 கிலோ நெருஞ்சி முட்களைக் கலந்து 20 லிட்டர் நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, இதை வடிகட்டி நீருடன் கலந்து தெளித்தால், காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

500 கிராம் சீதாப்பழ விதைகளை ஒரு லிட்டர் நீரில் கலந்து அரைநாள் வைக்க வேண்டும். பிறகு, இதைக் கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். பிறகு, எருக்கிலைகளை அரைத்து நீருடன் கலந்து 250 மில்லி கரைசலைத் தயாரிக்க வேண்டும். இதைப் போல, 500 கிராம் புகையிலை ஒரு லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். அடுத்து, 250 மில்லி சாணக் கரைசலைத் தயாரிக்க வேண்டும். இந்த அனைத்துக் கரைசல்களையும் நீருடன் கலந்து தெளித்தால், காய்ப்புழுக்கள், அசுவினிகள், இலைப்பேன்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

இதுவரையில் கூறியுள்ள இயற்கை சார்ந்த தொழில் நுட்பங்களைக் கையாண்டால், பூச்சிகள் மற்றும் நோய்களைக் குறைந்த செலவில் சிறந்த முறையில் கட்டுப்படுத்தி, உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லாத வகையில் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யலாம்.


பூச்சி விரட்டிகள் Narayanan e1645014878842

ப.நாராயணன்,

வேளாண்மை அறிவியல் நிலையம்,

கீழ்நெல்லி,  திருவண்ணாமலை – 604 410.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!