உடல் வலிவை, உள்ளத் தெளிவைத் தரும் சதுரகிரிப் பயணம்!

சதுரகிரி sathuragiri

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர்.

சித்தர்கள் வாழும் சதுரகிரி போற்றி!
சுந்தர சந்தன மகாலிங்கம் போற்றி!
சீர்நவ ராத்திரி ஆனந்தவள்ளி போற்றி!
சமதைக் காவல் கருப்பண போற்றி!

செங்கை அருள்மிகு காமாட்சி ஏகாம்பரநாதர் தாள் வணங்கி ஆன்மிக அன்பர்கள் ஒன்று சேர்ந்து சதுரகிரியைக் கண்டு வர இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டோம்.

23.1.2015 சனிக்கிழமை இரவு புறப்பட்ட நாங்கள் மறுநாள் காலையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தை அடைந்தோம். அங்கு விடுதியொன்றில் தங்கிக் காலைக் கடன்களை முடித்துக் குளித்து விட்டுக் கோயிலுக்குச் சென்று, தேவேந்திரன் மகளான தெய்வயானையை முருகன் மணந்த மணக்கோலக் காட்சியைக் கண்ணாறக் கண்டு களித்தோம்.

பிறகு அங்கிருந்து திருவில்லிப்புத்தூருக்குச் சென்று கோதை ஆண்டாள் அவதாரத் திருத்தலத்தைத் தரிசித்தோம்; தமிழ்நாடு அரசின் இலச்சினையாகத் திகழும் கோதைக்கோயில் கோபுர அருமையைக் கண்டோம். அப்படியே வத்திராயிருப்புக்கு வந்து பகல் உணவை முடித்தோம்.

பின்னர், 2.30 மணிவாக்கில் சதுரகிரிப் பயணத்தின் தொடக்க இடமான தானிப்பாறைக்கு வந்து சேர்ந்தோம். அங்குத் தானிப்பாறை மேம்பாட்டுக் குழுவிடம் இரண்டு ரூபாயைச் செலுத்தி அனுமதிச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, நுழைவாயிலை, அதாவது, மூலிகை வனம் – தானிப்பாறை என்னும் வளைவைக் கடந்து பயணத்தைத் தொடங்கினோம்.

அங்கு வலம்புரியுமின்றி இடம்புரியுமின்றி துதிக்கையை உயர்த்தி ஆசி வழங்கிக் கொண்டிருந்தார் விநாயகர். இந்த ஆசீர்வாதப் பிள்ளையாரையும் வணங்கினோம். அடுத்து, அந்த அடிவாரச் சமவெளியில் காவல் தெய்வமாகக் குடியிருக்கும் பேச்சியம்மன் கருப்பண சாமியையும் கும்பிட்டு, குதிரைக் குத்திப்பாறை என்னும் வழுக்குப் பாறையைத் தாண்டி மலையில் ஏறினோம்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுமார் 2500 அடி உயரத்தைக் கொண்டதாகும். இது, சித்தர்கள் வாழும் பகுதி. இங்குள்ள மகாலிங்க ஈசனை இந்தச் சித்தர்கள் வணங்கிப் பேறு பெறுகின்றனர். அதனால் தான் இங்கு வரும் அடியார்களுக்கு ஈசன் அருளும், சித்தர்களின் ஆசியும், ஒருங்கே கிடைக்கும் அரிய வாய்ப்புக் கிட்டுகிறது. இது, இங்குக் குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

திசைகள் நான்கிலும் சூழ்ந்த மலைகளின் நடுவே, புனிதத்தலமாகச் சதுரகிரி திகழ்கிறது. காரணம், இந்தச் சதுரகிரி இங்குச் சதுர்வேதமாக உணரப்படுகிறது. சதுரகிரி வனம் பரந்த மூலிகை மணம் கமழ, தமிழ்நாடு அரசின் வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்தப் பின்னணியை, உடன் வந்த அன்பர்களிடம் கேட்டறிந்து, அத்தியூத்துக் குகைப்பாதை வழியாகக் கோணத்தலை வாசலை அடைந்தோம். இங்கே, வழிநெடுக சிறுசிறு குகைகள் உள்ளதாகக் கேள்விப்பட்டோம்.

அடுத்து, மலையேற்றத்தில் சிறு பாறைகளை அடுக்கி வைத்தது போல் இடைவெளிக் கற்கள், உயரமான படிகள், கூரான கற்கள், வழுக்கும் பாறைகள், நீளவாக்கில் சிதைந்த பாறைகள் உள்ளன. ஆங்காங்கே இவற்றைக் கடக்கக் காலணிகளும் கூட தேவைப்படுகின்றன. இலாவகமாகப் பாதங்களைப் பதித்துக் கோலை ஊன்றி மெதுவாக நடக்கும் போது சோர்வு ஏற்படுவதில்லை. இந்தப் பாதையினூடே நீரோடைகள் பலவற்றைக் காண முடிகிறது.

இவ்வாறு மலைப்பாதையில் மேலே செல்லும் போது, இடக்கைப் பக்கமாக 20 அடி கீழே இறங்கும் பாதையொன்று காணப்படுகிறது. இதைக் கோரக்கர் பாதையென்று கூறுகின்றனர். இங்கிருந்து மேலே சென்றால் அரிசிப் பாறையும் அதைக் கடந்தால் சிறு கோயிலொன்றும் இருக்கிறது. இங்கே இரட்டை லிங்கமாக அரியும் சிவனும் சேர்ந்து சங்கர நாராயணனாக உள்ள காட்சியைக் காண முடிகிறது. இதற்கு மேலேயுள்ள கொண்டை ஊசி வளைவைக் கடந்து சென்றால், சற்றுச் சமவெளியாக இருக்கிறது. இதை எளிமையாகக் கடந்து மேலே சென்றோம்.

இதற்கடுத்த கரடுமுரடான படிகளில் நடந்தபோது பைரவர் (நாய்) நமக்கு வழி காட்டியபடி வீறுநடை போட்டு முன்னே செல்லக் கண்டோம். அப்போது அந்தப் பாதையிலிருந்து சற்று விலகி வலப்புறமாக இருந்த சுனையைத் தாண்டி மேடான இடத்தில் பைரவ ஈசன் படிமமாக அகல் விளக்கு ஒன்று அங்கு ஒளிரக் கண்டோம். நமக்கு முன்னே சென்ற பைரவர், அந்தப் படிமத்தைச் சுற்றி வருவதைக் கண்டு வியந்தோம். பைரவர் கோயிலைப் பற்றி அன்பர் ஒருவர் விவரிக்க, அதைக் கேட்டபடி மேலே நடந்தோம். அங்கிருந்து சற்றுத் தொலைவு மேலே சென்றால், பலாவடிக் கருப்பசாமி திருக்கோயில் கொண்டு, வாளோடு காட்சியளிக்கிறார்.

மகாலிங்க தேவஸ்தானங்கள்: ஜெனரேட்டர் உள்ள பாதையை அடுத்து, மூன்று ஓடைகளைக் கடந்து சமவெளியில் பயணித்தால், சிமெண்ட் படிக்கட்டுகள் மற்றும் சிறு ஓடையினூடே வல இடமாகப் பாதைகள் பிரிகின்றன. வலப்புறம் அமைந்துள்ள சக்திப் பீடம், அறக்கட்டளை மடம், அன்னதானக் கூடம், பயணிகள் ஓய்வுக்கூடம், சமையல் கூடம் ஆகியவற்றைக் கடந்து மேலே நடந்தால், சுந்தர மகாலிங்கச் சன்னதியும், அதன் பின்புறம் நவராத்திரிக் கொலு மண்டபமும் உள்ளன.

இடப்புறமாக மேலே பயணிக்கும் போது, இரும்புத் தகட்டினால் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து படிகளில் ஏறிச் சென்றால், சந்தன மகாலிங்கர் சன்னதியை அடையலாம். சித்தர்கள் சன்னதி தனியாக உள்ளது.

சுந்தர மகாலிங்கம்: அகத்தியர் வழிபட்ட அழகிய சிறிய திருக்கோயிலில் சுந்தர மகாலிங்கம், சாய்ந்த நிலையில் எழிலுடன் காட்சியளிக்கிறார். அபிஷேகப் பிரியராகவும் அலங்காரப் பிரியராகவும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறார். சுந்தர மகாலிங்கம் ஏன் சாய்ந்த நிலையில் காட்சியளிக்கிறார்? இதன் பின்னணி என்ன? பச்சைமால் என்கிற சதுரகிரிவாசி, தன் பசுவின் மடியில் நேரடியாகப் பாலைக் குடித்த பரதேசிக்கோல ஈசனைப் பிரம்பால் அடிக்க, அந்த அடிகளைச் சாய்ந்த நிலையில் இருந்து அவர் பெற்றுக் கொண்டாராம். ஈசனின் இவ்வரிய திருவிளையாடல் லிங்க வடிவத்தையே இங்குச் சுந்தர மகாலிங்கமாகக் காண்கிறோம்.

சதுரகிரியில் இருந்து பொதிகை மலைக்கு அகத்தியர் புறப்பட்ட போது, அருகிலிருந்த சுந்தரானந்த முனிவர், மகாலிங்க வழிபாடுகளை முறையாகத் தொடர்ந்தமையால் சுந்தர மகாலிங்கமானார்.

சந்தன மகாலிங்கம்: சந்தனமரக் காடுகளிடையே சித்தர்கள் வழிபட்ட லிங்கம் சந்தன மகாலிங்கம். இந்தச் சன்னதியின் அருகில் பதினெண் சித்தர்கள் உருக்கொண்டு அருளும் சட்டநாதர் குகைக்கோயில் உள்ளது.

சக்திப் பீடம்: சித்தர்கள் மற்றும் ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இங்குள்ள அம்பிகை ஆனந்தவள்ளி, சக்திப் பீடமாக அமர்ந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கிறார். புரட்டாசி நவராத்திரியின் ஒன்பது நாட்களும் நேர்த்தியான அலங்காரம் பூண்டு காட்சி தரும் சக்தியின் சிறப்பைக் காண, பக்தர்கள் கூட்டம் அலைமோதுமாம். சதுரகிரி மலையிலுள்ள சிறப்பு வாய்ந்த இந்தத் திருக்கோயில்கள், தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

சதுரகிரி மலையேற்றம்: மலையேற்றம் என்பது, நம் உடல், உள்ள நலத்தை மேம்படுத்துவதுடன், இங்கு வரும் ஆன்மிக அன்பர்களோடு மனித நேயத்துடன் பழகுவதற்கும் வழிகோலுகிறது. அமாவாசை, பெளர்ணமி மற்றும் விடுமுறை நாட்களான, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், மாவட்ட, மாநில எல்லைகளைக் கடந்து பல்வேறு இடங்களில் இருந்து ஆன்மிக அன்பர்கள் இங்கு வருவதைக் காண முடிகிறது. ஒருமுறை இரண்டு முறை என்றில்லாமல், பத்துத் தடவைக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் அன்பர்களையும் காண முடிகிறது.

நீர்வளம் நிறைந்திருக்கும் சனவரி, பிப்ரவரி, அக்டோபர், நவம்பர் மாதங்கள் மற்றும் நவராத்திரி நாட்களில் ஆன்மிக பக்தர்களின் வருகை இங்கு அதிகமாக இருக்கிறது. அடிவாரத்தில் காலைச் சிற்றுண்டியை முடித்து விட்டு, ஏழு மணிக்கெல்லாம் புறப்பட்டால் பகல் ஒரு மணிக்கு மகாலிங்கத்தை அடைந்து விடலாம். அந்தி சந்தி வழிபாடுகளை முடித்து இரவில் ஓய்வெடுத்து விட்டு, அடுத்த நாள் காலை வழிபாட்டுக்குப் பின் இறங்கினால் பகல் ஒரு மணிக்குள் கீழே வந்து விடலாம்.

மிக மெதுவாக நடக்கும் முதியவர்கள் கூட, பிறரின் உதவியுடன் சதுரகிரிப் பயணத்தை மேற்கொள்ள முடியும். நடக்க இயலாதவர்களுக்கு டோலி வசதியும் இங்கு இருக்கிறது. டோலியைச் சுமப்பவர்களுக்குக் கூலியாக 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை கொடுக்க வேண்டியிருக்கும். இலகுவான கைப்பையுடன் டார்ச் லைட், பணம், தின்பண்டம், குடிநீர்ப்புட்டி என்று எளிமையாக வரும் அன்பர்களை இங்குக் காண முடிகிறது. நூறு ரூபாய்க் கூலிக்குச் சுமைகளைத் தூக்கி வருவோரிடம் உடைமைகளைக் கொடுத்து விட்டுக் கைவீசி நடப்பவர்களையும் பரவலாகக் காண முடிகிறது.

மலைமீது ஏறும் போது ஏற்படும் மேல் மூச்சு, படபடப்பு, வியர்வை, சோர்வு போன்றவற்றைக் களைய ஆங்காங்கே அமர்ந்து சற்று ஓய்வு பெறுவது அவசியமாகிறது. அந்த ஓய்வு நேரத்தில், குடிநீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்துவது நல்ல பயனை அளிக்கும். முழுவதுமாகக் குடித்தால் சிலருக்கு வாந்தி வர வாய்ப்புண்டு. அதுபோல், உடல் நிலைமையை அனுசரித்து, குளுக்கோஸ், இனிப்பு அல்லது உப்புக் கலந்த எலுமிச்சைச் சாறு, தேனீர், சுக்குமல்லி காபி, மொடக்கத்தான் மூலிகை சூப், நீர்மோர் எனவும் பயன்படுத்தலாம். இந்தப் பொருள்கள் பாதையின் நெடுகே உள்ள கடைகளில் கிடைக்கின்றன.

உடல் நலம் பேண மலையேற்றம் மிகவும் நல்லது. அன்றாடம் நடைப்பயிற்சியை மேற்கொள்வோர், அவர்களின் இல்லங்களில் உள்ள மாடிப்படிகளில் ஏறி இறங்கும் வழக்கத்தைக் கொண்டால் இம்மாதிரியான ஆன்மிக மலையேற்றம் எளிமையாகும்.

மலையிலுள்ள வசதிகள்: இங்கு வரும் பக்தர்கள் குடிக்க, குளிக்கத் தண்ணீர் வசதி உண்டு. சூரிய மின்வசதியும் ஜெனரேட்டர் வசதியும் இருப்பதால், இரவும் ஒளிமயமாக இருக்கிறது. இங்குள்ள அன்னதான அறக்கட்டளை மடங்களின் மூலமாக, அன்பர்கள் அனைவருக்கும் மூன்று வேளையும் அன்னம் வழங்கப்படுகிறது. கனிவுடன் நம்மை அழைத்து, போதும் போதும் என்று கூறும் வரை அவர்கள் உணவளித்து மகிழ்வதை அனுபவத்தில் கண்டோம்.

அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், நள்ளிரவில் வரும் அன்பர்களுக்கும் கூட முகம் கோணாது உணவு வழங்குவது கண்டு வியந்தோம். நாங்கள் இரவு 10.30 மணிக்குச் சென்று அவர்களை அணுகிய போது, முக மலர்ச்சியுடன் வரவேற்று உடனடியாக உணவைப் பரிமாறிப் பசியாற்றிய பாங்கு மிக அருமை. உணவை வழங்குவது மட்டுமின்றி, படுக்கை வசதிக்காகக் கோணிகளையும் இவர்கள் தருகின்றனர். தரையின் குளிர்ச்சி உடம்பைத் தாக்காமல் இருக்க, இந்தக் கோணிகள் அவசியப்படுகின்றன.

சதுரகிரி புனிதப் பயணப் பயன்கள்: மூலிகை வாசம் சூழ்ந்த மலை, மகாலிங்கசாமி திருக்கோயில்கள் மட்டுமின்றி, பதினெண் சித்தர்கள் வாழும் மலை என்பதால், உடல் வலிவும் உள்ளத் தெளிவும் கிடைக்கின்றன. பல்வகைப்பட்ட பண்பு நலன்கள், பழக்க வழக்கங்களைக் கொண்டு இங்கு வரும் அன்பர்கள் அனைவரையும், வயது, ஆண் பெண் பாகுபாடு கருதாமல் அன்பே சிவமாகக் காண முடிகிறது.

நம்மிடம் உள்ள குறைகளும் முரண்பாடுகளும் விலகுகின்றன. சதுரகிரித் திருத்தலப் பயணத்தை மேற்கொள்ளும் அன்பர்களின் வாழ்க்கைத் தரம் உன்னத நிலையை அடைகிறது.

சதுரகிரி ஈசா வாழி! சித்தர்கண மரபு வாழி! அடியார் குழாம் வாழி! வாழி சதுர கிரிஅணுக்கரே!


மரு.ப.குமாரசுவாமி, தண்டரை வைத்தியர், செங்கல்பட்டு.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!