முக்கியமான மூலிகைகள்!

மூலிகை mooligai

செய்தி வெளியான இதழ்: 2017 மே.

ந்தக் காலத்தில், லேசான தும்மல், தலைவலி, காய்ச்சல் என்றாலும் கூட, உடனே நவீன மருத்துவ மனையை நாடி ஓடுகிறோம். ஆனால், அந்தக் காலத்தில் யாருக்கு எந்த நோய் வந்தாலும், தாத்தா பாட்டிகளே மூலிகைகள் மூலம் குணப்படுத்தி விடுவார்கள். தலைவலி முதல் பிரசவம் வரையில் கை வைத்திய முறையிலேயே கவனிக்கப்பட்டன.

வேலை, பணம் தேடல் காரணமாகப் பிள்ளைகள் நகரங்களை நோக்கிச் சென்று விடுவதால், இன்றைய தாத்தாக்களும் பாட்டிகளும் ஊர்களில் முடங்கிக் கிடக்கிறார்கள். அதனால், பெரும்பாலான நகரத்து வீடுகள், மூலிகைக் கஷாயத்தைக் குடிக்க மறுக்கும் பேரப் பிள்ளைகளை ஓடிப் பிடித்துத் தூக்கி வந்து மடியில் வைத்துக் குடிக்க வைக்கும், தாத்தா பாட்டிகள் இல்லாத வீடுகளாகவே உள்ளன.

இந்தத் தாத்தா பாட்டிகள் தான் குழந்தைகளின் முதல் நல்லாசிரியர்கள். அவர்கள் சொல்லிக் கொடுக்கும் கதைகளும் பாடல்களும் தான் பிஞ்சுக் குழந்தைகளை நல்ல குடிமக்களாக உயர்த்தும் நீதிபோதனைப் பாடங்கள். எனவே, அவர்கள் பேரப் பிள்ளைகளின் அருகில் இருக்கும் நிலை உருவாக வேண்டும்.

அதைப் போலவே, ஒவ்வொரு வீட்டிலும் சிலவகை மூலிகைகள் வளர்க்கப்பட வேண்டும். உடல் நலம் காக்கும் அந்த மூலிகைகள் இருந்தால், எதற்கெடுத்தாலும் மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அத்தகைய 14 மூலிகைகளின் பயன்களைப் பற்றிப் பார்க்கலாம்.

துளசி

துளசியுடன் மிளகு, வெற்றிலை, வேப்பம் பட்டை ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலைகளைப் புட்டைப் போல அவித்து, இடித்துப் பிழிந்து சாறெடுத்து, தேனுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால், சளி குணமாகும். துளசி இலைகளைச் சாதாரணமாக மென்று தின்றால், செரிக்கும் சக்தியும் பசியும் அதிகமாகும்.

தூதுவளை

தூதுவளையுடன் மிளகைச் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளைப் பழங்களைக் காய வைத்து வற்றலாக்கி வதக்கிச் சாப்பிட்டால் கண் குறைகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் அதிகமாக இருப்பதால், எலும்பும் பற்களும் பலப்படும். அதனால், தூதுவளைக் கீரையுடன் பருப்பு, நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட வேண்டும்.

முட்கள் நிறைந்த தூதுவளைத் தண்டு, இலை, வேர் ஆகியவற்றை, நிழலில் 5 நாட்கள் காய வைத்துப் பொடியாக்கி, தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குறையும். காது மந்தம், நமைச்சல், பெருவயிறு மந்தம், மூக்கில் நீர்வடிதல், வாயில் அதிக நீர்ச்சுரப்பு, பல்லீறுகளில் நீர்ச்சுரப்பு, சூலை ஆகியவற்றுக்கும் தூதுவளைக் கீரை சிறந்தது.

சோற்றுக் கற்றாழை

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் இதற்குக் குமரிக் கற்றாழை என்னும் பெயருமுண்டு. சோற்றுக் கற்றாழையின் மேலுள்ள பச்சைத் தோலை நீக்கி விட்டு 7-8 முறை நன்கு கழுவ வேண்டும். பிறகு, ஒரு கிலோ கற்றாழைக்கு ஒரு கிலோ கருப்பட்டி வீதம் தட்டிப் போட்டு, நன்கு கிளற வேண்டும்.

கருப்பட்டித் தூள் கரைந்து பாகு பதத்துக்கு வந்ததும், அதனுடன் தோல் நீக்கப்பட்ட கால் கிலோ பூண்டைப் போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தயிர் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்துக்கு வந்ததும் எடுத்துப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, காலை, பகல், இரவு என, உணவுக்குப் பின் ஒரு தேநீர்க் கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், நீர்க்கட்டி, நீர் எரிச்சல், மாதவிடாய்ச் சிக்கல், மலட்டுத் தன்மை ஆகியன உடனே சரியாகும். இதை ஆண்களும் சாப்பிட்டால், சூடு தணிந்து உடல் வலுவாகும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி

ஞானத்துக்கு உரிய மூலிகை இது. இதைக் கீரையாகச் சாபிட்டால் கல்லீரல் வலுப்படும்.

பொன்னாங்கண்ணி

வயல் வெளிகளில் கொடுப்பை என்னும் பெயரில் விளையும் மூலிகை தான் பொன்னாங்கண்ணிக் கீரை. பொன் ஆகும் காண் நீ என்பதன் சுருக்கமே பொன்னாங்கண்ணி. உப்பைச் சேர்க்காமல், இதைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை கூர்மையாகும்.

நேத்திரப்பூண்டு

இதற்கு நாலிலைக் குருத்து, அருந்தலைப் பொருத்தி என வேறு பெயர்களும் உண்டு. இதன் இலைகளைத் தேங்காய் எண்ணெய்யில் போட்டு வெய்யிலில் ஐந்து நாட்கள் வைத்து வடிகட்டி, இரண்டு சொட்டுகள் வீதம் கண்களில் விட்டு வந்தால், தொடக்க நிலையிலுள்ள கண்புரை நோயைத் தடுக்கலாம்.

நிலவேம்பு

நிலவேம்புக்குச் சிறியாநங்கை என்னும் பெயருமுண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச் செடியைப் போல இருக்கும். கைப்பிடி சிறியாநங்கை இலைகளுடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். இந்த இலைகளை நிழலில் உலர்த்திக் காய வைத்துப் பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இதில், 30 கிராம் பொடியுடன் ஒரு லிட்டர் நீரைச் சேர்த்து, கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சிக் கஷாயமாகக் குடித்தால், தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிறன்றும் மாலையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்தக் கஷாயத்தைக் குடிக்கலாம். இதற்கு, ஞாயிற்றுக் கிழமை கஷாயம் என்னும் பெயரே உண்டு.

பூலாங்கிழங்கு

இது, கிச்சிலிக் கிழங்கு என்னும் பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்துப் பூசிக் குளித்தால், உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. பிள்ளைகளைக் குளிப்பாட்ட ஏற்றது.

ஓமவள்ளி

இதற்குக் கற்பூரவள்ளி என்னும் பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாற்றைக் காலையிலும் மாலையிலும் குடித்து வந்தால், தொண்டைச் சதை வளர்ச்சிக் குணமாகும். பருமனாக உள்ள இலைகளைப் பறித்து, பஜ்ஜியாகச் சுட்டுக் குழந்தைகளுக்குத் தரலாம்.

அறுகம்புல்

அறுகம்புல், வெற்றிலை, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தழுத்தம் கட்டுக்குள் வருவதுடன், இரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமாகும். இவையெல்லாம் தொட்டிகளில் வளர்க்கப்பட வேண்டும்.

ஆடாதொடை

எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையில் இருந்து தான் தயாராகின்றன. நூறு கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் நீரில் சேர்த்து, 125 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, இத்துடன் நூறு கிராம் வெல்லத்தைப் போட்டு மீண்டும் சூடேற்றி, பாகு பதத்தில் இறக்கிக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் இருமல் குணமாகும்.

கர்ப்பிணிகள், எட்டாம் மாதம் முதல் இதன் வேரைக் கஷாயமாக்கிக் குடித்து வந்தால் சுகப்பிரசவம் உறுதி. ஆடாதொடை இலைகளை நிழலில் காய வைத்துப் பொடி செய்து, காலை, மாலையில் பாலில் கலந்து குடித்து வந்தால், காரணமின்றி வரும் இரத்தழுத்தம், படபடப்பு ஆகியன குறையும்.

பூனைமீசை மற்றும் விஷ நாராயணி

இந்த இரண்டுமே நம்நாட்டு மூலிகையல்ல. இவற்றின் பூக்கள் பூனையின் மீசையைப் போலிருக்கும். பூனை மீசை இலைகளுடன், மிளகு மற்றும் பூண்டைச் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவில், காலை மாலையில் உணவுக்குப் பிறகு சாப்பிட்டால், சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறுகள், உப்புநீர் நோய் ஆகியன குணமாகும்.

நொச்சி

நீல நொச்சி, கருநொச்சி, வெள்ளை நொச்சி என, நொச்சியில் பல வகைகள் உண்டு. ஆனால், அனைத்திலும் உள்ள மருத்துவக் குணம் ஒன்று தான். நொச்சி இலையுடன் மஞ்சளைச் சேர்த்துக் காய்ச்சி ஆவி பிடித்தால், அனைத்துத் தலைவலிகளும் குறையும். அல்லது நொச்சி இலைகளைப் பறித்து நிழலில் உலர்த்தி, தலையணை உறைக்குள் போட்டுப் பரப்பித் தூங்கினால், ஒற்றைத் தலைவலி குறையும். தலைவலி மாத்திரை, தைலம் எதுவும் தேவையில்லை.

தழுதாழை

தழுதாழையை வாதமடக்கி இலை என்றும் கூறுவார்கள். இந்த இலைகளை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால், உடல்வலி குறையும். மூட்டுவலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்துக் கட்டினால் வலி குறையும். வீட்டில் ஒரு செடி இருந்தாலே போதும். இதன் வேர்கள் வேகமாகப் பரவிப் பக்கக் கன்றுகள் உருவாகி விடும்.


மருத்துவர் கோ.கலைச்செல்வி, உதவிப் பேராசிரியை, கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை – 600 007.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!