இயற்கை முறையில் கோழிப்பண்ணை அமைப்பு!

இயற்கை chickens

ற்போதைய சூழலில் பெரும்பாலும் கோழிகளை யாரும் வளர்ப்பதில்லை. கோழி வளர்ப்பு என்னும் பெயரில் கோழி உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது. கோழிப்பண்ணை என்றதும் நமக்குத் தோன்றுவது, கம்பி வலையால் சுற்றி வளைத்துக் கட்டப்பட்ட நான்கு சென்ட் கட்டடம், உள்ளே சில ஆயிரம் கோழிக் குஞ்சுகள், அவற்றுக்கு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட உணவுகள், ஆன்ட்டிபயாடிக் மருந்துகள், குஞ்சுகளைப் பொரிக்கவும் அவற்றுக்கு வெப்பம் தரவும் உதவும் சில மின் இயந்திரங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

சில இலட்சங்கள் இருந்தால் தான் இத்தகைய கோழிப் பண்ணையை அமைக்க முடியும். நாட்டுக் கோழிகளை ஒப்பிடும் போது, இப்படி வளர்க்கப்படும் பிராய்லர் எனப்படும் கறிக்கோழிகளிடம் ருசியும் இருப்பதில்லை, சத்தும் இருப்பதில்லை.

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் என்பது, நிலத்தில் விளையும் பொருள்களுடன் நின்று விடாமல், வளர்க்கும் கால்நடைகளிடமும் கொண்டு செல்லப்பட வேண்டும். வளர்ப்புச் செலவு குறைய வேண்டும், வளர்க்கப்படும் கோழி, உண்பவர்க்குப் பக்கவிளைவைத் தராத, சத்தான உணவாகவும் இருக்க வேண்டும்.

இந்த மூன்று இலக்கையும் அடைய விரும்பும் விவசாயிகளுக்காக, இயற்கை சார்ந்து அமைக்கப்பட்ட திட்டம் இது. இந்தத் திட்டத்திற்குள் செல்வதற்கு முன்பு, இயற்கையின் உயிர்ச் சுழற்சி, உணவுச் சங்கிலி, நீர்ச்சுழற்சி ஆகிய மூன்றையும் நன்கு புரிந்து கொள்வது அவசியம்.

உணவுச் சங்கிலி

இயற்கையின் உணவுச் சங்கிலியை நன்கு உற்று நோக்கினால், இந்த மண்ணில் வாழும் ஒவ்வொரு உயிரும், தன் உணவுக்காக இன்னொரு உயிரைத் தான் சார்ந்திருக்கும். அது தாவரமாகவும் இருக்கலாம், அல்லது வேறு உயிராகவும் இருக்கலாம்.

நீர்ச்சுழற்சி

இந்த பூமியில் மழை பெய்வதற்கான காரணம், மண்ணில் உயிர்களின் பெருக்கத்தை அதிகப்படுத்தவே. இயற்கையின் படைப்பை நன்கு கவனித்தால் தெரியும், மழைக் காலத்தில் தான் பூச்சிகளும், பறவைகளும், கண்ணுக்குத் தெரியாமல் மண்ணில் வாழும் நுண்ணுயிர்களும் அதிகமாகப் பெருகும். இந்த மண் ஈரமானால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

அப்படிக் கூடும் போது, அவற்றைச் சார்ந்திருக்கும் பூச்சி, புழு, சிறு தாவரங்கள், கரையான் என, பல்லுயிர்களின் பெருக்கம் நடக்கும். இதன் மூலம் உணவுப் பொருள்களின் விளைச்சலும் அதிகமாகும். இதனால், தாவர உணவைச் சார்ந்திருக்கும் பேருயிர்களும், அவற்றின் எண்ணிக்கையும் பெருகும்.

உயிர்ச் சுழற்சி

இந்த இரண்டு கூறுகளைக் கொண்டு பார்த்தால், ஒரு கோழி வளர்வதற்குத் தேவை மருந்தோ, குடிலோ, மின் இயந்திரமோ அல்ல; மற்றொரு உயிர் தான். வெளியில் மேயும் கோழி தனக்கு உணவாக எடுத்துக் கொள்வது, அங்குள்ள சிறு செடிகள், புழு, பூச்சிகளைத் தான்.

ஆகவே, சிறு செடிகள், பூச்சி, புழு, கரையான்களை அதிகரித்து விட்டால் கோழிக்கான உணவு கிடைத்து விடும். கோழியின் இந்த நேரடி உணவுகள் சார்ந்திருப்பது, மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் மற்றும் மண்ணின் ஈரத்தைத் தான். ஆக, அனைத்து உயிர்களின் வளர்ச்சிக்கும் தேவை நீர் மட்டுமே.

இயற்கைவழி கோழிப்பண்ணை

இயற்கைவழி கோழிப் பண்ணைக்கு நீர் மட்டுமே தேவை. அதைத் தவிர ஒரு ரூபாய்ச் செலவுகூட இருக்கக் கூடாது. ஒரு ஏக்கர் நிலத்தைச் சுற்றி, பன்னிரண்டு அடி உயரத்தில், பின்னப்பட்ட தென்னை ஓலைகளால் வேலியை அமைக்க வேண்டும்.

பின்பு நிலத்தில் முளைத்துக் கிடக்கும் செடி, கொடிகள், விவசாயக் கழிவுகள், குப்பை, கூளம் அனைத்தையும் சேர்த்துக் கால் அடி உயரத்துக்கு மூடாக்குப் போட வேண்டும். ஒரு ஏக்கரில் ஆங்காங்கே நீர்த் தெளிப்பான்களை வைத்துவிட வேண்டும். அடுத்து, இந்தத் தெளிப்பான்கள் மூலம் வாரத்திற்கு மூன்று முறை இரவு நேரத்தில் நிலத்தை ஈரப்படுத்த வேண்டும்.

மேலே கூறிய அனைத்தையும் செய்து இரண்டு வாரம் கழித்து 200 நாட்டுக் கோழிகளை நிலத்தில் விட வேண்டும். மூடாக்கு இருப்பதால் மண்ணில் எப்போதும் ஈரமும் இருக்கும். அதனால் நீர் அதிகமாகத் தேவைப்படாது. அதே நேரம் நுண்ணுயிர்கள் பெருகிக்கொண்டே இருக்கும். நுண்ணுயிர்கள் கூடக்கூட, மண்ணில் கிடக்கும் பொருள்கள் கொஞ்சம் கொஞ்சமாக மட்கத் தொடங்கும்.

அப்போது அதில், புழு, பூச்சி, கரையான்கள் உருவாகும். மேலும், மண் ஈரமாக இருப்பதால் சிறிய செடிகளும் வளர்ந்து கொண்டே இருக்கும். இப்போது, கோழிகளுக்குத் தேவையான உணவு இதிலிருந்து கிடைத்து விடும். கோழிக் கழிவுகளும் மண்ணுக்கு உரமாகிக் கொண்டே இருக்கும்.

இப்படி, இயற்கையின் உயிர்ச் சுழற்சி ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் விஷமற்ற உணவையும், நல்ல வருமானத்தையும் பெற முடியும். கோழிகளை நிலத்தில் விட்ட பிறகும் வாரத்திற்கு மூன்று முறை நிலம் முழுவதும் இரவு நேரத்தில் நீரைத் தெளிக்க வேண்டும்.

இது மழையைச் செயற்கையாகப் பெய்ய வைப்பது. இந்தச் சுழற்சியைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். மூன்று மாதத்திற்குப் பின்பு மாதம் 50 கோழிகளை விற்பனை செய்தால் கூட, பத்தாயிரம் ரூபாயை வருமானமாக எடுத்துவிட முடியும்.

அளவை மிஞ்சும் ஆன்ட்டிபயாட்டிக்

எல்லாச் சூழ்நிலைகளிலும், நோய்களை எதிர்த்து உயிர் வாழவும், உடல் எடையை அதிகரிக்கவும் கோழிகளுக்கு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் தரப்படுகின்றன. இதனால், ரெசிஸ்டண்ட் பாக்டீரியாக்கள், அதாவது, அந்த மருந்துகளை எளிதில் சமாளிக்கும் பாக்டீரியாக்கள் அதிகரிப்பதால், கோழிகளைத் தாக்கும் நோய்களின் வீரியம் பல மடங்கு பெருகுகிறது. இந்த நோய்களின் தாக்கம், அந்தக் கோழிகளைச் சாப்பிடும் மனிதர்களிடம் சங்கிலித் தொடரைப் போல நீள்கிறது.

மருந்தாகும் நாட்டுக்கோழி

வீட்டுக்கு வரும் உறவினர்க்குக் கொண்டைச் சேவல் விருந்தளித்து, கூடவே நலத்தையும் கொடுத்தனுப்பிய மரபு நம்முடையது. சளி, இருமல் வந்தாலே, மிளகு சேர்த்த நாட்டுக்கோழி இரசத்தை வைத்துக் கொடுத்து, நோய் நீக்கிய குடும்ப மருத்துவச்சிகள் அக்காலத்தில் ஏராளம். நாட்டுக்கோழிக் குழம்பும் சோறும் சாப்பிட்டு, வீரத்துடன் வாழ்ந்த மனிதர்கள் அப்போது அதிகம்.

தசைகளுக்குத் தெம்பைக் கொடுக்கவும், நரம்புகளுக்கு உரத்தை அளிக்கவும் நாட்டுக் கோழிகள் உதவுகின்றன. காமத்தைத் தூண்டும் உணவுப் பட்டியலில் நாட்டுக்கோழிக்கு நிச்சயம் இடமுண்டு. சுவாச நோய்களுக்கும் நாட்டுக்கோழி சிறந்த மருந்து. நாட்டுக்கோழியின் பயன்களை முழுமையாகப் பெற, கடைகளில் கிடைக்கும் மசாலாப் பொடிகளைத் தவிர்த்து, கைப்பக்குவத்தில் அம்மியில் அரைத்த மசாலா கலவையைப் பயன்படுத்துவது நல்லது.

கோழி நோய்களுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்

வெள்ளைக் கழிச்சல் நோய்: பத்துக் கோழிகளுக்குத் தேவைப்படும் மூலிகை பொருட்கள்: சீரகம் 10 கிராம், கீழாநெல்லி 50 கிராம், மிளகு 5 கிராம், வெங்காயம் 5 பல், மஞ்சள் தூள் 5 கிராம், பூண்டு 5 பல்.

சிகிச்சை: வெங்காயம் மற்றும் பூண்டை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். சீரகம் மற்றும் மிளகை இடித்துக்கொள்ள வேண்டும். பிறகு மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து வைத்துக்கொண்டு, தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து கொடுக்க வேண்டும். மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்குச் சிறு சிறு உருண்டைகளாக உட்செலுத்த வேண்டும்.

கழிச்சல் நோய்: பத்துக் கோழிகள் அல்லது ஐந்து வான்கோழிகளுக்குத் தேவையானவை: சீரகம் 10 கிராம், கசகசா 5 கிராம், மிளகு 5 கிராம், வெந்தயம் 5 கிராம், மஞ்சள் தூள் 5 கிராம், பெருங்காயம் 5 கிராம்.

சிகிச்சை: மேற்கண்ட பொருள்களை கருக வறுத்து இடித்துக் கொள்ள வேண்டும். இக்கலவையைத் தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து கொடுக்க வேண்டும்.

கோழி அம்மை நோய்: தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருள்கள்: சீரகம் 20 கிராம், துளசியிலை 50 கிராம், வேப்பிலை 50 கிராம், சூடம் 5 கிராம், மஞ்சள் தூள் 10 கிராம், பூண்டு 10 பல்.

சிகிச்சை 1: மேற்கண்ட பொருள்களை நன்கு அரைத்து அக்கலவையுடன் விளக்கெண்ணெய் 100 மில்லி, வேப்ப எண்ணெய் 100 மில்லியைச் சம அளவில் கலந்து லேசாக வெதுப்பி, பாதிக்கப்பட்ட இடங்களில் பூச வேண்டும்.

சிகிச்சை 2: பத்துக் கோழிகளுக்குத் தேவையான பொருள்கள்: சீரகம் 10 கிராம், துளசியிலை 10, வேப்பிலை 10, மிளகு 5, மஞ்சள் தூள் 5 கிராம், பூண்டு 5 பல். மிளகை இடித்து மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து இக்கலவையைத் தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து கொடுக்க வேண்டும். மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்குச் சிறு சிறு உருண்டைகளாக உள்ளே செலுத்த வேண்டும்.

முதலீடில்லா வருமானம்

ஆண்டுக்கு மூன்று முறை குப்பைகளை அதிகப்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். இதற்கு எந்தச் செலவும் ஆகாது, விவசாயிகள் வீணாக எரிக்கும் இலை தழைகளைக் கொண்டு வந்து வயல் முழுதும் பரப்பி விடலாம். இந்த முறையில் கோழிகளை வளர்ப்பதற்கு, வேலியமைக்கவும், நீர்த் தெளிப்பான்களை அமைக்கவும் மட்டுமே செலவாகும்.

அதுவும் ஒரே முறை தான். தீவனச்செலவு எதுவும் இல்லை; மின் இயந்திரங்கள் தேவையில்லை. இயற்கையாக வளர்ந்த, நஞ்சே இல்லாத கோழிகள் கிடைத்து விடும். நீர் மட்டுமே இங்கு முதலீடு. கோழிகளின் எண்ணிக்கை மட்டும் கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அனைத்துக் கோழிகளுக்கும் போதுமான அளவில் உணவு கிடைக்கும்.

ஆகவே, இயற்கைவழி விவசாயம் எவ்வளவு சாத்தியமோ, அதைப்போல இயற்கைவழி கோழிப்பண்ணையும் சாத்தியமே. இயற்கையிடமிருந்து எடுத்துக் கொள்வதற்காக மட்டுமே உயிர்கள் இங்கே படைக்கப்பட்டுள்ளன. அந்த இயற்கைக்கு அதனிடமிருந்து பெற்றதைத் தவிர, வேறு எதையும் நாம் கொடுக்கத் தேவையில்லை.

இதை உணர்ந்து, வருமான நோக்கோடு மட்டுமல்லாமல், சமூக அக்கறையோடும் விவசாயிகள் செயல்பட்டால், அவர்களுடன் சேர்ந்து சமுதாயமும் வளம் பெறும் என்பதில் ஐயமில்லை.


இயற்கை Dr. Elamaran

மரு.அ.இளமாறன், கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு 614 625, தஞ்சாவூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!