கிழங்கு அவரை சாகுபடி!

கிழங்கு அவரை mexican radish

கிழங்கு அவரை (பாச்சிரிஹிஸ்) ஜிக்காமா அல்லது மெக்ஸிகன் முள்ளங்கி என அழைக்கப்படும். இது, பேசியே குடும்பத்தைச் சார்ந்த பட்டாணி வகைத் தாவரம். இதன் பிறப்பிடம் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கா ஆகும். இது, 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆசியா மற்றும் ஸ்பானிஷில் பயிரிடப்பட்டது.

இந்தியாவில், மேற்கு வங்கம், அசாம், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இதில், பா.எரோஸா, பா.அஸ்பிரியாபா, பியூரரோஸா, பா.பெருஜூனியஸ், பா.மனாமனஸிஸ் ஆகிய வகைகள் அதிக மகசூலைத் தரவல்லவை. இந்தக் கிழங்கு, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதிலிருந்து, சிப்ஸ், ஊறுகாய், சாலட், ஜூஸ் ஆகியவற்றைத் தயாரிக்கலாம்.

இதன் பூக்கள் நீலம் மற்றும் வெளிர் நிறத்தில் இருக்கும். கொடியானது 4-5 மீட்டர் நீளம் இருக்கும். வேர்கள் 2 மீட்டர் வரை வளரும். கிழங்குகள் 2-2.5 கிலோ இருக்கும். பனியற்ற மிதமான தட்பவெப்ப நிலையில் கிழங்குகளை விதைக்க வேண்டும். இந்தக் கிழங்குகளை அனைத்துச் சூழ்நிலையிலும் பயன்படுத்த இயலாததால், வணிகர்கள் மற்றும் விவசாயிகள் பெரும்பாலும் விதைகளைப் பயன்படுத்துகின்றனர்.

இதன் விதையானது 7.5-15 செ.மீ. நீளம், 1.5 செ.மீ. அகலத்தில் இருக்கும். ஒரு காயில் 4-12 விதைகள் இருக்கும். அவை வட்ட மற்றும் சதுர வடிவில் ஊதா பழுப்பு மற்றும் மஞ்சள் கலந்த வெளிர் நிறத்தில் இருக்கும். இந்த விதைகளில், ஈரப்பதம் 3.7 சதம், புரதம் 26.2 சதம், எண்ணெய் 20 சதம், கார்போஹைட்ரேட் 7.0 சதம், நார்சத்து மற்றும் சாம்பல் சத்து 3.6 சதம் இருக்கும்.

மேலும், முதிர்ந்த விதைகளில் சிறியளவில் உள்ள நச்சுத் தன்மைமிக்க ரொட்டினோனன் என்னும் பொருள் பூச்சி விரட்டித் தயாரிப்பில் பயன்படுகிறது. மேலும், இவ்விதையில் இருந்து கிடைக்கும் எண்ணெய், பருத்தி எண்ணெய்யைப் போல் உள்ளதால் உணவில் பயன்படுகிறது. இந்தக் கிழங்கு அவரைச் செடியில் இருந்து பெறப்படும் கொடி, கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுகிறது. ஒருசில நாடுகளில் இந்த அவரை 50 சதம் பூத்தலில் இருக்கும் போது தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இது, வண்டல் மற்றும் மிதமான ஈரப்பதமுள்ள மண்ணில் நன்கு வளரும். இந்தியாவில் ஜூன் ஜூலையில், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், அசாம் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இராஜேந்திர மிஷிரிகன்ட் 1 என்பது, மேம்படுத்தப்பட்ட புதிய கிழங்கு அவரை இரகமாகும். ஒரு எக்டரில் 50-70 கிலோ விதைகளை விதைக்கலாம். 75×25 செ.மீ. அல்லது 50 செ.மீ. இடைவெளியில், குழிக்கு 3-5 விதைகள் வீதம் விதைக்க வேண்டும்.

இது, மக்காச்சோளம் மற்றும் சோயாபீன்சில் ஊடுபயிராக இடப்படுகிறது. உரத்தைப் பொறுத்தவரை எக்டருக்கு NPK 300 முதல் 450 கிலோவும், பற்றுக் கொடிவிடும் பருவத்தில் 200 கிலோ அம்மோனியம் சல்பேட்டும் இடப்படும். அதிக விதைகளைப் பெற, நுனிகளைக் கிள்ளி விடுதல் வேண்டும். விதைத்து 5-8 மாதங்களில் கிழங்குகளையும், 10 மாதங்களில் விதைகளையும் அறுவடை செய்யலாம்.

மனிதர்கள் மூலம் எனில் வெட்டியும், பெரியளவில் என்றால் அறுவடை இயந்திரம் மூலம் உழுதும் கிழங்குகளை அறுவடை செய்யலாம். கொடிகளை நீக்கிய கிழங்குகள் மட்டுமே சந்தைக்கு அனுப்பப்படும். அறுவடை செய்த 24 மணி நேரத்தில் இந்தக் கிழங்குகள் வெளிர் நிறத்திலிருந்து ஊதா மற்றும் பழுப்பு கலந்த நிறத்துக்கு மாறும். இதைத் தடுக்க, 9-10 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில், இருளில், கிழங்குகளைச் சேமித்து வைக்க வேண்டும்.

நூறு கிராம் கிழங்கில், நீர் 82.4-87.8 சதம், புரதம் 1.5-2.4 சதம், கொழுப்பு 0.09-1.3 சதம், கார்போஹைட்ரேட் 10.6-14.9 சதம், நார்ச்சத்து 0.6-0.7 சதம், சாம்பல் சத்து 0.5 சதம், கால்சியம் 16-18 மி.கி., இரும்புச்சத்து 0.8-1.9 மி.கி., தையமின் 0.05-0.1 மி.கி., ரிபோபிளேவின் 0.02-0.03 மி.கி., நியாசின் 0.2-0.3 மி.கி., அஸ்கார்பிக் அமிலம் 14-21 மி.கி. இருக்கும்.

இந்தக் கிழங்குகள் சாதாரணமாக, 10-15 செ.மீ. விட்டத்தில், 2-2.5 கிலோ எடையில் வெளிர் நிறமாக இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும். அப்போது தான், மென்மையாக, நீர்ச்சத்து மற்றும் இனிப்புச் சுவையுடன் இருக்கும். இந்த நிலையில் அறுவடை செய்யா விட்டால் கிழங்குகள் 30 செ.மீ. விட்டமுள்ள கிழங்குகளாக மாறிவிடும். அப்போது 5-18 கிலோ விதைகள் கிடைக்கும். இத்தகைய கிழங்குகளை அதிகமாகச் சந்தைப்படுத்த முடியாது.

எனவே, கிழங்கின் எடை 2-2.5 கிலோ இருக்கும் போதே அறுவடை செய்வது நல்லது. இந்தக் கிழங்கு, இலத்தின், அமெரிக்கா, கரீபியன் ஆகிய நாடுகளில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சற்று அதிகமாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் இந்தக் கிழங்கு அவரை, சிறியளவில் பயிரிடப்படுவதால், இதன் பொருளாதார முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. கிழங்கு அவரையானது எதிர் காலத்தில், உருளைக் கிழங்கு, மரவள்ளி மற்றும் இதர கிழங்கு உணவுப் பயிர்களுக்கு மாற்றுப் பயிராகவும் மற்றும் அதன் விதைகள் நல்ல பூச்சி விரட்டியாகவும் பயன்படும்.


கிழங்கு அவரை ARULMOORTHY e1709365410786

கி.அருள் மூர்த்தி,

வே.மனோன்மணி, .கவிதா, இரா.விக்னேஸ்வரி,

விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்துர் – 641 003.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!