பன்றிப் பண்ணை அமைவிடம்!

பன்றி pig

சுத்தம், சுகாதார முறையில் வெண்பன்றிகளை வளர்த்திட, நல்ல காற்றோட்டம் உள்ள மேட்டுப் பகுதியில் பண்ணையை அமைக்க வேண்டும். பண்ணையை அமைப்பதற்கு முன் இதுகுறித்துத் தீர ஆய்வு செய்ய வேண்டும்.

வெண் பன்றிகளின் பிறப்பிடம் குளிரான பகுதி என்பதால், தட்பவெப்ப மாற்றங்களால், பன்றிகள் அயர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. எனவே, வானிலை மாற்றம், நோய்த் தாக்கம், ஒட்டுண்ணிகளின் தாக்கம் இல்லாமல், எளிய முறையில் பன்றிகளைப் பராமரிக்கப் போதுமான இடவசதி மற்றும் உபகரணங்களுடன் பன்றிக் கொட்டிலை அமைக்க வேண்டும்.

பண்ணை அமைவிடம்

அதிக ஈரம், அதிகக் காற்றோட்டம், அதிக வெப்பம் பண்ணையில் இருக்கக் கூடாது. மழைநீர்த் தேங்கக் கூடாது. போக்குவரத்து வசதி, மின்சாரம், குடிநீர் வசதி மற்றும் போதிய வேலையாட்கள் கிடைக்க வேண்டும். மக்கள் வாழும் பகுதியில் இருந்து குறைந்தது 25 மீட்டர் தொலைவில் பன்றிப் பண்ணையை அமைக்க வேண்டும்.

கோழிப்பண்ணையில் இருந்து குறைந்தது நானூறு அடி தொலைவில் பன்றிப் பண்ணை அமைய வேண்டும். மற்ற கால்நடைப் பண்ணைகளில் இருந்து ஐம்பது மீட்டர் தொலைவிலும், இறைச்சிப் பதன ஆலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் பன்றிப் பண்ணையை அமைக்க வேண்டும்.

கொட்டிலுக்குள் வசதிகள்

அங்கே, பன்றிகளுக்குத் தேவையான இடவசதி, தீவனத்தொட்டி மற்றும் குடிநீர்த் தொட்டிகள் தேவைக்கு ஏற்ப இருக்க வேண்டும். அங்குள்ள சினைப்பன்றிகள், தாய்ப்பன்றிகள், கிடாப்பன்றிகள், வளரும் பன்றிகள், இறைச்சிக்காக வளர்க்கப்படும் பன்றிகள் மற்றும் அவற்றின் வயதுக்கு ஏற்ப, தனித்தனிப் பிரிவுகளை அமைக்க வேண்டும்.

நோயுற்ற பன்றிகளுக்கு சிகிச்சையளிக்கவும், பண்ணைக்குக் கொண்டு வரும் புதிய பன்றிகளைத் தற்காலிகமாகச் சில நாட்கள் தனியாகப் பராமரிக்கவும் தேவையான அறை வசதிகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவுக்கும் 5-10 அறைகள் இருப்பது நல்லது.

இடவசதி

பன்றிக் குட்டிகள் மிக விரைவாக வளரும் என்பதால், அவற்றுக்குப் போதுமான வசதி கொட்டிலில் இருக்க வேண்டும். ஒரு தாய்ப்பன்றிக்கு, கூரைப் பகுதிக்குள் 8-9 ச.மீ., திறந்த வெளியில் 8-9 ச.மீ. இடவசதி இருக்க வேண்டும்.

கிடாப்பன்றிக்கு, கூரைக்குள் 6-7 ச.மீ., திறந்த வெளியில் 6-7 ச.மீ. இடவசதி இருக்க வேண்டும். தாயிடம் இருந்து பிரிந்த இளம் பன்றிக்கு, கூரைக்குள் 1-2 ச.மீ., திறந்த வெளியில் 1-2 ச.மீ. இடவசதி இருக்க வேண்டும். வெற்றுப் பன்றிக்கு, கூரைக்குள் 2-3 ச.மீ., திறந்த வெளியில் 2-3 ச.மீ. இடவசதி இருக்க வேண்டும்.

வெண்பன்றிக் கொட்டிலைத் தரமான சிமெண்ட் கட்டடமாகக் கட்டினால், பல ஆண்டுகள் பராமரிப்புச் செலவின்றிப் பண்ணையை நடத்தலாம். குறைந்த செலவில் சிக்கனமாகப் பண்ணையை நடத்த விரும்பினால், அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் மலிவான பொருள்களை வைத்துக் கொட்டிலை அமைக்கலாம்.

கொட்டில் தரை சொரசொரவெனச் சிமெண்ட்டால் அமைக்கப்பட வேண்டும். தரையில் விழும் நீர் பளிச்சென வெளியேறுவதற்கு ஏற்ற வடிகால் இருக்க வேண்டும். இதற்குத் தரையைச் சரிவாக அமைக்க வேண்டும்.

கூரையமைப்பு

கொட்டில் கூரையை ஆஸ்பெஸ்டாஸ், அலுமினியத் தகடு, துத்தநாகத் தகடு, தென்னையோலை, பனையோலை போன்றவற்றால் அமைக்கலாம். சிமெண்ட் அட்டைகளால் கூரையை அமைத்தால், அவற்றின் மேற்புறம் வெள்ளைடித்து அல்லது வைக்கோலைப் பரப்பி, கொட்டிலுக்குள் வெப்பம் தாக்காமல் தடுக்கலாம். வேம்பு, புங்கன் போன்ற மரங்களைப் பண்ணையைச் சுற்றி வளர்க்கலாம்.

குளிர்ச்சி தரும் முறைகள்

பன்றிகளுக்குக் குளியல் தொட்டிகளை அமைக்கலாம். வெப்பம் கடுமையாக இருந்தால், நீர்த்தெளிப்பான் மற்றும் காற்றை வெளியேற்றும் மின்விசிறிகள் மூலம், பண்ணை வெப்பத்தைக் குறைக்கலாம். சணல் சாக்குகளை நீரில் நனைத்துக் கொட்டிலின் பக்கச் சுவர்களில் தொங்க விடலாம்.

இனப்பெருக்கப் பண்ணைகளில் குளிர்சாதனப் பெட்டிகளைப் பன்றிகளின் அறைகளில் பொருத்துகின்றனர். இவ்வகையில், சுமார் 150 சதுரடிப் பன்றி அறைக்கு 1.5 டன் குளிர்சாதனப் பெட்டிப் போதுமானது.

பிறந்த குட்டிகளுக்கான அமைப்பு

பிறந்த குட்டிகளால் அதிகமான குளிரைத் தாங்க முடியாது. இதனால் குட்டிகள் அதிகளவில் இறக்க நேரிடும். எனவே, இதிலிருந்து குட்டிகளைப் பாதுகாக்க, நான்கு அல்லது ஐந்து 200 வாட் மின்சார விளக்குகளைக் கொட்டிலில் எரியவிட வேண்டும்.

அந்த அறையில் 80 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருக்க வேண்டும். ஒருவாரக் குட்டிகளுக்கு வெப்பம் மிகவும் அவசியம். மழைக்காலத்தில், கொட்டிலின் பக்கவாட்டில் பாய்கள் அல்லது கோணிப் பைகளைத் தொங்க விடலாம்.

குட்டிகளுக்கெனத் தனித் தீவனத்தொட்டி இருக்க வேண்டும். ஏனெனில், வளரும் குட்டிகளுக்குச் சத்துகள் மிகுந்த அடர் தீவனம் அவசியமாகும்.

பன்றிகளின் அறைகள்

கொட்டிலில் பன்றிகளுக்கு எனத் தனித்தனி வளர்ப்பு அறைகள் இருக்க வேண்டும். இந்த அறைகள் இரண்டு வரிசையில் எதிரெதிராக இருப்பது நல்லது.

இந்த இரண்டு வரிசைக்கும் இடையில் போதியளவில் நடைபாதை இருக்க வேண்டும். ஒரு பன்றிக்குப் பத்துச் சதுரடிப் பரப்புக் கூரைப் பகுதியிலும், அதே பரப்பு வெளியிலும் இருக்க வேண்டும்.

கூரைக்குள் உள்ள இடம் 2.5 அடி உயரமுள்ள சுற்றுச் சுவருடன் இருக்க வேண்டும். அதற்கு மேல் 20 செ.மீ. இடைவெளி விட்டு, 4.5 அடி வரையில் இரும்புக் குழாயைப் பொருத்த வேண்டும்.

திறந்த வெளியில், ஓரடி சுற்றுச்சுவர், அதன்மேல் 4.5 அடி உயரம் வரை, இரும்புக் குழாயைப் பொருத்த வேண்டும். கொட்டிலின் வெளியில் 4 அங்குல ஆழம், 6 அங்குல அகலத்தில் வடிகால் இருக்க வேண்டும்.

அறை வாசல்களில் 2.5 அடி அகலம், 3.5 அடி உயரமுள்ள கதவுகளை அமைக்க வேண்டும். தீவனம் மற்றும் குடிநீர்த் தொட்டிகளை, நடைபாதை அருகில் அல்லது திறந்தவெளி சுற்றுச்சுவர் அருகில் அமைக்கலாம்.

சினைப் பன்றிகள் ஈனுவதற்கு என இரண்டு அறைகளை ஒதுக்க வேண்டும். இந்த அறைகளில் குட்டிகளுக்கான பாதுகாப்புக் கம்பிகள், சுற்றுச்சுவரில் இருந்து 15 அங்குலம் தள்ளி, 20-25 செ.மீ. உயரத்தில் அமைக்கப்பட வேண்டும்.

இதனால், தாய்ப்பன்றிகள் புரண்டு படுக்கும் போது, குட்டிகள் பாதுகாப்பாகக் கம்பி அமைப்புக்கு அடியில் சென்று விடும். தீவனத்தொட்டி, நீர்த்தொட்டி அனைத்து அறைகளிலும் இருக்க வேண்டும்.

குளியல் தொட்டி

பன்றிகளின் உடலில் வயர்வைச் சுரப்பிகள் மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே, அதிக வெப்பமுள்ள பகுதிகளில் உள்ள பன்றிகள் கடும் வெப்பத் தாக்கத்துக்கு உள்ளாகும்.

இதிலிருந்து பன்றிகள் மீள, கொட்டிலுக்கு அருகில் குளியல் தொட்டியை அமைக்க வேண்டும். இதில் முக்கால் பகுதிக்கு நீர் இருந்தால் பன்றிகள் உருண்டு புரள ஏதுவாக இருக்கும்.

பன்றிகளின் இருப்புக்கு ஏற்பத் தொட்டியை அமைக்க வேண்டும். பொதுவாக நூறு சதுரடியில் குளியல் தொட்டி இருந்தால் போதும். ஒருபுற ஆழம் 10 செ.மீ., மறுபுற ஆழம் 75 செ.மீ. இருக்கும்படி சரிவாகத் தொட்டியை அமைக்க வேண்டும்.

பிற வசதிகள்

பன்றிக் கொட்டிலில் பன்றிகளின் வளர்ச்சி மற்றும் விற்பனை செய்யும் பன்றிகளை எடைபோடும் மேடை இருக்க வேண்டும். பன்றித் தீவனம் தயாரிக்கத் தேவைப்படும் அரவை இயந்திரம், கலக்கும் இயந்திரம் போன்றவற்றைக் கொண்ட கிடங்கு இருக்க வேண்டும்.

தயாரிக்கும் தீவனம், வெய்யில், மழையில் பாதிக்காமல் இருப்பதற்கான தீவன இருப்பறையை அமைக்க வேண்டும்.

விற்பனை செய்யும் பன்றிகளை வண்டிகளில் ஏற்றவும், புதிய பன்றிகளைப் பண்ணையில் இறக்கவுமான, ஏற்றி இறக்கும் வசதி இருக்க வேண்டும்.

பன்றிக் கொட்டிலில் இருந்து 15 மீட்டர் தொலைவில், சாணக்குழியை அமைக்க வேண்டும்.


பன்றி Dr Kumaravel

முனைவர் பா.குமாரவேல், முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!