தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி சாகுபடி!

தர்ப்பூசணி சாகுபடி WATERMELON

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023

ர்ப்பூசணியின் தாவரவியல் பெயர் சிட்ருலஸ் லெனட்ஸ். இது, குகர்பிட்டேசியே என்னும் பூசணிக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் பிறப்பிடம் தென்னாப்பிரிக்கா ஆகும். தர்ப்பூசணியில் 91 சதம் நீர், 6 சதம் சர்க்கரை, தையமின், ரிப்போப்ளோவின், நியாசின் மற்றும் தாதுப்புகளான பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, சோடியம், தாமிரம் ஆகியன உள்ளன. இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள், புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் மிக்கவை. மாரடைப்பு, பக்கவாதம் வராமலும் தடுக்கும்.

ஏற்ற காலநிலை

தர்ப்பூசணி சாகுபடிக்கு, ஜனவரி – மார்ச் காலம் ஏற்றதாகும். நல்ல வெய்யில், காற்றில் ஈரத்தன்மை உள்ள தட்ப வெப்பநிலை பயிர் செய்ய ஏற்றது.  குறைந்த வெப்ப நிலையில் விதைகள் முளைப்பது குறைவாக இருக்கும்.  காய்கள் பழமாக மாறும் போது, அதிக வெப்பநிலை இருந்தால் பழங்களில் இனிப்புத் தன்மை அதிகமாகும். பனி பெய்தால் பயிரின் வளர்ச்சியானது தடைபடும். 

தர்ப்பூசணிக்குக் குறைந்த வெப்பநிலை ஏற்றதல்ல. வளர்ச்சிப் பருவத்தில் 18-35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்க வேண்டும். இந்த வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்கு மேல் கூடினாலும், 10 டிகிரி செல்சியசுக்குக் கீழே வந்தாலும் பயிரின் வளர்ச்சியானது குறையும்.

ஏற்ற மண்வகை

உவர்ப்பு நிலம் இதன் சாகுபடிக்கு ஏற்றதல்ல. மணல் கலந்த இருமண் நிலத்தில் நன்கு வளரும். களிமண்ணில் சாகுபடி செய்வதைத் தவிர்க்கலாம், ஆனால், நல்ல வடிகால் வசதி இருந்தால் சாகுபடி செய்யலாம். மண்ணின் அமில காரநிலை 5.8-6.6 இருக்கலாம். தமிழ்நாட்டில், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் தர்ப்பூசணி பயிரிடப்படுகிறது. 

இரகங்கள்

தர்ப்பூசணியில், நியூ ஹாம்ஷயர், மிட்ஜெட், சுகர் பேபி, அஷாஹஜயமாடோ, பெரியகுளம் 1, அர்காமானிக், அர்கா ராஜஹன்ஸ், துர்காபுரா மீதா, கேசர், அர்காஜோதி, பூசா பேதனா, அம்ருத் ஆகிய இரகங்கள் உள்ளன.

பருவம்

ஜனவரி, பிப்ரவரியில் விதைத்து, கோடைக் காலத்தில் அறுவடைக்கு வரும் பழங்களுக்கு அதிக விலை கிடைக்கிறது. இதைத்தவிர, ஜுன், ஜூலையிலும் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 3-4 முறை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், எக்டருக்கு 30 டன் மட்கிய தொழுவுரத்தை இட வேண்டும். பின்பு, 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ. அகலத்தில் வாய்க்கால்களை அமைக்க வேண்டும். இவற்றின் உட்புறம் ஒரு மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ. நீள, அகல, ஆழமுள்ள குழிகளை எடுக்க வேண்டும். இக்குழிகளில் சம அளவில் மேல் மண் மற்றும் தொழுவுரத்தைக் கலந்து இட வேண்டும். மேலும், இராசயன உரங்களையும் கலந்து இட வேண்டும்.

விதையும் விதைப்பும்

ஒரு எக்டரில் விதைக்க 3-4 கிலோ விதைகள் தேவைப்படும். குழிக்கு 4-5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். நட்ட ஒரு வாரத்தில் விதைகள் முளைத்து வந்ததும், நல்ல நிலையில் உள்ள செடிகளை, குழிக்கு இரண்டு வீதம் விட்டு விட்டு, மற்றவற்றை அகற்றி விட வேண்டும். 

சத்து மேலாண்மை

எக்டருக்கு 2 கிலோ அசோஸ்பயிரில்லம், 2 கிலோ பாஸ்போபாக்டீரியா வீதம் எடுத்து, மட்கிய 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து இட வேண்டும். மேலும், 100 கிலோ வேப்பம் புண்ணாக்கையும் கடைசி உழவுக்கு முன் இட வேண்டும். குழிக்கு, 80 கிராம் சூப்பர் பாஸ்பேட், 30 கிராம் பொட்டாஷ் வீதம் இட வேண்டும்.  

அல்லது எக்டருக்கு மட்கிய தொழுவுரம் 30 டன், 344 கிலோ சூப்பர், 92 கிலோ பொட்டாசை அடியுரமாகவும், 120 கிலோ யூரியாவை நட்ட 30 நாளில் மேலுரமாகவும் இட வேண்டும். அதாவது, குழிக்கு 13 கிராம் யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.

பாசனம்

பருவமழைக் காலத்தில் மானாவாரியில் பயிரிடலாம். கோடையில்  அறுவடை செய்ய ஏதுவாக, இறவையில் பயிரிடலாம். மானாவாரியில் மழை வந்ததும் குழிகளைத் தோண்டி விதைக்க வேண்டும். இறவையில் பயிரிட, முதலில் குழிகளில் நீரை ஊற்றி விட்டு விதைகளை நட வேண்டும். தொடர்ந்து 7-10 நாட்களுக்கு ஒருமுறை நீரை ஊற்ற வேண்டும். விதைகள் முளைத்த பிறகு தான் வாய்க்கால் மூலம் நீரைப் பாய்ச்ச வேண்டும்.

பாசனம், சீரான இடைவெளியில் செய்ய வேண்டும். அது, பத்து நாட்களுக்கு ஒருமுறை என இருக்கலாம். பல நாட்கள் பாசனம் செய்யாமல் மண்ணின் ஈரத்தன்மை மிகக் குறைவாக இருக்கும் போது, திடீரென்று பாசனம் செய்தால் காய்கள் வெடித்து விடும். இப்படி வெடித்த காய்களுக்கு நல்ல விலை கிடைக்காது.

களைக் கட்டுப்பாடு

விதைத்த 15, 30 ஆகிய நாட்களில் கொத்து மூலம் களைகளை நீக்க வேண்டும். விதைத்த 15 நாளில் செடிகள் இரண்டு இலைகளுடன் இருக்கும் போது, டிபா என்னும் பயிர் ஊக்கியை 25.50 பி.பி.எம். அளவில், அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 25-50 மி.லி. வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

மீண்டும் ஒரு வாரம் கழித்து இதே அளவில் கலந்து தெளிக்க வேண்டும். இதற்குப் பதிலாக எத்ரல் பயிர் ஊக்கியை, பத்து லிட்டர் நீருக்கு 2 மி.லி. வீதம் கலந்து, இரண்டு இலைப் பருவத்திலும், அடுத்தடுத்து ஒருவார இடைவெளியில் மூன்று முறையும் தெளிக்க வேண்டும்.

கொடிகள் படரத் தொடங்கியதும், வாய்க்கால்களில் உள்ள கொடிகளை எடுத்து இடைப்பகுதியில் படரச் செய்ய வேண்டும். விதைத்த 30 நாளில் எக்டருக்கு 66 கிலோ யூரியாவை மேலுரமாக இட்டு நீர்ப் பாய்ச்ச வேண்டும். அதாவது, குழிக்கு 13 கிராம் யூரியா வீதம் இட வேண்டும்.

மகரந்தச் சேர்க்கை

பூக்கள் பூக்கத் தொடங்கியதும் எக்டருக்கு 1-2 தேனீப் பெட்டிகளை வைத்து அயல் மகரந்தச் சேர்க்கையை அதிகரித்தால், தரமான பழங்களைப் பெறலாம்.  பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கவனமாகக் கையாண்டு தேனீக்களைப் பாதுகாக்க வேண்டும்.

தரமற்ற அல்லது நன்றாக உருவம் பெறாத அல்லது உடைந்த காய்களைத் தொடக்கத்திலேயே பறித்து விட்டால், மற்ற பழங்களின் எடையும் கூடும், நல்ல வடிவமும் கிடைக்கும். கொடிகள் ஈரமாக இருக்கும் போது காய்களைப் பறித்தால், நோய் பரவுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

பயிர்ப் பாதுகாப்பு 

வண்டுகளைக் கட்டுப்படுத்த, நனையும் செவின் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். பழ ஈக்களைக் கட்டுப்படுத்த, மாலதியான் மருந்தைத் தெளிக்கலாம். சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் நனையும் கந்தகம் வீதம் கலந்து தெளிக்கலாம்.

அறுவடை

காய்கள் முற்றிப் பழுத்ததும் அறுவடை செய்ய வேண்டும். விரலால் தட்டிப் பார்க்கும் போது மந்தமான ஒலி ஏற்பட்டால், காய் பழமாகி விட்டது என முடிவு செய்யலாம். தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் பழத்தின் பகுதியில் பச்சை மஞ்சள் அல்லது வெளிர் மஞ்சள் ஏற்படும்.

பழத்தின் அருகிலுள்ள பற்றிப் படரும் கம்பிச்சுருள் காய்ந்து விடும். பழத்தைக் கையில் எடுத்து அழுத்தினால் அப்பகுதி உடைந்து நொறுங்கும். மலர் விரிந்து மகரந்தச்சேர்க்கை நடந்து 30-40 நாட்களில் பூ காயாகி, காய் பழமாகி விடும்.

மகசூல் மற்றும் விற்பனை

நான்கு மாதங்களில், பழங்கள் அறுவடைக்குத் தயாராகும். எக்டருக்கு 25-30 டன் பழங்கள் கிடைக்கும். கோயம்புத்தூர் நச்சிப்பாளையம் காய்கறிச் சந்தை, சென்னைக் கோயம்பேடு, பெரியார் காய்கறிச் சந்தை, காந்தி மார்க்கெட் ஆகிய இடங்களில் தர்ப்பூசணிப் பழங்களை நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம்.


Pachaiboomi_VENKADALAKSHMI

முனைவர் க.வேங்கடலெட்சுமி முனைவர் இரா.ஜெயசீனிவாஸ், முனைவர் சுப.மாரிமுத்து, முனைவர் சே.நக்கீரன், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!