வாழையில் நோய் மேலாண்மை!

வாழைக்

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி.

முக்கனிகளில் ஒன்றான வாழை, நம் உணவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன் மிக்கவை. இத்தகைய வாழையைப் பல்வேறு நோய்கள் தாக்குவதால், வளர்ச்சியில் பாதிப்பு, மகசூல் இழப்பு என உண்டாகி, விவசாயிகள் அல்லலுக்கு உள்ளாக நேரிடுகிறது. அதனால், வாழையைத் தாக்கும் நோய்கள் குறித்தும், அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பனாமா வாடல் நோய்

இந்த நோய் மண் மூலம் பரவுகிறது. இந்நோய் தாக்கினால், திடீரென வாழை இலைகள் பழுத்து மஞ்சளாக மாறி வாடத் தொடங்கும். பச்சை இலைகளும் காம்பில் உடைந்து மரத்தைச் சுற்றித் தொங்கும். அடி மரத்தில் வெடிப்புகள் தோன்றி ஒருவிதத் துர்நாற்றம் வீசும். கிழங்கின் உட்பகுதியில் கருஞ்சிவப்புக் கோடுகள் இருக்கும். வேர்கள் அழுகி விடும். வாடல் நோய் காணப்படும் இடங்களில், நூற்புழுத் தாக்குதல் ஏற்படும்.

இந்த நோயைக் கட்டுப்படுத்த, நோய்த் தாக்குதல் இல்லாத கன்றுகளை நட வேண்டும். நோய் தாக்கிய மரத்தைச் சுற்றி, வேர்ப்பகுதி நன்கு நனையும்படி 0.1 சத கார்பென்டாசிம் கரைசலை ஊற்ற வேண்டும். நடவுக்கு முன், ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் வீதம் எடுத்து, மட்கிய தொழுவுரத்தில் கலந்து நிலத்தில் தூவ வேண்டும். வாழைக்கன்றின், வேர்களை அகற்றி விட்டு, களிமண் கலவையில் நனைத்து அதில், கன்றுக்குப் பத்து கிராம் சூடோமோனாஸ் வீதம் தூவி நட வேண்டும்.

சிக்காடோக்கா இலைப்புள்ளி நோய்

இந்த நோய் காற்று மூலம் பரவுகிறது. இதனால் தாக்கப்பட்ட வாழையின் இலைகளில் மஞ்சள் நிறத்தில் புள்ளிகள் தோன்றத் தொடங்கும். இப்புள்ளிகள் நாளடைவில் பழுப்பு நிறக் கோடுகளாக மாறி, நடுவில் சாம்பல் நிறமாக இருக்கும். இலைகள் நுனியிலிருந்து கருகத் தொடங்கி முற்றிலும் காய்ந்து விடும். காய்களின் வளர்ச்சிப் பாதிக்கப்பட்டு, நுனியிலிருந்து கருகத் தொடங்கும்.

இந்த நோய் தாக்கிய அறிகுறிகள் தெரிந்ததும், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பென்டாசிம் அல்லது இரண்டு கிராம் மாங்கோசெப் அல்லது ஒரு கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு வீதம் கலந்து தெளிக்க வேண்டும். 0.2 சத சூடோமோனாஸ் கலவையைத் தெளித்தும் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

எர்வீனியா வாடல் நோய் என்னும் அழுகல் நோய்

இந்த நோய் தாக்கிய மரத்தின் குருத்து, கறுப்பாக மாறி அழுகத் தொடங்கும். கிழங்குப் பகுதியில், கறுப்பு நிறத்தில் பிசின் வடியும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 0.5 கிராம் ஸ்ரெப்டோமைசின், 2.5 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு வீதம் கலந்து, கீழ்நோக்கி வழியும்படி குருத்தில் ஊற்ற வேண்டும்.

முடிக்கொத்து நோய்

அசுவினிப் பூச்சிகள் மூலம் இந்நோய் பரவுகிறது. இது வைரஸ் என்னும் நச்சுயிரி நோயாகும். நோய் தாக்கிய வாழையின் இலை நரம்பின் கீழும் மேலும் கரும்பச்சைக் கோடுகள், புள்ளிகள் தோன்றும். இலைகள் சிறுத்தும், இலைகளின் ஓரங்களில் பச்சையம் இல்லாமலும், குட்டையாக மேல்நோக்கிச் சுருண்டும் காணப்படும். மரத்தின் உச்சி கொத்தாக இருக்கும். மரத்தின் வளர்ச்சிக் குன்றியிருக்கும்.

நோய்த் தாக்குதல் இல்லாத கன்றுகளை நட வேண்டும். அசுவினியைக் கட்டுப்படுத்தினால், நோய் மேலும் பரவாமல் தடுக்கலாம். ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி மோனோ குரோட்டோபாஸ் வீதம் கலந்து தெளிக்கலாம்.

மடல் தேமல் நோய்

சாற்றை உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, மாவுப்பூச்சி ஆகியவற்றின் மூலம் இந்த நோய் பரவுகிறது. இதனால் தாக்கப்பட்ட வாழை மரத்தின் தண்டுப் பகுதியில் செந்நிறக் கோடுகள் காணப்படும். ஆண் பூ மடல்களில் நீளவாக்கில் கோடு கிழித்ததைப் போன்ற கருந்திட்டுகள் தென்படும்.

காய்களில் கரும்பச்சை நிறத்தில் தேமல் தோன்றும். இந்த நோயைக் கட்டுப்படுத்த, மாதம் ஒருமுறை, மோனோ குரோட்டோபாஸ் அல்லது மெட்டாசிஸ்டாக்ஸ் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.


Pachai boomi DR GAYATHIRI

முனைவர் காயத்ரி சுப்பையா, முனைவர் விமலாராணி, முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!