வாழையில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

வாழை HP a186930bd7a9ec8651ab9197d113a6b8

முக்கனிகளில் மூன்றாம் கனியான வாழைப் பழத்தைத் தரும் வாழைமரம், நம் நாட்டின் பாரம்பரியப் பழப்பயிர். அனைத்துப் பாகங்களும் பயன் தரும் வகையில் உள்ள வாழை மரம், மருத்துவத் தாவரமாகவும் திகழ்கிறது. குறிப்பாக, இம்மரத்தின் சாறானது விஷத்தை முறிக்கவும், சிறுநீரகக் கல் அடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

மேலும், வாழைப்பழம் அனைத்து உயிர்ச் சத்துகளையும், தாதுப்புகளையும் கொண்டு ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. குறைந்த விலையில் கிடைப்பதால் இது ஏழைகளின் பழம் என்று அழைக்கப்படுகிறது. சங்கத்தமிழ் சொல் வழக்கில் பழம் என்றால், அது வாழைப்பழத்தை மட்டுமே குறிக்கும். மற்ற பழங்களைக் கனி என்றே அழைக்க வேண்டும்.

வாழை சாகுபடிப் பரப்பளவு மற்றும் உற்பத்தித் திறனில், உலகளவில் நமது நாடு முதலிடம் வகிக்கிறது. உலகிலுள்ள வாழையின் ஏழு சிற்றினங்களில் நான்கு இனங்கள் இந்தியாவில் உள்ளன.

மேலும், உலகிலேயே பல்வேறு வாழை இரகங்களை சாகுபடி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. வாழை, இந்து சமயப் பண்பாட்டின் தவிர்க்க முடியாத அங்கமாகும். குமரி முதல் இமயம் வரை வளர்கிறது.

இந்தியாவில் பல்வேறு வாழை இரகங்களை பயிரிடும் ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். வாழைப்பழம், குழந்தை முதல் முதியவர் வரை அனைவரும் உண்ணும் உணவாகும். நம் மாநிலத்தில் விரிவான வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு இயங்கி வருகிறது.

இதன் மூலம், வாழை வேர் முதல் இலை வரையான அனைத்துப் பாகங்களும் மதிப்புமிகு பொருள்களாகத் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வகையில், வாழைப் பொருள்களை மதிப்புமிகு பொருள்களாக மாற்றுவதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

வாழையில் மாவுச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து, உயிர்ச் சத்துகள் ஏ, பி6, சி மற்றும் மக்னீசியம் ஆகியன உள்ளன. நமக்கு எளிதில் கிடைக்கும் வாழை இரகங்கள், அவற்றிலுள்ள சத்துகள், அவற்றின் பயன்கள் குறித்துக் காணலாம்.

பூவன் வாழைப் பழத்தில், தாதுப்புகள் எல்லாமே உள்ளன. உயிர்ச் சத்துகள் ஏ, பி, சி, டி உள்ளன. இதிலுள்ள சிறு புளிப்புத் தன்மையால் உடற்சூடு தணியும். சிறந்த மலமிளக்கியாக இருப்பதால் மலச்சிக்கல் தீரும். அதனால், மூலத்துக்கும் மருந்தாகும்.

மொந்தன் வாழைப் பழத்தில் அனைத்து உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் உள்ளன. இதைச் சாப்பிட்டால், உடல் பருமனைத் தடுக்கும். மஞ்சள் காமாலை, மூல நோயைத் தடுக்கும்.

கற்பூரவள்ளிப் பழத்தில், செரட்டோனின், எபிஎனப்ரின் மற்றும் கரையும் சத்துகள் உள்ளன. இதைச் சாப்பிட்டால், நன்றாகச் செரிக்கும். உடற்சூடு தணியும். உடல் எடை குறையும். நரம்புகளுக்கு வலிமை கிடைக்கும்.

இரஸ்தாளிப் பழத்தில், வைட்டமின் பி6, பொட்டசியம், சோடியம், நார்ச்சத்து சிஹச்ஓ ஆகிய சத்துகள் உள்ளன. இதைச் சாப்பிட்டால், உடற்சோர்வு நீங்கும். மாவுச்சத்து அதிகமாக இருப்பதால் நன்றாகத் தூக்கம் வரும். பசி அடங்கும், நன்றாகச் செரிக்கும். மன அழுத்தம் குறையும்.

ரொபஸ்டா பழத்தில், வைட்டமின் ஏ-யும், இ-யும் உள்ளன. இதைச் சாப்பிட்டால், உடனடி ஆற்றல் கிடைக்கும். உடம்பு குளிர்ச்சியாக இருக்கும். அல்சர் தீரும். வெள்ளைப் படுதல் குறையும்.

செவ்வாழைப் பழத்தில், பீட்டா கரோட்டீன், உயிர்ச் சத்துகள் கே-யும், சி-யும் உள்ளன. இதைச் சாப்பிட்டால், உடம்பில் நோயெதிர்ப்பு சக்தி கூடும். அதனால் உடல் பலமாகும்.

மூளை நன்றாக இயங்கும். தாதைக் கூட்டும். தொற்றுக் கிருமிகளைக் கொல்லும். சிறுநீரகக் கல் வருவதைத் தடுக்கும். மாலைக்கண் சரியாகும், குதிகால் வலி நீங்கும்.

நேந்திரன் பழத்தில், மாவுச்சத்து, புரதச்சத்து, பொட்டாசியம் ஆகியன உள்ளன. இதைச் சாப்பிட்டால், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும். நன்றாகச் செரிக்கும். குடற் புழுக்கள் ஒழியும். மலச்சிக்கல் கட்டுப்படும்.

பச்சை நாடன் பழத்தில், நார்ச்சத்து, உயிர்ச்சத்து, தாதுப்புகள் ஆகியன உள்ளன. இதைச் சாப்பிட்டால், இதயம் வலுவாகும். உடல் எடை குறையும். குடற்புண் ஆறும். உடற்சூடு தணியும்.

பேயன் வாழைப் பழத்தில், எல்லா உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் உள்ளன. இது, குழந்தைகளுக்கு ஏற்ற முதல் உணவு. பித்த நோய் குணமாகும். இரத்தம் பெருகும்.

மட்டி வாழைப் பழத்தில், பொட்டாசியம் அதிகமாக உள்ளது. புரதமும் உப்பும் குறைவாக உள்ளன. இதை விடாமல் சாப்பிட்டு வந்தால், இரைப்பை, குடல் கோளாறு, அல்சர் குணமாகும். சிறுநீரகச் சிக்கல் சரியாகும்.

மதிப்புக்கூட்டுப் பொருள்கள்

வாழைப்பூ: இது, துவர்ப்பாக இருக்கும். இதைச் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் சரியாக நிகழும். இரத்த அணுக்கள் மேம்படும். இரத்தம் சுத்தமாகும், வாய் நாற்றம் அகலும். கருப்பைச் சிக்கல் சரியாகும், இரத்தச் சர்க்கரை குறையும்.

இதில், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட், உயிர்ச் சத்துகள் ஏ, பி, கால்சியம், இரும்பு, பொட்டாசியம், தாமிரம் ஆகிய சத்துகள் உள்ளன. இதிலிருந்து, ஊறுகாய், தொக்கு, உலர் ஊறுகாய், வடை, வற்றல் ஆகியவற்றைத் தயாரிக்கலாம்.

வாழைத்தண்டு: இதில், இரும்புச் சத்து, உயிர்ச்சத்து பி 6 ஆகியன உள்ளன. சிறுநீரகக் கற்களைக் கரைக்க உதவும். சிறுநீர்ப் பெருக்கியாகச் செயல்படும். உடல் எடையை, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

இரத்தச் சிவப்பு அணுக்களைப் பெருக்கும். இரத்தச் சர்க்கரையைக் குறைக்கும். நெஞ்சு எரிச்சலைக் குணமாக்கும். இதிலிருந்து, ஜூஸ், சூப், ஊறுகாய், மிட்டாய் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.

வாழைக்காய்: இதில், மாவுச்சத்து, தாதுப்புகள், உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் அதிகளவில் உள்ளதால் குடற்புண் ஆறும். குழந்தைகளுக்கு உதவும் துணை உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

இதிலிருந்து, ஊறுகாய், வாழைமாவு, சிப்ஸ், அடுமனைப் பொருள்களான குக்கீஸ், கேக், பன், கூழ்மம், சாக்லேட், சத்துமாவு, சப்பாத்தி, தோசை, முருக்கு மாவு, கஞ்சி, அல்வா, பழக்கலக்கி ஆகியவற்றைத் தயாரிக்கலாம்.

வாழைப்பழம்: வாழைப் பழத்தில் அனைத்து உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் மற்றும் மருத்துவக் குணங்கள் உள்ளன. இதில், ஜாம், ஜூஸ், சிப்ஸ், அல்வா, இனிப்புப் போண்டா, உலர் வாழைப்பழம், பழமாவு, பால் கலக்கி, கேக், குக்கீஸ், குலோப் ஜாமூன், சாக்லேட், உலர் பழங்கள், இனிப்புகள் மற்றும் உடனடி பழக்கலவையைத் தயாரிக்கலாம்.

இலை: வாழை இலையில் உண்பது நமது அன்றாட பண்பாடு சார்ந்த பழக்கமாகும். இது, ஒவ்வொரு முறை உண்ணும் போதும், புதிய உணவுத் தட்டு என்னும் நோக்கில் நமது முன்னோர்கள் கடைப்பிடித்த தனி மனித சுகாதாரத்தின் அடிப்படையாகும்.

ஆனால், இன்றுள்ள மக்கள் பெருக்கமும், வாழையிலைப் பற்றாக்குறையும்; வாழை இலைகளையும் மதிப்புக்கூட்டுப் பொருளாகத் தயாரிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தி உள்ளன.

இதில், உலர் இலை, பனி ஏடு, அதாவது, பச்சை இலையைச் வெந்நீரில் போட்டு நிழலில் உலர்த்திச் சுருளாகக் கட்டுவது, பச்சை இலையில் குளிர்ந்த நீரைத் தெளித்துக் கட்டாகக் கட்டுவது ஆகியவற்றைத் தயாரிக்கலாம்.

பழத்தோல்: வாழைப்பழத் தோலில் எரிசக்தி மிகுதியாக இருப்பதால், எரிசாராயம் தயாரிக்கப் பயன்படுகிறது. இது, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகத் திகழ்கிறது.

வாழைநார்: வாழைநார் அன்றாட வீட்டுப் பயனுள்ள மற்றும் கைவினைப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. சூழலுக்கு உகந்த ஆடைகள், கைப்பைகள், அழகுப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.


முனைவர் இரா.ஜெகதீசன், முனைவர் இல.மாலதி, முனைவர் அ.சுப்பையா, முனைவர் க.வேல்முருகன்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!