உவர் நிலத்துக்கு ஏற்ற குறுகிய கால நெல் டி.ஆர்.ஒய்.5!

டி.ஆர்.ஒய்.5 High Yield Hybrid PaddyRice Varieties in India 1

ரு பயிரிலிருந்து அதிக விளைச்சலைப் பெறுவதற்கு, பொருத்தமான பருவத்தில், சரியான இரகத்தைத் தேர்ந்தெடுப்பது விவசாயிகளின் கடமையாகும். சிக்கலான விளைநிலங்களில் இந்த நோக்கம் மேலும் தேவையாகிறது. ஆகவே, களர், உவர் நிலங்களுக்கு ஏற்ற குறுகிய கால நெல் இரகத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பொதுவாக, விவசாயிகள் குறுவை, நவரை போன்ற பல்வேறு பருவங்களிலும் குறுகிய கால நெல் இரகங்களையே சாகுபடி செய்கின்றனர். இதற்கு ஏற்ற இரகங்கள் இல்லாததால், குறைவான மகசூலையே பெறும் நிலையுள்ளது.

எனவே, இதற்காகத் திருச்சி, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் பயனாக, திருச்சி 2 நெல் இரகத்தில் சடுதி மாற்ற இனப்பெருக்க முறை மூலம் டி.ஆர்.09030 என்னும் வளர்ப்புக் கண்டறியப்பட்டது. இது, குறுவை, நவரை போன்ற பருவங்களுக்கு ஏற்றதாக அமைகிறது.

டி.ஆர்.ஒய்.5 நெல்

இதன் வயது 105-112 நாட்களாகும். இதன் சராசரி மகசூல் எக்டருக்கு 5,110 கிலோவாகும். திருச்சி 2 இரகத்தைவிட 12.64 சதம், அம்பை 16 இரகத்தை விட 17.03 சதம், ஆடுதுறை 45 இரகத்தை விட 16.70 சதம், ஆடுதுறை 53 இரகத்தை விட 21.35 சதம் கூடுதல் மகசூலைத் தரும். பல்வேறு விவசாயிகளின் வயல்களில் பயிரிடப்பட்டு, களர், உவர் நிலங்களுக்கு ஏற்றதெனக் கண்டறியப்பட்டது.

இந்த நெல், குலைநோய், இலைப்புள்ளி நோய், புகையான், வெண்முதுகுத் தத்துப்பூச்சி மற்றும் பச்சைத் தத்துப்பூச்சிக்கு மிதமான எதிர்ப்புத் தன்மை கொண்டது. மேலும், இலையுறைக் கருகல் மற்றும் அழுகல், நெற்பழ நோய், தானிய நிறமாற்றம், குருத்துப்பூச்சி, இலை மடக்குப்புழு, ஆனைக்கொம்பன் ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.

அரிசி நீண்டு சன்னமாக வெள்ளை நிறத்தில் இருக்கும். சாதம் உதிரியாக, மென்மையாக, நறுமணம் மற்றும் சுவையுடன் இருக்கும். இட்லி செய்யவும்  ஏற்றது. இதன் அரவைத்திறன் 68 சதம், முழு அரிசி காணும் திறன் 57 சதமாக இருப்பதால் எல்லோராலும் விரும்பப்படுகிறது.

சாகுபடி முறை

நாற்றங்கால்: இதன் வயது 107-115 நாட்கள். தமிழ்நாட்டில் குறுவை, நவரை ஆகிய பருவங்களுக்கு ஏற்றது. எக்டருக்கு 60 கிலோ விதைகள் தேவைப்படும். சென்ட்டுக்கு 2 கிலோ விதைகள் வீதம் விதைத்து, 2 கிலோ டிஏபி வீதம் இட்டால், வீரியமான நாற்றுகள் கிடைக்கும். ஒரு கிலோ விதைகளுக்கு 10 கிராம் பேசிலஸ் சப்டிலிஸ் அல்லது 2 கிராம் கார்பன்டசிம் அல்லது டிரைசைக்லசோல் வீதம் கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

நடவு: நாற்றின் வயது 18-22 நாட்களானதும் பறித்து நடலாம். சதுர மீட்டருக்கு 50 குத்துகள் இருக்கும் வகையில் 20×10 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும்.

உரமிடல்: மண்ணாய்வின் பரிந்துரைப்படி உரமிட வேண்டும். அல்லது எக்டருக்கு 150:50:50 கிலோ, தழை, மணி, சாம்பல் சத்து தேவைப்படும். இதுவே களர் உவர் நிலமாக இருந்தால் 187:50:50 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து தேவைப்படும். இவற்றை, அடியுரம், மேலுரம் எனப் பிரித்து இட வேண்டும்.

அடியுரம்: எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் அல்லது 6.25 டன் கம்போஸ்ட் அல்லது தழையுரத்துடன், தழைச்சத்து 46.75 கிலோ, மணிச்சத்து 50 கிலோ, சாம்பல் சத்து 12.5 கிலோ, துத்தநாக சல்பேட் 25 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும். தேவைப்பட்டால் 500 கிலோ ஜிப்சத்தையும் கடைசி உழவின் போது இடலாம்.

முதல் மேலுரம்: விதைத்து 55-60 நாட்களில் 46.75 கிலோ தழைச்சத்து, 12.5 கிலோ சாம்பல் சத்தை மேலுரமாக இட வேண்டும். அடுத்து, விதைத்து 80-85 நாட்களில் பஞ்சுப் பொதிக் கட்டும் பருவத்தில், இரண்டாம் மேலுரமாக, 46.75 கிலோ தழைச்சத்து, 12.5 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். அடுத்து, தேவைப்பட்டால், விதைத்து 105-110 நாட்களில் கதிர்கள் வெளிவரும் பருவத்தில் மூன்றாம் மேலுரமாக 46.75 கிலோ தழைச்சத்து, 12.5 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். பயிர் வளர்ச்சியைப் பொறுத்து மூன்றாம் மேலுரத்தைத் தவிர்க்க வேண்டும்.

துத்தநாகப் பற்றாக்குறையைச் சரிசெய்ய, 0.5 சத துத்தநாக சல்பேட் மற்றும் 1.0 சத யூரியா கரைசலை, பற்றாக்குறை அறிகுறிகள் மறையும் வரை, 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

உயிர் உரங்கள்: அசோஸ்பயிரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவை எக்டருக்கு ஒரு கிலோ வீதம் எடுத்து   விதைநேர்த்தி செய்ய வேண்டும். இதே அளவில் எடுத்துத் தயாரித்த கரைசலில் நாற்றுகளின் வேர்களை நனைத்து நட வேண்டும். நடவுக்கு முன்பு இதே உரங்களை எக்டருக்கு 2 கிலோ வீதம் எடுத்து வயலில் தூவ வேண்டும்.

விதைநேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பேசிலஸ் சப்டிலிஸ் அல்லது 2 கிராம் கார்பன்டசிம் அல்லது டிரைசைக்லசோல் வீதம் எடுத்து விதைகளில் கலந்து, 24 மணி நேரம் வைத்திருந்த பிறகு, அந்த விதைகளை நீரில் ஊற வைக்க வேண்டும். இதனால், நாற்றங்கால் மற்றும் வயலில் இந்தப் பயிர்களைத் தாக்கும் இலைச்சுருட்டுப் புழு, குருத்துப்பூச்சி, ஆனைக்கொம்பன் ஆகிய பூச்சிகளின் தாக்குதல்கள், குலைநோய், இலையுறைக் கருகல், இலையுறை அழுகல் நோய், இலைப்புள்ளி நோய் ஆகிய நோய்களின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முடியும்.

பயிர்ப் பாதுகாப்பு

பூச்சிகள்: தண்டுத் துளைப்பான்: இதைக் கட்டுப்படுத்த, ட்ரைக்கோ கிரம்மா ஜப்பானிக்கம் என்னும் முட்டை ஒட்டுண்ணியை மூன்று முறை விட வேண்டும். அதாவது, நட்டு 37 நாட்கள் கழித்து ஒரு வார இடைவெளியில், ஒவ்வொரு முறையும் எக்டருக்கு ஒரு இலட்சம் வீதம் விட வேண்டும். அல்லது எக்டருக்கு 1.5 கிலோ பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் கர்ஸ்டகி வீதம் தெளிக்கலாம்.

அல்லது கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஒன்றைத் தெளிக்கலாம். எக்டருக்கு, அசாடிராக்டின் 0.03% 1000 மி.லி. அல்லது கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50% SP 1,000 கிராம் அல்லது குளோரன்ட்ரானி லிபுரோல் 18.5% SC 150 மி.லி. அல்லது குளோரன்ட்ரானி லிபுரோல் 0.4% G 10 கிலோ அல்லது பிப்ரோனில் 5% SC 1,000-1,500 கிராம் அல்லது பிப்ரோனில் 80% WG 50-62.5 கிலோ அல்லது புளுபென்டியமைடு 20% WG 125 கிராம் அல்லது புளுபென்டியமைடு  39.35% M/M SC 50 கிராம் அல்லது தயாகுளோபிரிட் 21.7% SC 500 கிராம் அல்லது தயாமீத்தாக்சம் 25% WG 100 கிராம்.

இலை மடக்குப்புழு: இதைக் கட்டுப்படுத்த, நட்டு முப்பது நாட்கள் கழித்து, ஒருவார இடைவெளியில், எக்டருக்கு ஒரு இலட்சம் வீதம் ட்ரைக்கோ கிரம்மா கைலோனிசை மூன்று முறை விட வேண்டும். அல்லது எக்டருக்கு 1.5 கிலோ பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் கர்ஸ்டகி வீதம் தெளிக்கலாம். அல்லது எக்டருக்கு 2.5 கிலோ பிவேரியா பேசியானா 1.15 WP வீதம் பயன்படுத்தலாம்.

அல்லது கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஒன்றைத் தெளிக்கலாம்.  எக்டருக்கு, அசாடிராக்டின் 0.03% 1,000 மி.லி. அல்லது குளோர்பைரிபாஸ் 25% EC 1,250 மி.லி. அல்லது கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50% SP 1,000 கிராம் அல்லது குளோரன்ட்ரானி லிபுரோல்; 18.5% SC 150 மி.லி. அல்லது குளோரன்ட்ரானி லிபுரோல்; 0.4% G 10 கிலோ அல்லது பிப்ரோனில் 80% WG 50-62.5 கிலோ அல்லது புளுபென்டியமைடு 20% WG 125 கிராம் அல்லது புளுபென்டியமைடு 39.35% M/M SC 50 கிராம் அல்லது இன்டாக்சாகார்ப் 15.8% EC 200 கிராம் அல்லது தயாமீத்தாக்சம் 25% WG 100 கிராம்.

ஆனைக்கொம்பன்: இதைக் கட்டுப்படுத்த, இயற்கையாக ஒட்டுண்ணித் தாக்கம் வயலில் அதிகமாகத் தெரியும் போது, பிளாட்டி கேஸ்டர் ஒரைசே ஒட்டுண்ணி பாதித்த தாள்களை 10 மீட்டர் 2 க்கு ஒன்று வீதம், நடவு முடிந்து பத்து நாட்களான வயலில் விட வேண்டும்.

அல்லது கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஒன்றைத் தெளிக்கலாம். எக்டருக்கு, குளோர்பைரிபாஸ் 20% EC 1,250 மி.லி. அல்லது பிப்ரோனில் 5% SC 1,000-1,500 கிராம் அல்லது பிப்ரோனில் 0.3% G 16.67-25 கிலோ அல்லது குயினல்பாஸ் 5% G 5 கிலோ அல்லது தயாமீத்தாக்சம் 25% WG 100 கிராம்.

பச்சைத் தத்துப்பூச்சி: இதைக் கட்டுப்படுத்த, நடவு முடிந்து 15 மற்றும் 30 நாட்களில் கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஒன்றைத் தெளிக்கலாம். எக்டருக்கு, பியுபுரோபேசின் 25% SC 800 கிராம் அல்லது பிப்ரோனில் 5% SC 1,000-1,500 கிராம் அல்லது பிப்ரோனில் 0.3% G 16.67-25 கிலோ அல்லது இமிடாகுளோபிரிட் 17.8% SL 100-125 மி.லி. அல்லது தயாமீத்தாக்சம் 25% WG 100 கிராம்.

வரப்பிலுள்ள செடிகளிலும் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்க வேண்டும்.  விளக்குப்பொறி மூலம் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். மேலும், நோயைப் பரப்பும் காரணிகளின் எண்ணிக்கையைக் கண்காணிக்க வேண்டும். விளக்குப் பொறியில் விழுந்த தத்துப் பூச்சிகளைக் கொன்று விட வேண்டும்.

சிலந்திப்பேன்: இதைக் கட்டுப்படுத்த, கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஒன்றைத் தெளிக்கலாம். எக்டருக்கு, டைக்கோபால் 18.5% EC 1,250 மி.லி. அல்லது அசாடிராக்டின் 0.03% 1,000 மி.லி.

நோய்கள்:  செம்புள்ளி நோய்: இதைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 500 மி.லி. மெட்டோமினோஸ்ட்ரோபின் வீதம் தெளிக்க வேண்டும்.

இலையுறைக் கருகல் மற்றும் இலையுறை அழுகல் நோய்: இவற்றைக் கட்டுப்படுத்த,  3 சத வேப்ப எண்ணெய் 60 இ.சி. அல்லது 5 சத வேப்பங்கொட்டைக் கரைசல் வீதம் தெளிக்கலாம். இதனால், தானிய நிறமாற்ற நோய் மற்றும் பாக்டீரிய இலைக்கருகல் நோயும் கட்டுப்படும்.  நட்டு 30 மற்றும் 45 நாட்களில் எக்டருக்கு 1.25 கிலோ காப்பர் ஹைட்ராக்சைடு 77 WP வீதம் தெளிக்க வேண்டும்.

நெற்பழ நோய்: இதைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 500 மி.லி. புரோபி கோனசோல் 25 EC அல்லது 1.25 கிலோ காப்பர் ஹைட்ராக்சைடு 77 WP வீதம் எடுத்து, கண்ணாடி இலைப் பருவம் மற்றும் 50 சதம் பூத்த நிலையில் தெளிக்க வேண்டும்.

தானிய  நிற மாற்ற நோய்: இதைக் கட்டுப்படுத்த, கார்பன்டாசிம், திரம், மான்கோசெப் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து, 0.2 சதக் கரைசலாக்கி, பயிர்கள் பூக்கும் போது தெளிக்க வேண்டும்.

பாக்டீரிய இலைக்கருகல் நோய்: இதைக் கட்டுப்படுத்த, 20 சதப் பசுஞ்சாணக் கரைசலை, நோய் அறிகுறி தெரிந்ததும் ஒருமுறையும் அடுத்து 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

துங்ரோ நுச்சுயிரி நோய்: இதைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 100 கிராம் தயாமீத்தாக்சம் 25% WG அல்லது 100 மி.லி. இமிடாகுளோபிரிட் 17.8 SL வீதம் எடுத்து, நட்ட 15 முதல் 30 நாளில் தெளிக்க வேண்டும்.

அறுவடை: இந்தத் தொழில் நுட்ப முறைகளைக் கையாண்டால், டி.ஆர்.ஒய்.5 நெற்பயிர்கள் பூத்து 25-30 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும்.

மேலும், விவசாயப் பெருந்தகைகள் நெல் சாகுபடி மற்றும் புதிய இரகங்கள் குறித்த ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள, பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நவலூர் குட்டப்பட்டு, திருச்சி – 620 027 என்னும் முகவரியை அணுகலாம். தொலைபேசி: 0422 – 2450498.


டி.ஆர்.ஒய்.5 THANGA HEMAVATHY

முனைவர் ஆ.தங்க ஹேமாவதி, முனைவர் ப.ஜெயப்பிரகாஷ், முனைவர் சொ.வன்னியராஜன்,

அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நவலூர் குட்டப்பட்டு, திருச்சி – 620 027.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!