இயற்கை வேளாண்மையின் அவசியம்!

இயற்கை வேளாண்மை இயற்கை வேளாண்மை

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச்.

ந்திய விவசாயத்தில் பசுமைப் புரட்சிக்குப் பிறகு இயற்கை விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வந்தது. பாரம்பரிய விதைகள் மறைந்தன; அதிக விளைச்சலைத் தரும் ஒட்டு விதைகள் வந்தன; இயற்கை உரங்களை இடுவதை விவசாயிகள் ஒதுக்கினர்; இரசாயன உரங்களையும், நச்சுத்தன்மை மிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விவசாயத்தில் விரும்பிப் பயன்படுத்தினர்.

இவற்றின் விளைவு, பசுமைப் புரட்சியின் தொடக்கக் காலத்தில் இந்திய உணவு தானிய உற்பத்தி நான்கு மடங்காக அதிகரித்தது. இதனால், உணவு உற்பத்திப் பற்றாக்குறையில் இருந்து இந்தியா தன்னிறைவை அடைந்தது. ஆனால், அதிகளவில் இரசாயன உரங்களைப் பயன்படுத்தி, விவசாயத்தில் நிலையான, நீண்ட நாள் உற்பத்தியை ஏற்படுத்துவது ஐயப்பாடாக இருந்தது. ஏனெனில், இரசாயன உரங்கள், மண்வளம், மனிதவளம், சூழ்நிலை ஆகியவற்றை மாசுபடுத்தும் வகையில் உள்ளன.

இயற்கை வேளாண்மை என்பது, செயற்கையாகத் தயாரிக்கப்படும், இரசாயன உரங்கள், பூச்சி, பூசணக்கொல்லி மருந்துகளைத் தவிர்த்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்திச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படா வகையில், வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதாகும். இன்று உலகம் முழுவதும், அங்கக உரங்கள் மற்றும் கழிவுகளைப் பயன்படுத்தி, இயற்கை விவசாயம் 32.2 மில்லியன் எக்டர் பரப்பில் நடைபெறுகிறது.

இயற்கை வேளாண்மையின் படிகள்: சாகுபடி முறைகள்

சாகுபடி முறைகளில் முக்கியமானது, குறிப்பிட்ட நிலத்தில் ஒரே பயிரையே தொடர்ந்து பயிரிடாமல், பலதரப்பட்ட பயிர்களை ஒரு பருவத்தில் பயிரிடுவதாகும். ஒரே பயிரை ஒரு நிலத்தில் தொடர்ந்து பயிரிடுவதால், மண்வளம் மற்றும் குறிப்பிட்ட சத்துகள் குறைந்து விடுகின்றன. மேலும், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட பயிருக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஒரே பருவத்தில் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவதால், மண்ணில் அங்ககச் சத்துகள் கூடுகின்றன. மேலும், மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிர்களும் கூடும். கலப்புப் பயிர் சாகுபடியைச் செய்யும் போது, ஒரு பயிர், இன்னொரு பயிருக்கு, பூச்சித் தாக்குதலை எதிர்க்கும் தன்மையைக் கொடுக்கிறது. அதாவது, பயிருக்குப் பாதிப்பை உண்டாக்கும் பூச்சிகளைக் கவர்ந்திழுத்துக் கட்டுப்படுத்துகிறது.

இயற்கை வேளாண்மையில், கலப்புப்பயிர் சாகுபடி (mixed cropping), ஊடுபயிர் சாகுபடி (inter cropping), நிலப்போர்வை அமைத்தல் (soil mulching), தொடர் பயிர் சாகுபடி (relay cropping), தாவரத் தடுப்பை அமைத்தல் (crop barriers) ஆகிய முறைகளைக் கடைப்பிடித்து, மண்வளம், மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மை, களைக் கட்டுப்பாடு போன்றவற்றைக் கூட்டலாம்.

அங்கக உரங்கள்

மண்வளம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க, உரமிடுதல் மிகவும் அவசியம். மட்கிய தாவரக் கழிவுகள், மண்புழு உரம், மட்கிய தென்னை நார்க் கழிவு, ஊட்டமேற்றிய தொழுவுரம், பசுந்தாள் உரம், பசுந்தாள் இலையுரம் போன்றவை, முக்கிய அங்ககப் பொருள்களாகப் பயன்படுகின்றன.

பூச்சிக் கட்டுப்பாடு

பயிர் உற்பத்தியில் இது முக்கியமான ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில், இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தவிர்த்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது என்பது சவாலான ஒன்றாகும். பயிருக்குத் தீமை செய்யும் பூச்சிகளையும், நோய்களைப் பரப்பும் பூச்சிகளையும் பிடித்து உண்ணும், நன்மை செய்யும் பூச்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.

மேலும், நோய், பூச்சி எதிர்ப்புத் திறனுள்ள இரகங்களைப் பயிரிட வேண்டும். Trap crop, companion crop என்று கூறப்படும் பயிர் இரகங்களை, வயல் மற்றும் வரப்பு ஓரங்களில் பயிரிட வேண்டும். இப்பயிர்கள், வயலிலுள்ள பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கவர்ந்திழுத்து விடுவதால், பயிருக்குச் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்படும். பயிர்ச் சுழற்சி முறையைக் கையாள்வதன் மூலம், அடுத்த பருவத்தில் முந்தைய பருவத்தின் பூச்சித் தாக்குதல் பெருமளவில் ஏற்படாமல் தடுக்கலாம்.

இயற்கை வேளாண்மையின் ஐந்து அடிப்படைக் கூறுகள்

இயற்கை வேளாண்மையின் மூலம் மண்வளத்தைப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும். நிலையான, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத, மாசுபடுத்தாத வேளாண் முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பயிர்ச்சுழற்சி, கழிவு மட்கு, அங்கக உரங்களை இட்டு, உணவு தானியங்களை அதிகத் தரத்துடன் உற்பத்தி செய்ய வேண்டும். சிறப்பான நிர்வாகத்தின் மூலம், களை மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். கால்நடைகளை இயற்கை வேளாண்மை உற்பத்தியின் முக்கிய அங்கமாகப் பராமரிக்க வேண்டும்.

இயற்கை வேளாண்மைக்கான உரங்கள்: உயிர் உரங்கள், மட்கு உரங்கள்

ரைசோபியம், அசிட்டோபேக்டர், அசோஸ்பயிரில்லம், சையனோ பாக்டீரியா, அசோலா ஆகிய உயிர் உரங்களை (bio fertilizer) உற்பத்தி செய்து மண்ணுக்கு அளிக்க வேண்டும். தென்னை நார்க்கழிவு, தாவரக் கழிவுகள், கரும்புத்தோகை போன்றவற்றை மட்க (composting) வைத்தும், ஊட்டமேற்றிய தொழுவுரத்தையும் நிலத்தில் இடுவதால், மண்ணின் அங்ககச் சத்து அதிகரிக்கிறது.
எளிதில் மட்கும் தாவரக் கழிவுகளான, பயிர்க் கழிவு, மட்கிய களைக் கழிவு, இலைதழைக் கழிவு, வேளாண் தொழிலகக் கழிவு, கிராமம் மற்றும் நகர்ப்புறத் தொழிலகக் கழிவை அடியுரமாக இட வேண்டும்.

மண்புழு உரம்

மண்புழு உரமானது, எளிதில் உற்பத்தி செய்யக் கூடியதும், கிடைக்கக் கூடியதுமாகும். தொழுவுரம், இலைதழைக் கழிவு, காய்கறிக் கழிவு போன்றவற்றை 50 சதம் மட்க வைத்து, மண் புழுக்களுக்கு உரமாக அளிக்க வேண்டும். இவற்றை உண்ணும் மண் புழுக்கள் வெளியேற்றும் கழிவே சிறந்த மண்புழு உரமாகும். ஒரு ஏக்கருக்கு ஐந்து டன் மண்புழு உரத்தை அடியுரமாக இடலாம்.

தென்னைநார்க் கழிவு

ஆலையில் இருந்து பிரிக்கப்பட்ட தென்னைநார்க் கழிவை மட்க வைத்து உரமாக இடலாம். மட்காத தென்னைக் கழிவில், செல்லுலோஸ், லிக்னின், சி.என். அளவு மிகவும் அதிகமாக இருக்கும். தென்னை நார்க்கழிவை மட்க வைக்கும் போது, அதிலுள்ள வேதிப் பொருள்களின் விகிதம், அடர்வு குறைந்து, பயிர்கள் எளிதில் எடுத்துக் கொள்ளும் வகையில் மாறுகிறது.

பசுந்தாள் உரங்கள்; பசுந்தாள் இலையுரங்கள்

தக்கைப்பூண்டு, செஸ்பேனியா போன்ற பசுந்தாள் உரங்களை, பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதன் மூலம், மண்ணில் தழைச்சத்து அதிகமாகும். பசுந்தாள் இலையுரங்களான, கிளைரிசிடியா, சூபாபுல், கொளுஞ்சி, அகத்தி, புங்கன், வேம்பு, வாதநாராயணன், எருக்குப் போன்றவற்றின் இலைகளை மண்ணிலிட்டு உழுவதன் மூலமும் மண்ணுக்குத் தழைச்சத்துக் கிடைக்கும்.

பூச்சிவிரட்டிக் கரைசல்கள்

இயற்கை வேளாண்மையில் பூச்சிகளின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த, இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட கரைசல்களைப் பயன்படுத்தலாம். வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும் பஞ்சகவ்யா பயன்படுகிறது. வளர்ச்சி ஊக்கியாக அமிர்தக் கரைசல் பயன்படுகிறது. வேப்பம் பொருள்கள், எருக்கு, நொச்சி போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படும் கரைசல்கள், பூச்சி விரட்டிகளாகப் பயன்படுகின்றன.

இயற்கை வேளாண்மையின் தேவையை அறிந்து, அதன் கூறுகள், தொழில் நுட்பங்களைக் கையாள்வதன் மூலம், மண்வளம், தாவரவளம், மனிதவளம், சூழல்வளம் போன்றவற்றில் மேம்பாடு அடைய முடியும்.


மா.டெய்சி, ந.அகிலா, வேளாண்மை அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகம், நாமக்கல் – 637 002.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!