நவீன முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு!

நாட்டுக்கோழி நாட்டுக் கோழி

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர்.

முட்டைக் கோழி மற்றும் இறைச்சிக் கோழிப் பண்ணைகளில், வீரிய இனக் கோழிகளை வளர்ப்பதைப் போலவே, தற்போது நாட்டுக்கோழி வளர்ப்பிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 10-20 கோழிகளை வளர்த்த நிலையில் இருந்து மாறி, 200-500 கோழிகளை வளர்க்கும் அளவில், நாட்டுக்கோழிப் பண்ணைகளை வைக்கத் தொடங்கி விட்டனர்.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக ஆராய்ச்சி மையங்கள், வேளாண்மை அறிவியல் நிலையங்கள் போன்றவற்றில், நாட்டுக்கோழி வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, கறவைமாடு வளர்ப்பு, ஜப்பான் காடை வளர்ப்பு, வான்கோழி வளர்ப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

நாட்டுக்கோழி வளர்ப்புப் பயிற்சியில் நிறையப் பேர் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். நாட்டுக் கோழிகளை ஆழ்கூள முறையில் வளர்க்க, மக்கள் ஆர்வம் காட்டுவதால், கோழி வீட்டை அமைப்பதைப் பற்றி, அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நல்ல காற்றோட்டம், சூரிய வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் பண்ணையை அமைக்க வேண்டும். நீர்த் தேங்காத, மேடான பகுதியில் நீளவாட்டம் கிழக்கு மேற்காக இருக்கும்படி கொட்டகையை அமைக்க வேண்டும்.

கொட்டகை கட்டும் இடம் களிமண் மற்றும் மணல் கலந்த பகுதியாக இருக்க வேண்டும். களிமண் நிலமாக மட்டும் இருந்தால் மழைக் காலத்தில் நீர்த் தேங்கி, நோய் பரவக் கூடும். அதேபோல மணற்பாங்கான இடமாக மட்டும் இருந்தால், காற்றுக் காலத்தில் புழுதி கிளம்பி, கோழிகளின் கண்களைப் பாதிப்பதோடு, நுரையீரல் நோய்களை ஏற்படுத்தும்.

பண்ணை அமைவிடத்தில் மின்சார வசதியும், நல்ல குடிநீர் வசதியும் இருக்க வேண்டும். ஒரு கோழிக்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் குடிநீர் தேவைப்படும். பண்ணை அமைவிடம், முட்டை மற்றும் கோழி இறைச்சியை விற்பனைக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.

மக்கள் வாழும் வீடுகளுக்கு மிக அருகில் பண்ணை இருக்கக் கூடாது. ஏனெனில், வீடுகள் சுகாதாரமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடும். எனவே, வீட்டில் இருந்து வசதியான தொலைவில் பண்ணையை அமைக்க வேண்டும்.

ஆழ்கூள முறை வளர்ப்பு

ஒரு நாட்டுக் கோழிக்கு இரண்டு சதுரடி இடம் வேண்டும். எட்டு வாரம் வரையுள்ள இளங் குஞ்சுகள் வளர்ப்புக் கொட்டகை மற்றும் முட்டையிடும் கோழிகள் கொட்டகை என்று, கொட்டகையை இரு பிரிவுகளாக அமைக்க வேண்டும். பொருளாதார வசதியும் இட வசதியும் இருந்தால், வளர் கோழி வளர்ப்புக் கொட்டகை என்று, மூன்று பிரிவுகளாக அமைக்கலாம்.

பண்ணையின் தரை மிகவும் முக்கியமானது. அரையடி ஆழத்தில் பள்ளம் தோண்டி, ஜல்லி சிமெண்ட்டைக் கொண்டு கெட்டித் தரையாக அமைக்க வேண்டும். அப்போது தான் எலி, பெருச்சாளிகள் தொல்லை இருக்காது.

பண்ணை அகலம் 22-25 அடிக்குள் இருப்பதே நல்லது. கொட்டகையின் நீளத்தை, வளர்க்க இருக்கும் கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைக்க வேண்டும்.

கோழி வீட்டின் கிழக்கு, மேற்குச் சுவர்கள், கூரை வரை இருக்க வேண்டும். வடக்கு, தெற்குச் சுவரை, ஒரு அடிக்கு எழுப்பி அதற்கு மேல் ஏழடி உயரம் வரை கம்பி வலையை அமைக்க வேண்டும். பொருளாதார வசதிக்கு ஏற்ப, மேல் கூரைக்கு, கீற்றுகள், கல்நார் ஓடுகள், மங்களூர் ஓடுகள், அலுமினியத் தகடுகள் ஆகியவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

பண்ணையின் மைய உயரம் 12-15 அடி வரை இருக்கலாம். கூரையின் கீழ்ப்பகுதி, சுவரிலிருந்து மூன்றடி நீட்டிக் கொண்டிருக்க வேண்டும். கதவுகள் வெளிப்புறமாகத் திறக்கும்படி இருக்க வேண்டும். இளங் குஞ்சுகள் கொட்டகை, கோழிக் கொட்டகையில் இருந்து, 300 அடி தள்ளி இருக்க வேண்டும்.

கோழிக் கொட்டகையில் மரத்தூள், நெல் உமி, நிலக்கடலைத் தோல், கரும்புச் சக்கை, துண்டு செய்யப்பட்ட மக்காச்சோளத் தக்கை ஆகியவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம். ஆழ்கூளப் பொருள்கள், ஈரத்தை நன்றாக உறிஞ்ச வேண்டும்.

உள்ளூரிலேயே மலிவாகக் கிடைக்க வேண்டும். கிளறி விடும் போது, காற்றில் எளிதில் உலர வேண்டும். புழுதியைக் கிளப்பும் அளவில் தூசியாக இருக்கக் கூடாது. நச்சுத் தன்மை இருக்கக் கூடாது.

கோழி வளர்ப்பில் ஆழ்கூளப் பராமரிப்பு மிகவும் அவசியம். கூளத்தைத் தினமும் கிளறிவிட வேண்டும். கூளத்தில் ஈரம் கூடினால், அமோனியா வாயு உருவாகி, கண் எரிச்சலை ஏற்படுத்தும். நமக்கும் கோழிகளுக்கும் நுரையீரல் சார்ந்த நோய்கள் ஏற்படலாம். இரத்தக் கழிச்சல் நோய் ஏற்பட்டு, முட்டை உற்பத்திக் குறைவதோடு, இறப்பும் மிகுந்து விடும். கோழியின் எடையும் குறைந்து விடும்.

ஆழ்கூளத்தில் ஈரப்பதம் 25%க்கு மேல் இருக்கக் கூடாது. ஒரு கைப்பிடி கூளத்தைக் கையில் எடுத்துப் பிசையும் போது, கூளம் நுணுங்கிப் போனால், ஈரம் குறைவு என்பதை அறியலாம்.

கெட்டியான உருண்டையாக மாறினால், ஈரம் அதிகம் எனத் தெரிந்து கொள்ளலாம். ஈரம் கூடினால் 100 சதுர அடிக்கு 8-10 கிலோ சுண்ணாம்புத் தூளைத் தூவிக் கிளறிவிட வேண்டும். முதல் மூன்று வாரம் வரை ஆழ்கூளம் 5 செ.மீ. உயரமும், அடுத்து 10 செ.மீ. உயரமும் உள்ளவாறு நிரப்ப வேண்டும்.

பண்ணை அலுவலகம், பண்ணையின் பிரதான வாயிலுக்கு அருகிலேயே இருக்க வேண்டும். இறந்த கோழிகளை எரிக்க அல்லது புதைக்க, பண்ணையின் பின்புற மூலையில் இடமிருக்க வேண்டும். அதைப் போல, எருக்குழியையும் பண்ணையின் பின்பகுதியில் அமைக்க வேண்டும்.

அதில், எருவைச் சேர்க்காமல் அவ்வப்போது அகற்றிவிட வேண்டும். இல்லையெனில், துர்நாற்றம் ஏற்பட்டு, பண்ணையின் சுகாதாரமும், கோழிகளின் உடல் நலமும் கெட்டு விடும்.


டாக்டர் ஏ.ஆர்.ஜெகத் நாராயணன், மேனாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை, கன்னங்குறிச்சி, சேலம் – 636 008.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!