குறுவைப் பருவத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

குறுவை HP 2 scaled

குறுவைப் பருவம் என்பது, ஜூன், ஜூலையில் விதப்பைத் தொடங்கி ஆகஸ்ட், செப்டம்பர் வரையிலான, அதாவது, 95 முதல் 115 நாட்களைக் கொண்ட சாகுபடிக் காலமாகும். இந்தப் பருவத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் நான்கு இலட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்படும். இப்போது குறுவை சாகுபடிக்கு உகந்த உயர் விளைச்சல் இரகங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

ஆடுதுறை (ஏடிடீ) 36

இதன் வயது 110 நாட்கள். இந்த இரகப் பயிர்கள் குட்டையாகவும் சாயாமலும் இருக்கும். எக்டருக்கு 6 டன் விளைச்சலைத் தரும். அரிசி, வெள்ளை நிறத்தில் நடுத்தரச் சன்னமாக இருக்கும். குருத்துப் பூச்சி மற்றும் குலை நோயை ஓரளவு தாங்கி வளரும். இதைத் தமிழகம் முழுவதும் பயிரிடலாம்.

ஆடுதுறை 37

இதன் வயது 105 நாட்கள். எக்டருக்கு 5.5-6 டன் விளைச்சலைத் தரும். அரிசி, வெள்ளை நிறத்தில் குட்டையாகவும் பருமனாகவும் இருக்கும். குலை நோய், பழுப்புப் புள்ளி நோய், புகையான் மற்றும் பச்சைத் தத்துப் பூச்சிகளின் தாக்கத்தை நன்கு எதிர்த்து வளரும். இலைக்கருகல் நோய், மஞ்சள் குட்டை நோய், ஆனைக்கொம்பன் மற்றும் இலைச்சுருட்டுப் புழுக்களின் தாக்கத்தை ஓரளவு தாங்கி வளரும்.

ஆடுதுறை 42

இதன் வயது 115 நாட்கள். எக்டருக்கு 6-6.5 டன் விளைச்சலைத் தரும். அரிசி, வெள்ளை நிறத்தில் நீண்டும் சன்னமாகவும் இருக்கும். குலை நோய் மற்றும் புகையானை மிதமாகத் தாங்கி வளரும். இந்த இரகத்தைச் சொர்ணவாரி, கார், குறுவை ஆகிய பருவங்களில் தமிழகம் முழுவதும் பயிரிடலாம்.

ஆடுதுறை 43

இதன் வயது 105-110 நாட்கள். எக்டருக்கு 6,000 கிலோ விளைச்சலைத் தரும். அரிசி, நடுத்தரச் சன்னமாக இருக்கும். இந்த இரகத்தைச் சொர்ணவாரி, கார், குறுவை ஆகிய பருவங்களில் பயிரிடலாம். 

ஆடுதுறை 45

இதன் வயது 105-115 நாட்கள். எக்டருக்கு 6,000 கிலோ விளைச்சலைத் தரும். அரிசி, நடுத்தரச் சன்னமாக இருக்கும். முழு அரிசி 65 சதம் கிடைக்கும். ஆனைக் கொம்பனைத் தாங்கி வளரும். புகையான் மற்றும் குருத்துப் பூச்சிகளின் தாக்கத்தை மிதமாகத் தாங்கி வளரும். இந்த இரகத்தைச் சொர்ணவாரி, கார், குறுவை ஆகிய பருவங்களில் பயிரிடலாம்.    

ஆடுதுறை 47

இதன் வயது 115-118 நாட்கள். எக்டருக்கு 7 டன் வரை விளைச்சலைத் தரும். அரிசி, வெள்ளை நிறத்தில் நடுத்தரச் சன்னமாக இருக்கும். இலைக் கருகல் மற்றும் துங்ரோ வைரஸ் நோயைத் தாங்கி வளரும். இந்த இரகத்தைச் சொர்ணவாரி, கார், குறுவை ஆகிய பருவங்களில் பயிரிடலாம்.   

ஆடுதுறை 48

இதன் வயது 95 நாட்கள். எக்டருக்கு 4.8 டன் விளைச்சலைத் தரும். அரிசி, வெள்ளை நிறத்தில் நீண்டும் சன்னமாகவும் இருக்கும். பாசன வசதி குறைவாக உள்ள காலத்தில் நேரடியாக விதைக்கலாம். பாசன நீர் வருவது தாமதமாகும் காலங்களில், தஞ்சை, நாகை மாவட்டங்களில் பின் குறுவைக்கு ஏற்றது. இந்த இரகம், குருத்துப்பூச்சி மற்றும் இலை மடக்குப் புழுக்களுக்கு எதிர்ப்புத் திறனுள்ளது.

ஆடுதுறை 53

இது, 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம். இதன் பெற்றோர்: ஏடிடீ 43, ஜெஜிஎல் 384. இதன் வயது 105-110 நாட்கள். எக்டருக்கு 6,334 கிலோ விளைச்சலைத் தரும். ஆயிரம் நெல் மணிகளின் எடை 14.5 கிராம். பயிர்கள் நடுத்தர உயரத்தில், சாயாமல் நிமிர்ந்து நிற்கும். கதிர்களில் மணிகள் நெருக்கமாக இருக்கும்.

அரிசி, நடுத்தரச் சன்னமாக இருக்கும். 62 சதம் அரவைத் திறனுள்ளது.  சாதம் வெள்ளையாக, நடுத்தர அமைலோஸ் மற்றும் குறைந்த ஒட்டும் தன்மையுடன் இருக்கும். இலைச் சுருட்டுப்புழு, தண்டுத் துளைப்பான், குலைநோய், இலையுறை அழுகல் நோய், செம்புள்ளி நோய் ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும்.

ஆடுதுறை 55

இது, 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம். இதன் வயது 110-115 நாட்கள். எக்டருக்கு 5,929 கிலோ விளைச்சலைத் தரும். பயிர்கள் சாயாமல் இருக்கும். அரிசி, சன்னமாக இருக்கும். பாக்டீரிய கருகல் நோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. குலைநோய், இலையுறை அழுகல் நோய், இலை மடக்குப்புழு ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும்.

ஆடுதுறை 56

இதன் வயது 115-120 நாட்கள். எக்டருக்கு 6,400 கிலோ விளைச்சலைத் தரும். அரவைத் திறன் 69.4 சதம். குலைநோய், இலை மடக்குப்புழு, குருத்துப்பூச்சி ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும்.

ஆடுதுறை 57

இது, 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம். ஏடிடீ 45, ஏசிகே 03002 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. இதன் வயது 115-120 நாட்கள். எக்டருக்கு 6.5 டன் விளைச்சலைத் தரும். அரிசி நடுத்தரச் சன்னமாக இருக்கும். அரவைத்திறன் 64.9 சதமாகும். குலைநோயை எதிர்த்து வளரும். புகையான் மற்றும் இலையுறைக் கருகல் நோயை மிதமாகத் தாங்கி வளரும்.

கோ(ஆர்)51

இது, 2013 ஆண்டு வெளியிடப்பட்ட இரகம். ஏடிடீ 43, ஆர்ஆர் 272-1745 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. இதன் வயது 110 நாட்கள். எக்டருக்கு 6.6 டன் விளைச்சலைத் தரும். ஆயிரம் மணிகளின் எடை 16 கிராம் இருக்கும். அரிசி, வெள்ளை நிறத்தில், நடுத்தரச் சன்னமாக இருக்கும். அரவைத் திறன் 68.5 சதமாகும். குலை நோய், புகையான், துங்ரோ வைரஸ் நோயைப் பரப்பும் பச்சைத் தத்துப்பூச்சி ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும்.

கோ  54

இது, 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம். இதன் வயது 115-118 நாட்கள். எக்டருக்கு 6.4 டன் விளைச்சலைத் தரும். அரிசி, வெள்ளை நிறத்தில் நடுத்தரச் சன்னமாக இருக்கும். புகையான், குலை நோய், இலையுறை அழுகல் நோய், பழுப்புப் புள்ளி நோய் ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும்.

கோ  55

இது, 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம். ஏடிடீ 43, ஜிஈபி 24 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. இதன் வயது 115 நாட்கள். எக்டருக்கு 6.0 டன் விளைச்சலைத் தரும். அரிசி, வெள்ளை நிறத்தில் நடுத்தரச் சன்னமாக இருக்கும். அரவைத் திறன் 62 சதமாகும்.

திரூர்க்குப்பம் (டிகேஎம்)9

இதன் வயது 105-110 நாட்கள். எக்டருக்கு 6.5 டன் விளைச்சலைத் தரும்.     பயிர்கள் குட்டையாகவும், சாயாமலும் இருக்கும். அரிசி, சிவப்பு நிறத்தில், குட்டையாகவும் பருத்தும் இருக்கும்.

திரூர்க்குப்பம் (டிகேஎம்) 15

இது, 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம். இதன் வயது 115-120 நாட்கள். எக்டருக்கு 4.2 டன் விளைச்சலைத் தரும். அரிசி, நடுத்தரச் சன்னமாக இருக்கும். அரவைத் திறன் 68 சதமாகும். வறட்சியைத் தாங்கி வளரும்.

அம்பாசமுத்திரம் (ஏஎஸ்டி) 16

இதன் வயது 115 நாட்கள். 90-95 செ.மீ. உயரம் வளரும். சாயாமல் இருக்கும். எக்டருக்கு 5.5 டன் விளைச்சலைத் தரும். அரிசி, குட்டையாகவும் பருமனாகவும் இருக்கும். வைக்கோல் அதிகமாகக் கிடைக்கும். குலைநோய் மற்றும் புகையானைத் தாங்கி வளரும்.

அம்பாசமுத்திரம் (ஏஎஸ்டி) 21

இது, 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம். இதன் வயது 120 நாட்கள். எக்டருக்கு 6.3 டன் விளைச்சலைத் தரும். பயிர்கள் சாயாமல் இருக்கும். அரிசி, குட்டையாகவும் பருத்தும் இருக்கும். குருத்துப்பூச்சி, இலை மடக்குப்புழு, அனைக்கொம்பன், குலைநோய், பாக்டீரிய இலைக்கருகல் நோய் ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும்.

திருப்பதிசாரம் (டிபிஎஸ்) 5

இதன் வயது 120 நாட்கள். ஏஎஸ்டி16, ஏடிடீ 37 ஆகிய இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. எக்டருக்கு 6.3 டன் விளைச்சலைத் தரும். அரிசி, குட்டையாகவும், பருமனாகவும் இருக்கும். குருத்துப்பூச்சி, இலை மடக்குப்புழு, ஆனைக்கொம்பன், புகையான் ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும்.

மதுரை (எம்டியூ) 6

இதன் வயது 110-115 நாட்கள். எக்டருக்கு 6.1 டன் விளைச்சலைத் தரும். அரிசி, வெள்ளை நிறத்தில், நீண்டும் சன்னமாகவும் இருக்கும். இந்த நெல் அவல் மற்றும் பொரி செய்வதற்கு ஏற்றது. குருத்துப்பூச்சி, இலை மடக்குப்புழு, பச்சைத் தத்துப்பூச்சி ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும். களர் உவர் நிலங்களுக்கு ஏற்ற இரகம்.

திருச்சி (டிஆர்ஒய்) 2

இதன் வயது 115-120 நாட்கள். எக்டருக்கு 5.4 டன் விளைச்சலைத் தரும். பயிர்கள் குட்டையாகவும் சாயாமலும் இருக்கும். அரிசி, வெள்ளை நிறத்தில் நீண்டும் சன்னமாகவும் இருக்கும். குலை நோயைத் தாங்கி வளரும். களர் உவர் நிலங்களுக்கு ஏற்ற இரகம்.

திருச்சி (டிஆர்ஒய்) 5

இது, 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம். 110-115 நாட்கள். எக்டருக்கு 5.1 டன் விளைச்சலைத் தரும். அரவைத் திறன் 64 சதமாகும். பயிர்கள் குட்டையாகவும் சாயாமலும் இருக்கும். அரிசி, வெள்ளை நிறத்தில் நடுத்தரச் சன்னமாக இருக்கும். குலைநோய், பழுப்புப்புள்ளி நோய், புகையான், பச்சைத் தத்துப்பூச்சி ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும். களர் உவர் நிலங்களுக்கு ஏற்ற இரகம்.


குறுவை RAJA RAMESH N

முனைவர் இராஜா.ரமேஷ்,

முனைவர் சி.மேனகா, முனைவர் ஆ.யுவராஜா, 

தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!