தானியப் பயிர்களைத் தாக்கும் பூசண நோய்கள்!

பயிர் Finer millet 3

தானியப் பயிர்கள், வறட்சியைத் தாங்கி வளரும் மானாவாரிப் பயிர்கள் ஆகும். தமிழகத்தில், கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி, வரகு, பனிவரகு ஆகியன விளைகின்றன. இவை, மானாவாரிப் பயிர்களாக இருந்தாலும், பருவநிலை மாற்றங்களால் நோய்களுக்கு உள்ளாகின்றன.

இவற்றை, பூசண நோய்கள் தாக்குவதால் பெரியளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. எனவே, அந்த நோய்களைப் பற்றியும், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றியும் பார்க்கலாம்.

தமிழகத்தில் 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், சத்துமிகு தானியப் பயிர்கள் அதிகமாக விளையும் மாவட்டங்களில், கரீப் பருவச் சுற்றாய்வும், அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்தில் வயல் ஆய்வும் செய்யப்பட்டன. இதன் மூலம், குலைநோய், இலைப்புள்ளி நோய், தானியப் பூசண நோய், துருநோய், கரிப்பூட்டை நோய் ஆகியன தாக்குவது தெரிந்தது.

எடுத்துக்காட்டாக, பைரிகுலேரியே கிரிசே என்னும் பூசணம், கேழ்வரகில் குலை நோயை உண்டாக்கும். மேலும், நாற்பது வகையான புல் குடும்பப் பயிர்களையும் இந்தப் பூசணம் தாக்கும். இதனால், 28 சதம் முதல் 80-90 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும். அத்தியந்தலில் பயிரிடப்பட்ட எல்லாக் கேழ்வரகு இரகங்களிலும் இந்நோயின் தாக்கம் இருந்தது.

கேழ்வரகு

இலைக்குலை நோய்: நாற்றுப் பருவத்தில் இலையில், சிறு வட்டப் புள்ளிகள், பழுப்பு நிறத்தில் தோன்றும். பிறகு, அவை நீளச்சுழல் வடிவப் புள்ளிகளாக மாறும். புள்ளியின் நடுவில் சாம்பல் நிறமும், ஓரத்தில் பழுப்பு நிறமும் இருக்கும்.

அடுத்து, இப்புள்ளிகள் அனைத்தும் இணைவதால் இலையானது காய்ந்து விடும். நடுநரம்பில் இப்புள்ளி தோன்றும் போது, நரம்பு உடைந்து இலை ஒடிந்து விடும்.

கழுத்துக் குலை நோய்: இது, கதிரின் காம்பைத் தாக்கும். நீள்வட்டப் பழுப்புப் புள்ளிகள் கதிரின் காம்பில் தோன்றும். பிறகு, இவை நீள்வதால் கதிரின் காம்பு முறிந்து போகும். இதனால் மகசூல் இழப்பு ஏற்படும்.

விரல் குலை நோய்: இது, கதிரின் விரல்களைத் தாக்கும். இந்நோயால் பாதிக்கப்பட்ட பகுதி, பழுப்பு நிறமாக மாறும். இதனால், தானிய மணிகள் கருகி விடும்.

இலைப்புள்ளி நோய்: இந்நோய், நாற்றுப் பருவத்தில் பழுப்பு நிறப் புள்ளிகளாக இலையில் தோன்றும். இதனால், நாற்றுகள் கருகி மடிந்து விடும்.

விதை நிறமாற்ற நோய்: கதிர் முதிரும் போது மழை பெய்தால், அல்டர்னேரியா, கர்வுலேரியா, ஃபுசேரியம் போன்ற பூசணங்கள் கதிரைத் தாக்கும். இதனால், தானிய மணிகள் கறுப்பாக மாறும். எனவே, நல்ல விலை கிடைக்காமல் போகும்.

தினை

குலைநோய்: இதன் தாக்கம் உள்ள பயிர்களில், முதலில் இலையில் சிறிய பழுப்புப் புள்ளிகள் தோன்றும். பிறகு, இவை நீள்சுழல் புள்ளிகளாக மாறி இணைவதால் இலை காய்ந்து விடும். பயிரின் அடியிலைகள் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகும்.

துருநோய்: இது, இலைகளில் சின்னச் சின்னச் சொறிப் புள்ளிகளைப் பழுப்பு நிறத்தில் ஏற்படுத்தும். இந்த முடிவை, 2000-த்தில் ஜெயின் என்பவரும், 2014-இல் சர்மா உள்ளிட்ட ஆய்வாளர்களும் கண்டறிந்தனர்.

வரகு

வரகு பூக்கும் போது கரிப்பூட்டை நோயானது கதிரைத் தாக்கும். அதாவது, வெண்ணிற உறை, கதிர் முழுவதையும் மூடிக் கொள்ளும். இதனால், தானிய மணிகள் கருஞ்சாம்பல் பூசணமாக மாறிவிடும்.

சத்துமிகு தானியப் பயிர்கள் ஐயாயிரம் ஆண்டு சாகுபடி வரலாற்றைக் கொண்டவை. இவை, வறண்ட பகுதி, மலை மற்றும் பழங்குடி மக்களின் விவசாயத்துக்கு உகந்தவை. இப்பயிர்கள் போயோசியே என்னும் புற்கள் குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்தியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.

மனித உடல் இயல்பாக இயங்கத் தேவையான அனைத்துச் சத்துகளையும் வழங்குவதால், இவை சத்துமிகு தானியங்கள் எனப்படுகின்றன. மேலும், கால்நடைகளுக்குச் சத்துகள் நிறைந்த தீவனமாகவும் பயன்படுகின்றன.

எலூயூசின் கொராகானா என்னும் கேழ்வரகு, பானிகம் சுமட்ரன்சி என்னும் சாமை, செட்டாரியா இட்டாலிகா என்னும் தினை, எக்கினோக் ளோவா ப்ரூமென்டேசியே என்னும் குதிரைவாலி, பாஸ்பலம் ஸ்க்ரோபி குலேட்டம் என்னும் வரகு மற்றும்

பானிகம் மில்லியேசியம் என்னும் பனிவரகு, இந்தியாவில் 2017-18 ஆம் ஆண்டில் 1.79 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டதில் 2.21 மில்லியன் டன் தானியம் கிடைத்தது. அரிசி, கோதுமையில் இருப்பதை விடக் கேழ்வரகில், வைட்டமின்கள், மாவுச்சத்து, கால்சியம், இரும்பு மற்றும் தாதுச் சத்துகள் அதிகளவில் உள்ளன.

சத்துமிகு தானியப் பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்களாக இருந்தாலும், நோய்களுக்குச் சாதகமான சில சூழ்நிலைகளில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

ஆகவே, குலை நோய், இலைப்புள்ளி நோய், தானியப் பூசண நோய், துரு நோய் மற்றும் கரிப்பூட்டை நோயிலிருந்து, பயிர்களைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.


பயிர் Rajesh e1617961873561

முனைவர் மா.இராஜேஷ், முனைவர் .நிர்மலகுமாரி, முனைவர் கி.ஆனந்தி, முனைவர் கு.சத்தியா, சிறுதானிய மகத்துவ மையம்,

அத்தியந்தல், திருவண்ணாமலை – 606 603.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!