தேன் எடுப்பும் சேமிப்பும்!

தேன் natural honey

தேன் இனிய உணவுப் பொருளாகும். பூக்களில் காணப்படும் வழவழப்பான நீர்மத்தில் இருந்து, வேலைக்கார தேனீக்கள் தேனை எடுக்கின்றன. தேனில் பல்வேறு மருத்துவக் குணங்கள் மற்றும் நன்மை பயக்கும் பொருள்கள் உள்ளன.

மேலும், தேன் மூலம் கிடைக்கும் தேன் மெழுகு, அழகுப் பொருள்கள் உற்பத்திக்கு உதவுகிறது. அரச கூழ், ஆண்மையைக் கூட்டும் மருந்தாகப் பயன்படுகிறது.

மகரந்தம், புரத உணவாக விளங்குகிறது. தேனீப்பசை, மெழுகு உற்பத்திக்கும், தேனீ விஷம், மூட்டுவலி, முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன.

தேனை எடுக்கும் முறை

தேன் பெட்டியில் உள்ள தேனைக் காலை நேரத்தில் எடுக்க வேண்டும். தேனறையில் இருந்து குறைந்தது 75% தேனுள்ள அடையை, அளவாகப் புகையைப் பயன்படுத்தி, தேன் சட்டங்களில் இருந்து பிரிக்காமல் அப்படியே எடுக்க வேண்டும்.

தேனடைகளின் மூடியைக் கத்தியால் கீறிய பிறகு, தேன் எடுக்கும் இயந்திரத்தில் சரியாகப் பொருத்திச் சுற்ற வேண்டும். பிறகு, தேன் சட்டத்தைத் திருப்பிப் பொருத்தி, மற்றொரு பக்கத்தில் உள்ள தேனை எடுக்க வேண்டும்.

வெள்ளை நிறத்தில் உள்ள புதிய தேனடைகளைத் தேன் கருவியில் வைத்துச் சுற்றும் போது, தேனடைகள் எளிதில் பிரிந்து விடும்.

இதைத் தடுக்க, பட்டையான வாழை நாரால் சட்டத்தையும் அடையையும் கட்டி விட்டு, தேனெடுக்கும் கருவியின் கைப்பிடியை மெதுவாகச் சுற்றித் தேனை எடுக்க வேண்டும். எடுத்த தேனை வடிகட்ட வேண்டும். புழுவறையில் உள்ள தேனை எடுக்கக் கூடாது.

பதப்படுத்துதல்

தேனை நெடுநாட்கள் வைத்துப் பயன்படுத்த, அதிலுள்ள நீரை நீக்க வேண்டும். இதற்கு, தேன் பாத்திரத்தை, நீருள்ள மற்றொரு அகலமான பாத்திரத்தில் வைத்து, அடுப்பிலிட்டுச் சூடேற்ற வேண்டும்.

தேன் பாத்திரம் நீருள்ள பாத்திரத்தின் அடியைத் தொடாமல் இருக்க வேண்டும். இதற்கு, இரும்பு வளையம் அல்லது மூன்று கற்களின் மேல் தேன் பாத்திரத்தை வைக்க வேண்டும்.

தேன் பாத்திரத்தில் உள்ள தேனின் அளவும், நீருள்ள பாத்திரத்தில் உள்ள நீரின் அளவும் ஒரே மட்டத்தில் இருக்க வேண்டும். தேனுள்ள பாத்திரத்தை மூடக் கூடாது.

நீரானது கொதிக்கத் தொடங்கியதும், அடுப்புத் தீயைக் குறைத்து அளவாக எரியவிட வேண்டும். தேனை 60 செல்சியஸ் சூட்டில் 20 நிமிடம் சூடுபடுத்த வேண்டும். இதனால், தேனீலுள்ள நீரின் அளவு குறையும்.

வெய்யிலில் காய வைத்தும், தேனிலுள்ள நீரின் அளவைக் குறைக்கலாம். அதாவது, வாயகன்ற பாத்திரத்தில் தேனை ஊற்றிப் பாத்திரத்தின் வாயைச் சுத்தமான மெல்லிய துணியால் மூடிக்கட்டி வெய்யிலில் காய வைக்கலாம்.

சேமித்தல்

சூடு நன்றாக ஆறிய பிறகு, தேனிலுள்ள நுரையை நீக்கி விட்டு, சுத்தமான, உலர்ந்த கண்ணாடிப் புட்டி அல்லது உணவுப்பொருள் சேமிப்புக்கு ஏற்ற தரமான நெகிழிக் கலனில், எறும்புகள் புகாத வகையில் மூடி வைக்க வேண்டும்.


தேன் CHINNADURAI e1709465140155

சீ.சின்னதுரை, முனைவர் பட்ட ஆய்வு மாணவர், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!